Pages

05 May 2020

தன்னெஞ்சறிவது...






மீனாட்சிக்கு சஞ்சலமாகவே இருந்தது. இந்த மாதிரி சமயத்தில் இப்படியொரு கல்யாணம் அவசியம்தானா என்று உள்ளுக்குள் கேள்வியொன்று அலையடித்துக்கொண்டிருந்தது. தாலிகட்டும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. நேரம் நெருங்க நெருங்க பரிதவிப்பும் அதிகமாகத்தான் ஆகிக்கொண்டே வந்தது. மந்திர ஒலிகளும் மூச்சுதிணறடிக்கும் புகையும் சொக்கநாதருக்கு இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை இருக்காதா... கல்லுமாதிரி உட்கார்ந்திருக்கிறான். முட்டாள்.

தாலிக்கட்டப்போகும் முன் முடிவெடுத்தவளாக எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். கைகளில் தாலியோடு இருகிய முகத்தோடு நின்றுகொண்டிருந்தனர் புரோகிதர்கள். சொக்கநாதருக்கு புன்சிரிப்பு.

என்னாச்சு ஏன் திடீர்னு இப்படி ஒரு முடிவு...

இல்லை இது வேண்டாம். மக்களெல்லாம் கொள்ளை நோய்லயும் பஞ்சத்துலயும் கிடந்து தவிக்கிறப்ப எனக்கு கல்யாணம் ஒரு கேடா... என்னால ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அவங்களோட இருக்கணும். அவங்களுக்கு உதவணும். அவங்களை காப்பாத்தணும். இப்படி என்னை அலங்காரம் பண்ணி உட்காரவச்சு பூச்சூடி பொட்டுவச்சு கொண்டாடறது அவமானமா இருக்கு. இந்த கல்யாணத்தை நிறுத்துங்க...
உரத்துச்சொன்னாள். சொக்கநாதர் சத்தமில்லாமல் புன்னகையோடு அமர்ந்திருந்தார்.

சொக்கு உனக்குகூட இது தோணலையா அகிலத்தையே ரட்சிக்கும் நமக்கு இந்த நேரத்தில் இது தேவையா நாம் அவர்களோடு அல்லவா இருக்கவேண்டும். அவர்களுடைய குரலுக்கு அல்லவா நாம் காதுகொடுத்து காக்கவேண்டும். கொதித்தாள் மீனாட்சி.

சொக்கநாதர் புன்னகை மாறாமல் ``நீ சொல்றதும் சரிதான். இந்த நேரத்தில் இந்த கல்யாணம் எதுக்குன்னு எனக்கும் தெரியலை... இதை அடுத்த வருஷம் வச்சுக்கலாமே... என்று தயக்கமாகக் கேட்டார்.

புரோகிதர் தன் அருகில் இருந்தவரிடம் என்ன லூசு மாதிரி பேசுறானுங்க... அதெல்லாம் கல்யாணத்தை நிறுத்தமுடியாதுனு நான்தான் சொல்லிட்டேனே. மரபை மாத்திக்கக் கூடாது. சடங்குகளை நிறுத்தமுடியாது. கல்யாணம் குறித்த நேரத்தில் நடந்தே தீரணும். இல்லாட்டி தப்பாகிடும். யாரும் வந்தாலும் வராட்டியும் திருமணம் நடக்கும்.

புரோகிதர் வயதானவர். மிகுந்த அனுபவசாலி. 60 ஆண்டுகளாக திருமணம் செய்துவைத்துக்கொண்டிருப்பவர். அவருடைய கோபத்தைப்பற்றி மற்ற புரோகிதர்களுக்கு தெரியும் என்பதால் யாரும் அவரை நெருங்கவும் கூட அஞ்சுவார்கள்.

மீனாட்சிக்கு கோபம் அதிகமாகிக்கொண்டேதான் போனது. தன் தோளில் சாத்தியிருந்த எடைகூடி அழுத்திக்கொண்டிருந்த மாலைகளை அணிகலன்களை உடலை அறுத்துக்கொண்டிருந்த பட்டாடைகளை அவிழ்த்து எறிந்துவிட்டு கோயிலைவிட்டு வெளியேற முடிவெடுத்தாள். அவளுடைய மனக்கண்ணில் கண்ணகியின் அவிழ்ந்த தலைமுடியும் தீபாய்ந்த கண்களும் வந்துபோனது. கண்ணகி செய்ததை தானும் செய்யப்போவதாக எண்ணிக்கொண்டாள்.

