இது ஒரு கணினியின் கதை. ஒரு கணினிக்காக எழுதப்படும் கதை. அதே கணினியில்தான் இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தக் கணினி என்னுடையது அல்ல… பிரபல எழுத்தாளர் முனிராஜுடையது.
என்னைப் போலவே 90-களில் வளர்ந்த இளைஞர்கள் பலருக்கும் எழுத்தாளர் முனிராஜ் மிகப்பெரிய ஆதர்சம். அவருடைய துள்ளலான கதைகளும், தீராத இளமைத்துடிப்புமிக்க எழுத்து நடையும் வாசிக்கிற யாரையுமே உள்ளே இழுத்து, நான்கு சாத்து சாத்தி, கை வாயைப் பொத்தி, அடிமையாக்கி உட்காரவைத்துவிடும். அப்படி உட்காரவைக்கப்பட்ட பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன்.
முனிராஜ், முழுநேர எழுத்தாளர் எல்லாம் இல்லை. மருந்து ஆராய்ச்சி நிறுவன அதிகாரி. அவரின் எழுத்துக்களில் சற்றே தூக்கலாக விஞ்ஞானம் விளையாடும். முனிராஜ் மீதான பிரியத்தில், எத்தனையோ நாட்கள் யார் யாருடனோ விவாதித்து, சண்டை போட்டிருக்
கிறேன். குறிப்பாக, எங்களுடைய முக்கிய எதிரிகளான எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகர்களோடு.
சுஜாதா ரசிகர்களும் நாங்களும் பல இடங்களில் மோதிக்கொண்டாலும், எங்களுடைய மெயின் கோதா... தெருமுனை ஸ்டார் சலூன்தான். அங்குதான் அத்தனை வார - மாத இதழ்களும் குவிந்துகிடக்கும். சலூன் கடை அண்ணன், முனிராஜின் வெறியர். அதனாலேயே எங்கள் குழுவின் எல்லா போர்களுக்கும் அவரே தளபதியாக முன்நின்று போரிடுவார். அவருடைய தம்பிக்கோ சுஜாதாவைத்தான் பிடிக்கும் என்பதால், சுஜாதாயிஸ்ட்களும் அங்கே வந்து உரிமையோடு உட்கார்ந்திருப்பார்கள். சுஜாதாவின் கதைகளில் குறைகள் கண்டுபிடித்து நாங்களும், முனிராஜ் கதைகளின் சிக்கல்களை அவர்களும்... மாறி மாறி விவாதிக்க... சலூன் கடை விவாதம் குருக்ஷேத்திரம் ஆகும்.
எங்களைப்போலவே சுஜாதாவுக்கும் முனிராஜுக்கும் நடுவிலும்கூட அறிவிக்கப்படாத ஒரு போட்டி இருப்பதாக நாங்களாகவே நம்பினோம். பேட்டி ஒன்றில் முனிராஜிடம்…
‘`சுஜாதாவின் வாரிசு நீங்கள்தான் என்று சொல்கிறார்களே?’’ என்று ஒரு நிருபர் கேட்டார்.
முனிராஜைக் கோபப்படுத்தவே கேட்கப்பட்ட கேள்வி அது. ஆனால் முனிராஜ் சாந்தமாகப் பதில் சொன்னார்... ``அவர் கமல், நான் ரஜினி. ஒரே வானில் பறக்கும் இரண்டு சாட்டிலைட்கள். ஆனால், வெவ்வேறு வேலைகளுக்காக...’’
சுஜாதா தன் வாழ்நாளில் முனிராஜ் பற்றி ஒரு சொல்கூட எழுதியதும் இல்லை; சொன்னதும் இல்லை.
முனிராஜ் எப்போதுமே மிகவும் குறைவாகவே பேசுகிறவராகவும் எளிமையானவராகவும், தன் பிரபலத்தைப் பயன்படுத்தி காரியங்கள் சாதிக்காதவராக, ஏழை எளிய வாசகர்களுக்கு நிறைய உதவிகள் செய்பவராகவே முன்னிறுத்தப்பட்டார். இதை எல்லாம் அவர் விளம்பரத்துக்காகச் செய்கிறார் என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அவர் அவை பற்றி கவலைப்பட மாட்டார். அவருக்கு யார் வாசகர் கடிதங்கள் அனுப்பினாலும் தவறாமல் பதில் அனுப்புவார்... திட்டி எழுதினாலும்கூட.
``முனிராஜோட பலமே நம்மளை மாதிரி சாதாரண வாசகர்கள் வார்த்தைகளை மதிக்கிற, அவங்க மேல அவர் வெச்சிருக்கிற மரியாதைதான்டா. அதுக்குக் காரணம் அவர் வாழ்க்கைடா’’ என்பார் சலூன் கடை அண்ணன்.
தொடக்கத்தில் முனிராஜ், கோவையில் வாழும் சாதாரண வாசகராகத்தான் இருந்தார். பண்ணையில் விவசாயக்கூலி வேலைபார்த்த ஒருவருடைய குடிசையில் பிறந்து முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் சென்றவர். படிப்படியாக முன்னேறி எழுத்தாளரான அவருடைய வாழ்க்கைக் கதை, வெளியாகாத பத்திரிகைகளே இல்லை.
