ஒரு கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். ‘’வாசிப்பின் அவசியம்’’ பற்றி மீடியா மாணவர்களிடம் உரையாட வேண்டும் என்றார்கள். சுஜாதா, சுபா, ரமணிச்சந்திரன் தொடங்கி ஷோபாசக்தி, சுந்தர ராமசாமி வரை பல நூல்கள் குறித்தும் அவர்களை எல்லாம் ஏன் வாசிக்கவேண்டும் எதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது மாதிரி நிறைய அடங்கிய குறிப்புகளை தயாரித்து எடுத்துச்சென்றிருந்தேன்.இன்றைக்கு நாலு பையன்களையாவது தமிழ் இலக்கியத்துக்கு இட்டாந்துரணும் என்பதுதான் என்னுடைய ஒரே எண்ணமாக இருந்தது.
முன்பே துறைத்தலைவரிடம் ‘’ஐயா தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி பேசலாமா’’ என்று கேட்டிருந்தேன். அந்தப்பக்கமிருந்து ‘’அவங்க எந்த கருமத்தையாவது படிச்சா போதும், நீங்க கூச்சப்படாம பேசுங்க’’ என்றார்கள். இதில் கூச்சப்பட என்ன இருக்கிறது. ஆனால் ‘’எந்த கருமத்தையாவது’’ என்று சொல்லும்போதே நான் சுதாரிப்பாக இருந்திருக்கலாம்.
அரங்கில் நூறு அல்லது நூற்றி பத்து மாணவர்கள் இருந்திருக்கலாம். எல்லோருமே பட்டப்படிப்பு முடித்தவர்கள். சில கேள்விகளுடன் பேச்சைத் துவங்கினேன். ‘’இங்கே எத்தனை பேர் தமிழ் நூல்கள் படிப்பவர்கள்?’’ அரங்கத்திலிருந்த அத்தனை பேரும் காலை உணவாக இரண்டு டப்பா பெவிகால் தின்றுவிட்டு வந்தது போல உட்கார்ந்திருந்தார்கள்! நூற்றியோரு சதவீத நிசப்தம்.
‘’இங்கே எத்தனை பேருக்கு சுஜாதாவை தெரியும்?’’ மீண்டும் அதே அமைதி. ‘’சும்மா சொல்லுங்க யாருக்குமே தெரியாதா, படத்துக்கெல்லாம் வசனம் எழுதிருக்கார்’’ என்றேன். ஒரு முனகல் கூட இல்லை. அடுத்த கேள்விக்கும் இதே நிசப்தமே பதிலாக வந்தால் அங்கேயே மூர்ச்சையாகி மூச்சை விட்டிருப்பேன். ‘’கல்கியின் பொன்னியின் செல்வன் தெரியுமா’’ என்று கேட்க இரண்டுபேர் தயங்கி தயங்கி கைதூக்கினார்கள்! படிச்சிருக்கீங்களா என்றேன் ‘’இல்ல பாத்துருக்கோம், வீட்லருக்கு’’
இவர்களெல்லாம் ஆங்கிலத்தில் படிப்பார்களாயிருக்கும், என்ன இருந்தாலும் மெட்ரிகுலேஷன் தலைமுறை மாணாக்கர்களில்லையா? சேதன்பகத் படிக்கிறவர்கள் எத்தனை பேர் என்று கேட்டேன். ஒரே ஒரு பெண் மட்டும் கைதூக்கினாள். மற்றவர்கள் அவளை திரும்பி பார்த்து ஏதோ முணுமுணுத்துக்கொண்டனர். அமிஷ் திரிபாதியை மட்டும் ஏன் விடுவானேன் என்று அவரை எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டேன். நூறு புன்னகைகள் மட்டுமே பதிலாக வந்தது. ‘’இந்த நாய் நம்மள கேள்வி கீள்வி கேட்டுதொலைச்சிருமோ?’’ என்கிற மரணபீதியை மறைத்துக்கொண்டு இளம் ஆசிரியர்கள் கூட போலிப்புன்னகையோடு என்னை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தனர்.
