Pages
▼
19 February 2015
டமில் கமென்ட்ரி
வியூகம் என்கிற சொல்லை மகாபாரதத்தில்தான் அதிகம் படித்திருப்போம். அல்லது கேட்டிருப்போம். மகாபாரதத்தில் ஆறு வகையான வியூகங்கள் சொல்லப்படுகிறது. கிரௌஞ்ச வியூகம் (கிரௌஞ்ச பறவை) , மகர வியூகம் (மீன்) , கூர்ம வியூகம் (ஆமை) , திரிசூல வியூகம் (திரிசூலம்) , பத்ம வியூகம் (தாமரை) , சக்கர வியூகம் ( சக்கரம்) என இவை அதனுடைய வெவ்வேறுவிதமான வடிவங்களுக்கு ஏற்றபடி பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. போர் முனையில் படைவீரர்களை வெவ்வேறு இடங்களில் அணிவகுத்து நிறுத்தி எதிரிகளின் படைகளை முன்னேறி செல்லவிடாமல் தடுக்கவும் அவர்களை சுற்றி வளைத்து தப்பவிடாமல் கொன்றுகுவிக்கவும் பயன்பட்ட அந்தக்காலத்து டெக்னிக் இது. இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட மகாபாரத தொடர்களில் இந்த வியூகங்கள் சரியாக காட்சிப்படுத்தப்பட்டதில்லை.
சீனப்படமான RED CLIFF (1-2)ல் இவ்வகை வியூகங்கள் பயன்படுத்தப்பட்ட முறைகளையும் அந்த வியூகங்களை பயன்படுத்தி எப்படியெல்லாம் அந்தகாலத்து சீனாக்காரர்கள் போரிட்டார்கள் என்பதையெல்லாம் பல நூறு கோடி பட்ஜெட்டில் காட்டியிருப்பார்கள். சூப்பர் ஹிட் படம் அது. தமிழ் டப்பிங்கில் கூட காணக்கிடைக்கிறது. பத்ம வியூகம், கூர்ம வியூகமெல்லாம் கூட காணகிடைக்கும்.
இந்த வியூகம் என்கிற வார்த்தையை போர்முனை தவிர வேறெங்கே பயன்படுத்த முடியும்? வேறெங்குமே முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதை மிகச்சரியாக வேறோரு இடத்தில் பயன்படுத்தியவர் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார். ஃபீல்டிங் செட் செய்வதற்கு வியூகம் வகுப்பது என்கிற சொல்லை அவர்தான் முதன்முதலில் பயன்படுத்தியவர்.
‘’வாலஜாமுனையிலிருந்து பந்து வீச பாய்ந்தோடி வருகிறார் ஜகவல் ஸ்ரீநாத்,’’ என்கிற அவருடைய குரல் இப்போதும் கூட காதில் கேட்கிறது. கிரிக்கெடில் தமிழ் வர்ணனையின் முகமும் குரலும் அவருடையதுதான். கமென்ட்ரி என்பதை வர்ணனை என்று மொழிபெயர்த்தவர் யாரென்று தெரியவில்லை ஆனால் நிஜமாகவே கிரிக்கெட் ஆட்டத்தை கம்பன் போல வார்த்தைக்கு வார்த்தை வர்ணித்து பேசியது அப்துல் ஜப்பார்தான். தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் கிரிக்கெட் கற்றுக்கொடுத்ததில் அவருக்கு மிகமுக்கிய பங்கிருக்கிறது.
உலக கோப்பை போட்டிகள் விஜய்டிவியில் தமிழ் கமென்ட்ரியோடு ஒளிபரப்பாகவுள்ளது என்றதுமே கூடவே நினைவுக்கு வந்த முதல் பெயர் அப்துல் ஜப்பாருடையதுதான். அவருடைய வெண்கலக்குரலும் லாகவமான உச்சரிப்பும் ஸ்டைலும்தான் நினைவுக்கு வந்து போனது. ஆனால் விஜய்டிவி ஏனோ அவரை பயன்படுத்தவில்லை என்று தெரிந்தபோது மிகுந்த மனவருத்தமடைந்தேன்.
