தாத்தாக்களும் பாட்டிகளும் நிறைந்திருந்த ஒரு திரையரங்கு. அத்தனை முதியவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பது பஜனை மண்டபத்தில் பாயாசத்திற்காக உபன்யாசம் கேட்க வந்தமர்ந்திருப்பதை போல் இருந்தது. சத்யம் திரையரங்கில் இதுவரை பலநூறு படங்கள் பார்த்திருந்த போதும் எப்போதும் இந்த அளவுக்கு வறட்சியாக உணர்ந்ததில்லை. முன்பக்கத்திலிருந்த இருக்கைகள் அத்தனையும் நரைத்திருந்தன! நெற்றிகளில் பட்டையும் நாமமுமாக... ரிடையர்டானவர்களுக்கான சிறப்புக்காட்சிக்கு வந்துவிட்டோமோ என்றென்னும் அளவுக்கு வெண்மை பூத்திருந்தது. முத்தாய்ப்பாக கோயிலில் பூஜை முடித்துவிட்டு அப்படியே சட்டைகூட போடாமல் நேராக தியேட்டருக்கு வந்திருந்தார் ஒரு பூஜாரி! விபூதி மணக்க, நெய்மணம் கமகமக்க… தொடங்கியது சங்கராபரணம்!
எனக்கு நேர் முன்பாக அமர்ந்திருந்த பெரியவர் தன் இளம் மகனோடு வந்திருந்தார். அல்லது மகன் அழைத்து வந்திருக்க வேண்டும். படம் தொடங்கியதிலிருந்து தன் மகனிடம் ஒவ்வொன்றையும் காட்டி காட்டி பேசிக்கொண்டேயிருந்தார். முதல் பாடலில் தொடங்கி ஒவ்வொரு பாடல் தொடங்கும்போதும் கண்களை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேயிருந்தார். படத்தில் மொத்தம் பனிரெண்டு பாடல்கள்! ஒரு பாடலுக்கு முப்பது மில்லி என்றாலும் பனிரெண்டு பாடலுக்கு எவ்வளவு கண்ணீர்? கண்களை துடைத்துக்கொண்டேயிருந்தார்.
படம் பார்க்கும்போதே தன் மகனுடைய தோள்களில் சாய்ந்துகொண்டார். படத்தில் வருகிற மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் விழுந்து விழுந்து சப்தமாக சிரிக்கிறார். பாடல்களுக்கு நடுநடுவே எஸ்பிபியோடு சேர்ந்து ப்ரோ… ச்சே… வா… ரெவரூரா…ஆஆஆஆஆ.. என்று முணுமுணுத்தபடி தன்னுடைய கைகளால் தாளமிடுவதுபோலவும் தட்டிக்கொண்டிருந்தார். மகனிடம் ‘’இப்போ பாரு செமயாருக்கும், இப்போ பார் இப்போ பார்’’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்.
இடைவேளையில் கூட மகன் அழைத்தும் வெளியே போகாமல் அப்படியே அமர்ந்திருந்தார். பெரியவருக்கு வயது ஐம்பதுக்குள்தான் இருக்கும். அனேகமாக தன்னுடைய கல்லூரி காலத்தில் இப்படத்தை பார்த்திருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை பார்க்கிற அவருக்கு நிச்சயமாக இது வெறும் திரைப்படமாக மட்டுமே இருந்திருக்கும் என்று நிச்சயமாக சொல்லமுடியாது. கல்லூரிக் காலத்தில் திரும்ப திரும்ப பலமுறை பார்த்திருக்கலாம், தன் காதலியோடு பார்த்திருக்கலாம். அவருக்கு படத்தின் ஒவ்வொரு காட்சியும் பாடலும் ஒலியும் மறக்கவியலாத நினைவுகளாக தேங்கியிருந்திருக்க வேண்டும். அவர் மட்டுமல்ல சத்யம் திரையரங்கில் அந்த காலைகாட்சிக்கு கூடியிருந்த எழுபது எண்பது பேருமே இப்படித்தான் படம் பார்த்து கண்ணீர் விட்டு நெகிழ்ந்து உணர்ச்சிக்கொந்தளிப்பில் பாடல்களில் கரைந்து உருகியதை காண முடிந்தது. படத்தை விடவும் இக்காட்சிகள் நம்மை நெகிழச்செய்வதாக இருந்தது.
படம் முழுக்க வசனங்கள் மிகவும் குறைவு, படம் தொடங்கி முதல் பத்து பதினைந்து நிமிடங்கள் வரைக்குமே வசனங்களில்லை. சென்னையிலும் கூட படம் அக்காலத்தில் நூறுநாட்கள் ஓடியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு பார்த்தாலும் இப்படம் நன்றாகப் புரியும்.
