Pages

27 February 2017

தீபாவுக்கு என்ன வேண்டும்?




மேம்பாலங்களில் இதை கவனித்திருக்கலாம். யாராவது மேம்பாலத்தின் உச்சியில் வண்டியை நிறுத்தி கீழே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தால், இயல்பாக இன்னொருவரும் வண்டியை நிறுத்தி எட்டிப்பார்ப்பார்கள். அடுத்தடுத்து ஆட்களும் எதற்கு பார்க்கிறோம் என்பதே தெரியாமல் பார்ப்பார்கள். காவல்துறை வந்து கடமையை செய்தால்தான் கூட்டம் கலையும். ஜெயாடிவி அமைந்திருக்கிற ஈக்காட்டுத்தாங்கல் பாலத்திற்கு பக்கத்தில் அடிக்கடி இந்த காட்சி அரங்கேறும். நானும் கூட இப்படி வண்டியை நிறுத்தி எட்டிப் பார்க்கிற வழக்கம் உள்ளவன்தான். சிலநேரங்களில் அதிரவைக்கிற காட்சிகள் காணக்கிடைக்கும். பிணங்கள் கூட மிதந்துகொண்டிருக்கும்.

அப்படித்தான் இன்றும் பாலத்திற்கு கீழே சிலர் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தனர்... நானும் போய் நின்றேன். எப்போதும்போலவே விபரங்களை விசாரித்தேன். ''தீபாம்மா போறாங்க'' என்றார் ஒருவர். எனக்கு புரியவில்லை. ''என்னாம்மா போறாங்க'' என்றேன்... அதாங்க தீபாம்மா என்று அழுத்தமாகச் சொன்னார். புரியமாலே போயிருக்கலாம். அப்படியே மேம்பாலத்தில் இருந்து குதித்துவிடலாமா என்று இருந்தது.

மன்னார்குடி மாபியாவின் அரசியல் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடுவில் நகைச்சுவை பகுதிபோல நடக்கிறது அண்ணன் மகள் தீபாவின் அடாவடி. அவர் எந்த அடிப்படையில் அதிமுகவை கைகொள்ள துடிக்கிறார். எதற்காக அவர் அதிமுகவிற்கு தலைமை தாங்க நினைக்கிறார் என்பது அம்மாவின் ஆன்மாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது. இருந்தாலும் கடுமையான இந்த வெயில் காலத்திலும் சாமக்கோடங்கி போல போர்வையை போர்த்திக்கொண்டு துணிச்சலாக திரிகிறார். கட்சியின் அடிமட்டத் தொண்டர் போல ''ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிக்கொள்ள கூடாது'' என்கிறார்.

புதிதாக தொடங்குகிற அமைப்புக்கு பெயர் வைக்கும்போது மறக்காமல் தன் பேரையும் சேர்த்துக்கொள்கிறார். பேர் வச்சியே சோறுவச்சியா என்கிற முதுமொழிக்கு இணங்க... கட்சிக்கு என்னம்மா கொள்கைகள் என விசாரித்தால்... ஜெயலலிதா மரண மர்மத்தை கண்டுபிடிப்பது, ஜெ சொத்துக்களை மீட்பது என்கிறார். இரட்டை இலையை காப்பாற்றுவது என்கிறார். இதையெல்லாம் சாதித்து அதை யாரிடம் கொடுக்கப்போகிறார் என்பதுதான் இந்தக்கதையில் இருக்கிறது சுவாரஸ்யமே!

எக்காலத்திலும் தீபாவை ஜெயலலிதா குறிப்பிட்டு பேசியதோ அல்லது ஊடகங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியதோ கூட இல்லை. இவரும் இத்தனை காலமும் எங்கும் எப்போதும் முன்வந்து உரையாடியதில்லை. தீபா தனி மனுஷியாகவும் மக்கள் பிரச்சனைகளுக்காகவோ... அல்லது தன்னுடைய அத்தையின் பிரச்சனைக்களுக்காகவோ கூட வாசல் தாண்டியதில்லை! எங்கோ பதுங்குகுழியில் பல ஆண்டுகளாக இருந்தவர். அத்தைக்கு உடம்புக்கு முடியவில்லை என சாலையில் இறங்கியிருக்கிறார். அவருக்கு அத்தையை தூரத்தில் நிறுத்தியாவது ''தோ பார் ஆன்ட்டி'' எனக்காட்டி அனுப்பியிருந்தால் தமிழ்நாடு இந்த காமெடிகளை தவறவிட்டிருக்கும். நல்லவேளையாக கைதி எண் 9234 புண்ணியத்தில் நமக்கு நல்ல டைம்பாஸ்!