எல்லோர் வீட்டிலும் டிவி இல்லாத ஒரு காலத்தில் அப்துல் ஜப்பாரின் குரல் வழி எத்தனையோ ஆட்டங்களை மனதிற்குள் காட்சிப்படுத்தி ரசித்திருக்கிறேன். வானொலி கேட்டு கேட்டு ஒரு கிரிக்கெட் போட்டியை மனதிற்குள் காட்சிப்படுத்துவது கூட ஒரு சுவராஸ்யமான விளையாட்டாக அப்போது இருந்தது. கற்பனையில் நாமாக ஒரு மைதானத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அங்கே நாமாகவே ஃபீல்டர்களை வர்ணனையாளர் சொல்கிற இடங்களில் நிறுத்திவைக்க வேண்டும். பின்னணியில் பார்வையாளர் இரைச்சலின் வழி அந்த கூட்டத்தையும் நிரப்பவேண்டும். பந்துவீச்சாளர் பந்துவீச வரும்போது நாமும் கூடவே ஓடி பேஸ்ட்ஸ்மேன் பந்தை அடிக்கும்போது அடித்து அது சிக்ஸருக்கு பறக்க பந்தோடு நாமும் பறந்ததெல்லாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடக்கூடியதா? சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது மட்டும்தான் தமிழ் கமென்ட்ரி மற்ற நேரங்களில் பல்லேபாஸிகளின் சௌக்கா, ச்சார் ரன் கேலியே என்று இந்திதான்!
அப்துல் ஜப்பாரோடு கூத்தபிரான்,ராமமூர்த்தி என இன்னும் சிலரும் வர்ணனையில் கலக்குவார்கள். கூத்தபிரான் இலக்கியசொற்பொழிவைப்போல பேச, ராமமூர்த்தி மெட்ராஸ்தமிழில் அசத்துவார் (ராமமூர்த்தியா அல்லது வேறு பெயரா நினைவில்லை).
இப்போதும் கூட எப்போதாவது சென்னையில் போட்டிகள் நடக்கும்போது தமிழ் கமென்ட்ரி கேட்பதுண்டு. ஆனால் கடைசியாக எப்போது கேட்டேன் என்று நினைவில்லை. ஆனால் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் ஹலோ எஃப்எம்மில் ‘’சொல்லி அடி’’ லைவ் கமென்ட்ரியோடு சேர்ந்த ஜாலி விளையாட்டு நிகழ்ச்சியை தவறவிடாமல் கேட்கும் பழக்கம் உருவாகியிருக்கிறது. போட்டியையும் ரசித்தபடி கூடவே பாட்டும் காமெடியும் ஜாலியுமாக செல்லும். சிசிஎல் போட்டிகளின் போது பாஸ்கி, படவா கோபி மாதிரியானவர்களின் கமென்ட்ரி கேட்க கொஞ்ச நேரம் ஜாலியாக இருந்தாலும் பெரும்பாலும் அது போர் அடிப்பதாகவும் நேரத்தை கடத்துவதற்காக எதையாவது உளறிக்கொண்டிருப்பதாகவுமே தோன்றும்.
கிரிக்கெட் வர்ணனையில் வானொலிக்கும் தொலைகாட்சிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. வானொலி வர்ணனையில் ஆட்டத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் விழிதிறனற்ற மனிதருக்கு சொல்வதைப்போல அச்சுபிசகாமல் சொல்லவேண்டியிருக்கும். குரலில் மிடுக்கும் மொழியில் அழகும் மிகவும் அவசியம். ஆனால் தொலைகாட்சி வர்ணனைக்கு அந்த அம்சங்கள் எதுவும் தேவையில்லை. அதற்குரிய தேவைகள் வேறு மாதிரியானவை.
