30 October 2015
போவியா... போவியா...
பெங்களூருக்கு கடைசியாக எப்போது போனேன் என்று நினைவில்லை. ஆனால் சிலபல ஆண்டுகளாவது இருக்கும். இன்பசுற்றுலாவோ என்னவோ பையன்களோடு பஸ்ஸில் போனது நினைவில் இருக்கிறது. மொபைல் போன்கள் பிரபலமடைந்திருந்த நேரம்… மொபைல் வாங்க ஆக்சசரிஸ் வாங்கவென்று சிலமுறை. குறுகிய காதலொன்றின் நிமித்தமாக சிலமுறை. மிகசமீபத்தில் அலுவலக மீட்டிங்கிற்காக அதிகாலை ஃப்ளைட் பிடித்து அதிகாலையிலேயே இறங்கி ஒருமணிநேரத்தில் வேலையை முடித்து அடுத்த விமானத்தில் காலையிலேயே சென்னை வந்து சேர்ந்தேன். அதுவே கடைசி. ஆறேழு ஆண்டுகள் கடந்திருக்கும். ஃபேஸ்புக் வழியே அவ்வப்போது அந்த ஊர் ட்ராபிக்கில் தியேட்டரில் மாலில் ஆபீஸ்களில் மனிதர்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வதுண்டு.
அந்த ஊர் குறித்த பிம்பம் என்பது என்றுமே குறும்பானதாகத்தான் இருந்திருக்கிறது. புதுப்புருஷன் போல் எப்போதும் பட்டும்படாமல் உரசிக்கொண்டேயிருக்கிற ஓசிஏசி குளிரும் வளவளப்பான கால்களோடும் கட்டைவிரலில் நடக்கும் ஏராளமான கவர்ச்சியை சுமந்துகொண்டு அலைகிற குட்டைப்பாவடை பெண்களுமாக பப்கள் என்னே… குளிர்ந்த நல்பீர்கள் என்னே… மால்கள் என்னே… மலிவு விலை எலக்ட்ரானிக் ஐட்டங்களும் எம்ஜிரோடும் ஆஹா… கப்பன் பாகும் லால்பாகும் அங்கே கட்டிக்கொண்டு கசமுசா பண்ணுகிற காதலர்களும் மரங்களும் பசுமையுமென பெங்களூரு குதூகலிப்பாக மட்டும்தான் நினைவிலிருக்கிறது. பெங்களூரு போய்வருவதே ஒரு ஸூகானுபவமாக மட்டுமே இருந்திருக்கிறது. செட்டில் ஆகணும்னா இந்த ஊர்லதான் ஆகணும் என அடிக்கடி நினைப்பதுண்டு.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அங்கே முகாமிட்டிருந்தேன். மாரத்தானுக்காக. ஊருக்குள் ஓடி ஓடியே அளந்ததுபோக, சும்மாவும் நண்பர் ஒருவரோடு ஸ்கூட்டரில் சுற்றினேன் ஒரே ஒருநாள்தான். பள்ளிக்காலத்தில் முக்குக்கு முக்கு நின்று சைட் அடித்த பைங்கிளியொன்று திருமண வாழ்வில் சிக்கி சீரழிந்து போய் பிள்ளைகுட்டிகளோடு பார்க்க நேரிடும்போது உண்டாகுமே ஒரு இது… அதுதான். அப்படி இருந்தது!
மழைகாலத்திலும் அப்படியொரு பிசுபிசுக்க வைக்கிற கேவலமான வெயில். கொஞ்சம்கூட குளிர்ச்சியே இல்லை. வேர்வையும் புழுக்கமும் இம்சிக்க வந்திருப்பது பெங்களூர்தானா என்று விசாரித்து உறுதிசெய்துகொண்டேன். பசுமையை பார்க்குகளில் மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஹாரன் சத்தம். கொசகொசவென மக்களின் கூச்சல் காதை நிரப்புகிறது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்கள் வரிசையில் நிற்கின்றன. நடந்தே போகக்கூடிய இடங்களுக்கெல்லாம் கூட காரில்தான் போகிறார்கள். அதில் பாதி பேருக்கு வண்டி ஓட்டவராது என்றார் நண்பர். (பெங்களூரில் மொத்தமிருக்கிற வாகனங்களின் எண்ணிக்கை 55லட்சம், அதில் 11லட்சம் கார்களாம்! ) சாலையில் இறங்கி நடந்தால் நிம்மதியாக நடக்கவும் கூட முடியாதபடி கும்பல் கும்பலாக மக்கள் அலை மோதுகிறார்கள். புகை தூசு… மூச்சுமுட்டுகிறது. (காற்றுமாசுபாட்டில் பெங்களூருக்கு இரண்டாமிடம்!) இந்த கொடூரங்களுக்கு மத்தியில் மெட்ரோ ரயில் வேலைகள் வேறு டொக்கொ டொக்கென்று டொக்குகிறார்கள். காசுள்ள ஐடிகாரர்களுக்கு மட்டும் வால்வோ பஸ் விட்டிருக்கிறார்கள் போல!