புரோகிதர் தாலியை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தார். மந்திரங்கள் கூட்டாக ஜெபிக்கப்பட்டபடியிருந்தன. மலர்கள் வாறி இறைக்கப்பட்டன. எங்கும் ஒளி நிறைந்திருந்தது.

கனத்த இதயத்தோடு மீனாட்சி இருளுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தாள். முடிவெடுத்தவளாக... போதும் இந்த வேடிக்கை விளையாட்டு என்று முடிவெடுத்தவளாக...

அணிந்திருந்த நகைகளை மாலைகளை கழட்டி எறிய கைகளை தூக்க முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. எழுந்து நிற்க முயற்சி செய்தாள். அதுவும் முடியவில்லை. ஒரு நூல் அளவுகூட அவளால் அசையவும் முடியவில்லை.

சொக்கு என்னால் நகரமுடியவில்லை... என்னை ஏன் பிடித்துவைத்திருக்கிறாய். என்னை செல்லவிடு. போதும் உன் திருவிளையாடல். நான் போகவேண்டும் என்றாள். சொக்கநாதர் புன்னகை மாறாமல் ஒரு சிகை விளையாடலும் இல்லை. உன்னால் நகர முடியாது நீ நம்பமறுத்தாலும் அதுதான் நிஜம் என்றார்.

நான் போகவேண்டும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம். நான் தெய்வம். மக்களை காப்பதே என் முழுமுதற்கடமை என்னை போகவிடு சொக்கு என்றாள் மீனாட்சி.

நொய் நொய் என்று கடுப்பாக்காதே அது என்னால் நிச்சயமாக முடியாது

நீயாவது எழுந்து செல் என்றாள். அதுவும் என்னால் முடியாது என்றார் சொக்கநாதர்.

சொக்கநாதர் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தார். அது மீனாட்சியை மேலும் கோபப்படுத்தியது. என்னுடைய கோபம் புரியவில்லையா இளித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாய் என்றாள் மீனாட்சி. அது புரோகிதர் போட்டுவிட்ட ஒப்பனை என்பதுகூடவா இவளுக்கு புரியாது என்று எண்ணிக்கொண்டார். சொன்னால் பிரச்சனை வேறுபக்கம் திரும்பி தன்மீது பாய்ந்துவிடுவாள் என்பதை சொக்கு அறிந்திருந்தார்.

நாம் நினைத்தாலும் நம்மாள் நகர முடியாது... புரோகிதர்தான் மனதுவைக்கவேண்டும்.

நாம் கடவுள் இல்லையா... புரோகிதர் துணையில்லாமல் நம்மால் எங்கும் நகர முடியாதா. இது என்ன விபரீதம்

முடியாது. புரோகிதர்கள் சொன்னால் நாம் கடவுள்... இல்லையென்றால் வெறும் கல்தான். நகரவே முடியாது. எதையும் செய்ய முடியாது.

மீனாட்சியின் மஞ்சள் முகம் சிவக்கத்தொடங்கியதாக அவள் நினைத்தாள்.

நான் எத்தனையோ லட்சம் பேரை காப்பாற்றி இருக்கிறேன். எத்தனையோ பேரை குணப்படித்தி இருக்கிறேன். நான் தெய்வம் இல்லையா...எனக்கு சக்தி இருக்கிறது. எத்தனையோ கோடி பேரை ரட்சிக்கவே யாம் அவதரித்தோம். அருபாலிப்பது ஒன்றே எமக்கு தொழில்.

எல்லாமே யதேச்சையானது. பத்தாயிரம் வேண்டுதல்களில் பத்து பேருக்கு குணமாகும். மீதி எத்தனையோ லட்சம் பேர் செத்து மடிந்திருக்கிறார்கள். நீ யாருக்கும் எதையுமே கொடுத்ததில்லை.

புரோகிதர் மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டே இருந்தார். அவருடைய தலைப்பாகை தீபத்தில் ஒளி வீசிக்கொண்டேயிருந்தது. அதன் நுனியில் இருந்த முத்துமாலை ஆடிக்கொண்டிருந்தது. அவர் எந்த நேரத்திலும் மீனாட்சியை நெருங்கிவிடக்கூடும்.