எழுதத் தொடங்கிய காலத்தில், சம்பத்குமார் என்கிற தன் நிஜப்பெயரில் எப்போதாவது சிறு பத்திரிகைகளுக்கு விமர்சனக் கடிதங்கள் போடுவார். ஜெயகாந்தன் எழுத்துலகின் ராஜாவாக ஆட்சிசெய்த காலகட்டத்தில் முனிராஜ் ‘எழுத்தாணி முனை’ என்ற சிறுபத்திரிகையில் சின்னச்சின்ன விஷயங்கள்கொண்ட பத்தி ஒன்றை எழுத ஆரம்பித்திருந்தார். கணையாழியில், சுஜாதா தன் ஒரிஜினல் பெயரைக் கொஞ்சம் மாற்றி ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் அப்போதுதான் கடைசிப் பக்கங்கள் ஆரம்பித்திருந்தார். கிட்டத்தட்ட அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு முனிராஜ், சாதா சம்பத்குமாராகத்தான் இருந்தார்.
90-களில்தான் தொடங்கியது முனிராஜின் வளர்ச்சி. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் கதைகள் எழுதவே தொடங்கினார். சம்பத்குமார் ‘முனிராஜ்’ ஆனார் (குலசாமி முனியப்பன் + மனைவி ராஜலட்சுமி). அவருடைய கதைகள் அடுத்தடுத்து பல பத்திரிகைகளிலும் வெளிவரத் தொடங்கின. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு களம். கதைகளில் பெரிய தத்துவ விசாரணைகள் இருக்காது. ஹாலிவுட் சினிமா பாணியில் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், எதை எழுதினாலும் அவர் நம்புகிற அரசியலைத் தெளித்திருப்பார். போகிறபோக்கில் இலக்கிய நூல்களை அரசியல் எழுத்துக்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பார்.
``பிஹெச்.டி படிச்ச ஒருத்தன் ஒண்ணாங்கிளாஸ் பையனுக்குப் பாடம் எடுக்க வந்தான்னா எப்படி இருக்குமோ, அப்படிப்பட்டது முனிராஜ் ரைட்டிங்’’ என்று இலக்கியவட்டத்தில் பேசிக்கொள்வார்கள். முனிராஜ் தன் கதைகளில் பொட்டில் அறைவதுபோல் பொளேர் என்று ஒரு முடிவை வைத்திருப்பார். யாருமே கணிக்கவே முடியாத ஒன்றாக அது இருக்கும். அதனாலேயே அவரை ஓ.ஹென்றியோடு ஒப்பிட்டு விமர்சிப்பார்கள். ‘க்ளைமாக்ஸ் கிங்’ என்ற பட்டப்பெயர்கூட இருந்தது. கோடம்பாக்கத்துக்கான நுழைவு வாயிலை அந்தப் பட்டப்பெயர்தான் திறந்துவிட்டது. 90-களின் கடைசியில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இயக்குநர்கள் அத்தனை பேரும், க்ளைமாக்ஸுக்காக அவரை விரட்ட ஆரம்பித்தனர்.
ஒரு பக்கம் அவர் வளர்ந்துவந்தபோதும், இப்படி நல்ல கதைகளையும் சிறந்த முடிவுகளையும் எழுதுவது அவர் இல்லை என்ற பேச்சு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. அவருக்கு இந்தக் கதைகளைத் தருவது, அவருடைய கணினிதான் என தமிழ்நாடு முழுக்கவே ஒரு வதந்தி எப்போதும் நிலைத்து இருந்தது. இலங்கை கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஜெயசூர்யா சிக்ஸரும் ஃபோருமாக விளாசிக்கொண்டிருந்தபோது `அவருடைய பேட்டில் ஸ்ப்ரிங் வைத்திருக்கிறார், பேட்டின் மேல் மர்ம ரசாயனம் பூசுகிறார்’ என்று எல்லாம் வதந்திகள் உலவிக்கொண்டிருந்தன. அதற்கு இணையான வதந்திகள் முனிராஜ் குறித்தும் தொடர்ந்து பரவியது அல்லது பரப்பப்பட்டது. ஜெயசூர்யாவுக்கு பேட் மாதிரி முனிராஜுக்கு கணினி. பத்திரிகைகளில் வருகிற அவருடைய புகைப்படங்கள் அனைத்திலும் அவரோடு தவறாமல் இடம்பிடித்திருக்கும் அந்தக் கணினி. எல்லா படங்களிலும் ஒரே கணினிதான்.