இவ்வளவு நடந்தபின்னும் கூட கேள்விகேட்பதை விடவில்லை. ‘’சரி இங்கே எத்தனை பேர் டெய்லி பேப்பராச்சும் படிக்கறீங்க’’ என்று கேட்டேன். நான்குபேர் கையை தூக்கினார்கள். என்ன பேப்பர் படிப்பீங்க என்றேன். நால்வருமே ‘’எகனாமிக் டைம்ஸ்’’ என்றனர். அவர்கள் சொல்ல சொல்ல ஆசிரியர் பகுதியிலிருந்த ஒரு டைகட்டின ஆசாமி நிமிர்ந்து உட்கார்ந்தார். அந்த நால்வரும் ‘’எங்க சார்தான் படிக்க சொன்னாரு’’ என்று அவரை கைகாட்டினர். அதற்கு முந்தைய நாள்தான் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியை பிடித்திருந்தார். எத்தனை பேருக்கு அது தெரியும் , அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற என்ன காரணம் என்று கேட்டேன். நடுராத்திரி பனிரெண்டு மணி சுடுகாட்டில் கூட ஏதாவது சத்தம் கேட்கும். ஆனால் அந்த அரங்கில் அதுகூட இல்லை.
இதுக்கு மேல தாங்காது என்று நினைத்து ‘’சரி ஏன் யாருமே பாடபுத்தகங்களுக்கு வெளியே அதிகமாக படிப்பதில்லை, உங்கள் மனதில் தோன்றுகிற பதிலை நேர்மையாக சொல்லுங்கள்’’ என்று கேட்டேன். ஒரு பெண் எழுந்து நின்று ‘’எங்க வீட்ல புக்கு வாங்குனா திட்டுவாங்க சார், அவங்களும் வாங்கித்தரமாட்டாங்க’’ என்று அப்பாவியாக சொன்னார். ‘’டைம் இல்லை சார், காலேஜ் அசைன்மென்ட்ஸ் ப்ராஜெக்ட்ஸ்னு ஒரே பிஸி’’ என்றார் இன்னொரு மாணவர். ‘’சார் எதை படிக்கணும்னு தெரியல, சொல்லித்தரவும் ஆள் இல்ல, வீட்ல நியூஸ்பேப்பர் வாங்கினாக்கூட வேலைவாய்ப்பு செய்தி வர நாள்ல மட்டும்தான் வாங்க அனுமதிப்பாங்க’’ என்றார். இன்னும் என்னென்னவோ காரணங்கள் சொன்னார்கள். யாருக்கும் படிப்பதில் விருப்பமும் இல்லை நேரமும் இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.
நமக்கெல்லாம் எப்போதாவது தோன்றுமில்லையா, இந்த அகண்டு விரிந்த எல்லையற்ற மகத்தான பிரபஞ்சத்தில் நம்முடைய இருத்தல் என்பது என்ன? என்பதைப்போற ஒரு ஞானோதயம். அப்படித்தான் அந்த நொடி எனக்குத்தோன்றியது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ் எழுத்தாளர்களெல்லாம் என்னுதுதான் பெரிசு உன்னுது சிறிசு என சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்களை ரட்சகர்களாகவும் தேவதூதர்களாகவும் நினைத்துக்கொண்டு அலப்பரைகளை கொடுக்கிறார்கள்.
இந்த கல்லூரியில் மட்டுமல்ல இதற்கு முன்பு மைலாப்பூருக்கு மத்தியில் இருக்கிற ஒரு பிரபல கலைக்கல்லூரியில் பேசச்சென்றிருந்த போதும் இதே மாதிரி அனுபவத்தை எதிர்கொண்டேன். இன்னும் சில மாணவர்களை சந்திக்கும்போதும், புத்தகம் வாசிப்பதை பற்றி பேசினாலே மாணவர்களுக்கு சப்தநாடியும் அடங்கி ஒடுங்கிவிடுகிறது.