நிறைய சுவராஸ்யமான தகவல்கள், கொஞ்சமாக நகைச்சுவை, ஆட்டத்தின் போக்கை உத்தேசித்து முடிவை கணிப்பது, ஆட்டத்தில் என்னவெல்லாம் செய்து போக்கை மாற்றலாம் என யோசனைகள் சொல்வது, தன்னுடைய பர்சனல் அனுபவத்திலிருந்து சில நினைவுகளை பகிர்ந்துகொள்வது. இவையெல்லாம் ஆட்டத்தை தொலைகாட்சியில் ரசிக்கிறவனுடைய ஆர்வத்தை தூண்டக்கூடியவை அவனும் வர்ணனையாளரோடு சேர்ந்துகொண்டு மனதிற்குள்ளோ அல்லது அருகிலிருப்பவரிடமோ அணிக்கு ஆலோசனை வழங்கவும் தன்னுடைய வீரதீர பரக்கிரமங்களை சொல்லவும் தொடங்குவான்! இதனால்தான் இன்று கிரிக்கெட் ஒளிபரப்புகிற எல்லா சேனல்களும் முன்னாள் வீரர்களையே பயன்படுத்துகின்றன. அவர்கள் ஆலோசனை சொல்லும்போதும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போதும் ஒரு நம்பகத்தன்மை உருகாறிது. இதனால்தான் கோடிக்கணக்கில் கொடுத்து கான்ட்ராக்ட் போட்டு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை முழுவீச்சில் உபயோகிக்கின்றன தொ.காட்சி நிறுவனங்கள். அந்த வகையில் கவாஸ்கர்தான் இந்திய கமென்ட்ரி அணிக்கு குருசாமி!
ஸ்டார் குழுமம் தமிழில் வர்ணனை என்று முடிவெடுத்ததும் கவாஸ்கர் டூ கங்கூலி ஸ்ட்ரேடஜியையே பயன்படுத்தி தமிழ்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களை பொறுக்கி போட்டு ஒரு வர்ணனை அணியை உருவாக்கி களமிறக்கியுள்ளதாக தோன்றுகிறது. ( சடகோபன் ரமேஷ், ஸ்ரீராம்,பதானி.. மற்றும் குழுவினர்) ஆனால் அப்படி பொறுக்கிப்போட்டவர்கள் அத்தனைபேரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் வர்ணனை என்று வாயை திறந்தாலே அவாள் இவாள் என்று பேசக்கூடியவர்களாகவும் இருந்தது ஆச்சர்யமான விஷயம். இந்த வர்ணனைகளில் நேர்த்தியில்லை. தகவல்கள் இல்லை. சுவாரஸ்யம் இல்லை. கிளிப்பிள்ளைபோல சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதாகவே தோன்றியது.
சடகோபன் ரமேஷ் ஒரு மேற்கிந்திய தீவுகள் அணி வீரரை ‘’இவனுக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல ’’ என்று கேவலமாக பேசிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ‘’இவா இப்படி போட்டுண்டிக்கச்சே அவா அப்படி அடிச்சுட்டா’’ என்பது போல ஸ்ரீராமோ நானியோ பேச, பதானி மனசாட்சியே இல்லாமல் ‘’இங்கே வாங்கோ நம்மள்க்கி நல்லா பேஸ்றான்’’ என்று அடகுகடை சேட்டு போல பேசிக்கொல்ல… இவர்கள் இம்சை தாங்கமுடியாமல் கேபிள் காரனுக்கு நூறு ரூபாய் அழுது அமவ்ன்ட் கட்டி ஸ்டார்ஸ்போர்ட்ஸில் இந்தி கமென்ட்ரியே கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
தமிழில் கிரிக்கெட் குறித்து மிக அருமையாக பேசக்கூடிய எத்தனையோ பேர் இருக்கிறார்கள். டெக்கான் க்ரானிக்கிளின் ஆர்.மோகன் கிரிக்கெட் பற்றி அழகுதமிழில் ஒவ்வொரு விநாடியும் ஒரு தகவலை சொல்லக்கூடியவர். நன்றாக பேசக்கூடியவர். அப்துல் ஜப்பார், கூத்தபிரான் மாதிரியான முன்னோடிகளை பயன்படுத்தியிருக்கலாம். வர்ணனையில் என்னமாதிரி விஷயங்கள் பேசப்படவிருக்கின்றன என்பதை இன்னும் சிறப்பாக திட்டமிட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் இயல்பாக கொட்டப்படும் பிராமண பாஷைகளும், பதானி குழப்பங்களும், இல்லாமல் நல்ல தமிழில் சிறந்த வர்ணனைகள் கிடைத்திருக்கும். எனவே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டம்ளர்ஸ்.