சுஜாதா தன் ஒரு கதையில் கதை எழுதும் கணினியை உருவாக்கியிருப்பார். முனிராஜிடம் அதுபோன்று ஒன்று இருக்கிறது என்று நம்பினார்கள். இன்ன இன்ன விஷயங்கள் வேண்டும் என்று சொல்லிவிட்டால் கணினியே வேண்டியபடி த்ரில்லரோ, ஹாரரோ, ரொமான்ஸோ வேண்டிய ஜானரில் கதையை சிறப்பாக எழுதித்தந்துவிடும் என்று அவருடைய வாசகர்கள்கூட நினைத்தனர். ஆனால், வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். முனிராஜின் கணினி குறித்த கதைகள் எல்லாம் அமானுஷ்யத்தன்மையோடு, கைகால் முளைத்து வாசகர்கள் அத்தனை பேரிடமும் எப்படியோ நிலைபெற்றது. முனிராஜிடம் இதைப் பற்றி ஒருமுறை டி.வி பேட்டியில் கேட்டபோது, ‘இன்ட்ரஸ்ட்டிங்’ என்று கண்கள் சிமிட்டினார்... அவ்வளவுதான்.
அவர் தன் கதைகளை கணினியில் எழுதுகிறார் என்று முதன்முதலாக வெளிவந்த கிசுகிசு செய்தியே எங்களுக்குப் புல்லரிப்பாக, ஓர் அறிவியல் புனைக்கதைபோல் இருந்தது. கணினி என்பது கணக்கு போட மட்டும்தான் என நம்பிக்கொண்டிருந்த காலம். முனிராஜைப் பார்த்துதான் சுஜாதா கம்ப்யூட்டரில் ஆர்வம் வந்து அதைப் பற்றி படித்தார் என்று நாங்களும், சுஜாதாவைக் காப்பி அடித்துதான் முனிராஜ் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டார் என்று அவர்களும் எந்நேரமும் சண்டையிடுவோம். ஆனால், எனக்கு நன்றாகத் தெரியும் சுஜாதாதான் இதில் மூத்தவர் என்பது... இருந்தும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
இரண்டு அணிகளிலும் தலா ஐந்து சின்ன சுஜாதாக்களும், ஐந்து மினி முனிராஜ்களும் இருந்தோம். எங்கள் அணியிலேயே ‘கிட்டத்தட்ட முனிராஜ்’ நான்தான். அவரைப் போலவே உருவத்திலும், ஏதோ கொஞ்சம் எழுத்திலும். அவரைப் போலவே சதுரமான ஃப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்துகொள்வேன். இடதுபுறமாகத் தலைவாரிக்கொள்வேன். முனிராஜுக்காக கம்ப்யூட்டர் க்ளாஸுக்குப் போய் எம்எஸ்-தாஸ், பேசிக், ஃபோர்ட்ரான் எல்லாம் படித்தேன்.
ஐ.ஏ.எஸ் கோச்சிங் பெறுவதற்காக சென்னை வந்த பிறகு, முனிராஜ் சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்த ஏரியாவிலேயே நானும் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். அது யதேச்சையானது அல்ல. நான் எழுதிய கதைகளை அவரிடம் கொடுத்து பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்பது என் கனவு. அவருடைய வீட்டு வாசல் வரை செல்வேன். ஏதோ தயக்கமாக இருக்கும். போக மாட்டேன்.
ஒருநாள் தைரியம் வந்தவனாக வீட்டுக்குள் நுழைந்துவிட்டேன். முனிராஜ் போலவே தலை வாரி, அவரைப்போலவே உடை அணிந்து, வீட்டு முன் நின்றேன். முனிராஜ்தான் கதவைத் திறந்தார். எப்போதும் டிப்டாப்பாக மட்டுமே பார்த்து வியந்த ஆளுமை, லுங்கியோடு நின்றுகொண்டிருக்க, எனக்குச் சிரிப்பு வந்தது. அவருக்கும் என்னுடைய வேஷத்தைப் பார்த்து சிரிப்பு வந்திருக்கும். புன்னகையை அப்படியே மென்று முழுங்கினார். ``என்ன வேணும்?’’ என்று கேட்டார். விவரம் சொன்னேன். உள்ளே அழைத்து உட்காரவைத்தார்.
அவர் எழுதுகிற அறை அது. என்னை அங்கே காத்திருக்கச் சொல்லிவிட்டு, எங்கோ சென்றுவிட்டார். என்னைச் சுற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புகளும் இருந்தன. அப்படியே பார்த்துக்கொண்டே வர, ஒரு திரைச்சீலைக்குப் பின்னால், ஓர் ஓரமாக அந்தக் கணினி இருந்தது. ஒரு பூதம் கைகால்களை மடக்கி அமர்ந்திருப்பதைப் போலவே அது இருந்தது. எத்தனை எத்தனை கதைகளை, முதன்முதலாக வாசித்த கணினி. அதன் கீபோர்டைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என விநோதமான ஆசை எழுந்தது. ஆனால், அதன் அருகில் செல்லவும் அச்சமாக இருந்தது. தைரியம் வந்தவனாக அந்தக் கணினிக்கு அருகில் சென்றேன். கீபோர்டில் ‘S’ என்ற எழுத்து மட்டும் அதிகமாகத் தேய்ந்திருந்தது. முனிராஜ் தன் நாயகிகளுக்கு ‘S’ என்ற முதல் எழுத்தில்தான் எப்போதும் பெயர்வைப்பார். செல்வி, ஸ்டெல்லாவில் தொடங்கி செண்பகவள்ளி வரை. அவருடைய முதல் காதலியின் பெயர்கூட சரோஜா அல்லது சந்திரா... இப்படி எதுவோ ‘S’-ல்தான் ஆரம்பிக்கும். திரைச்சீலையைத் தாண்டி நின்றுகொண்டி ருந்தேன். எதிரில் கணினி.