இன்றைக்கு புத்தகம் வாசிக்க வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு பத்து சதவிகிதம் கூட இல்லை. வாட்ஸ் அப் தொடங்கி ஆங்கிரிபேர்ட், கேன்டிக்ரஷ், ஷாப்பிங் மால், காபிடே, டவுன்லோட் மூவிஸ், கொரியன் சீரியல் சமூகவலைதளங்கள் என அவர்களுக்கான பொழுதுபோக்கின் முகம் மாறிவிட்டது. தொலைகாட்சியின் வருகைக்கு பிறகான தலைமுறைக்கு புத்தகம் என்பது ஒரு சுமைதான். தகவல்களுக்காக படித்த காலம் கூட உண்டு. ஆனால் இன்று ஒற்றை விரல்சொடுக்கில் தகவல்களை கொட்டத்தயாராயிருக்கிறது கூகிள். இதைத்தாண்டி எப்படி இளைஞர்கள் வாசிக்க வருவார்கள். சர்ச் எஞ்சின் தலைமுறைக்கு ஏற்ற படைப்புகளும் தமிழில் இல்லை. தமிழில் கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்ட ரொமான்டிக் நாவல்கள், அறிவியல் புனைவுகள், த்ரில்லர்கள், ஹாரர், மிஸ்டரி நாவல்கள், நகைச்சுவைக்கதைகள் எத்தனை இருக்கும்? விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் நூல்கள் வெளியிடப்படுகிறது!
வாசிப்பென்பது இருட்டறையில் அமர்ந்துகொண்டு இரண்டரை மணிநேரம் பாப்கார்ன் கொறித்த படி எதுவும் செய்யாமல் படம் பார்க்கிற ஈஸி வேலை கிடையாது. வாசிப்பதற்கு நேரம் வேண்டும், கவனம் உழைப்பு பொறுமை எல்லாம் தேவை. ஆனால் அவ்வளவு சக்தி நமக்கு கிடையாது, போதாகுறைக்கு சுவாரஸ்யமான பிரதிகளும் நம்மிடம் இல்லை. இப்படியொரு சந்தர்ப்பத்தில் நம்முடைய இளைஞர்களுக்கு சில கேள்விகள் உண்டு. வாசிப்பதால் ஏதாவது பயனுன்டா? ஆங்கிலத்தில் படித்தால் கூட பெருமைக்காகவாவது அவ்வப்போது பெயர்களை உதிர்க்கலாம். தமிழ் எழுத்தாளர்கள் பெயர்களை சொல்வதால் நமக்கு பாதகமா? சாதகமா? பிரபஞ்சனையும் பிரமிளையும் படித்தால் ஒரு ஃபிகராச்சும் மடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். காரணம் வாசிப்பின் மீது குழந்தைகளாக இருக்கும்போதிருந்தே உருவாக்கத்தவறிய ஆர்வம்.
தமிழில் சொல்லிக்கொள்ளும் படி குழந்தைகள் நூலோ பத்திரிகைகளோ பல ஆண்டுகளாக கிடையாது (காமிக்ஸ் தவிர்த்து). இப்போதைக்கு சுட்டிவிகடன் மட்டும்தான். அதுவும் விலை அதிகம். குழந்தைகளுக்காக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் எண்ணிக்கையும் நான்கோ ஐந்தோதான். ஆனால் ஆங்கிலத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பத்து வயதுக்கு, பதினைந்து வயதுகுட்பட்ட பதின்பருவத்தினருக்கு என விதவிதமான நூல்கள் கிடைக்கின்றன. ஆனால் தமிழில் அப்படி வகைமைகள் கிடையாது. எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி நூல்கள்தான். இன்று பதிமூன்று வயது பையனுக்கு வாங்கித்தர எந்த தமிழ்நூலை பரிந்துரைக்க முடியும்? மீண்டும் மீண்டும் அதே தெனாலிராமன், பீர்பால், பஞ்சதந்திர கதைகளையே நாடுகிறோம். வீட்டிலும் கூட செய்தித்தாள் வாசிக்கிற பழக்கம் குறைந்து வருகிறது. இதழ்கள் கூட மருத்துவம், வேலைவாய்ப்பு கல்வி என தேவைக்கேற்ப வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். புத்தகக்கண்காட்சியில் காமிக்ஸ் கன்னாபின்னாவென்று விற்பதாக சொல்லப்பட்டாலும் அதை இப்போதும் வாசித்துக்கொண்டிருப்பதென்னவோ முப்பது வயதிற்குமேற்பட்ட ஆட்களே!
