Pages
▼
12 March 2015
அசோகமித்திரனின் தண்ணீர்
தண்ணீர் நாவலைவாசித்த யாருமே ஜமுனா,சாயா,பாஸ்கர்ராவ் என்கிற பெயர்களை மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு வலிமையாக படைக்கப்பட்டவை. அவர்களையெல்லாம் எனக்கு போனவாரம்தான் தெரியும். ‘’தண்ணீர்’’ வசந்த் இயக்கத்தில் படமாகிறது என கேள்விப்பட்டு அவசவசவசரமாக வாங்கி ஒரே கல்ப்பில் படித்து முடித்தேன். பிரமாதமான நாவல். அருமையான பின்னணி, நினைவைவிட்டு நீங்காத பாத்திரங்கள் என அசோகமித்திரனின் ஏஸ்யூஸ்வல் க்ளாசிக்களில் ஒன்று. இதை நாவல் என்று எப்படி சொல்கிறார்கள் என தெரியவில்லை. படிக்கும்போது ஒரு நீண்ட சிறுகதையை படிப்பது போல்தான் இருந்தது.
கதையை வாசிக்கும்போது கதை நடக்கும் காலம் எழுபதுகளாக இருக்கும் என்று யூகித்தேன். அப்போது எந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் மக்களை பாடாய் படுத்தியது என்பதை நேரடிசாட்சியாக வர்ணிக்கிறார் அ.மி. ஆனால் அதற்கு பிறகு சமகாலத்தில் அதைவிடவும் கேவலமாக ஒரு குடம் தண்ணீருக்காக லோல் பட்டுவிட்டதாலோ என்னவோ, காசுகொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கிறதாலோ என்னவோ நாவலில் வருகிற தண்ணீர்ப்பஞ்சம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கதையிலும் சென்னையின் ஒட்டுமொத்த தண்ணீர்ப்பஞ்சத்தை ஒரு வீதிக்குள் சுறுக்கிவிட்டாரோ என்றும் கருதினேன்.
நாவலில் முழுக்கவும் நகரத்தின் மையத்தில் வாழ்கிற மிடில்கிளாஸ் மக்களின் வாழ்க்கையை பதிவுசெய்திருக்கிறார். திராவிட இயக்கங்கள் உச்சம் பெற்றுவிட்ட துவக்க காலத்தில் அவருக்கு பிரமாணர்கள் ஒடுக்கப்படுவதாக ஒரு கவலை இருந்திருக்கலாம். அதனால் உண்டான கோபமும் சீற்றமும் பல இடங்களில் காட்சிகளின் வழியாகவும் பாத்திரங்களின் வழியாகவும் சொல்லப்படுகிறது. சினிமாக்காரனை நம்பி வாழ்க்கையை தொலைத்த ஒரு அப்பாவி பெண் பாத்திரங்களையும் அனேகமாக சினிமாவில் சீரியல்களிலும் போட்டு துவைத்து எடுத்துவிட்டதால் ஜமுனாவின் பாத்திரமும் என்னமோ ஒட்டவே இல்லை. சாயாவும் கூட பாலச்சந்தர் படங்களில் பார்த்த ரகமாக இருக்க கதையில் ஒரு சில அத்தியாயங்களில் வந்துபோகும் ‘’டீச்சர்’’ அவ்வளவு ஈர்த்தார். ஜமுனாவிடம் டீச்சர் பேசுகிற நான்கு பக்கங்களையும் மீண்டும் மீண்டும் படித்தேன். அவ்வளவு சுவாரஸ்யம். ஜமுனாவின் அம்மா வருகிற அத்தியாயமும் தனிச்சிறுகதைக்கான அம்சங்களைக் கொண்டது.
அசோகமித்திரன் இந்நாவலில் கையாண்டிருக்கிற மொழி எவ்வித பாசாங்குகளும் அற்ற எளிமையான ஒன்று. அதுதான் இந்நாவலின் பலமே. அடுத்து அவர் தேர்ந்தெடுக்கிற பயன்படுத்துகிற சொற்கள். எங்குமே அந்நியமான சொற்களோ தன்னுடைய மேதாவித்தனத்தை வெளிப்படுத்துகிற மொழியோ இல்லை. எதையுமே மைக்போட்டு சொல்லாமல் எல்லாவற்றையும் காட்சிகளின் வழி வாசகனுக்கு கடத்துகிறார். தான் சொல்ல விரும்பியதை மட்டும் நறுக்கென சொல்கிறார். அதற்குமேல் ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.