எனக்கு முன்னால் இருக்கிற இந்தக் கணினிக்குள்தான் ஏதோ ரகசியம் இருக்கிறது. இதை வைத்துதான் ஏதோ மாயாஜாலம் பண்ணுகிறார். ஒருவேளை முழுக்கதையைக் கொடுத்துவிட்டால், உலகின் மிகச்சிறந்த க்ளைமாக்ஸைக் கொடுக்கிற மென்பொருள் உள்ளே இருக்குமோ… இதுவரை உலகில் யார் யாரோ எழுதிய, அத்தனை கதைகளையும் உள்ளே தொகுத்து, அதன் வழியே தானாகவே கதைகளை உருவாக்கும் இன்ஜின் வைத்திருப்பாரோ... நாய்க்குட்டிபோல அமைதியாக நிமிர்ந்து, அமர்ந்திருந்த கணினியின் தலையைச் செல்லமாகத் தடவ கையை நீட்டினேன்.
‘`அங்கே என்ன பண்றீங்க?’’ என்ற முனிராஜின் குரல் ஒரு புல்லட்டைப்போல மூளையைத் தாக்கியது. பிலுக்கென்று கையை உள்ளே இழுத்துக்கொண்டேன். கையில் இரண்டு கோப்பை காபியோடு நின்றார்.
‘`சார் நிறைய வாசிப்பீங்களா?’’ என்று அப்பாவியாகக் கேட்டேன்.
‘`ஆயிரம் பக்கங்கள் வாசிச்சாத்தான், அஞ்சு பக்கங்கள் எழுத முடியும் குமார்’’ என்று கம்பீரமாகச் சொன்னார். அவருடைய தீவிர வாசகன் என்பதையும், அவருடைய சிறந்த கதைகளை நான் வாசித்த கதைகளையும் கொட்டினேன். அன்பாகக் கேட்டுக்கொண்டார். கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் என் கதைகள், கவிதைகளை எடுத்து நீட்டினேன். அதை வாங்கிப் புரட்டியவர். சில இடங்களில நிறுத்தி கண்ணாடியைச் சரிசெய்துகொண்டு படிக்க ஆரம்பித்தார். முகத்தில் சன்னமாகப் புன்னகை.
‘`நீங்க கல்யாண்ஜி, பசுவய்யா, பிரமிள், நகுலன் கவிதைகள்லாம் படிச்சிருக்கீங்களா?’’ எனக் கேட்டார்.
‘`நான் வாழ்க்கையில உங்க எழுத்துக்கள் மட்டும்தான் சார் படிச்சிருக்கேன், சுஜாதாவோட கதைகள்கூடப் படிக்க மாட்டேன்’’ என்று பெருமையோடு பொய் சொன்னேன். அந்த அறையில் சின்னதாகப் பூகம்பம் வருகிற மாதிரி சிரித்தார். முதல் சந்திப்பிலேயே என்னை அவருக்கு ரொம்பவே பிடித்துப்போனது என்பதை அவருடைய பார்வையில் கண்டுகொண்டேன்.
`‘நான் வெறும் வாட்ச்மேன்தான்ப்பா… இலக்கியத்துக்கு உள்ளே முதல்ல போங்க ஏகப்பட்ட கருணாமூர்த்திகள் இருக்காங்க, அவங்க கத்துக்கொடுப்பாங்க’’ என்று ஆசி கூறி அனுப்பிவைத்தார்.
``அவங்கள்லாம் வேண்டாம் சார், நீங்க சொல்லிக்குடுங்க’’ என்றேன்.
அதற்குப் பிறகு அடிக்கடி அவருடைய வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டில் அவருடைய மனைவி ராஜலட்சுமி மட்டும் இருப்பார். அந்த அம்மாவுக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால் மளிகை சாமான் வாங்குவது, பிளம்பரை அழைத்து வருவது, வீட்டைச் சுத்தமாக்குவது மாதிரி வேலைகளுக்கு என்னைதான் அனுப்புவார். சாப்பாடு போடுவார். எனக்கு அவருடைய மகன் சாயல் எனச் சொல்வார். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் நான் எழுதிய கதைகளை முனிராஜிடம் கொண்டுபோய் காட்டுவேன். அவர் புரட்டிப்பார்த்துவிட்டு… ``நீ ஏன் என்னை மாதிரியே எழுதணும். உன்னை மாதிரி எழுது. எதுக்காக நீ என்னை மாதிரியே கண்ணாடியும் முடியும் வெச்சிருக்க? அதை மாத்து. உனக்கு நல்லா எழுத வருது. இன்னும் கொஞ்சம் பக்குவப்படணும். அவ்வளவுதான். புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி இவங்க எழுத்துக்களைப் படி. தினமும் பேப்பர் படி’’ என்று அறிவுரை கொடுப்பார்.