ஊரில் மூலைக்கு மூலை பார்களை திறந்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் குடிப்பதைப்பற்றி சகஜமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் எங்குபார்த்தாலும் நவநாகரீக அந்நிய வடநாட்டு முகங்கள். உள்ளூர் மனிதர்களையெல்லாம் மொத்தமாக ஒழித்துவிட்டது போலிருந்தது. எங்குபார்த்தாலும் நிறுவனங்கள், சோர்ந்த முகத்துடன் பணியாளர்கள், டாப்டூ பாட்டம் ப்ராண்டட் மனிதர்கள். இது முழுக்கவும் வணிகமயமாக்கப்பட்ட வேறொரு ஊராகத்தெரிந்தது.
இந்த மாற்றம் ஐடி வெடிக்கு பின்னால் உருவாயிருக்கலாம். அந்நியர்களின் வரத்து எல்லைமீறி அதிகரித்ததால் உண்டான விளைவாகவும் இருக்கலாம். வெளியூரிலிருந்து இங்கே வந்து குடியேறிய பலரும் இங்கேயே சொந்தவீடு கார் என செட்டில் ஆகிவிட்டிருக்கிறார்கள் என்றார் நண்பர். குறைந்தபட்சம் ஒரு ஃப்ளாட்டாவது ஊருக்கு வெளியே வாங்கிபோட்டிருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் இந்த ஊரின் மேல் அக்கறையில்லை. அதை மேலும் மேலும் சுரண்டிக்கொண்டேயிருக்கிறார்கள். அது வந்தேறிகளின் இயல்புதான். (இங்கே வந்தேறி என்கிற சொல் Immigrant என்கிற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது) சென்னையில் அதை நிறையவே உணர்ந்திருக்கிறேன். சென்னை வந்தேறிகள் கூட தங்களுக்கு சோறுபோடுகிற இந்நகரத்தின் மீது கொஞ்சமாவது அக்கறையை எப்போதாவது வெளிப்படுத்துவார்கள். ஆனால் பெங்களூரு அவ்விஷயத்தில் சுத்தமாக ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளை விடவும் இப்போது லஞ்சமும் ஊழலும் ஊருக்குள் தலைவிரித்தாடுவதாக ஒருவர் புலம்பினார். கூடவே குற்றச்சம்பவங்களும் கணிசமாக...
வந்தேறிகளுக்கு எப்போதுமே தங்கள் சொந்த ஊர் அதன் பெருமை அதன் புகழ் இதில்தான் நாட்டமிருக்குமே தவிர பிழைக்கவந்து ஊர் குறித்த கவலையோ வருத்தமோ இருக்காது. காரணம், என்றைக்காவது ஒருநாள் சொந்த ஊருக்கே திரும்பிவிடுவோம் என்கிற நம்பிக்கையின் தொடர்ச்சியாக இருக்கலாம். பிழைக்க வந்த ஊரின் சூழலை இன்னும் கூட கொஞ்சம் சுரண்டிக்கொள்வதிலோ அழிப்பதிலோ தயக்கமே இருப்பதில்லை. பெங்களூருவின் சுற்றுச்சூழல் அதன் எழிலெல்லாம் பாழாகிறதே என்று வருத்தப்பட்டு யாருமே தமிழில் எழுதி வாசித்த நினைவில்லை. ஆனால் ஊருக்குள் நிறைய தமிழ்தான் கேட்கிறது. வா.மணிகண்டன் ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம் MAY BE. இனி பெங்களூரு என்கிற பெயர் கூட பழைய துள்ளலைத்தருமோ தெரியவில்லை ஆனால் இந்த ஊருக்கு சென்னையே தேவலாம் என்கிற எண்ணம் மட்டும் எஞ்சி இருக்கிறது. சென்னைக்கு திரும்பி அடுத்த நாளில் ‘தீபாவளி சீசன் ரங்கநாதன் தெரு’’விலிருந்து தப்பியோடி வந்த உணர்வை பெற்றேன். பெங்களூரு தன் வளர்ச்சிக்கு கொஞ்சம் அதிகமாகவே விலை கொடுத்திருக்கிறது.
***