27 February 2015
நிலம் கையகபடுத்தும் சட்டம் - ராட்சத முகங்காட்டும் ரட்சகர்
ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் உருப்படியாக எதையும் செய்து விடவில்லை. எல்லாமே வெற்று வாய்சவடால்களாக மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஜில்ஜில் ஜிகினா ‘’சொச்சு பாரத்’’ திட்டம் போலவே!
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரைகூட எதையெல்லாம் எதிர்த்து அப்பாவி மக்களை ஏமாற்றி கலர் கலராக பிட்டுப்படம் காட்டி ஆட்சிக்கு வந்ததோ, இப்போது அதே குற்றங்களை கூச்சநாச்சமேயில்லாமல் செய்ய ஆரம்பித்திருக்கிறது பிரதமர் மோடியின் காவிய அரசு. இதற்கு நல்ல உதாரணம் தற்போது அவசரமாக அமல் படுத்த துடித்துக்கொண்டிருக்கிற ‘’நில கையகப்படுத்துதல் சட்டம்’’.
இச்சட்டத்தை ஊரே சேர்ந்து கழுவி ஊற்றுகிறது, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். அதில் உள்ள குறைகளை பிழைகளையும் இச்சட்டத்தால் எப்படியெல்லாம் கார்பரேட் முதலாளிகள் மட்டும் பயனடைவார்கள் விவசாயிகள் அழிவார்கள் என்பதையெல்லாம் மீடியாக்களில் அறிஞர்கள் தொடர்ந்து புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டு காட்டுகிறார்கள். ‘’அதெல்லாம் கட்டுக்கதை நம்பாதீங்க, இது விவசாயிகள் நலனை காப்பதற்கான சட்ட திருத்தம்’’ என புன்னகையோடு அறிக்கை விடுகிறார்‘’ மோடி! இச்சட்டம் குறித்தும் இணையத்திலும் பேப்பர்களிலும் படிக்க படிக்க ‘’இவனுங்களுக்கு போய் ஓட்டு போட்டுட்டீங்களேடா’’ என்று மக்கள்மீதுதான் கோபம் வருகிறது. பாஜகவிற்கு வேண்டப்பட்ட சிவசேனா மாதிரியான கட்சிகள் கூட இச்சட்டத்தை எதிர்க்கின்றன. ஆனாலும் மோடி விடாப்பிடியாக இருக்கிறார்.
இந்த சட்டம் குறித்து இதுவரை எதுவுமே தெரியாவிட்டாலும் ஒன்று குடிமுழுகிப்போய்விடவில்லை. இப்போதாவது அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுவோம்.
1894 ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நிறைவேற்றப்பட்டது நிலம் கையகப்படுத்துதல் சட்டம். இச்சட்டத்தின் படி இந்திய எல்லைக்குள் யாருடைய நிலத்தையும் எவ்வித நிலத்தையும் என்ன அளவிலும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு உரிமையாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து பிடுங்கிக்கொள்ளலாம்.
இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆதிவாசிகள்தான். இந்தியா முழுக்க நடைபெற்ற வெவ்வேறு நிலகையகப்படுத்தலின் போது லட்சக்கணக்கான ஆதிவாசிகள் இடம்பெயர வேண்டியிருந்தது. இன்று இந்தியாவில் வாழும் ஆதிவாசிகளில் பத்தில் ஒருவர் இப்படி நிலகையகப்படுத்துதல் சட்டத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர். இப்படி கையகப்படுத்தும் நிலத்திற்கு தரப்படும் தொகையும் மிகவும் குறைவான அளவே வழங்கப்படும். மாற்று நிலமும் கிடைக்காது! இதனால் பெரும்பாலான ஏழை மக்கள் வறுமையில் சிக்கி வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டனர். நிலமிழந்தோரைவிட அந்நிலத்தை நம்பி கூலி வேலை பார்த்துக்கொண்டிருந்த தலித்துகளும் கடைநிலை சாதியினரும் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டனர் என்பதே வரலாறு. இப்போது பாஜக அரசினால் பாதிக்கப்படப்போவதும் ஏழை விவசாயிகளும் கூலிகளும்தான்.