அவரோடு அமர்ந்து சாப்பிடும்போதுகூட, ‘`ஜெயமோகனோட காடு நாவல் வாசிச்சு பாரு. நான் தர்றேன். அவ்ளோ பிரமாதமா இருக்கும்’’ எனச் சொல்லிக்கொண்டேதான் சாப்பிடுவார்.
எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துப் போக ஆரம்பித்தார். கடற்கரையில் அலைகளைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார். சுண்டக்கஞ்சி சாப்பிட்டுவிட்டு மணலில் தூங்குவார்.
அவர் சொன்ன கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து வாசிப்பேன். வாசித்து முடித்ததும் நான் தயாராகிவிட்டதாக நினைத்து அவரிடம் ஓடிப்போய்ச் சொல்வேன். அவர் இன்னொரு பட்டியல் சொல்வார். இந்த மனிதரை இம்ப்ரஸ் பண்ணுகிற மாதிரி ஒரு கதை எழுதிவிட வேண்டும் என வெறிவரும். ராஜலட்சுமி அம்மா ஆறுதலாகப் பேசுவார். ‘`அவர்தான் சொல்றார்ல... அதை எல்லாம் படியேன்டா’’ என்பார்.
‘`சார் க்ளைமாக்ஸ்ல எப்படி சார் அந்த மாதிரி ஒரு ட்விஸ்ட்டை உங்களால வைக்க முடியுது. அதைச் சொல்லிக்குடுங்களேன். நானும் எவ்வளவோ ட்ரைபண்றேன்’’ என்று கேட்பேன். அவர் சிரிப்பார்.
‘`புதுமைப்பித்தனோட `காஞ்சனை’ கதை படி...’’ என்று அனுப்பிவைப்பார்.
ஒருமுறையாவது அவர் எழுதுவதை அருகில் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், அவர் அனுமதிக்க மாட்டார். அவர் எழுதும்போது அறை உள்பக்கமாகத் தாழிட்டிருக்கும். மனைவிகூட தொந்தரவு செய்ய முடியாது. முனிராஜ் கதைகளைத் தட்டச்சுவதை ஒருமுறைகூட ராஜலட்சுமி அம்மா பார்த்தது இல்லையாம். ஆச்சர்யமாக இருந்தது. எங்கு சென்றாலும் அழைத்துச் செல்பவர் எழுதும்போது கிளம்பச் சொல்லிவிடுவார்.
எல்லோரும் சொல்வதுபோல அந்தக் கணினியில்தான் ஏதோ சூதுவைத்திருப்பாரோ என்று சந்தேகம் வரும். எப்படி இவரால் இதுமாதிரி யோசிக்க முடிகிறது... எங்கிருந்து கிடைக்கிறது இத்தனை கற்பனை? அறிந்துகொள்ளும் ஆர்வம் எப்போதும் அதிகரிக்கும். அவர் இல்லாத சமயத்தில் கணினியைத் திறந்துபார்த்துவிடாலம் என்று நினைப்பேன். ஆனால், செய்ய மாட்டேன். சிக்கினால், இனி எப்போதும் இந்த வீட்டுக்குள் நுழையவே முடியாது. கீபோர்டில் தேய்ந்துபோன அந்த ‘S’ எழுத்தைப் பார்க்கும்போது எல்லாம், `அதைப் போட்டு ஏன் தேய்த்திருக்கிறார்?’ என்ற எண்ணத்தோடு கடப்பேன். ஒருவேளை இந்த பட்டனைத் தொடர்ந்து தட்டினால் அலாவுதீனின் பூதம் வருமோ!
``சார் இந்த கம்ப்யூட்டரை எத்தனை வருஷமா வெச்சிருக்கீங்க?’’
யோசிப்பார்...
``இது எனக்கு கிஃப்ட்டா வந்துது. பத்து வருஷம் இருக்கும் குமார். அப்பப்ப நானே அப்டேட் பண்ணிப்பேன்’’ என்பார்.
‘`இதுலதான் உங்க கதைகளை எல்லாம் வெச்சிருக்கீங்களா?’’ என்று கேட்பேன்.
``உன்னை தி.ஜா-வோட `அம்மா வந்தாள்’ படிக்கச் சொன்னேனே என்னாச்சு?’’ என்று கேட்பார்.
நான் கிளம்பிவிடுவேன்.
‘`சார்... நீங்க கதை எழுதும்போது பக்கத்துல இருந்து பார்க்கணும்’’ என்று ஒருமுறை அவரிடமே கேட்டேன்.
``அதெல்லாம் அப்புறம், முதல்ல டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி எழுத்துக்களை எல்லாம் படி, மாப்பசான் சிறுகதைகள் படி’’ என்று எப்போதும்போலவே அனுப்பிவைத்தார்.
