Pages
▼
12 May 2015
குழந்தைகள் ஜாக்கிரதை!
Pedophile என்கிற சொல்லை கேள்விப்பட்டதுண்டா? இதுவரை தெரியாதென்றால் இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள். அனைவரும் அறிந்துவைத்திருக்க வேண்டிய விஷயம் இது. Phedophilia என்கிற உளவியல் சிக்கலில் பாதிக்கப்பட்டவர்களை பீடோபைல் என்று அழைக்கிறார்கள். இந்த பீடோபைல்கள் ‘’குழந்தைகளின் மீது பாலியல் நாட்டம் கொண்டவர்கள்’’. தினமும் இவர்களை பற்றி எண்ணற்ற செய்திகளை நாம் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் செய்கிறவர்களை இப்படித்தான் அழைக்கிறார்கள்.
பதினோறு வயதிற்கும் குறைவான சிறுவர் சிறுமியர் மீது பாலியல் நாட்டம் கொள்ளும் இந்த பீடோபைல்கள் தங்களுடைய வேட்கைக்காக அக்குழந்தைகளை வன்முறைக்கு ஆளாக்கவும் தயங்குவதில்லை. குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் பார்ப்பது அதைக்குறித்து வக்கிரமாக கற்பனைகள் செய்வது தங்களோடு பழகும் குழந்தைகளை அதற்கென பயன்படுத்த முயற்சி செய்வது தன்னைப்போன்ற பீடோபைல்களோடு அதுகுறித்து விவாதிப்பது என இவர்களுடைய வெறுக்கவைக்கும் நடவடிக்கைகள் பட்டியல் நீள்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் குறித்தும் CHILD SEX ABUSE குறித்தும் அடிக்கடி நிறையவே செய்தித்தாள்களில் படித்திருந்தாலும் இவர்கள் நம்மோடு இருந்தாலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் இவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு அனானிமஸாக வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். குழு அமைத்துக்கொண்டு இதுகுறித்த உரையாடலையும் அனுபவபகிர்தலையும் முன்னெடுக்கிறார்கள்!
சென்றவாரம் ட்விட்டரில் ஒரு நண்பர் ‘’சின்னப்பொண்ணு வெறியர்கள்’’ என்கிற ஃபேஸ்புக் பக்கத்திற்கான இணைப்பை பகிர்ந்துகொண்டு அதிர்ச்சி தெரிவித்திருந்தார். இந்த ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று பார்த்தால் சில கேடுகெட்ட அயோக்கியர்கள் பச்சிளங்குழந்தைகளின் படங்களை போட்டு அதில் அருவருக்கதக்க பாலியல் கமென்ட்களையும் சேர்த்திருந்தனர். இணையத்தில் இயங்குகிற இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு இணையதளத்தை பார்த்து கைகால் வெலவெலத்துப்போனது இதுதான் முதல் முறை! அந்த பக்கத்தை பார்த்தபிறகு அடுத்த அரைநாளும் மூளைக்குள் நரகவேதனையை உணர்ந்துகொண்டிருந்தேன். நம்மில் பலரும் இதுமாதிரியான மனிதர்களை நம்முடைய பால்யத்தில் கடந்திருப்போம். அந்த நினைவுகளின் மிச்சங்கள் கூட அந்நடுக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
அந்த பக்கத்தில் பகிரப்பட்டிருந்த அத்தனை படங்களும் நாமும் நம்முடைய நண்பர்களும் யதார்த்தமாக பகிர்ந்துகொண்ட நம்வீட்டு சின்னக்குழந்தைகளின் மிகச்சாதாரண படங்கள். இந்த பக்கத்தை நடத்தும் அட்மின் வரிசையாக நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளின் படங்களை பகிர்ந்துகொண்டு ஒவ்வொரு படத்திற்கு கீழும் ‘’இவளை என்ன செய்யலாம்’’ என்பது மாதிரி கேட்கிறான். அடுத்தடுத்த பின்னூட்டங்களில் வந்திருந்த கருத்துகளை இங்கே எழுதமுடியாது. அத்தனை வக்கிரமானது. இந்த அயோக்கியர்களின் கைகளில் ஒரு குழந்தைகிடைத்தால் என்னாகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
இப்பக்கத்தில் பலரும் குழந்தைகளுடனான பாலியல் அனுபவங்களை ரத்தமும் சதையுமாக பகிர்ந்திருந்தனர். அதை வாசிக்கும்போது மயக்கமே வந்துவிட்டது. என்னால் அடுத்த சில மணிநேரங்களுக்கு எந்த வேலையிலும் ஈடுபடமுடியவில்லை. தலையை சுற்றிக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டது.
