Pages

17 August 2020

கோ கொரனா கோ...


கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகமே போராடிக்கொண்டிருந்த போது நம்மை ஆளும் பாஜக தலைவர்கள் கொரானவை எதிர்கொள்வதற்காக கொடுத்த சிறப்பான தரமான மருத்துவ ஆலோசனைகளை தொகுக்க முயற்சி செய்தேன்.
Image
பெரும்பான்மை பாஜக தலைவர்கள் முன்மொழிந்த மருந்து, மாட்டு மூத்திரம். பாஜக தலைவர் திலீப் கோஷ் தொடங்கி பாஜக எம்பிகளான பிரக்யா தாகூர், சுமன் ஹரிப்ரியா வரை அனைவருமே மாட்டுமூத்திரம் குடித்தால் கொரானா செத்துவிடும் என்றே வலியுறுத்தினர்.
Go Corono Go என்கிற முழக்கத்தை கண்டுபிடித்தவர் மத்திய அமைச்சரான ராம்தாஸ் அத்வாலே... மார்ச் முதல்வாரத்திலேயே இந்த மந்திரத்தை புத்த பிட்சுகளோடு சேர்ந்து ஜெபித்து கொரானாவை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

பாபிஜி அப்பளம் சாப்பிட்டால் கொரானா வராது. என்று விளம்பரம் செய்தார் மத்திய அமைச்சர் ராம் மெக்வால். ஆனால் அடுத்தவாரமே கொரானாவால் பாதிக்கப்பட்ட அவர் அப்பளம் தின்னாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஹனுமான் சாலிசாவை தினமும் ஐந்துமுறை ஜெபித்தால் கொரானாவை கொன்றுவிடலாம் என்று கொரானாவுக்கு எதிராக போர் முரசு கொட்டினார் பாஜக எம்பி பிரக்யா தாகூர். இந்த ஹனுமான் சாலிசாவை மற்ற பாஜகவினர் 15 முறை ஜெபித்தால் இந்தியாவை விட்டே கொரானாவை விரட்டலாம் என்றனர்.

ராமருக்கு லஞ்சம் கொடுத்தால் கொரானா போய்விடும் என்பது அடுத்த கண்டுபிடிப்பு. ’ராமர் கோயில் கட்டினால் கொரானாவை அழித்துவிடலாம்,’’ என்று அஸ்ஸாமை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிப்ரியா , மத்தியபிரதேசத்தின் பாஜக தலைவர் ரோமேஷ்வர் ஷர்மா, பாஜக எம்பி ஜாஸ்கர் மீனா முதலானோர் பேசியிருந்தனர்.
ராமஜெபம் சொல்லி மந்திரித்த கிராம்புகளை வாயில் வைத்துக்கொண்டால் கொரானா பரவாது. என்று கூறியதோடு ராமஜெபம் சொல்லி பவர் ஏற்றிய கிராம்புகளை மக்களுக்கும் கொடுத்தார் காஸியபாத்தை சேர்ந்த பாஜக தலைவர் நந்துகிஷோர் குஜ்ஜார். மக்களும் கும்பல் கும்பலா குவிந்து அதை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்
உள்ளதிலேயே The Best invention award தரப்படவேண்டியது இவருக்கு. ’அஸ்லாம் அலைக்கும், அதாப் சொன்னால்தான் கொரானா வரும், நமஸ்கார் என்று சொன்னால் கொரானா வராது’ என்றார் பாஜக எம்பி ரமேஷ் பிதுரி. மதவெறியோடு இணைந்த மருத்துவ கருத்து இது.

உபி முதல்வர் சும்மா இருப்பாரா... மனநலத்தை நன்றாக கவனித்துக்கொண்டால் கொரானா வராது என்று அவரும் தன் பங்குக்கு ஒரு புதிய விஷயத்தை முன்வைத்தார்.
உலகமே கொரானாவை கொடிய அரக்கனாக பார்த்த போது ஒருவர் அதை தெய்வமாக பார்த்தார். அது நரசிம்ம அவதாரம் என்றார்.
இந்து மகா சபாவின் தேசிய தலைவர் ஸ்வாமி சக்ரபாணி ‘’கொரானா வைரஸ் என்பதே நரசிம்ம அவதாரம்தான். அசைவ உணவு சாப்பிடுகிற பாவிகளை வதம் பண்ண அது உருவாகி அந்த கொடியவர்களை அழிக்க அவதரித்துள்ளது. அசைவம் தவிர்த்தால் கொரானாவின் கோபத்தில் இருந்து தப்பலாம்.’’என்றார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே எப்படி சும்மா இருக்க முடியும். ‘’சூரிய ஒளியில் தினமும் 15நிமிடம் நின்றால் கொரானா வைரஸ் வெப்பம் தாங்காமல் செத்துப்போய்விடும் ‘’ என்றார்.
கடைசியாக வந்து சேர்ந்தவர்தான் ராஜஸ்தான் எம்பி சுக்பீர் சிங். உடம்பெல்லாம் மண்ணை தேய்த்துக்கொண்டு ஹாட் மாடல் போல கவர்ச்சிகரமாக வீடியோ எடுத்துப்போட்டு மண்குளியல் பண்ணுங்க கொரானாவை விரட்டுங்க என்று அவரே மாடல் ஆக கொரானா மருந்துக்கு விளம்பரம் செய்தார்.
இவர்களெல்லாம் தனி மனிதர்கள் போய்த்தொலைகிறது என்று விட்டுவிடலாம். மத்திய அரசின் நீர்வளத்துறையான மினிஸ்ட்ரி ஆப் ஜல்சக்தி கடந்த மே மாதம் ஐசிஎம்ஆரிடம் ஒரு கேனத்தனமான கோரிக்கை வைத்தது.
கங்கை நீரால் கொரானாவை குணப்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்ய கோரியது. ஐசிஎம்ஆர் எங்களுக்கு உருப்படியான வேலைகள் இருக்கிறது என்று அந்த கோரிக்கையை நல்லவேளையாக நிராகரித்துவிட்டது!

உலகமே அறிவியலின் துணையோடு போராடி கொரனாவிலிருந்து மீண்டு கொண்டிருக்க இந்தியா மட்டும் பாதிப்பில் முதலிடத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. காரணம் ஆட்சியாளர்களின் சிந்தனைகள் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடப்பதே. கொரானாவே நம் மீது பரிதாபப்பட்டு செத்துப்போனால்தான் நமக்கு விடிவுகாலம்.