‘அதைப் படிக்கிறதுக்கும் நீ கதை எழுதுறதைப் பக்கத்துல நின்னு பார்க்குறதுக்கும் என்னய்யா சம்பந்தம்?’ என எனக்குள் கடுப்பாக இருக்கும். புத்தக அடுக்குகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டு, அவர் எழுதும்போது பார்க்கலாமா என்று திட்டம்போடுவேன். நாள்பட எனக்கு கணினியின் ரகசியம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வெறியாக மாறத் தொடங்கியிருந்தது.
நான் ஐ.ஏ.எஸ் ப்ரிலிம்ஸில் தோற்றுப்போன ஒருநாளில், முனிராஜ் மாரடைப்பில் இறந்துபோனார். அறைக்குள் எதையோ எழுதிக்கொண்டிருந்தபோது அல்லது எழுத நினைத்து அமர்ந்தபோது மாரடைப்பு வந்திருக்கிறது. எழுந்துபோய் அவரால் கதவைத் திறக்க முடியவில்லை. அறைக் கதவை உடைத்துத் திறந்தபோது… அவர் இறந்துபோய் சில மணி நேரமாகியிருந்தது. அவருடைய தலை கீபோர்டில் சரிந்துகிடந்தது. இடது ஆட்காட்டி விரல் மட்டும் ‘S’ எழுத்தின் மேல் அழுந்தியிருந்தது.
ராஜலட்சுமி அம்மாவுக்குக் குற்றவுணர்ச்சி. கதவைத் திறந்துவெச்சிருந்தா காப்பாத்திருப்பேனே... தாங்க முடியவில்லை. அவருக்கு ஆறுதல் சொல்லி அருகிலேயே இருந்தேன். நான் நான்கு நாட்களுக்கு எதுவுமே சாப்பிடாமல் பைத்தியம் பிடித்துத் திரிந்தேன். முனிராஜ் இல்லாத உலகத்தைக் கற்பனைசெய்யக்கூட மனம் இல்லை. என் காதலி செத்துப்போயிருந்தால்கூட அப்படி அழுதிருக்க மாட்டேன். யாரோ ஒரு மனிதனின் சில ஆயிரம் சொற்கள் அப்படி அழவைத்தன. அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதிச் சடங்குக்கு வந்து குவிந்தனர். ராஜலட்சுமி அம்மா, வீட்டைக் காலி பண்ணி விட்டு மகனுடன் போகப்போவதாகச் சொன்னார்.
‘`அம்மா இந்த கம்ப்யூட்டரை நான் எடுத்துக்கவா?’’ - தயக்கமாகக் கேட்டேன். அம்மா என்னை ஏற - இறங்கப் பார்த்தார். அவருக்கு என்மீது பரிதாபம் வந்திருக்கும்போல.
‘`நீ எடுத்துட்டுப் போடா’’ என்று மட்டும் சற்றே சத்தமாகச் சொன்னார் அம்மா. அன்று அவரது கருவிழிகள் அகன்றிருந்ததை முதன்முறையாகப் பார்த்தேன்.
பத்து ஆண்டுகளாக எப்படி ஒரு மனிதனால் ஒரே கணினியை வைத்திருக்க முடிந்தது, ஏன் இதைப் பற்றி பேச மறுக்கிறார்... இப்படி பல கேள்விகள் அந்தக் கணினியைக் கடக்கும்போது எல்லாம் எழும். அதைப் பார்க்கும்போது எல்லாம், உயிருள்ள ஒரு மனிதன் அல்லது கதைசொல்லி அமர்ந்திருப்பதைப்போலவே இருக்கும். அது லேசாக அசைவதாகக்கூடத் தோன்றும். இப்போது நான் அந்தக் கணினியோடு என் அறைக்கு வந்துவிட்டிருந்தேன்.
அன்றைய இரவு... அந்தக் கணினியையே உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தேன். முனிராஜின் மாயக்கண்ணாடி, அற்புதவிளக்கு, கற்பக விருட்சம் இப்போது எனக்கு எதிரே இருக்கிறது. இதைத் திறந்தால் முனிராஜுக்கு வாய்த்த பொக்கிஷங்கள் எனக்கும் வாய்க்குமா? கணினியை ஆன் பண்ண யத்தனித்து எழ... மின்சாரம் தடைபட்டது.
அறைக்குள் இருள் சூழ்ந்துகொண்டது. மெழுகுவத்தியைத் தேட மனமின்றி, நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒரு நெருக்கமான மரணத்துக்குப் பிறகு சந்திக்கிற முதல் இருளுக்கு சிநேக மனோபாவம் உண்டு. அது அடர்த்தியான துயரத்தையும் தனக்குள் கரைத்துக்கொள்ளும். நான் அப்படியே அமர்ந்திருந்தேன். அறையின் மூலையில் இருந்தது கணினி. நாற்காலியில் அமர்ந்திருக்கும் வெந்நிற மனிதனைப்போலவே இருந்தது. அது லேசாகக் காற்றில் அசைவதைப்போல இருந்தது. அதன் அசைவைப் பார்த்தபடியிருந்தேன். முனிராஜின் கதைகளும் அவருடைய சொற்
களும் குவியலாக மூளைக்குள் சிதறிக்கொண்டிருந்தன. யாருமற்ற தெருவில் ஒலிக்கும் ஒரு சைக்கிள் மணி ஓசை கேட்டது. இனி அந்த நபர் இல்லாத உலகத்தில் வாழ்ப்போகிறோம் என்ற எண்ணம் அச்சுறுத்தியது. அழத் தொடங்கினேன். திடீரென விழிப்பு வந்தவனாக இருளில் இருந்து விலக முயன்றேன்.