படத்தின் முதல் நாயகர் பாடும்-பாலு இரண்டாவது நாயகர் பார்க்கும்-பாலு(மகேந்திரா)! கேவி.மகாதேவனின் இசைக்கு தன்னுடைய கம்பீரக்குரலால் ஒலிபாலு உயிர்கொடுக்கிறார். விஸ்வநாத்தின் நேர்த்தியான படமாக்கலுக்கு ஒளிபாலு உயிர் தருகிறார். இப்போதெல்லாம் மானிட்டர் வந்துவிட்டது, எடுத்த காட்சிகளை அப்போதைக்கு அப்போதே சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துவிட முடியும், ஆனால் அதுமாதிரி வசதிகள் இல்லாத காலத்திலும் கூட சில காட்சிகள் எடுக்கப்பட்டிருந்த விதம் ஆச்சர்யப்படவைத்தது.
இப்படத்திற்கு நாயகியாக மஞ்சுபார்கவியை பாலுமகேந்திராதான் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பாலுமகேந்திராவின் அத்தனை கறுப்பு ஹீரோயின்களுக்குமான ரெபரன்ஸ் இவரிடம் இருக்கிறது! முகத்தில் உதட்டில் கன்னங்களில் இன்னும் பல இடங்களில் என கேமரா அவரை கட்டித்தழுவுகிறது. தனுஷ் போல மஞ்சுபார்கவி கூட பார்க்க பார்க்க பிடிக்கிற ஆள் போல படம் தொடங்கும்போது இந்தம்மாவா என்று வெறுப்பாக இருந்தாலும் போக போக அவர் மீது நமக்கும் காதல் வந்துவிடுகிறது. முடியும் போது படம் முழுக்க மௌனம் பேசும் மஞ்சுபார்கவி ரசிகராகிவிடுவோம்!
மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டே கதை பண்ணியிருந்தாலும் ஒவ்வொருவரும் அவ்வளவு ஆழமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்தப்படம் தமிழிலும் தெலுங்கிலுமாக எப்படியும் ஒரு நூறு படங்களுக்கு ரெபரென்ஸாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு இந்தப்படத்தில் வருகிற காட்சிகளும் பாத்திரங்களும் இதற்கு பிறகுவந்த எண்ணற்ற இசைப்படங்களில் நடனப்படங்களில் பலமுறை பார்த்தவை. அதனாலேயே மிகச்சில காட்சிகளில் சலிப்பு வந்தாலும் படம் விறுவிறுப்பாகவே நகர்கிறது. காமெடிகள் அச்சுபிச்சுத்தனமாக இருந்தாலும் அந்தகாலகட்டத்தில் ரசித்திருக்கக் கூடியவை. அல்லு ராமலிங்கையஇதை ஒரு கலைப்படமாகவே இத்தனை நாளும் நினைத்துக்கொண்டிருக்க, சிறந்த பொழுதுபோக்குப்படத்திற்கான தேசியவிருதுதான் கொடுத்திருக்கிறார்கள்!
படத்தை தெலுங்கிலேயே வெளியிட்டிருக்கலாம். ஆனால் ஏனோ பாடல்களையும் கூட தமிழில் மாற்றியிருக்கிறார்கள். பாலுவே மீண்டும் பாடியிருக்கிறார். குரலில் அதே கம்பீரம். பழைய பிரிண்ட்டை டிஜிட்டல் பண்ணியிருப்பதால் ஆரம்ப காட்சிகள் புள்ளி புள்ளியாக வினோதமான மங்கலாக தெரிந்தாலும் போகப்போக அது தொந்தரவு செய்யாமல் கண்ணுக்கு பழகிவிடுகிறது. வாய்ப்புக்கிடைத்தால் திரையரங்கில் பார்க்கலாம். மிகச்சில காட்சிகள்தான் ஓடுகிறது. யூடியூபில் முழுப்படமும் தெலுங்கில் காணக்கிடைக்கிறது. பாடல்களையாவது கேட்கலாம்.
படம் முடிந்து கிளம்பும்போது எல்லோர் முகத்திலும் திருப்தி. ‘’தம்பி இன்னொருக்கா பாக்கலாமாடா’’ என்று ஏக்கமாக மகனிடம் கேட்டுக்கொண்டே கூட்டத்தில் மறைந்தார் முன் இருக்கைப்பெரியவர். எனக்கும் கூட இன்னொரு முறை பார்க்க வேண்டும், ஆனால் தெலுங்கில்.