இந்நாவலை திரைப்படமாக எடுக்கப்போகிறார்கள் என்பது நிச்சயம் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒரு சினிமாவிற்கான அடிப்படையான ஒரு கதை இந்நாவலுக்குள் இல்லை. மொத்தம் மூன்றே பாத்திரங்கள் அவர்களுடைய மனவோட்டங்கள், அதிலும் முக்கால் வாசி நாவலை ஜமுனாவே நிறைத்துவிடுகிறாள். கலைப்படமாகவே இருந்தாலும் அதற்குரிய அம்சங்களும்கூட குறைவுதான். வசந்த் என்ன பண்ணப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வக்குறுகுறுப்பு இப்போதே அதிகமாக இருக்கிறது. அந்த பீரியட் (70களின் துவக்கம்) இதுவரை எந்தப்படத்திலும் கையாளப்படதில்லை. இப்படத்திற்கு என்னமாதிரி திரைக்கதை அமைப்பார்கள், ஜமுனாவின் முன்கதையும், பாஸ்கர்ராவின் வாழ்க்கையும்கூட புதிதாக சேர்க்கப்படுமா என்றெல்லாம் படம்வந்தபின் தெரியும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பே இக்கதைக்கு ஒரு முழு திரைக்கதையையும் தயாரித்து படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார் ஞாநி. ஆனால் சரியான சூழ்நிலை அமையாமல் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இப்போதும் தன்னிடம் அந்த திரைக்கதை இருப்பதாக சொன்னார் ஞாநி. அது எங்கே இருக்கிறது என்று கேட்டு வாங்கி படித்துபார்க்க வேண்டும்.
நாவல்களை படமாக்குவது ஈஸியான வேலை கிடையாது. பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவதற்காக மணிரத்னம் முயற்சி செய்தபோது தமிழின் பல முன்னணிகளையும் கூட்டாக்கி ஒரு டீமை உருவாக்கி அதற்கென ஒரு திரைக்கதையை உருவாக்கினாராம். ஆனால் அதுவே திருப்தியாக வரவில்லை என்பதால்தான் அந்த முயற்சி கைவிடப்பட்டது என்று ஒரு பேச்சு உண்டு.
எஸ்ராமகிருஷ்ணன் தன்னுடைய வலைப்பக்கத்தில் ‘’ராஜவிளையாட்டு’’ என்கிற ஜெர்மானிய நாவல் குறித்து எழுதியிருந்தார். அது புதுப்புனல் வெளியீடாக தமிழில் வந்திருக்கிறது. 1941ல் செஸ் விளையாட்டின் பின்னணியில் எழுதப்பட்டது. ஒரு கப்பல் பயணத்தில் உலக செஸ் சாம்பியனை ஒரு அனானிமஸ் தோற்கடிக்கிறான். அந்த அனானிமஸ் நாஸிக்களின் சிறையில் கொடுமைகளை அனுபவித்துவிட்டு வெளியே வந்தவன். தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு பல மாதங்கள் கிடக்கிற அவன் செஸ்போர்ட் இல்லாமல், காய்ன்கள் இல்லாமலேயே செஸ்விளையாட்டை கற்றுக்கொள்கிறான். அவனுடைய சிறைச்சாலை சிந்தனைகளும் மனதிற்குள் நடக்கிற போராட்டங்களும்தான் மொத்த நாவலும். 3
அனைவரும் வாசிக்கவேண்டிய சிறந்த குறுநாவல் இது. நூறு ப்ளஸ் பக்கங்களே கொண்டது. ஆனால் மொழிபெயர்ப்பு பல இடங்களில் படுத்தி எடுக்கிறது. கடுமையான ஜிலேபி சுற்றியிருக்கிறார்கள். ஆஸ்திரியா ஒரு இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியிருக்கிறது. இணையத்தில் தேடினால் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. தரவிறக்கி கூட வாசிக்கலாம். நாவலின் பெயர் ROYAL GAME – எழுதியவர் Stefan Zweig
இந்நாவல் 1960ல் BRAINWASHED என்கிற பெயரில் திரைப்படமாக வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு அப்படத்தை இணையத்தில் தேடி கண்டுபிடித்து பார்த்தேன். அவ்வளவு அவசரமாக பார்த்ததற்கு முக்கியமான காரணம் சிறைச்சாலையில் செஸ் கற்றுக்கொள்கிற காட்சிகளை எப்படி படமாக்கப்பட்டிருக்கும் என்று தெரிந்துகொள்கிற முனைப்புதான். அப்பகுதி முழுக்கவும் மனவோட்டங்களாக எவ்வித வசனங்களும் காட்சிகளுமில்லாமல் நீண்டிருக்கும். நாவல் தந்த அனுபவத்தில் ஒரு சதவீத திகைப்பை பரிதவிப்பை படத்தினால் ஒரு சில விநாடிகள் கூட உருவாக்க முடியவில்லை.
சிறைச்சாலை காட்சிகள் சில நிமிடங்களில் கடத்தப்பட்டிருந்தது. மனவோட்டங்களை காட்சிப்படுத்துவதில் தோற்றுப்போயிருந்தார்கள். படத்தின் கதையை வேறு இஷ்டப்படி கொத்தி வைத்திருந்தார்கள். தண்ணீரிலும் வசந்த் அது மாதிரி எதுவும் செய்துவிடக்கூடாது. (வசந்த் தன் பெயரை வசந்த்சாய் என மாற்றிவிட்டார் போல போஸ்டர்களில் அப்படித்தான் போட்டிருக்கிறது!)