நான் இருட்டில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றிவைத்தேன். இப்போது கணினியின் நிழல் ஒரு மனித உருவம்போலவே பிரமாண்டமாக எழுந்து நின்றது. நிழல் காற்றில் சலசலத்து ஆடியது. யாரோ ஒரு மனிதன் அறையின் மூலையில் அமர்ந்தபடி என்னையே பார்ப்பதுபோல இருந்தது. மின்னுகிற ஒளியோடு இரண்டு கண்கள் என்னை கூர்மையாக... முனிராஜின் குரல்கூட கேட்டது. நான் அச்சத்தில் அறையைவிட்டு வெளியேற நினைத்தேன். ஏதோ என்னைத் தடுத்து நிறுத்துவதைப்போல் இருந்தது. மிகமிக சிறியதாக அந்தக் குரல் கேட்க ஆரம்பித்தது.
‘`டேய்... வண்ணநிலவனோட `எஸ்தர்’னு ஒரு கதைடா. உடைச்சுப்போட்டுடும். தேவிபாரதி யோட `பலி’னு ஒரு கதை, பாதசாரியோட `காசி’ படிடா, உயிரை உடைச்சுடும்’’ - மெதுவாக அந்த ஒலி அதிகரிக்க ஆரம்பித்தது. காதுகளைப் பொத்திக்கொண்டேன். கண்களை இறுக மூடிக்கொண்டேன். இரவு எல்லாம் அந்த ஒலி காதுக்குள் ரீங்காரமிட்டபடியே இருந்தது. தற்கொலை செய்துகொண்ட லைப்ரரியன் தூக்கத்தில் உளறுவதைப்போல், புத்தக கம்பெனி ஒன்றின் கேட்லாக்கை, குழந்தை ஒன்று மூச்சுவிடாமல் படிப்பதைப்போல அந்த ஒலிகள் காதுக்குள் ரீங்காரமிட்டதன.
விடிந்ததும் முதல் வேலையாக அந்த கணினியைக் கொண்டுபோய் எங்கேயாவது அரசுப் பள்ளிக்குத் தானமாகக் கொடுத்துவிட தீர்மானித்தேன். மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தில் இரவு எல்லாம் உறக்கம் இல்லாமல் தரையிலேயே புரண்டபடியிருந்தேன். விடியும்
போது உடல் தொப்பலாக நனைந்திருந்தது. மூலையில் கணினி புத்தரைப்போல அமர்ந்திருந்தது.
காலையில்தான் அந்த யோசனை வந்தது. கணினியை ஆன்செய்து பார்க்க முடிவெடுத்தேன். பாஸ்வேர்டு... யாரிடம் போய் கேட்பது. பாஸ்வேர்டை உடைத்து உள்ளே செல்லும் வழி எல்லாம் எனக்குத் தெரியாது. என்னோடு படித்த நண்பன் கிருஷ்ணகுமாரை அழைத்து வந்தேன். அவனிடம் இரவு நடந்த ஆவித் தொந்தரவுகளைப் பற்றி சொன்னேன். கலகலவெனச் சிரித்தான். அவன் சுஜாதா ரசிகன்…
``இன்னும் நீ அந்த முனிராஜை விடலையா ஃபன்னி பல்ப் ரைட்டர். அவரோட கதையிலதான் இப்படி லூஸுத்தனமா ஏதாவது வரும். சுஜாதா ஆல்வேஸ் கம்ஸ் வித் எ லாஜிக்டா’’ எனச் சிரித்தான். அவனுக்கு முனிராஜ் இறந்த விஷயம் தெரியாமல் இருக்கலாம். ``மூடிட்டு வேலையப் பாருடா நொன்னை’’ என்று கோபமாகக் கதவைச் சாத்தினேன்.
அரை மணி நேரத்தில் கணினியைத் திறந்துகொடுத்துவிட்டு சிகரட்டோடு வெளியே சென்றுவிட்டான். நான் முனிராஜின் ரகசிய வீட்டுக்குள் நுழைந்தேன். அத்தனை ரகசியமாக என்னுடைய விரல்கள் பட்டன்களைத் தட்டின. இங்கேதான் எங்கேயோ முனிராஜின் கதைகளுக்
கான ரகசியம் ஒளிந்திருக்கிறது. முனிராஜின் ஆவிகூட இங்கே ஏதாவது ஒரு ஃபைலுக்குள் இருக்கலாம். கண்களால் துளாவ ஆரம்பித்தேன். எதுவுமே தட்டுப்படவில்லை. கணினியை முழுக்க அலசி ஆராய்ந்தேன். எதுவுமே இல்லை. ஒரு சின்ன ஃபைல்கூட இல்லை. ஒரு புகைப்படம்கூட இல்லை.
