Pages

29 August 2020

வைராக்கியம்தான் வசந்தகுமார்


விஜிபியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது அரசியலிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார் வசந்தகுமார். விஜிபிக்கு அது பிடிக்காமல் வசந்தகுமாரை மும்பைக்கு மாற்றல் கொடுத்து வேறு ஊருக்கு அனுப்ப திட்டமிட்டனர். அரசியலை விட்டுவிட்டு இங்கேயே வேலை செய்யலாம் என இன்னொரு வாய்ப்பும் கொடுத்தார்கள். வசந்தகுமார் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். பத்தாண்டுகள் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து ஒரே நாளில் தூக்கியெறியப்பட்டார். அது அவரை ரொம்பவே பாதித்திருக்கவேண்டும். எவ்வளவு விசுவாசமாக இருந்தும் என்ன எஞ்சியது என்கிற கேள்வியே… இனி எங்கும் வேலை பார்க்கப்போவதில்லை சுயதொழில்தான் என்று முடிவெடுக்கச்செய்தது. அந்த வைராக்கியம்தான் வசந்தகுமார். அதுதான் அவரை வியாபாரத்தில் முதலிடத்தை பிடிக்க செய்தது.

அடுத்து வந்த நாள்களில் பசி பட்டினிதான். குடும்பத்தின் உதவிகளைக்கூட வைராக்கியத்தோடு பெற மறுத்துவிட்டார். சைதாப்பேட்டையில் எப்போதும் திறந்தே கிடக்கும் கூரை கொண்ட ஒரு குடிசைவீட்டில் ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறார். ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் வெறும் வயிற்றோடு சாலைகளில் படுத்து உறங்கியிருக்கிறார். விஜிபிக்கே திரும்பவும் சென்று வேலைக்கு சேர்ந்தவிட நண்பர்கள் சொன்னபோதும் வைராக்கியத்தை விடவில்லை. வேறு சில நிறுவனங்கள் அழைத்தபோதும் மறுத்துவிட்டார். தன் முடிவில் உறுதியாக இருந்தார். அந்த வைராக்கியம்தான் வசந்தகுமார். வெறும்வயிற்றோடு திரிந்தாலும் எதற்காகவும் யாருக்காகவும் தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர்.

பின்னாளில் ஒரு சிறிய கடையாக வசந்த் அன்கோவை ஆரம்பித்து வயர் நாற்காலிகள், கட்டில் பீரோ, ரேடியோ டிவி எல்லாம் டீலர்ஷிப் எடுத்து தவணைமுறையில் விற்க ஆரம்பிக்கிறார். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் சிறிய டீலராக இருந்தபோதும் சாலிடேர் அவருக்கு பெரிய அளவில் தோள்கொடுத்து உதவுகிறார்கள்.

படிப்படியாக வளரத்தொடங்கிய நேரம்… ஒனிடா டிவி மார்க்கெட்டில் நம்பர் ஒன்னாக இருந்தது. ஒனிடாவிடம் டீலர்ஷிப் எடுத்து தன் கடையில் வியாபாரம் பண்ணிவிட ஆசைப்பட்டார். அது அத்தனை சுலபமில்லை என்பதை அறிந்திருந்தார். சிறிய கடை வைத்திருப்பவர். சைக்கிளில் சென்றுதான் பெரிய நிறுவனங்களை சந்திப்பார். எளிமையான உடைகளைதான் அணிந்திருப்பார். அதனாலேயே சின்ன சின்ன நிறுவனங்கள் கூட டீலர்ஷிப் கொடுக்க தயங்குவார்கள், பெரிதாக மதிக்கமாட்டார்கள். (பின்னாளில் எப்போதும் கோட் அணிய காரணமும் அதுதான்.)