குழந்தைகளோடு உடலுறவில் ஈடுபடும்போது அவர்கள் வலியால் துடிப்பதை எப்படியெல்லாம் ரசித்தனர் என்பதையெல்லாம் வார்த்தைகளால் கொட்டி வைத்திருந்தனர். இதில் கமென்ட் செய்திருந்த ஒருவன் பள்ளியொன்றில் ஆசிரியராக பணியாற்றுபவன்! அப்பக்கத்தின் அடுத்தடுத்த படங்களையும் கருத்துகளையும் பார்க்க பார்க்க தாங்கமுடியாத வேதனையாக இருந்தது. இதில் உச்சபட்ச வேதனை தந்தது அப்பக்கத்திற்கு வந்திருந்த நான்காயிரம் லைக்குகள்! அத்தனை பேரும் தமிழர்கள்! (இப்பக்கம் முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது, எந்த நிர்வாண படமும் இல்லை). அத்தனை பேரும் நம்மோடு தினமும் சமூகவலைதளங்களில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் என்பது இன்னும் அதிர்ச்சி தரக்கூடியது. நான்காயிரம் என்கிற எண்ணிக்கைதான் இப்போதும் அதிர்ச்சியைத்தருவதாக இருக்கிறது. இத்தனை பேர் என்பதைத் தாண்டி இதை பார்க்கிற பதின்பருவ பையன்கள் கூட இதை முயற்சி செய்து பார்க்க நினைக்கலாம். அவர்களுடைய முதிர்ச்சியற்ற பாலியல் வேட்கைக்கு குழந்தைகள் எளிதான வேட்டையாகவும் கூட அமையும் ஆபத்து இதில் இருக்கிறது.
இந்த பக்கத்தை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உடனடியாக ஃபேஸ்புக்கில் அப்பக்கத்தை பகிர்ந்துகொண்டு நண்பர்களை இதுகுறித்து ஃபேஸ்புக்கில் புகார் செய்து பக்கத்தை நீக்குமாறு வலியுறுத்தினேன். பல நண்பர்களை போனிலும் உள்பெட்டி செய்தியிலும் தொடர்புகொண்டு இப்பக்கம் குறித்து நண்பர்களிடம் சொல்லி புகாரளிக்க கூறினேன். நண்பர்கள் சிலரிடம் பேசி சைபர் கிரைமை அணுகுவது குறித்தும் ஆலோசித்துக்கொண்டிருந்தேன். ஆயிரக்கணக்கான நண்பர்கள் அபக்கம் குறித்து பகிர்ந்துகொண்டு ஃபேஸ்புக்கில் புகார் அளித்தனர். நண்பர் ஒருவர் சைபர் கிரைமில் புகார் அளித்தார். சைபர்கிரைம் உடனடியாக ஃபேஸ்புக் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு அப்பக்கத்தை நீக்கியது. அதோடு அப்பக்கத்தை நிர்வகித்தவரையும் பிடித்து தண்டிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தது.
இப்படி அப்பக்கத்தை புகார்கொடுக்க சொல்லி பகிர்ந்துகொண்டபோது அதன் லைக்குகள் எண்ணிக்கை 3800 சில்லரைதான், ஆனால் நான் பகிர்ந்துகொண்ட பிறகு அதன் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து நான்காயிரத்தை எட்டியது இன்னும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. சில பெண் தோழிகள் என்னை தொடர்புகொண்டு இதையெல்லாம் ஏன் பகிரங்கமா இப்படி பகிர்ந்துகொள்ளணும் அது அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பார்வைக்கு போனால் மிகவும்வருத்தமாக இருக்காதா, இது அவர்களுக்கும் விளம்ரமாக ஆகிவிடாதா என்றனர். ஆனால் இதுமாதிரி கயவர்களை கண்டுங்காணாமல் போனாலோ அல்லது மர்மமாக எதிர்நடவடிக்கைகளில் இறங்கினாலோ எந்தவித பிரயோஜனமும் இருக்காது என்பதனால்தான் அதனை நேரடியாக பகிர்ந்துகொள்ள வேண்டியதாயிருந்தது! அப்படி பகிர்ந்துகொண்டதால்தான் இன்று அப்பக்கம் குறித்துப்பரவலான ஊடக வெளிச்சம் கிடைத்தது.