சிகரட்டை அணைத்துப்போட்டுவிட்டு நண்பன் வந்தான். ‘‘டேய் எதுவுமே இல்லடா… ஒரு சின்னத் தகவல்கூட இல்ல’’ என்றேன். அவனுக்கும் எதுவும் தட்டுப்படவில்லை. ``சாகறதுக்கு முன்னால எல்லாத்தையும் அழிச்சிட்டுச் செத்துட்டாரா உன் குருநாதர்?’’ என்றான்.
``வாய்ப்பே இல்லைடா.. அவர் எழுதும்போதுதான் மாரடைப்பு வந்து செத்திருக்கார்’’ அழுத்திச் சொன்னேன்.
‘‘அவர் எழுதுறதை நீதான் பார்த்ததே இல்லையே... அவர் செத்துக்கிடந்தப்போ கம்ப்யூட்டர் ஆன்ல இருந்துதா?’’
‘‘இல்லடா, ஆஃப்லதான் இருந்தது.’’
சுஜாதாயிஸ்ட் யோசிக்க ஆரம்பித்தான். ‘‘மனசுக்குள் பெரிய கணேஷ்னு நினைப்பு. விசாரணை பண்றான் ராஸ்கல்’’ - கோபத்தால் நுரையீரல்களை நிரப்பினேன்.
``வெயிட்’’ என்றவன் உடனே தன் பேக்கில் இருந்து ஒரு சி.டி-யை எடுத்துப்போட்டு ஏதேதோ செய்யத் தொடங்கினான். அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டுத்தரும் மென்பொருள் ஒன்றைப் பதிவேற்றி அதன் வழி எதாவது தேறுமா எனத் தேடிக்கொண்டிருந்தான். ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு, ``ப்ச்… ஒண்ணுமே இல்லடா இதுல இதுவரைக்கும் எதுவுமே சேவ் பண்ணலைடா. ஒரு ஃபைல்கூட இல்லடா...’’ என்றான்.
‘`ஒருவேளை முனிராஜ் ஆவி வந்து எல்லாத்தையும் அழிச்சிருக்குமோ…’’ என்றேன். அவன் ஏதாவது சொல்லிக் கிண்டல் செய்வானோ என்று நானே பேச்சை நகர்த்தினேன்.
``இதைக் கவனிச்சியா... இந்த மொத்த கீபோர்டுல `S’ எழுத்து மட்டும்தான் சுத்தமா அழிஞ்சிருக்கு. மத்த கீஸ் எல்லாம் அப்படியே புத்தம்புதுசா இருக்கே’’ என்றேன். தன்னுடைய சுண்டுவிரலால் அந்த `S’-ஐ நான்கு முறை அழுத்திப்பார்த்தான். ``வொய்?’’ என்றான். ``ஒருவேளை `S’ ஃபார் சுஜாதாவா இருக்குமோ?’’ என்றான். நான் எதுவும் பேசவில்லை. அவன் இன்னொரு சிகரெட்டை முடிக்கக் கிளம்பினான். எனக்கு அவனையே முடிக்க வேண்டும்போல இருந்தது.
ஒருவேளை முனிராஜுக்கு கணினி இயக்கவே தெரியாமல் இருக்குமோ? நான் யோசிக்கும்போதே சிகரெட் முடித்தவன் அதையே சொல்லிக்கொண்டு வந்தான். ``டேய் உன் ஆளு வெட்டிபந்தாவுக்காகப் பொய் சொல்லிருப்பாரோ. அவருக்கு கம்ப்யூட்டர் யூஸ் பண்ணவே தெரியாம இருக்குமோ?’’ என்றான்.
என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக முனிராஜ் தன் கோப்புகளை அழித்திருக்க வேண்டும். அவருக்கு ரெக்கவர் பண்ண முடியாத அளவுக்கு அழிக்கிற விஷயங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். அல்லது இது அவருடைய ஆவியின் வேலையாக இருக்கலாம். தன் கற்பனையின் ஊற்றை யாரும் கண்டறியக் கூடாது என நினைத்திருக்கலாம். நான் நண்பனிடம் இதைப் பற்றி வெளியே சொல்லிவிடாதே என்று அன்பாகக் கேட்டுக்கொண்டேன். அவன் ``நான் சுஜாதா ரசிகன்டா... அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்’’ என்று கிளம்பினான்.
எனக்கு முன்னால் அந்தக் கணினி அப்படியே அமர்ந்திருந்தது. அந்த `S’ பட்டனின் புதிரை அவிழ்க்க மூளை முயன்றபடி இருந்தது. அது சுஜாதாவாக இருக்குமோ? சரோஜா? software? Secret? Self? Satisfaction? Search...
**********
ஆனந்தவிகடன் , அக்டோபர் 2016 இதழில் வெளியான சிறுகதை.
**********
ஆனந்தவிகடன் , அக்டோபர் 2016 இதழில் வெளியான சிறுகதை.