Pages
▼
04 February 2017
கன்னிவாடி கண்டெடுத்த ஆல்ரவுண்டர்...
எழுத்தாளர்கள் குறித்தும் எழுத்துகள் குறித்தும் பரிச்சயம் உண்டான போது நான் பேசிப்பழக நினைத்த இரண்டு எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தியும், க.சீ.சிவகுமாரும். இலக்கியம் என்றாலே அது சிடுமூஞ்சிகளுக்கானது என்பகிற மரபான இயல்புகளை உடைத்தெறிந்த விசித்திரர்கள் இந்த இருவரும். ஒரே காலத்தில் உருவாகி வந்த தமிழின் மிகமுக்கியமான இரண்டு படைப்பாளிகள். நம் வாழ்வில் அன்றாடம் கடக்கிற சோகமான தருணங்களையும் கூட எளிய பகடியோடு களுக்கென புன்னகைக்க வைக்கிற இரண்டு வரிகளை வீசிச்செல்கிற அபாரமான எழுத்துக்காரர்கள். நான் எழுத விரும்புகிற மொழியை நடையை அவர்களிடமே இப்போதும் எடுத்துக்கொள்பவனாக இருக்கிறேன். ஆனால் பாஸ்கர்சக்தியோடு வாய்த்த நட்பும் பழக்கமும் சிவகுமாரோடு சரியாக அமையவில்லை. அதற்கு அவர் அச்சு அசலாக என் தந்தையின் சாயலில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு என் தந்தையை பிடிக்காது. அதனாலேயே என் தந்தையில் சாயலற்ற அவருடைய எழுத்துகளோடுதான் அதிகமும் பழகியிருக்கிறேன்.
க.சீ.சிவகுமாரின் எழுத்துகள் எனக்கு ஆதிமங்கலத்து விசேஷங்களின் வழிதான் அறிமுகம். முகத்தை சிரித்தமாதிரியே வைத்துக்கொண்டு ஒரு மொத்த நூலையும் வாசித்தது அதுதான் முதல்முறை. முதல் முறை படித்து பித்துப்பிடித்தது போல அடுத்தடுத்து மூன்று... நான்கு... ஐந்து என பல முறை படித்து தீர்த்த நூல் அது. அங்கிருந்துதான் அவருடைய சிறுகதைகளுக்குள்ளும் கட்டுரைகளுக்குள்ளும் பயணித்திருக்கிறேன். எல்லா கதைகளிலும் சிவகுமார் இருப்பார். கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பார். கிரிக்கெட்டும் காதலும்தான் சிவகுமாரின் கதைகளில் நிறைந்து இருந்தன. அவர் எப்போதும் இப்போதும் கிரிக்கெட் ஆடுகிறவராகவே இருந்தார்.
வேலை இல்லாத கிராமத்து வாலிபனாக, சைக்கிளில் திரிந்து பெற்றோரிடம் எந்நேரமும் திட்டுவாங்குகிற, ஊருக்குள் ஒரு பெண்ணையும் விடாமல் விரட்டி விரட்டி காதலித்து தோற்கிற வாலிபனாக... சோகமாக திரியும் காதலனாக, காசின்றி கையறு நிலையில் குடும்பத்தை எதிர்கொள்கிறவனாக, தான்தோன்றியாகத் திரியும் நாடோடியாக, என்று க.சீ.சிவகுமாரின் கதைகளில் தோன்றுகிற நாயகர்கள் எல்லோருமே வாழ்வை வேதனையோடுதான் எதிர்கொள்வார்கள். ஆனால் அந்த வேதனைகளைத்தாண்டிய ஒரு கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் அவர்களிடம் நிலைத்து இருக்கும். அதுதான் சிவகுமாரின் இயல்பாகவும் இருந்தது. எல்லா வேதனைகளையும் புன்னகையோடு கடக்கிற மனிதராகவே அவர் இருந்தார். புன்னகைக்காத அவருடைய புகைப்படங்களை நான் கண்டதேயில்லை.
தமிழ் இலக்கிய உலகம் குரூரமானது. அது யாரைக் கொண்டாடும் யாரை நிராகரிக்கும் யாரை வேண்டுமென்றே தள்ளிவைக்கும் என்று கணிக்கவே முடியாது. க.சீ.சிவகுமார் தன்னுடைய அபாரமான மொழி ஆளுமைக்காகவும் அழகான கதைகளுக்காகவும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இருக்கவேண்டியவர். அவரைவிடவும் சுமாராக எழுதுகிற மொழிகுறித்த எவ்வித பயிற்சியோ ஆற்றலோ இல்லாதவர்களுக்கு கிடைத்த பீடங்கள் கூட சிவகுமாருக்கு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்போதுமே இருந்து இருக்கிறது. அவருக்கு விருதுகளும் கூட அதிகமாக கிடைத்ததாக நினைவில்லை. சமகாலத்தின் டாப் சிறுகதை எழுத்தாளர்கள் குறித்த குறிப்புகளில் அவர் பெயர் இடம்பெறாமல் போயிருக்கிறது. மிகசிறந்த நூறு கதைகள் பட்டியல்களில் அவருடைய கதைகள் இருந்ததே இல்லை. அதை அவரிடமே கூட நான் பகிர்ந்துகொண்டது உண்டு. அதையும் தன்னுடைய புன்னகையோடு அடபோங்க பாஸு என்று கடந்து போகிறவராகவே அவர் இருந்து இருக்கிறார். நான்குநாட்களுக்கு லைக் வரவில்லை என்றாலே எழுதுவதை நிறுத்துகிறவர்களின் காலகட்டத்தில், சிவகுமார் எவ்வித வாழ்த்துகளும் இன்றி மரியாதைகளைப்பற்றி கவலையின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். சிறுகதைகளின் மீது தீராப்ரியம் கொண்டவராகவும் அவர் இருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு காட்சிப்பிழை இதழில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் பற்றி எழுதியிருந்த கட்டுரை நினைவுக்கு வருகிறது. சினிமா ஒரு அம்மாஞ்சி எழுத்தாளனை எப்படி வஞ்சித்து சுரண்டிவிட்டு சக்கையாக தூக்கி அடித்தது என்பதை எழுதியிருப்பார். அதையும் கூட புன்னகைக்கவைக்கும் படிதான் எழுதி இருப்பார். அந்த அனுபவங்கள் நமக்கு நேர்ந்திருந்தால் என்று எண்ண ஆரம்பித்த தருணத்தில் நான் அழுதுகொண்டிருந்தேன். என் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. அத்தகைய மோசமான அனுபவங்களை அவர் எதிர்கொண்டிருந்தார். அதனாலேயே சினிமாவிலிருந்து விலகி இருந்து இருக்கிறார்.
தமிழ் இலக்கிய உலகம் எவ்வளவு விசித்திரமானது என்றால், ஒரு எழுத்தாளனை பற்றி அறிந்துகொள்ள அவன் சாகவேண்டியதாக இருக்கும். இரங்கல் குறிப்புகளின் வழிதான் எழுத்தாளர்களை அடையாளங்காணும். எழுத்தாளர்கள் இறந்தபிறகுதான் அவரை வாசிக்கும். அவருடைய எழுத்துகளை ஆய்வுக்கெல்லாம் உட்படுத்தும். இதோ இப்போது சிவகுமார் இறந்துவிட்டார். இனியாவது வாசிக்கட்டும். இனியாவது கொண்டாடட்டும்.
கன்னிவாடி ஆல்ரவுண்டருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.