Pages

06 October 2015

லடாக் மாரத்தான் 2015




உலகிலேயே உயரமான இடத்தில் நடக்கிற மாரத்தான் போட்டி, லடாக்கின் லேயில்! கடல் மட்டத்திலிருந்து பதினோறாயிரம் அடி உயரத்தில்…. உலகின் கூரை மேல் ஓடவேண்டும். மரங்கள் இல்லாத குளிர் பாலைவனம். உலக அளவில் நடக்கிற மிககடினமான மாரத்தான்களில் ஒன்றாக கருதப்படுவது. நம்முடைய அத்தனை நம்பிக்கைகளையும் சோதித்துப்பார்க்கிற போட்டி. எனவே இதுவரை ஓடியதிலேயே இதுதான் மிகவும் மோசமாக இருக்கப்போகிறது என்பது வீட்டிலிருந்து கிளம்பும்போதே தெரியும். என்றாலும், ஓடும்போதுதான் உயிர் கழண்டு ஓடுகிற அளவுக்கு இருக்குமென்பதை உணரமுடிந்தது!

லே யில் ஆக்ஸிஜன் அளவு சென்னையோடு ஒப்பிடும்போது இருபதிலிருந்து முப்பது சதவீதம் மட்டுமே! அதீத உயரமும், மரங்களற்ற நிலப்பரப்பும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. எங்கு பார்த்தாலும் முக்கோணப் பள்ளத்தாக்குகளும், நடுவில் பாயும் குளிர் ஆறுகளும், பச்சை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என கலர்கலராக மலைகள். எந்த மலையிலும் மரங்களில்லை. இந்த ஊருக்குள் எப்படி ஓடினாலும் இரண்டு மலைகள் ஏறி இறங்கியே தீரவேண்டும் என்பது மட்டும் புரிந்தது! மலை தவறாமல் புத்தமடலாயங்கள் வைத்திருக்கிறார்கள். சென்னை சாலைகளில் ஓடிப்பழகிய எனக்கு மலையேற்ற ஓட்டமெல்லாம் (UPHILL RUNNING) ஸூத்தமாக பரிச்சயமில்லை. சென்னையில் அப்ஹில் ரன்னிங் என்றால் மேம்பால ரன்னிங்தான்! அதுகூட எப்போதாவதுதான்.

நான் ஓடியது 21 கி.மீ தூரமுள்ள அரைமரத்தான். பந்தய நாளுக்கு சில தினங்கள் முன்பே ஐந்து கி.மீ ஓடிப்பார்த்து மலையேறும் போது மூச்சிரைக்கிறது… இறங்கும்போது ஜாலியாக இருக்கிறது… மூக்கு கையெல்லாம் குளிரில் விரைத்து போகிறது என்பதையெல்லாம் கண்டுபிடித்து அதற்கேற்ப ஒரு ஸ்ட்ராடஜியை உருவாக்கி வைத்திருந்தேன்.

‘’புதுச்சூழலுக்கிணங்கல்!’’ ACCLIMATISATION. நமக்கு பழக்கமில்லாத வெப்பநிலை குளிர்நிலை வாயுநிலை உள்ள பகுதிகளுக்கு சென்று அங்கேயே சிலநாட்கள் தங்கி நம்முடைய உடலை அதற்கேற்ப தயார்படுத்திக்கொள்வது! அப்படி பண்ணினால்தான் ஜம்மு காஷ்மீர் மாதிரியான உயரமான இடங்களில் ஓடமுடியும். திடீரென்று ஒருநாள் வானத்திலிருந்து ஹெலிகாப்டரில் குதித்து அடுத்தநாளே ஓடி ஓடி தீவிரவாதிகளை கொல்வதெல்லாம் விஜயகாந்த் அர்ஜூனால்தான் முடியும்!

