24 March 2017
பால்கனி தாத்தா
நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபாரமான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அவர் நம்முடைய வாழ்வின் அவலங்களை புன்னகையோடு எளிய கதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். அவை இலக்கியத்தரத்தோடு இருந்தன.
அசோகமித்திரனின் கதைகளின் மொழி மூளையை அஷ்டபங்காசனம் பண்ண வைக்கிற வகையில் என்றைக்குமே இருந்ததில்லை. தண்ணீரும் ஒற்றனும் மானசரோவரும் கரையாத நிழல்களும்... ஒவ்வோரு சிறுகதைகளும் மக்களின் மொழியில்தான் உணர்வுகளை கடத்தின. அந்த உணர்வுகளின் அழுத்தம் என்றென்றைக்குமானவை.
எழுத்தில் இன்னமும் அரிச்சுவடியைக்கூட தாண்டிடாத நானே ஒரு நானூறு லைக்ஸ் வாங்கினால் ஆட்டம் போடத்தோன்றுகிறது. ஆனால் எத்தனையோ மகத்தான கதைகளை எழுதிவிட்டு எப்படி இந்த ஆளால் இப்படி தேமேவென்று பால்கனி தாத்தாவாக இருக்கமுடிகிறது என வியந்திருக்கிறேன்.
அவர் எப்போதும் பால்கனியில் அமர்ந்துகொண்டு இலக்கிய உலகை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து இறுதிக்காலம் வரை எழுதிக்கொண்டிருந்தார். தான் எழுதுவதை சமகால எழுத்தாளர்களை போல சமூகத்திற்கு செய்கிற தொண்டாக, தியாகமாக, எது எதுவாகவோ அவர் நினைத்ததே இல்லை.
``உங்கள் படைப்புகள் மூலமாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்?’’ என்கிற கேள்விக்கு அவருடைய சமீபத்திய விகடன் தடம் பேட்டியில் இப்படி பதில் சொல்லியிருந்தார்.
``பெருசா எதுவும் பண்ணலை. பெருமையா எதுவும் சொல்ல முடியாது. வாழ்க்கையில நல்லா உக்காந்து எழுதி பொழுதுபோக்கியிருக்கேன். நான் எழுதினதை சிலபேர் படிச்சிருக்காங்க. அவ்வளவுதான்.’’
அசோகமித்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் இதுதான். அவருக்கு எழுத்து என்றைக்கும் மகிழ்ச்சிக்கானதாக மட்டுமே இருந்திருக்கிறது. ஒற்றனின் ஒவ்வொரு வரியிலும் அந்த மகிழ்ச்சியை நான் உணர்ந்திருக்கிறேன். எழுதுவதன் மகிழ்ச்சி... அத்தனை எளிதில் வாய்க்காது. மன திருப்திக்காக மகிழ்ச்சிக்காக எழுதுதல் பெரிய வரம். அதைநோக்கித்தான் எழுதுபவர்கள் முன்னகர வேண்டும். நான் அதைத்தான் செய்ய முயற்சி செய்கிறேன்.
தமிழ்மகனின் நூல்வெளியீட்டில்தான் அவரை கடைசியாக பார்த்தது. அவருடைய பேச்சையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை அவரே குறிப்பிட்டு சிரித்தார். அந்த சுய எள்ளலை அவருடைய சிறுகதைகளை இனி நிறையவே மிஸ் பண்ணுவோம். மற்றபடி இது கல்யாணச்சாவுதான்.
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் அசோகமித்திரனின் முழுமையான சிறுகதை தொகுப்பை (காலச்சுவடு) ஒரு நண்பர் பரிசளித்தார். அதை இந்த ஆண்டு இறுதிக்குள் வாசித்து முடிப்பதுதான் அவருக்கு செய்கிற மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
என்னைப்போன்ற பேரன்களுக்கு ஏராளமாக எழுதி வைத்துவிட்டுத்தான் செத்துப்போயிருக்கிறது இந்த எழுத்து தாத்தா. அதையெல்லாம் வாசித்து பகிர்வதை விடவும் வேறென்ன பெரிய அஞ்சலியை செய்துவிடப்போகிறோம்... இந்த மகத்தான எழுத்தாளனுக்கு!
#அசோகமித்திரன்