Pages

15 August 2020

ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு வாழ்த்துகள்

 அண்டை நாடுகளுடனான நட்பு மொத்தமாக அழிந்துவிட்டது. பொருளாதாரம் மீட்க முடியாத இருளுக்குள் சென்றுவிட்டது. தொடர்ந்து நடக்கும் மத வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது.

மாடுகள் பாதுகாப்பில் தொடங்கி தலித்துகள் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தவண்ணமிருக்கின்றன. விவாதங்களின்றி நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கிற புதிய சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்படுகின்றன. வேலையின்மையும் வறுமையும் நாட்டையே ஆட்டிப்படைக்கிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஒரே நாடு ஒரே மொழி... ஒரே மதம்... ஒரே சட்டம்... ஒரே திட்டம்... ஒரே கல்விக்கொள்கை என பண்பாட்டு திணிப்புகள் ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கின்றன.

கவனம் செலுத்த வேண்டிய சிக்கல்களும் ஆபத்துகளும் பெருகிக்கொண்டிருக்க, அரசுகளோ வகுப்புவாதத்தை வளர்க்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபடுகின்றன. இந்த வகுப்புவாத திரையின் வழி தங்களுடைய தோல்விகளை மூடி மறைக்கின்றனர்.

இன்றைய இந்தியா சென்று கொண்டிருக்கும் பாதை வளர்ச்சிக்கான ஒன்றல்ல. அது நம்மை பாழுங்கிணற்றுக்குள் மூழ்கடிக்கிற ஒன்றாகவே தெரிகிறது. ஏற்கனவே இந்திய வளர்ச்சி ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி மட்டுமல்ல, வேற்றுமையில் ஒற்றுமை குறித்தும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்தும் நாம் கொண்டிருந்த நம்பிக்கைகளை தகர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது கேடுகெட்டவர்கள் கொண்டாடுங்காலம். வகுப்புவாதத்தோடு போர்விரும்பிகளாகவும் நம்மை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். உலகில் போரால் விளைந்த நன்மைகள் என்று எதையமே சுட்டிக்காட்ட முடியாது. அது அழிவையே நமக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஆனால் அரசு தன் தவறுகளை மறைக்க தேசபக்தி எனும் போர்வையில் நம் முளைகளை மழுங்கடித்து போருக்கு ஆயத்தப்படுத்துகின்றன. ஒரு நல்ல தலைமை அனைவருக்குமான வளர்ச்சி பற்றி சிந்திக்க தெரிந்தவனாக இருக்கவேண்டும். அழிவைப்பற்றி சிந்திக்கிறவர்களால் எந்நாளும் ஒரு செடியை கூட வளர்த்துவிட முடியாது.

நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்லும் இக்காலக்கட்டம் எல்லா தரப்புக்குமே அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. இப்போதும அரசு நம்மை கண்காணிப்பதில்தான் முனைப்பாக இருக்கிறது. கண்காணிக்கப்படுபவன் பசியோடிருந்தால் அவனுக்கான உணவை வழங்க முற்படுவதில்லை.

இச்சுதந்திரநாளில் ஐசியூவுக்கு சென்று கொண்டிருக்கும் இந்தியாவுக்கு தேவை வகுப்புவாதமோ போரோ வெறுப்புவாதமோ அல்ல. மாறாக 50ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நம் சூழலை நம்மை வளர்த்தெடுக்கும் முற்போக்கான அறிவியல்பூர்வமான திட்டங்கள்தாம். சிறுபான்மையினரை அடக்குதல், வெளியேற்றுதல், பக்கத்து நாடுகளை அழித்தல் அல்ல. அறத்தின் பக்கம் நின்று இத்தீய சுழலை எதிர்கொள்ளவேண்டும். நம் எண்ணங்களில் செயல்களில் கவனம் செலுத்த தவறினால் அதற்கான விலையை நம் எதிராகல சந்ததியினர் தரவேண்டிவரும்.

பல்வேறு மொழிகளும் தனித்தனி பண்பாடுகளும் கொண்ட கோடிப்பேர் ஒற்றுமையாய் ஒருங்கிணைந்து வாழும் தேசத்தை, ஒற்றை அடையாளத்திற்குள் அடக்கவும் ஒரே பண்பாட்டை திணிக்கவும் முயலும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட உறுதியேற்க வேண்டும். அது ஒன்றே நமக்கிருக்கிற வாய்ப்பு.

அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள்.