ஒருவேளை இத்தனை ஆண்டுகளும் பதுங்கி இருந்ததே தமிழகத்திற்கான அடுத்த அம்மா ஆவதற்கான தகுதியாக நினைத்தாரோ என்னவோ.... ஆமாம் நம்முடைய முன்னாள் முதல்வரும் அப்படித்தானே... ஆட்சியில் இல்லாத போதெல்லாம் கொடநாட்டில் தானே பதுங்கி இருப்பதைத்தானே முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தார். ஆட்சியில் இல்லாத போது எப்போதாவது போராட்டத்தில் ஈடுபட்டதை நாடு பார்த்ததுண்டா?

அப்படி பிஸியாக இவ்வளவு காலமும் சும்மாவே இருந்த தீபா... இப்போது திடீரென்று அதிமுகவின் மீதும், தமிழக மக்களின் மீதும் அன்பு உண்டாகி களமிறங்கி தினமும் தவறாமல் காலை மாலை இரண்டுவேளையும் பால்கனியில் நின்று கை ஆட்டிக்கொண்டிருக்கிறார். தன்னளவில் அதுவே இந்த மக்களுக்கு செய்கிற மாபெரும் புரட்சி என கருதுகிறாரோ என்னவோ... இதே காலகட்டத்தில் இங்கே எது எதுக்கோ ஆளாளுக்கு போராடிக்கொண்டிருக்க... இவர் மட்டும் அப்படி ஒன்று தமிழ்நாட்டில் நடப்பதே இல்லைபோல வாழ்ந்துகொண்டிருந்தார்.

இவர் அரசியலில் களமாடத்தொடங்கிய கடந்த நான்கு வாரங்களாக செய்திருக்கிற அதிரடியான அரசியல் நடவடிக்கைகளில் முக்கியமானது ஜெயலலிதாவை போலவே விளக்கெண்ணெய் போட்டு படிய படிய தலை வாரி சீவியது. ஜெவைப்போலவே உடை அணிவது. ஜெவைப்போலவே பால்கனியில் நின்று கைகாட்டுவது. ஜெவைப்போலவே மிமிக்ரி பண்ண முயல்வது... ஜெவைப்போலவே நம்பிவந்த அடிமைகளையும் பேட்டிக்கு வந்த ஊடகங்களையும் வாசலில் மணிக்கணக்கில் தேவுடு காக்கவைப்பது.... மதியம்தான் தூங்கி எழுவது... என எல்லாமே அப்படியே அச்சு அசலாக ஜெதான்!

இதே வேகத்தில் அதிகாரம் கிடைத்தால் நிறையவே ஊழல்கள் செய்து உடன்பிறவா சகோதரியை தத்தெடுத்துக்கொண்டு, தன் வளர்ப்பு மகனுக்கோ மகளுக்கோ பிரமாண்டமான காதுகுத்து விழாகூட நடத்தி நான்தான் உண்மையான அம்மாவின் வாரிசு என நிரூபித்தாலும் நிரூபிக்கலாம்.

செய்தி சேனல்கள் ஒரு சிலரை இரண்டு மூன்றுநாட்களுக்கு செய்திகளின் சுவைக்காக புரட்சி வீரனாக, புதிய நம்பிக்கையாகவெல்லாம் ப்ரேக்கிங் நியூஸ் நாயகர்களாக முன்னிறுத்தும். பிறகு கழட்டி எறிந்துவிட்டு வேறொருவருக்கு பின்னால் ஓடிவிடும். அப்படித்தான் ஜெ அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது ஒவ்வொரு நாளும் அதே புளித்துப்போன அப்பல்லோ அறிக்கைகளையும் வளர்மதிகளின் சரஸ்வதிகளின் முதலைக் கண்ணீர்களையும் காட்டிக் காட்டி மக்களை போராடித்து கொண்டிருந்தனர். அந்த வேளையில், நியூஸ் சேனல்களுக்கு லட்டுபோல வாகாக வந்து சிக்கியவர்தான் தீபா.

