Pages
▼
09 June 2015
பீட்சா
அலுவலகத்திற்கு அருகில் ஒரு பீட்சா கடை உண்டு. அடிக்கடி செல்கிற இடம்தான். வெயில் தாளமுடியாத நேரங்களில் அங்கே ஒதுங்கலாம். நண்பர்களை சந்திக்க ஏற்ற இடம். மணிக்கணக்கில் எதையும் சாப்பிடாமலும் கூட நாள்முழுக்க ஏசியை அருந்தியபடி அமர்ந்திருக்கலாம். கடைக்காரர்கள் யாருமே என்னிடம் எப்போதும் எதையும் ஆர்டரென்று கேட்டதில்லை. காபீடே,பீட்சா,கேஎஃப்சி மாதிரி கடைகள் நம்முடைய மனசாட்சியை முதலீடாகக் கொண்டு இயங்குவதாக எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. பல நேரங்களில் மனசாட்சிக்கு அஞ்சியே ஒரு சாதாரண மலிவு விலை பீட்சாவையாவது வாங்கிதின்ன நேரிடும்.
தமிழ்நாட்டின் மிக காஸ்ட்லியான ஏரியாக்களில் ஒன்று ஜிஎன் செட்டி ரோடு. அங்குதான் என் அலுவலகமும் இருக்கிறது. அதன் கடைக்கோடியில் அதாவது அண்ணா மேம்பாலத்திற்கு சற்றுமுன்பு ஒரு சேரி இருக்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கிற சேரி இது. இந்தமுனையிலிருந்து நீளும் அவ்வீடுகள் அண்ணா அறிவாலயம் வரைக்கும் தொடர்ந்திருக்கும். பெரிய பணக்காரர்கள் வசிக்கிற எல்லா பகுதிகளிலும் இதுமாதிரியான சேரிகள் அமைந்திருப்பது என்ன மாதிரியான புவியியல் அரசியல் என்பது ஆராயப்படவேண்டியது. மைலாப்பூரிலும், அடையாறிலும், மாம்பலத்திலும் கூட இதுமாதிரியான சேரிகளை பார்த்திருக்கிறேன். பணக்காரர்களின் பங்களாக்களுக்கு மிக அண்மையில் இக்குடிசைகள் அமைந்திருக்கும்.
ஜிஎன் செட்டிரோடு குடிசைவாசிகள் மிகவும் மகிழ்ச்சிகரமானவர்கள். எந்நேரமும் குடியும் கும்மாளமும்தான். அவர்ளுடைய அழுக்குச்சட்டை குட்டிப்பையன்களுக்கும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பள்ளிக்கு சென்றாலும் பல நேரங்களில் சாலையில்தான் சுதந்திரமாக திரிந்துகொண்டிருப்பார்கள். எதையாவது வாங்கித்தின்பதும், நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போடுவதும் வாடிக்கையாக கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அல்லது கையில் பெரிய பையோடு குப்பை பொறுக்கிக்கொண்டிருப்பார்கள். ஏன்டா ஸ்கூல் போகாம குப்பை பொறுக்கறீங்க என்று கேட்டால், முறைத்துவிட்டு உனக்கின்னா என்றுவிட்டு போய்விடுவார்கள்.
அந்தப்பையன்களை அடிக்கடி பீட்சா கடையில் பார்ப்பதுண்டு. வாசலிலேயே தயங்கி தயங்கி நிற்பார்கள். அவர்களுடைய தலைவன் வந்ததும் உள்ளே கம்பீரமாக நுழைவார்கள். அவர்களை கண்டால் அங்கேவேலைபார்க்கிற சிகப்புசட்டை தம்பிகளுக்கு உற்சாகமாகிவிடும். என்னங்கடா என்ன வோணும் என்று அந்த பையன்களும் அவர்களுடைய மொழிக்கு மாறிவிடுவான். அந்தப்பையன்கள் அண்ணா போனவாட்டி குடுத்தியே அது வேஸ்ட்டுனா வேற எதுனா காரமா குடுன்னா என்று கேட்பார்கள். அந்த தம்பிகளும் மேலே படங்களை காட்டி இது வாங்கிரீயா என்று படங்களை காட்டி இது மூன்னூறு ரூவாடா என்று விலை சொல்வார். பையன்கள் டே உன்ட்ட எவ்ளோ டே அவன்ட்ட வாங்குடா டே இவன் காசே கொண்டாரமாட்ரான்டா என்கிற குரல்களுக்கு மத்தியில் கசங்கிய தாள்களும் சில சில்லரைகாசுகளுமாக டேபிளில் விழும்.
