ஆகஸ்டிலும் ஒரு பொது முடக்கத்தை எதிர்கொள்ளப் போகிறோம். தளர்வுகள் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும், பொதுப்போக்குவரத்தும், சிறிய வேலைகளில் ஈடுபடக்கூடிய முழுமையான சூழலும் இல்லாத நிலையில் ஏழை மற்றும் கீழ்நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதாரச் சூழல் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பணியிழப்புகள், சம்பள இழப்புகள், வியாபாரமின்மை முதலானவை அடுத்த மாதங்களில் உச்சங்களைத் தொடக்கூடும்.
மக்களுடைய மனநிலையிலும் விடுதலைக்கான பரிதவிப்பும் எதிர்காலம் குறித்த அச்சமும் மன அழுத்தஙளை உருவாக்கிவிடக்கூடும். வாடகை தொடங்கி பள்ளிக்கட்டணம் வரை ஏற்கனவே எல்லா பக்கங்களிலும் இருந்தும் பொருளாதார அழுத்தங்கள் நம் கழுத்து நரம்புகளை நசுக்கத்தொடங்கிவிட்டன. எல்லோருக்குமே பணம் தேவையான ஒரு காலம். எல்லோருக்குமே வருமானமில்லாத காலம் மக்களை வெறிபிடிக்கத்தானே செய்யும்.
ஆனால் அரசு இந்த பொது முடக்கத்தை எங்கனம் எதிர்கொள்கிறது. தாங்கள் விரும்பியதை எல்லாம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் செய்துமுடிக்க லாக்டவுனை ஒரு கருவியாக ஆளும் அரசுகள் பயன்படுத்திக்கொள்கின்றவோ என்று ஐயம் வருகிறது. அதனாலேயே இவை மக்கள் நலன் பற்றிய திட்டங்களற்று லாக்டவுனை விரும்பி அமல் படுத்துகிறது போல் இருக்கிறது. பொதுமுடக்கம் ஒன்றுதான் இன்றைய சூழலில் கொரானாவுக்கு எதிரான தற்காப்பு என்றபோதும், தொடர்ச்சியாக அது முன்னெடுக்கப்படும் விதமும், அதன் பலன்களும் அரசின் நோக்கங்களை கேள்விக்குள்ளாக்குகிறது.
குறிப்பாக இத்தனை நீண்ட முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு எவ்வித நிவாரணமும் அறிவிக்கப்படுவதில்லை. வெறும் ஆயிரம் ரூபாயும், ஒருமூட்டை அரிசியையும் கொஞ்சம் பருப்பையும் கொண்டு எத்தனை மாதங்கள் இந்த ஆட்சியாளர்களால் வாழ்ந்துவிட முடியும். அல்லது இதைத்தூக்கி எறிந்துவிட்டால் எல்லோரும் வாய்பொத்தி அமைதியாக இருந்துவிடுவார்கள், மதம் சார்ந்த சர்ச்சைகளை கிளப்பிவிட்டு கவனங்களை திசைதிருப்பி கல்வி சார்ந்த சுற்றுசூழல் சார்ந்த பொருளாதாரம் சார்ந்த தங்களுடைய புளுத்துப்போன கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் எனக்கருதுகிறார்களா?
நான்கு மாத முடக்கம் என்பது மிகநீண்ட காலக்கட்டம். அது பணமுள்ளோருக்கு விடுமுறைக்காலமாகவும் வறுமையில் இருப்பவர்களுக்கு வதையாகவும்தான் இருக்கிறது. இத்தகைய சூழலில் பொதுமுடக்கத்தை தொடர்ந்து வலிறுத்தும் அரசு இதையும் ஒரு பேரிடர் காலமெனக்கருதி நிவாரண உதவிகள் பற்றி கொஞ்சமாவது சிந்திக்கவேண்டும். ஆனால் அவர்களுடைய சிந்தனையோ எம்எல்ஏக்களை விலைபேசுவதிலும், கோயில்களை கட்டியெழுப்புவதிலும், முதலாளிகளின் மனங்களை குளிர்விப்பதிலும், சட்டவரைவுகளை சத்தமில்லாமல் நிறைவேற்றுவதிலும் அல்லவா இருக்கிறது!
உலகிலேயே பேன்டமிக் காலத்தை ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பாக பார்க்கிற ஒரு அரசு இருக்குமானால் அது இங்குதான் இருக்கிறது. ஆட்சியாளர்கள் பேன்டமிக் சூழலை தங்களுடைய சுயவிளம்பரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். பேன்டமிக் சூழலை தங்களுடைய ரகசிய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்தச் சூழலை தங்களை ஆட்டுவிக்கிறவர்களை மகிழ்விக்கவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எதிர்ப்புகளற்ற சர்வாதிகார சூழலை அடக்கி ஆழ்வதை மட்டுமே சிந்திக்கிற இவர்களின் ஆழ்மனம் ரசிக்கத்தொடங்கிவிட்டது.
ஆனால் இந்தச்சூழலால் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிற மக்களுடைய அன்றாட வாழ்வுகுறித்த எவ்வித திட்டங்களும் இல்லை. 22லட்சம் கோடி என்கிற பொய்யான ஒரு மாயக்கனவை நம் மீது திணித்துவிட்டு மறைந்துபோனவர்கள். மீண்டும் மீண்டும் ஏழைகளுக்கு அரிசி கொடுத்தோம் என்பதை எத்தனை மாதங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்கள். காகிதத்தில் எழுதப்பட்ட அரிசியை தின்ன முடியாது!
அழிவுச்சூழலை வாய்ப்பாகக் கருதி காய்நகர்த்துகிறவர்களுக்கு வரலாறு அந்த அழிவையேதான் மீண்டும் மீண்டும் பரிசாகத் கொடுத்திருக்கிறது. இந்த அரசுக்கும் அதுவேதான் நிச்சயம் கிடைக்கும்.