Pages

02 March 2015

எங்கெங்கு காணினும் அம்மாடா


தமிழ்நாட்டில் மக்கள் முதல்வரை வாழ்த்த யாருக்குமே வயதில்லை. எல்லோருமே விழுந்து புரண்டு குப்புறக்கா குனிந்து வணங்க மட்டும்தான் செய்கிறார்கள். அதிமுகவில் தொண்டர்களே கிடையாது போல! எல்லோருமே அம்மாவின் ‘’உண்மை விசுவாசிகள்’’தான். அக்கட்சியில் இருக்கிற 67வயதிற்கும் மேற்பட்ட ‘’தொண்டர்’’களுக்கெல்லாம் விஆர்எஸ் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியிருப்பார்களோ என்கிற கேள்வியோடு பேருந்தில் அமர்ந்திருந்தேன். சென்றவாரம் தேனி சென்றிருந்தேன். திண்டுக்கல் வழியாக தேனிக்கு பேருந்துப்பயணம். (அஃபீசியல் முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான பெரியகுளம் வழியாக.)

வழியெங்கும் எங்கு பார்த்தாலும் தாடைக்கு முட்டுக்கொடுத்தப்படி சன்னமாக புன்னகைக்கிறார் மக்கள் முதல்வர். பச்சை வண்ண பின்னணியில் குங்குமக்கலர் சேலையில் தகதகவென ஜொலிக்கிறார். மற்ற கட்சியினர் போல (குறிப்பாக அழகிரி மற்றும் பாண்டிச்சேரி என்ஆர் காங் போல ) அதிமுகவினர் கிராபிக்ஸ் கலக்கல் பண்ணுவதில்லை. தலைமையின் கறாரான உத்தரவாக இருக்கலாம்.

இந்த பேனர்களில் சென்னையிலிருந்து மதுரை வரை எங்கும் ஒரே மாதிரி புகைப்படங்கள் ஒரே மாதிரி வாசகங்கள்! பத்தடிக்கு பதினைந்து பேனர்கள் வீதம் திண்டுக்கல்லில் தொடங்கி தேனி வரைக்குமே குறைந்தது இரண்டாயிரம் பேனர்களையாவது கடந்திருப்பேன். அப்படியென்றால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் வைக்கப்பட்ட பேனர்களை எண்ணினால் ஏதாவது கின்னஸ் ரெகார்டுகள் கிடைக்கலாம். ஆட்சியிலிருக்கும்போதுதான் இதுமாதிரி நிறைய சாதனைகள் செய்யமுடியும் என்பதால் இதை யாராவது பரிசீலித்து கணக்கெடுப்பு நடத்தி...

பெரியகுளம் பகுதியில் இரண்டாயிரம் ப்ளஸ் பேனர்களில் ஒன்றில் கூட ஒ.பன்னீர் செல்வம் என்கிற பெயருக்கு கீழே தமிழக முதல்வர் என்கிற சொல் இடம்பெறவில்லை. ‘’கழக பொருளாளர், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்’’ என்கிற வாக்கியங்கள் மட்டுமே இடம்பிடித்திருந்தன. ஆனால் மக்கள் முதல்வருக்கு மட்டும் மறக்காமல் ''மாண்புமிகு'' போட்டு வைத்திருக்கிறார்கள்! இது சட்டப்படி குற்றம். காரணம் மாண்புமிகு என்பது திரு, திருமதி, செல்வி, சூப்பர்ஸ்டார், சின்ன தளபதி, குட்டிதளபதி போல யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்கிற பட்டம் கிடையாது. அதை இன்னார்தான் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற நெறிமுறை இருக்கிறது. ஆனால் பாருங்கள் தமிழ்நாட்டில் ஒருவருக்கும் அது தெரியாது.

போகட்டும், ஆனால் முதல்வராக இருந்தும்கூட தான் டீக்கடைவைத்து பிரபலமான சொந்த ஊரில் கூட தன் பெயருக்கு பின்னால் முதலமைச்சர் என்று போட்டுக்கொள்ள முடியாத துர்பாக்கியம் மிகவும் துயரகரமானது. ஆனாலும் மாண்புமிகு முதல்வர் (ஓபிஎஸ்) மிகவும் நல்லவர். நான் தேனி சென்றபோது அங்குதான் இருந்தார். அம்மாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிக்கொண்டிருந்தார். தேனியில் 122 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க சென்னையிலிருந்து வந்திருந்தார். இந்த திருமணத்தில் ஜோடிகளுக்கு ஒருலட்ச ரூபாய் பணம், சீர்வரிசை, கட்டில் பீரோ ப்ரிட்ஜ், நான்கு பவுனில் தாலி, தலா ஒரு பசுமாடு என்று ஜமாய்த்திருக்கிறார்கள். என்னுடைய கணக்கில் ஏதாவது விட்டுப்போயிருக்கலாம். ஆனால் குறைவில்லை. அள்ளிக்கொடுப்பதில் அதிமுகவினருக்கு நிகராக ஆள் கிடையாது.