கிட்டத்தட்ட நூற்றிபத்து ஆண்டுகளுக்கு பிறகு இச்சட்டத்தை மாற்றியமைத்து இதில் சில விஷயங்களை நீக்கி சில விஷயங்களை சேர்த்து 2013ல் 'நிலம் கையகப்படுத்துதலில், நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் வெளிப்படையான தன்மை, மறுகுடியமைப்பு, மறுகுடியேற்ற திருத்த சட்டம்' (LARR) என்கிற பெயரில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது முந்தைய மன்மோகன் அரசு. அச்சட்டத்தில் தனியாரிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் போது குறிப்பாக விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் போது என்னென்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், எப்படிப்பட்ட இழப்பீட்டினை வழங்கவேண்டும் என்பது மாதிரியான பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இப்போது ‘’அம்மா.. தாயே.. தயவு செஞ்சு… மேக் இன் இந்தியா’’ என்று தட்டேந்தி காத்திருக்கிறது மோடி அரசு. முழுக்கவும் கார்பரேட்களின் தயவையும் கடைக்கண் பார்வைக்காகவும் காத்திருக்கும் இந்த அரசு புதிதாக தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது 2011 LARR சட்டத்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என பயந்துபோய் இப்போது அவசரமாக இச்சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.
விவசாயிகளின் காவலரான பிரதமர் மோடி அவர்களுக்கு என்ன மாதிரியான நன்மைகளை செய்யப்போகிறார் தெரியுமா?
1894 சட்டத்தில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதி LARR 2013 சட்டத்தில் வேண்டாமென்று விலக்கி வைத்திருந்த 13 சட்டங்களை மீண்டும் அவசர சட்டத்தில் சேர்த்திருக்கிறார்!
இதனால் என்னாகும்? இனி அரசு உங்களுடைய விவசாய நிலத்தை கையகப்படுத்துவது என முடிவெடுத்துவிட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்களால் அதை எதிர்க்க முடியாது வா.சூவை பொத்திக்கொண்டு சரிங்க எஜமான் என்று நீட்டிய காகிகதத்தில் கையெழுத்தோ கைநாட்டோ வைத்துவிட்டு டவுன் பக்கமாக போய் பஸ் ஸ்டான்டில் கர்சீப் விற்று பிழைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
‘’சும்மா சொல்லாதீங்க சார் அஞ்சே அஞ்சு விஷயங்களுக்காக நிலம் கையக படுத்தும்போதுதான் அப்படி கேள்விகேட்க விடாம நிலத்தை புடுங்குவோம், மத்த படி அவங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு’’ என்று பாஜக தரப்பு சொல்கிறது.
ஆனால் அந்த ஐந்து விஷயங்களுக்காக மட்டும்தான் நம் நாட்டில் நிலங்கள் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை கையகபடுத்தப்படுகின்றன. தொழில் வளாகங்கள், தனியார் பொதுத்துறை திட்டங்கள், கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள், குறைந்த விலை வீட்டுவசதி திட்டங்கள், ராணுவம் தொடர்பானவை என இந்த ஐந்து விஷயங்களுக்காகதான் நிலங்கள் வளைக்கப்பட போகின்றன. இவை தவிர்த்து வேறு எதற்காக அரசு நிலங்களை கையகப்படுத்தும் என்பது விளங்கவில்லை.
இப்படி கையகப்படுத்தும் போது சமூக பாதுக்காப்பு அறிக்கை என்று ஒன்றை தரவேண்டும். இந்த கையகபடுத்துதலால் என்னமாதிரி பாதிப்புகள் வரும் என்பதை ஆராய்ந்து கொடுக்கிற சர்டிபிகேட். இனி அது தேவையில்லை. அதே போல பயிர் செய்துகொண்டிருக்கிற விவசாய நிலங்களையும் அப்படியே பிடுங்கிக்கொள்ளலாம்.