முதலில் மண்டையை படிய வாரி சீவிக்கொண்டார். அடுத்து பச்சை நிற சால்வை போர்த்திக்கொண்டார்... கண்களை உருட்டி உருட்டி பார்த்தார். அப்போதும் ஜெயலலிதா சாயல் வரவில்லை. சன்னமாக லிப்ஸ்டிக் அடித்துக்கொண்டு தாடையை மேல் நோக்கி இழுத்து ஒருமாதிரி சோக ஸ்மைலி போல முகத்தை வைத்துப்பார்த்தார்... தேர்ந்த மிமிக்ரி கலைஞரைப்போலவே ஜெயலலிதா பாணியில் பேச முயன்றார். ஆனால் என்னதான் உடலெல்லாம் சூடு போட்டுக்கொண்டாலும் மைக் முன்னால் மியாவ் மியாவ் என்றுதான் நமக்கு கேட்டது. ஏன் என்றால் ஜெயலலிதாவே புலி கிடையாது... நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊழல் பூனைதான். ஆனால் இத்தகைய ஒரு அரசியல் பிரவேசத்தை இந்தியா மட்டுமல்ல உலகமே கண்டிருக்காது!

ஏதோ இருட்டுக்குள் பார்க்கும்போது ஒரு சாயலில் ஜெயலலிதா போல வெள்ளையாக உருண்டையாக இருக்கவே அதையே பயன்படுத்தி பரபரப்பாக்கியது ஊடகங்கள்தான். தீபாவின் கதையில் ஒரு மர்மம் இருக்கிறது. அவர் ஜெ. சாயலில் இருப்பதால் அவர் ஜெயலலிதாவின் மகளாக இருப்பாரோ என எல்லோருக்குமே ஒரு சந்தேகம் இப்போதும் உண்டு. அதனாலேயே மக்களும் இரண்டு நாட்களுக்கு ''அதே கண்ணு அதே மூக்கு கன்பார்ம் அடுத்த ஜெயலலிதாதான்'' என ஏற்றிவிட... கங்கா தன்னை சந்திரமுகியாகவே நினைக்க ஆரம்பித்தார். அதற்கேற்ப வடமாவட்டங்களில் சிலர் அம்மாவின் ரத்த சொந்தம்தான் அதிமுகவின் வாரிசு என உளற... அதற்கு பிறகுதான் பால்வாடி கேர்ளின் பால்கனி பிரவேசம் தொடங்கியது.

அம்மாசாயல் இருக்கு இவங்கதான் அடுத்த முதல்வர் என மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல ஒரு குரூப் தீபாவின் பின்னால் அலைகிறது. சொல்லப்போனால் தீபாவை விடவும் அம்மாவின் சாயல் அதிகமுள்ளவர் ப்ரியாதம்பிதான். அவரைக்கூட வாரிசாக முன்னிறுத்தலாம். ஆனாலும் மானுடகுல வரலாறு இத்தகைய கொடூரமான அடிமைகளை கண்டிருக்கவே கண்டிருக்காது. அம்மாவின் ரத்த சொந்தம்தான் எங்களை ஆளவேண்டும் என போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். குனியறோம் ஏறி மிதிங்க என்று வான்டடாக போய் நிற்கிறார்கள்.

ஆனால் மன்னார்குடியர்களை எதிர்ப்பது அத்தனை சுலபமல்ல. பின்புலத்தில் வலிமையான ஆதரவுக்கரங்கள் இல்லையென்றால் இதைப்பற்றி யாருமே சிந்திக்கவும் தயங்குவார்கள். அந்தக்கரங்கள் பாஜகவின் தமிழக ஏஜென்டுகளுடையதாக இருக்கலாம்.

இங்கே கால்பதிக்க நினைக்கிற பாஜகவோ ஆட்சியை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக ஒருபக்கம் பன்னீர் செல்வத்தை இயக்குகிறது. சுனாசாமியைக்கொண்டு அதிமுகவிற்குள் காய்நகர்த்துகிறது. பாஜகவின் அப்படிப்பட்ட முன்னகர்வுகளில் சிறியரக ஆயுதமாக தீபாவை பயன்படுத்துகின்றன என தாரளமாக சந்தேகிக்கலாம். ஏன் என்றால் செத்துப்போன அத்தையின் சாவில் இருக்கிற மர்மத்தை அறிவதுதான் தீபாவின் தேவை என்றால் இவ்வளவு காமெடிகள் தேவைப்படாது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்கிற அமைப்புகள் வேண்டியதாயிருக்காது. ஆனால் அவருக்கு வேண்டியதெல்லாம் வேறு என்னவோ... அது கிடைத்ததும் நிச்சயம் கிளம்பிவிடுவார்.