நல்ல காரியம் நன்றாக நடத்தினார்கள். ஆனால் அதென்ன 122? அந்த எண்ணிக்கைதான் பயங்கரமாக குழப்பியடித்தது. ம.முதல்வருக்கு (ஜெ) வயது 67, ஆறு ப்ளஸ் ஏழு பதிமூன்று. ஒருவேளை 67 ப்ளஸ் 67 ஆக இருக்குமோ என்றால் அதுவும் இல்லை. அவருடைய பிறந்த தேசி கூட 24தான். எப்படி கண்டைந்தார்கள் இந்த 122ஐ என்று ஒரே குழப்பமாகிவிட்டது. மதுரைப்பக்கம் 113 பேருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணும் மிகுந்த குழப்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. அம்மாவின் பிறந்தநாளுக்கும் இந்த எண்களுக்கும் என்ன தொடர்பு என்பது புரியாமலேயே சுற்றிக்கொண்டிருந்தேன்.

ஒரு அரசியல் பிரமுகரோடு ஊர் சுற்றும் வாய்ப்புக்கிடைக்க அவரிடம் நிறைய பேசிக்கொண்டே பைக்கில் திரிந்தேன். அவர் அமைதியாக அதிமுகவினரின் சைலன்ட் ஊழல்களை மறைமுகமாக நடக்கும் உள்ளடி வேலைகளை சொல்லிக்கொண்டு வந்தார். சென்ற ஆட்சியில் திமுகவினர் செய்ததைப் போல பப்பரக்காவென்று நில அபகரிப்பு, கட்டை பஞ்சாயத்து, வீதிகள் தோறும் மாமூல் வசூல் மாதிரி விஷயங்களில் ஈடுபடுவதில்லை மிகவும் கண்ணியமாக வெளியில் தெரியாதபடிக்கு கடமையை செய்கிறார்கள் என்றார்.

‘’அப்பாவி டீக்கடை அரசியல்வாதி’’ குறித்தும் (மோடி அல்ல) நிறைய அதிர்ச்சிகரமான விஷயங்களை சொன்னார். ‘’அவர் பாக்கதாங்க அப்பாவி, ஆனா ஆள் ரொம்ப பேஜாரானவரு… தேனி பெரியகுளத்துல அவருக்கு எவ்ளோ சொத்து இருக்குது தெரியுங்களா’’ என்றவர், ஒரு ட்ராவல்ஸ் பேரை சொல்லி அந்த ட்ராவல்ஸ்ல இவர் பேர்ல பத்து பஸ் தனியா ஓடுது என்றவர் போகிற வழியில் தேனியிலிருந்து கம்பம் போகும் சாலையில் பிசி.பட்டி தாண்டியதும் போஜராஜன் மில்ஸை காட்டினார்.

சிதிலமடைந்து களையிழந்து காணப்பட்ட அந்த மில்லை கிட்டத்தட்ட மூடிவிட்டார்களாம். அதை தன்னுடைய பினாமி பெயரில் திருவாளர் அப்பாவிதான் வளைத்துப்போட்டிருக்கிறார் என்றார். யாரோ எனக்குள் ஏறி மிதித்து ப்ரேக் அடித்தது போல இருந்தது. காரணம் அந்த இடம் எப்படியும் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ளது. அந்த ஏரியாவில் ஒரு சென்ட் விலை ஏழு முதல் எட்டு லட்சம் வரைக்கும் போகிறது என்று அதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்புதான் அறிந்திருந்தேன்.