எனவே நான் போட்டிக்கு பத்து நாள் முன்பாகவே சென்று சேர்ந்தேன். தரைவழி செல்வதுதான் உடலுக்கு நன்மை பயக்குமென்பதால், சென்னையிலிருந்து ஜம்மு, அங்கிருந்து ஸ்ரீநகர், கார்கில் வழி லே வை அடைந்தேன் (இந்தப்பயணக்கதை தனி!) இதற்கே ஐந்து நாட்கள் பிடித்தது. எனக்கு முன்பே இந்தியாவின் மற்றபகுதிகளிலிருந்தும் கணிசமான ஆட்கள் குவிந்திருந்தனர். (நூறுபேருக்கு மேல்!) திட்டப்படி அங்கே சென்று தங்கி எட்டுநாளில் நான்கு நாட்கள் பயிற்சியாக ஓடுவது என்று முடிவெடுத்து… கடைசியில் பயிற்சியாக ஒருநாள்தான் ஓடமுடிந்தது. மற்ற நாளெல்லாம் நன்றாக ஊர்சுற்றினேன்! ராஃப்டிங், ட்ரெக்கிங், சளிபிடித்ததால் நிறைய மூக்கு சிந்திங் என கழிந்தது. திகில் படம் போல தினமும் சளியோடு ரத்தமெல்லாம் பார்க்க வேண்டியிருந்தது.

குளிரில் ஓடும் போது சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலாவது குளிர்! அக்குளிரால் மூக்கு மட்டும் விரைப்பாகி உணர்வற்று போய்விடுவது! ஓடும்போது மூக்குடன்தான் ஓடுகிறோமா இல்லை அது எங்காவது கழண்டு விழுந்துட்டுதா என்பதை தொட்டுதொட்டு பார்க்க வேண்டியிருந்தது. மூக்கு உறைந்துபோவதால் மூச்சுவிடுவதில் சிரமம். வாய்வழியாகத்தான்! ஓட ஓட உடலெல்லாம் வெதுவெதுப்பாக ஆனாலும் கைகள் மட்டும் குறிப்பாக உள்ளங்கைகள் குளிர் அப்படியே தங்கி வளர ஆரம்பித்துவிடுகிறது. இந்த இரண்டு சிக்கல்கள் அல்லாது மலையேறும் போது மூச்சிரைப்பது, வேகமெடுத்தால் தலைக்குள் பூச்சி பறப்பது மாதிரி சிக்கல்களும் இருந்தன!

கடந்த ஒருமாதமாக வெறுங்காலில் ஓடி பயிற்சிபெற்று வந்தேன்! ஆனால் கூரான கற்களின் அந்த தேசத்தில் வெறுங்காலில் ஓடினால் கற்கள் கால்வழி ஏறி மூளையை பதம்பார்க்கும் வாய்ப்பிருந்தது. ஊரில் இறங்கிய மூன்றாவது நாளிலேயே பாதங்களில் வெடிப்பு உண்டாகி அது பாளம்பாளமாக வெடித்து ரத்தம் கேட்க ஆரம்பித்தும்விட்டது.

அதிகாலை ஆறுமணிக்கு உறையவைக்கும் குளிரில் போட்டி தொடங்கிவிட்டது. உள்ளூர் ஸ்கூல் பையன்களுக்கு நடுவில் வெளிநாட்டு வெளியூர் ஆட்டக்காரர்களோடு இறங்கினேன். ஊருக்குள் ஆயிரக்கணக்கில் சுற்றிக்கொண்டிருந்த அழகழகான வெளிநாட்டு உள்நாட்டு மங்கையரில் ஒருவரையும் காணோம்! முழுக்க அவர்களுடைய மாமன்களும் மச்சான்களும் மட்டும்தான் வந்திருந்தனர். அதுவே பெரிய ஏமாற்றமாக இருந்தது.

மூக்கு உறைந்துவிடாமலிருக்க பெட்ரோலியம் ஜெல்லி ஒரு டப்பா போட்டு பூசிக்கொண்டேன். போட்டி தூரத்தின் முதல் பத்து கி.மீ முழுக்க முக்கி முக்கி முழுவீச்சில் ஓடாமல் பொறுமையாக காலுக்கு வலிக்காமல் நுரையீரலுக்கு நோகாமல் ஓடுவது! கடைசி பத்துகி.மீ காட்டுத்தனமாக ஓடி பந்தயதூரத்தை எப்போதும் கடக்கிற நேரத்தில் கடப்பது என்று ஸ்ட்ராடஜியை உருவாக்கியிருந்தேன்.