இதையெல்லாம் நம்பமுடியவில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள். நான் கடவுள் என்னால் எதையும் செய்ய முடியும். மக்களை ரட்சிக்க முடியும். நான் எத்தனையோ பேருக்கு விமோசனம் அளித்தவள். செல்வங்களை தந்திருக்கிறேன்.

எல்லாமே யதேச்சையானது. எதிர்பாராமல் விழுந்த கனிகள். உன்னால் ஒன்றுமே நடந்ததில்லை. மற்றவர்களை விடு... உன்னால் கூட ஒரு அடி கூட நகரமுடியாது. நீ வெறும் கல். அதை நான் எப்போதோ உணர்ந்துவிட்டேன். அந்த புரோகிதன் நினைத்தால் நாளைக்கே உன்னை தூக்கி எறிந்துவிட்டு வேறொரு கல்லை கொண்டுவந்து வைத்து எனக்கு கல்யாணம் செய்துவைத்துவிடுவான் மீனு.

சொக்கநாதருக்கு கொஞ்சம் கூட ஈவுஇரக்கமே இல்லையோ என்று நினைத்துக்கொண்டாள் மீனாட்சி.

நான் யார் என்பதை நிரூபிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. இதற்காகத்தான் பல கோடி ஆண்டுகளாக காத்திருந்திருக்கிறேன். இன்று நான் இந்த திருமணத்தை நிறுத்திக்காட்டி உண்மையில் நான் எவ்வளவு சக்தி வாய்ந்த கடவுள் என்பதை நிருபீத்துக்காட்டுகிறேன் என்று சூளுரைத்தாள் மீனாட்சி. சொக்கநாதர் முகம் மாறாமல் புன்னகைத்தது. இதை நானே செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் நீங்கள் காத்திருந்திருந்தீர்களா... உங்கள் திருவிளையாடல் புரிந்துவிட்டது.

மீனாட்சி முடிந்தமட்டும் தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தாள். அவளால் ஒன்றுமே முடியவில்லை. சொக்கு சிரிக்காதே நிச்சயம் மாற்றுவேன். என் மக்களை காக்க நான் மட்டுமே இருக்கிறேன். கிளம்புவேன்... முக்கி முனகி என்னென்னவோ செய்துகொண்டிருந்தாள்.

புரோகிதர் அருகில் தாலியோடு நெருங்கினார். எனக்கு இந்த திருமணம் வேண்டாம். நான் போக வேண்டும் என்னை விடு விடு... என்று கத்தினாள். புரோகிதர் அதையெல்லாம் கவனிக்காதவராக அருகில் வந்தார்.

உன்னை என்ன செய்கிறேன் பார் என் பார்வையாலேயே உன்னை எரித்துவிடுகிறேன்... உன் இதயத்தை நிறுத்துகிறேன் பார் என்றாள். தான் நினைத்தமாத்திரத்தில் புரோகிதரின் இதயம் நின்றுவிடும் என்று நினைத்தாள். இதயம் நின்றுபோகாதா என ஏங்கினாள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பக்கத்தில் சொக்கநாதரையும் அவ்வப்போது அவள் கவனிக்கத்தவறவில்லை. அவனுடைய புன்னகை கேலிசெய்வதைப்போலிருந்தது. வானத்திலிருந்து மின்னல் தோன்றி புரோகிதர் தலையில் விழும் என்று நினைத்துக்கொண்டாள்.. ஒளி வந்தது. ஆனால் மின்னலில்லை ஃப்ளாஷ்லைட்டுகள் ஒளிர்ந்தன.

தான் நினைப்பதையெல்லாம் எப்படி செயலாக மாற்றுவது என்று அவள் அறிந்திருக்கவில்லை என்பதை முதன்முறையாக அறிந்துகொண்டாள். அவளால் எதுவுமே செய்யமுடியாது என்பது அப்போதுதான் புரிந்தது. புரிந்த கணத்தில் உள்ளுக்குள் எதுவோ ஒன்று தணிந்து நீர்த்துப்போய் கரைந்தது போலிருந்தது. அது ஒரு கொடுந்துயரமாக படிந்தது. மீனாட்சி புன்னகை சூடினாள்.