குழந்தைகளுக்காக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இரா.நடராசன் ஒரு கூட்டத்தில் பெற்றோர்கள் எந்த அடிப்படையில் நூல்களை வாங்கித்தருகிறார்கள் என்பதைப்பற்றி சொன்னார். தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பொருளாதார முன்னேற்றித்திற்கு பயன்படுகிற நூல்களையே அவர்கள் வாங்கித்தர எண்ணுகிறார்கள். ‘’உங்கள் குழந்தை விஞ்ஞானியாக வேண்டுமா?’’ ‘’உங்க குழந்தை கோடீஸ்வரனாக வேண்டுமா?’’ என்பது மாதிரி நூல்களையே வாங்கித்தர எண்ணுகிறார்கள். கதையும் கவிதையும் படிப்பது குழந்தைகளை பாழாக்கக்கூடும் என்று அஞ்சுகிறார்கள் என்றார். பெற்றோர்களின் அழுத்தம் ஒருபக்கமென்றால் இன்னொரு பக்கம் பள்ளிகள் பல பள்ளிகளில் பெயருக்குத்தான் நூலகங்கள் இயங்குகின்றன. நூலகத்திற்கு செல்லவும் அங்குள்ள நூல்களை தேடி வாசிக்கவும் குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுவதில்லை. பாடபுத்தகச்சுமை குழந்தைகளை அச்சிட்ட காகிதங்களின் மீதான வெறுப்பையே உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவில் மார்ச் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாக கொண்டாடுகிறார்கள். இம்மாதத்தில் மக்கள் மத்தியில் நூல்வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையில் நிறைய நிகழ்ச்சிகளை நாடு முழுக்க நடத்துகிறார்கள். நிஜமாகவே நடத்துகிறார்களா என்பதை அமெரிக்க வாசிகள்தான் உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதுகுறித்த செய்திகளை வாசிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
பெற்றோர்களிடம் ஒவ்வொரு நாளும் தங்களுடைய குழந்தைகளுக்கு ‘’பதினைந்து நிமிடம்’’ ஏதாவது ஒரு புத்தகத்தினை உரக்க வாசித்து காட்ட வலியுறுத்துகிறார்கள். பொது இடங்களில் நூல்களை பற்றிய கூட்டங்கள் நடக்கின்றன. பள்ளிகளில் தினமும் யாராவது ஒருவர் வகுப்பறையிலேயே ஏதாவது ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை நிகழ்த்துகலையாகவும். அதே கதையை வாசித்தும் காட்டுகிற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. புத்தக கண்காட்சிகள், இலவச நூல்கள், திரைப்பட காட்சிகள், நூல்களை பரிசாக வழங்குவது என நிறைய விஷயங்கள் பண்ணுகிறார்கள். இதன் மூலம் எத்தனை பேர் செய்வார்களோ வாசிக்க ஆரம்பிப்பார்களோ ஆர்வம் வருமோ தெரியாது.
இது ஏதாவது பெரிய என்ஜிஓக்களின் இன்னுமொரு லீலையாக கூட இருக்கலாம். ஆனால் இதுமாதிரியான முயற்சிகள்தான் அடுத்த தலைமுறையினரை வாசிப்பின் பக்கம் தூண்டக்கூடியவையாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் செய்ய இங்கே குழந்தைகளுக்கு, பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, பொதுஜனங்களுக்கு என யாருக்குமே நேரமில்லை!