திட்டமிட்டபடி முதல் பத்து கி.மீ பொறுமையாக ஓட ஒரு மலைதான் ஏறி இறங்கவேண்டியிருந்தது. ஸ்பிட் டுக் என்கிற அந்த மலையின் மேல் ஒரு புத்த மடலாயம் வைத்திருக்கிறார்கள். அங்கே ஒரு உக்கிரமான காளிமாதா சிலை இருக்கிறது. காளியின் முகத்தை துணிபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள். இந்துக்கள் நிறையபேர் ‘’காளி கா மந்திர்’’ என்றே கேட்டு வந்தடைகிறார்கள்! அடுத்த சில கி.மீ கிராமங்களின் கடினமாக மண்சாலைகளில்… கடைசி ஏழு கி.மீ ஓட சாலையில் இறங்கினோம். என்னுடைய ஒட்டுமொத்த ஆற்றலையும்திரட்டி ஓட முடிவெடுத்தேன்.

அது ஒரு செங்குத்தான சாலை… ஏறி ஏறி… ஏறிக்கொண்டு மட்டுமேதான் இருந்தது. வழியில் எதிர்படுகிறவர்களையெல்லாம் ‘’எல்லை கிதர் ஹே’’ என்று கேட்க எல்லோருமே ஊப்பர் ஊப்பர் என்றார்கள்! உங்க ஊர்ல ஊப்பர் மட்டுமேதானாடா என்று கேட்கத் தோன்றியது. பாதையும் மேலே ஏறிக்கொண்டே சென்றது. கடைசிவரை ஊப்பர்தான். அடேய் நீச்சேவே இல்லையாடா என்று உடல் கதறியது! கடைசி எட்டு கிலோமீட்டர்களை ஓடிக்கடப்பதற்குள் நுரையீரல் நூடூல்ஸாகியிருந்தது. நடக்கவும் கூட சிரமமாக இருந்தது. பத்தடி ஓடுவதும் பத்தடி நடப்பதுமாக…

பந்தய தொலைவை கடக்கும்போது இரண்டு மணிநேரமும் நாற்பத்திரண்டு நிமிடங்களும் ஆனது! சென்னையில் இதே தூரத்தை இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே முடிப்பேன்! ஓடி முடிக்கும்போது சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. லே வின் கொடுமைகளின் ஒன்று இது. அதிக குளிரிலும் சுட்டெரிக்கும் வெயில். ஆனால் ஒரு துளி கூட வேர்க்காது. உடலில் இருக்கிற நீரெல்லாம் வற்றி டீஹைட்ரேட் ஆனாலும் உணர முடியாது. தலைசுற்றல் வந்தபிறகுதான் தண்ணீரே குடிக்கத்தோன்றும்! சென்னையில் ஓடும்போது பைப்பை உடைத்துவிட்ட மாதிரி வேர்த்துக்கொட்டும். ஆனால் லேவில் ஓடும்போது உடலின் மர்மதேசமொன்றில் இரண்டுதுளிதான் வியர்த்தது.

ஒருவழியாக ஓடிமுடித்து ஓய்ந்து போய் வந்து உட்கார்ந்தேன். மனதிற்குள் மிகப்பெரிய விஷயத்தை சாதித்துவிட்ட திருப்தி. சும்மாவா எல்லோருக்கும் ஓட்டம் ஸ்டார்ட்டிங் பாய்ன்டில் தொடங்கினால் எனக்கு சென்னையிலேயே தொடங்கிவிட்டது. லீவ் போட்டு, பணம் புரட்டி, கடைசி நேரத்தில் மொத்த திட்டத்தையும் கைவிட வேண்டிய நிலைமைகளை சமாளித்து, தன்னந்தனியாக இவ்வளவு தொலைவு கிளம்பி, வந்து சேர்ந்து ஓடிமுடித்திருந்தேன்! உள்ளுக்குள் நெருக்குகிற உணர்வுகள் திரண்டு ஒரு சின்ன அழுகை கண்ணுக்குள் முட்டிக்கொண்டிருந்தது.