அடுத்த சில நிமிடங்களில் ஆவிபறக்க சுடச்சுட பீட்சாவை கொண்டுவந்து கொடுப்பான் கடைக்காரத்தம்பி. கூடவே பாதி குடித்துபோட்ட பெப்ஸி கோக் பாட்டில்களும், கூடுதலாக ரொட்டித்துண்டுகளும் ஏதாவது தீனியும் சிக்கன் பீஸ் என இலவசமாகவே தருவான். பையன்கள் தாங்க்ஸ்னா என்று சலாம் வைத்துவிட்டு வெளியேற சிகப்பு சட்டை பையன்கள் பெருமிதமாக புன்னகைப்பதை காணக்கண்கோடி வேண்டும். பையன்கள் அதை வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளியேறும்போது கடைக்குள் அமர்ந்திருக்கும் நம்மை பார்க்கும்போதுதான் கம்பீரம் என்கிற வார்த்தைக்கான அர்த்தம் தெரியவரும்.
ஆனால் அந்தப்பையன்கள் இதை எங்கே கொண்டுபோய் வைத்து சாப்பிடுவார்கள் என்கிற கேள்வி எப்போதும் எனக்கு தோன்றும். அந்தப்பையன்கள் கடைக்குள் உட்கார்ந்து பார்த்ததேயில்லை. காசுகொடுத்துதான் அவர்களும் பீட்சா வாங்குகிறார்கள். காத்திருப்பதாக இருந்தாலும் கூட கேட்டுக்கு வெளியேதான் காத்திருப்பார்கள். சிகப்பு சட்டை தம்பி கூப்பிட்டதும்தான் உள்ளே நுழையவேண்டும். அவன் அதை கொடுத்ததும் வெளியேறிவிட வேண்டும்.
சிகப்பு சட்டை தம்பியிடம் ஒருநாள் இதைப்பற்றி கேட்டேன். ‘’அவங்களும் காசுகுடுத்துதானப்பா சாப்பிடறாங்க உள்ளயே உட்கார வைக்கறதுதானே’’ என்றேன். அய்யோ பசங்க செம்ம சேட்டைங்க எதையாவது எடுத்து உடைச்சிருவாங்க டாப்பிங்ஸ்லாம் காலி பண்ணிடறாங்க க்ளீன் இல்ல என்றார். ‘’உங்க கடைக்கு வர முக்கால் வாசி சேட்டை பண்ற பையன்கள்தான் இவங்களுக்கு மட்டும் என்ன’’ என்றேன்.
‘’மேனேஜ்மென்ட்ல ஒப்புக்க மாட்டாங்க சார்’’ என்றான். அவனோடு இன்னும் கூட வாக்குவாதம் பண்ணினதில் கடைசியில் ‘’சார் மேனேஜர் ஒத்துகிட்டாலும் கஸ்டமர்ஸ் ஒத்துக்கமாட்டாங்க சார், ஹைஜீனிக் அது இதும்பாங்க’’ என்றார்.
அந்தப்பையன்களுக்கு வெளியில் நிற்கவைப்பதிலோ குடித்து வீசிய பாதி பெப்ஸி பாட்டில்களை வாங்கிக்கொள்வதிலோ எவ்வித தயக்கமோ அவமானமோ இருந்ததில்லை. அவர்களுக்கு அது பழக்கமானதாக இருக்கலாம். அந்தப்பையன்கள் திரும்ப திரும்ப அக்கடை வாசலில் தங்களுடைய பீட்சாவுக்காக காத்திருப்பதை பார்த்திருக்கிறேன். கல்வி அவர்களிடம் மாற்றத்தை உருவாக்கலாம். சுயமரியாதையை கற்றுத்தரலாம்.ஆனால் அவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்த ஒவ்வொருமுறையும் நான் அவர்களை உள்ளேயிருந்துதான் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நிறைய சௌகர்யங்கள் உண்டு.