இதோ இன்று அப்பக்கத்தை நிர்வகிக்கொண்டிருந்த யாதவா மணிகண்டா என்கிறவனை திருப்பதியில் கண்டுபிடித்து கைது செய்திருக்கிறது சைபர் கிரைம் காவல்துறை! அனேகமாக அவனுடைய குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. இவன் மட்டுமல்ல இன்னும் அப்பக்கத்தில் கமென்ட் போட்டவன், லைக் போட்டவன் என பலரையும் காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இது நிச்சயம் சமூகவலைதள வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கும். சைபர் கிரைமின் இந்த உடனடி நடவடிக்கைகளை நிச்சயம் பாராட்ட வேண்டும். இவ்வளவு விரைந்து அப்பக்கத்தை மூடியதும், அதற்குரியவரை கைது செய்திருப்பதும் இணையவாசிகளின் போற்றுதலுக்குரியது. அதற்காகவே அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். இவ்விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் போட்டதுமே பதறிப்போய் உடனுக்குடன் பகிர்ந்துகொண்டு விஷயத்தை காவல்துறை வரைக்குமே கொண்டு சென்ற அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.
சைபர் கிரைம் என்பதே ஏதோ தனிநபர் பிரச்சனைகளை தீர்த்துவைக்கிற ஆலமரத்தடி பஞ்சாயத்துகளைப் போலவேதான் இணையத்தில் நமக்கு
நன்குபரிச்சயமான சிலர் முன்பு அதை நாடியதும், சில பர்சனல் பழிவாங்கல்களுக்காக அது பயன்படுத்தப்பட்டதும் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் சைபர் கிரைம் மாதிரியான அமைப்பினை மக்களாகிய நாம்தான் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மையான குற்றங்களென்றால் நிச்சயம் அவர்களிடமிருந்து நல்லவிதமான எதிர்வினை உண்டு என்பதை இந்த பீடோபைல் விவகாரம் நமக்கு உணர்த்துகிறது.
***
இன்று ஃபேஸ்புக்கை பெரியவர்களை விட குழந்தைகள் அதிகமும் பயன்படுத்துகிறார்கள். எல்லாமே பதினோறு வயதிற்கும் குறைவான குட்டீஸ்கள். இதுமாதிரியான பீடோபைல்கள் அவர்களை எளிதில் நெருங்க முடியும். அதனால் நம் குழந்தைகளின் சோஸியல் மீடியா ஆக்டிவிட்டிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், அங்கே இருக்கிற இதுமாதிரியான கேடுகெட்ட அயோக்கியர்களை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நாமும் தெரிந்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது. இவ்விவகாரத்தில் பெற்றோர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
*உங்களுடைய பிள்ளைகளின் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பொதுவில் பகிர்ந்துகொள்ளாதீர்கள். குறிப்பாக குழந்தைகளாகவே இருந்தாலும் உடையில்லா புகைப்படங்கள் வேண்டவே வேண்டாம்.
*2007ல் இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் குழந்தைகளின் மீது பாலியல் வன்முறையை நிகழ்த்துபவர்களில் 50சதவீதம் பேர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதனால் வெளி ஆட்களை விட நமக்கு நெருக்கமானவர்களால்தான் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
*இணையத்தில் உங்கள் குழந்தைகளின் பள்ளி, வசிப்பிடம் மாதிரியான விஷயங்களை தயவு செய்து பகிர்ந்துகொள்ளாதீர்கள். குழந்தைகளை நெருங்க நாமே வாய்ப்புகளை வழங்கக்கூடாது.
*குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தினால் அவர்களிடம் வசிப்பிடங்களை TAG செய்வது கூடாது என்பதையும் STRANGERS இடம் பேசுவதில் இருக்கிற ஆபத்தையும் நேரடியாக உட்கார்ந்து விளக்கவும்.
*இவை தவிர இதுமாதிரியான இணைய குழுக்கள், பக்கங்கள் இருப்பது தெரிந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கவும்.
சமூகவலைதளங்கள் என்பது நம்முடைய சமூகத்தின் பிரதிபலிப்பே, அதனால் சமூக வலைதளங்களில் மட்டுமல்ல இந்தக்கயவர்கள் நமக்கு மிக அருகிலேயே இருக்கலாம். அதனால் முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதும், குட்-டச் பேட் டச் எது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது! காரணம் அவர்கள் நமக்கு மிக அருகில் இருக்கிறார்கள், ஆயிரக்கணக்கில்!