பக்கத்தில் ஒரு பெரியவர் என்னைவிட வயதில் மூத்தவர் அவரும் ஓடிமுடித்து வந்தமர்ந்தார். மிகுந்த உற்சாகமாக இருந்தார். கையில் ஜூஸ் டப்பாவை உறிஞ்சிக்கொண்டிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தேன். ஊர் பேர் விலாசமெல்லாம் விசாரித்துவிட்டு ‘’எவ்ளோ டைமிங்’’ என்றேன், எட்டுமணிநேரம் என்றார்! ‘ஓ ஃபுல்லா’’ என்றேன். பொதுவாக 42கிமீ நீளமுள்ள முழுமாராத்தான் போட்டிகளில் வயதானவர்கள் ஏழு எட்டு மணிநேரமெல்லாம் நடந்தே முடிப்பதுண்டு. ஆனால் அவரோ முகத்தில் புன்னகையோடு இல்லப்பா ‘’கார்டூங்லா’’ என்றார்.

‘’கார்டூங்லா சேலஞ்ச்’’ உலக அளவில் நடக்கிற அல்ட்ரா மாரத்தான்களில் ஆபத்தானதும் சிரமமானதுமாக கருதப்படுவது. உலகின் மிக உயரமான Motorable road களில் ஒன்றான கார்டூங்லா என்கிற மலையுச்சி கிராமத்திலிருந்து லே வரை ஓடிவரவேண்டும். 18ஆயிரம் அடி உயரத்தில்… நடக்கிற இந்த மாரத்தானில் மொத்தமே ஐம்பது அறுபதுபேர்தான் உலக அளவிலிருந்து கலந்துகொள்ளுவார்கள்! அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவர்தான் அந்த டெல்லிவாலா பெரியவர்! அவர் என்னிடம் நீங்க எவ்ளோ தூரம் என்றார். நான் ஹாஃப் என்று ஷேம் ஷேமாக மென்று முழுங்கினேன். டைமிங் கேட்டார். ஊக்கப்படுத்தினார். அவருடைய முகத்தில் அத்தனை உற்சாகம். ‘’என்னுடை பேரன்கிட்ட சவால் விட்டுட்டு வந்தேன்…’’ என்றார்.

மாரத்தான்கள் உங்களை ஓயவே விடாது. ஓடுகிற ஒவ்வொருவருக்குமான எல்லை ஒரு புதிய ஆரம்பத்தை கண்டடைவதாகவே இருக்கும். ஒருமுறை ஓட ஆரம்பித்துவிட்டால் உங்களுடைய எல்லை என்பது அடுத்த சவாலாகத்தான் இருக்கும். அது விரிவடைந்துகொண்டேதான் செல்லும். பத்து கிலோமீட்டர் ஓடியவர் அடுத்தமுறை 21போக முடிவெடுப்பார். 21 என்றால் 42… அப்படியே அல்ட்ரா.. சைக்ளிங், அயர்ன்மேன்… என்று எல்லைகள் விரியுமே தவிர அப்படா முடிச்சிட்டோம் அவ்ளோதான் என்று உட்காரவிடாது. டெல்லிதாத்தா எனக்கான சவாலை தந்துவிட்டு சென்றார். அடுத்த ஆண்டு கடுமையான கார்டூங்லா பண்ணவேண்டும், அதுவும் எட்டுமணிநேரத்திற்குள்… என நினைத்துக்கொண்டேன். அதெல்லாம் அடுத்த செப்டம்பரில். இப்போதைக்கு டிசம்பரில் நடக்கிற சென்னை மாரத்தானில் FULL MARATHON 42K ஓடவேண்டும்.