இப்படி யோசிப்போம், அரசு ஒரு விவசாய நிலத்தை தொழிற்சாலை கட்டுவதற்கென்று கையகப்படுத்துகிறது. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அல்லது அந்த ப்ராஜெக்டே ட்ராப் ஆகிவிடுகிறது. அடுத்தது என்ன? ‘’பழைய உரிமையாளருக்கே நிலத்தை கொடுத்துவிடலாம்’’ என்று முந்தைய மன்மோகன் அரசின் சட்டத்தில் இருந்த திருத்தத்தை இப்போது தூக்கிவிட்டார்கள். ஒருவேளை ப்ராஜக்ட் ட்ராப் ஆனாலும் புடுங்கினது புடுங்கினதுதான் இனிமே தரமுடியாது என்பதே புதிய சட்டபடி பிரதமர் மோடி நமக்களிக்கும் செய்தி.
விவசாயிகளை வெட்டினால் மட்டும் பத்தாது கொத்துக்கறி கூட போடலாம். அதற்கும் இந்த புதிய சட்டத்தில் ஆப்சன் இருக்கிறது. 2013 சட்டப்படி தனியாரிடமிருந்து ஒரு நிலத்தை கையகப்படுத்தும் போது அதற்கு அந்த நில உரிமையாளர்களில் 80 சதவீதம் பேரிடம் ஒப்புதல் பெற்ற பின்பே பெற முடியும். ஆனால் இப்போது மோடி அரசு கொண்டுவரவிருக்கும் சட்டத்தில் அந்த விஷயம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு கேவலமான சட்டத்தை இப்போது எதற்கு இவ்வளவு அவசரமாக நிறைவேற்றுகிறார்கள்? தண்டகாரன்யாவில் தொடங்கி இங்கே கொங்குமண்டலத்தில் கெய்ல் எரிவாயுக்குழாய் பதிப்பு, நியூட்ரினோ என விவசாய நிலங்களும் விவசாயத்தை பாதிக்கும் வகையில் நிலங்கள் அபகரிக்கப்படும் போதும் நடக்கிற தொடர் போராட்டங்களும் இனி இருக்கக்கூடாது என்பதே இச்சட்டத்தின் நோக்கம்.
கெயில் எரிவாயுக்குழாய் பதிப்பின் போது நடந்த போராட்டங்களை நேரில் பார்த்திருக்கிறேன். மிகவும் உக்கிரமான போராட்டம். விடாமல் கோர்ட்டுக்கும் ஜெயிலுக்குமாக அலைந்த ஏழை விவசாயிகளின் கண்ணீரை அறிந்திருக்கிறேன். இனி அவர்களால் அரசை எதிர்த்து சின்ன முணுமுணுப்பையும்கூட காட்ட முடியாமல் போகும். எந்தக்கேள்வியுமின்றி இனி நாட்டை கூறு போட்டு கூவி கூவி விற்கலாம். இப்போது பிரதமராகிவிட்ட திருவாளர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது 2006-2008 சமயத்தில் மட்டும் அவருடைய ஆத்ம நண்பர் அதானிக்கு ஒரு சதுரமீட்டருக்கு ஒரு ரூபாய் என்று பதினைந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை வாரி கொடுத்தவர்தான். (அதானி அந்த நிலத்தை ப்ளாட் போட்டு விற்று லாபம் ஈட்டினார் என்பது தனிக்கதை)
இப்போது அதே பாணியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், உள்ளூர் கார்பரேட் முதலாளிகளுக்கும் விவசாய நிலங்களை சல்லிசு ரேட்டில் வாரி வழங்கப்போகிறார். நாமெல்லாம் அதை விரல்சப்பிக்கொண்டு வேடிக்கை பார்க்க போகிறோம்.
(பிரதமர் மோடி 2006-2008 காலத்தில் மிகவும் குறைந்த விலையில் தன்னுடைய ஆத்ம நண்பர் அதானிக்கு அள்ளிக்கொடுத்த 15ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்து தெரிந்து கொள்ள http://www.business-standard.com/article/companies/adani-group-got-land-at-cheapest-rates-in-modi-s-gujarat-114042501228_1.html )