ஆயிரம் ஏக்கருக்கு என்ன வரும் என்று கணக்குப்போட்டு பார்த்துக்கொள்ளலாம். அந்த இடம் போடிக்கு திரும்பும் முக்கிய சாலையில் இருப்பதால் அந்த ஏரியாவை இன்னும் டெவலப் ஆக்கிவிட்டால் கொள்ளை லாபம் பார்க்கலாம்! ‘’என்னங்க அவரைப்போய் இப்படி சொல்றீங்க ஆள் பாக்க எவ்ளோ பவ்யமா நல்லவரா இருக்காரு, இப்படிலாம் பேசாதீங்க யாராவது புடிச்சி வெட்டிட போறாங்க’’ என்று அறிவுரை சொன்னேன். இது எல்லாருக்குமே தெரியும் இந்த ஏரியால நீங்கதான் அதிர்ச்சியாவுறீங்க என்றார்.

ஊர்முழுக்க எங்கு பார்த்தாலும் ஒரே பாட்டுதான். ‘’தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக’’ பாடல் அதிமுகவினரின் தேசியகீதமாக மாறியிருக்கிறது. எல்லா ஊர்களிலும் அந்தப்பாடலை ரிப்பீட்டில் ஓட விடுகிறார்கள்.

ம.முதல்வரின் பிறந்தநாளுக்காகவும் அவர் மீண்டும் அபீசியல் முதல்வராகவும் வேண்டிக்கொண்டு தொண்டர்கள் பண்ணின எழுச்சிமிகு சாகசங்களை பத்திரிகைகளில் பார்த்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஹூசைனி வேறு கைகளில் ரத்தம் வராமல் ஆணி அடித்து ஒரு பென்ச்மார்க்கை உருவாக்கிவிட்டு போய்விட்டார். அதனால் ஆளாளுக்கு விசித்திரமான வேலைகளில் இறங்கி வெறித்தனமாக தங்களுடைய எக்ஸிஸ்டென்ஸை வெளிப்படுத்தியதைக் காணமுடிந்தது. அதிலும் அமைச்சர் பா.வளர்மதி கையில் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை செய்ததையெல்லாம் பார்க்கும்போது கண்களில் ஜலம்கண்டுவிட்டது. தீச்சட்டிக்கு இணையாக அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் அந்தர்பல்டி அடித்தல், மண்சோறு சாப்பிடுதல், அங்கபிரதட்ணம் முதலான விஷயங்களையும் கூட சிலர் செய்திருக்கிறார்கள். அவரவர் திராணிக்கேற்ற படி எல்லோருமே எதையாவது செய்கிறார்கள். எதுவுமே செய்யமுடியாதவர்கள் பெரிய எண்ணிக்கைகளில் யாகம் வளர்ப்பதும், கல்யாணம் பண்ணி வைப்பதுமாக அம்மாவிடம் புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள்.

தேனியில் இருந்த இரண்டு நாளும் உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை (122) கடைசியில் ஒரு அதிமுக ஆளிடமே கேட்டேன். ப்ப்ஊ…. இதானா அம்மாவோட ராசி நம்பர் அஞ்சு அதுவராப்ல ஒன் ட்வென்டி டூனு பிக்ஸ் பண்ணிருக்கோம். நான்கூட எங்க ஊர்லருந்து ஒரு ஜோடிய சேர்த்துவுட்டேன் , இன்னைக்கு காலைல திடீர்னு ஒரு ஜோடி வரலனுடுச்சு.. அப்புறம் மதியத்துக்குள்ள புது ஜோடிய தேடிகண்டுபுடிச்சி ரெடி பண்ணிட்டோம்ல, நமக்கு நம்பர் முக்கியமில்ல ஜி’’ என்று பெருமிதமாக சொன்னார். ‘’ஓ இப்போ அதான் லக்கி நம்பரா.. எப்போ மாத்தினாங்க, முன்னால ஒன்பதாம் நம்பர்தானே இருந்துது’’ என்றேன். அவருக்கு தெரியவில்லை. யோசித்துக்கொண்டேயிருந்தார்.

***********

தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா ஊர் கேபிள் டிவியிலும் ட்யூன் பண்ணினால் முதல் சானலாக தூர்தர்ஷன் அல்லது பொதிகை வருவதில்லை. அதற்கு பதிலாக அம்மாவின் சாதனைகளை மட்டுமே சொல்கிற ஒரு பெயிரற்ற சானல் இருபத்திநான்கு மணிநேரமும் அம்மா அம்மா அம்மா என்று மூச்சுவாங்க ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் கூட செட் டாப் பாக்ஸ் இல்லாத கேபிள் இணைப்புகளில் இதுதான் முதல் சானல்! (கோவை, தேனி , மதுரை, திருச்சியிலும் விசாரித்ததில் இதுதான் பஸ்ட்!)