இருப்பினும் நம்பிக்கையோடு ஒனிடா அலுவலகத்துக்கும் டீலர்ஷிப் கேட்டு செல்கிறார். மேனேஜரை சந்திக்க அனுமதி கேட்டு தினமும் ஒனிடா அலுவலகத்துக்கு சென்றுவிடுவார். ஆனால் அந்த மேனேஜர் வாய்ப்பே தரவில்லை. இருப்பினும் தினமும் தவறாமல் சென்று சந்திக்க வாய்ப்பு கேட்டு அமர்ந்திருப்பார். திறக்கப்பாடத எந்தக்கதவையும் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருப்பதன் மூலம் திறப்பதுதான் வசந்தகுமாரின் பாணி. பத்து நிமிடம் பேசுவதற்கான வாய்ப்புக்கிடைத்தால போதும் எப்படிப்பட்டவருக்கும் தன் மீது நம்பிக்கை வரும்படி செய்துவிடுவார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்வும் அப்படி உருவாக்கிய நம்பிக்கையில் எழுந்ததுதான். தன் மீதான நம்பிக்கையை காப்பதற்காக எதையும் செய்யவும் இழக்கவும் தயங்காதவர் அவர். வசந்த் அன் கோ லோகோவில் இடம்பெற்ற Trust and Quality தான் வசந்தகுமார்.

அந்த ஒனிடா மேனேஜரோ இவரை நாளைக்கு நாளைக்கு என அலைகழித்திருக்கிறார். சும்மாவே தன் சீட்டில் அமர்ந்திருந்தாலும் இவரை சந்திக்காமல் தவிர்க்கிறார். எத்தனையோ வாரங்கள் ஓடுகிறது. இந்த மேனேஜர் வேண்டுமென்றே தன்னை தவிர்க்கிறார் என்பதை புரிந்துகொண்டவருக்கு கோபம் வந்துவிட்டது. ஒருநாள் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் ஆவேசமாக மேனேஜர் அறைக்குள் நுழைந்துவிட்டார்.

‘’இனி உங்களை சந்திக்க அனுமதி கேட்டு இங்கே வரமாட்டேன். ஒனிடா இல்லாமலும் என்னால் பிஸினஸ் பண்ணமுடியும். இப்படி என்னை தினமும் அலைகழிக்கிற நீங்க ஒருநாள் என்னுடைய அலுவலக வாசலில் வந்து காத்திருப்பீர்கள். அன்றைக்கு நான் உங்களை சந்திக்கிறேன்.’’ என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பிவிட்டார். அந்த மேனேஜர் அன்றைய நாளில் நிச்சயமாக கேலியாக சிரித்திருப்பார். யாருக்காய் இருந்தாலும் அப்படித்தான் தோன்றும்.

ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆட்டம் மாறிவிட்டிருந்தது. ஒனிடாவுக்கு போட்டியாக ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் களத்திற்கு வந்துவிட்டன. ஒனிடா மார்க்கெட்டை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டிருந்தது. வசந்த் அன் கோ வோ சாம்சம்,எல்ஜி என டீலர்ஷிப் எடுத்து ஒவ்வொரு மாதம் பல ஆயிரம் டிவிக்களை விற்க ஆரம்பித்திருந்தார். ஒனிடா நிறுவனம் வசந்த் அன் கோவோடு டீலர்ஷிப் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். அந்த மேனேஜர் வசந்தகுமாரை சந்திக்க அவருடைய அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தார்.

தோல்விகள் கண்டபோதும் அரசியல் ஈடுபாட்டை யாருக்காகவும் விட்டுக்கொடுத்திடாதவர். தோல்விகளில் இருந்து மேலெழுந்த கடினமான உழைப்பாளி. சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவர். லாபமும், வாய்ப்புகளும் தற்காலிகமானவை, சுயமரியாதை ஒன்றே நிரந்தரமானது என்பதை வாழ்வின் வழி காட்டியவர். டிவி ப்ரிட்ஜ் மாதிரி ஆடம்பரமான விஷயங்களை மிடில் கிளாஸ் மக்களுக்கும் கிடைக்க வழிவகுத்துக்கொடுத்தவர். போட்டிகள் நிறைந்த சூழலில் எப்படி எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவது என்பதை தானே செய்துகாட்டியவர். என்னை போல Zero Backup மனிதர்களுக்கெல்லாம் பெரிய முன்மாதிரி. அதனால்தான் அந்தக்காலம் மட்டுமல்லாது இந்தக்காலமும் வசந்த் அன் கோ காலமாக இருந்தது.

வசந்தகுமாருக்கு அஞ்சலிகள்.