Pages

08 September 2020

யாருக்காக உன் இந்தி...

 யாருக்காக உன் இந்தி...

கடந்த சில நாள்களாக இந்திக்கு எதிரான குரல்கள் இணையமெங்கும் ஒலிப்பதை பார்க்கிறோம். இந்தி தெரியாது போடா என்பதை பெருமையோடு பகிர்ந்துகொண்டார்கள். குறிப்பாக இளைஞர்கள் அதிகமும் இதில் பங்கெடுக்கிறார்கள். இதை எதோ திமுக மாதிரி கட்சிகள் மட்டுமே முன்னெடுப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் இதில் ஈடுபடுபவர்கள் கட்சி சாராத எளிய மக்கள்தான்.

காரணம் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் இந்தித்திணிப்பால் நேரடியாக பாதிக்கப்படத் தொடங்கி இருக்கிறார்கள். வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன. வங்கிகளில் கூட இந்திக்காரர்கள் உட்கார்ந்துகொண்டு இந்தியில் பேசச்சொல்லி தொந்தரவு செய்கிறார்கள். இந்தி தெரியாட்டி இந்தியனே அல்ல என்கிற முட்டாள்தனமான முழக்கத்தை வேறு சங்கிகள் முன்னெடுக்கிறார்கள். இதெல்லாம் மிகுந்த மன உளைச்சலை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. உண்மையில் தமிழ்நாட்டில்

யாருமே இந்திக்கு எதிரான மன நிலையில் இல்லை. திராவிட இயக்க இந்தி எதிர்ப்பை கூட சில ஆண்டுகாக கிண்டல்தான் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் சங்கிகளின் இந்த திணிப்பை இப்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஏழைக்குழந்தை இந்தி படிக்க வேண்டாமா என நீலிக்கண்ணீர் வடிக்கும் சதிகார சங்கிக்கூட்டத்திடம் ஏழைக்குழந்தைகள் மருத்தவம் கூடதான் படிக்கணும் நீட் தேர்வை ரத்து செய்யறியடா என கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

வடநாட்டினர் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து உயர்பதவியில் வேலை பார்க்கும்போது நாமெல்லாம் இந்தி கற்றுக்கொண்டு அவர்களுக்கு சேவகம் செய்ய தயாராக இருக்கத்தான் இந்த இந்தி திணிப்பு என்றார் ஓர் இளைஞர். எவ்வளவு உண்மை. இந்தி படித்து வடமாநிலங்களில் போய் லோல் படுவதை விட ஐரோப்பிய மொழிகள் கற்று கெத்தாக வாழமுடியும் என்பதை இளைஞர்களுக்கு இணையம் உணர்த்தி இருக்கிறது. அந்தக்காலம் போல இந்தி படித்தால் மும்பை போகலாம் டெல்லி போகலாம் என்கிற காலம் மலையேறிவிட்டது.

வேலைவாய்ப்புகள் சுரண்டப்படுபவதையும், கல்வி சார்ந்த பொருளாதாரம் சார்ந்த சுரண்டல்களையும் நம் மீது நிகழ்த்தப்படும் மொழிசார்ந்த கண்ணுக்கு புலப்படாத வன்முறையையும் அதன் தாக்கத்தையும் நேரடியாக உணரத்தொடங்கி இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இந்தி வெறும் மொழியாக நம்மிடம் வந்து சேரவில்லை. அது நம்மை அடக்கி அடிமைப்படுத்துகிற தாழ்த்துகிற வீழ்த்துவதற்கான ஆயுதமாக வருகிறது. அடக்குமுறையும் பாகுபாடும் சமத்துத்துவத்திற்கு எதிரான சதியும் எவ்வடிவில் வந்தாலும் தமிழர்கள் விரட்டியடிப்பார்கள். அந்த எழுச்சியைதான்இப்போது பார்க்கிறோம்.