Pages

09 January 2015

புத்தகக் கண்காட்சியில் என்ன வாங்கலாம்?




புக்ஃபேர் தொடங்கிவிட்டது. ஆளாளுக்கு என்ன புக் வாங்கலாம் என்கிற குழப்பத்தில் இருப்பீர்கள். அப்படியெந்த குழப்பத்திலும் இல்லாமலும் இருக்கலாம். வாட் எவர்… புத்தக சீசனில் நமக்கு பிடித்த நாலு புத்தகங்கள் பற்றி பரிந்துரைகள் செய்ய வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.
சென்ற ஆண்டு வாசித்த நூல்களில் எனக்கு பிடித்த மற்றும் உங்களுக்கும் பிடிக்கலாம் என்று நான் நினைக்கிற புத்தகங்கள் இவை. இவற்றை வாங்கி படிக்காமல் வீட்டில் அழகுக்காகவும் ஷோக்கேஸில் வைத்துக்கொள்ள ஏற்றவை. அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டவை. குட்டி குட்டியாக நிறைய நூல் வாங்காமல் நச்சுனு நாலு புக்கு வாங்க நினைப்பவர்களுக்கும் ஏற்றவை. வீட்டில் வைத்தால் விருந்தினர்கள் இதை புரட்டிப் பார்த்து மிரண்டு போவார்கள். உங்களை அனேக அறிவுஜீவிகளில் ஒருவர் என்று நினைப்பார்கள். இவற்றின் விலையும் அதிகமில்லை. நல்ல வாசிப்பனுபவத்தையும் தரக்கூடியவை. இனி லிஸ்ட்.


எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறந்த சிறுகதைகள் – புதிதாக இலக்கிய சிறுகதைகள் வாசிக்க எழுத உத்தேசித்திருக்கிறவர்களுக்கு அற்புதமான பொக்கிஷம் இது. தமிழ் இலக்கியத்தில் கடந்த ஆண்டுகளின் பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட அருமையான கதைகளை சிறப்பாக தொகுத்திருக்கிறார் எஸ்ரா. நூலின் அளவும் பெரியது. பொறுமையாக வருடம் முழுக்க வைத்து வாசிக்கலாம். நான் போன ஜனவரியில் வாங்கி இந்த ஜனவரியில் முக்கால்வாசி முடித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது ஒரு கதை என்கிற அளவில். இந்த நூறுகதைகளும் ஏதோ ஒரு வகையில் நமக்குள் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எடை அதிகமாக இருப்பதால் தூக்கிவைத்து படிப்பது சிரமமாக இருக்கும் என்பது மட்டும்தான் பிரச்சனை. வெளியீடு – டிஸ்கவரி புக்பேலஸ் – விலை - 650



மேற்கத்திய ஓவியங்கள் – பி.ஏ.கிருஷ்ணன் – ஓவியங்களை வெறும் பொம்மைப்படமாக மட்டுமே பார்க்கிற, நவீன ஓவியங்களை என்ன இது கிறுக்கி வச்சிருக்காய்ங்க என்று புரிந்துகொள்ளுகிற நிலையில் இருக்கிற என்னைப்போன்ற ஒவிய தற்குறிகளுக்கு இந்நூல் ஓவியம் குறித்த விசாலமான பார்வயை தருகிறது. பல ஆயிரம் வருடத்திற்கு முந்தைய குகை ஓவியங்கள் தொடங்கி ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு காலகட்டங்களில் ஓவியக்கலை எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதை மிக அருமையான க்வாலிட்டியான ஹை ரெசெல்யூசன் படங்களுடன் நல்ல அச்சில் கொடுத்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். விலைதான் அதிகம். ஆனால் கொடுத்த காசுக்கு மேல் 200 ரூபாய் வொர்த்தான நூல் இது. (சைஸ் சின்னதாக இருப்பதால் ஓவியங்களின் டீடெயிலிங்கை பார்க்க பூதக்கண்ணாடி தேவைப்படுவது சிறுகுறை. அதையும் காலச்சுவடு பதிப்பகத்தார் நூலோடு இலவசமாக கொடுக்கலாம்) – காலச்சுவடு வெளியீடு – விலை 850.

 

கவிதையின் கால்த்தடங்கள் – கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன் சமகால தமிழ்க்கவிஞர்களின் 400 கவிதைகளை மொத்தமாக தொகுத்துப்போட்டிருக்கிறார். கவிதையே தெரியாமல் வாழ்கிறவர்கள், கவிதையை கண்டாலே ஓடுகிறவர்கள். கவிதைக்கும் எனக்கு சம்பந்தமே இல்லைங்க என்று நினைக்கிறவர்கள் இந்நூலை அவசியம் வாசித்து கவிதைக்குள் நுழையலாம். அதற்கு பிறகு இந்த 50 பேரில் உங்களை அதிகம் பாதித்தவருடைய கவிதைகளை தேடி வாசித்துக்கொள்ளலாம். அகநாழிகை பதிப்பக வெளியீடு – விலை 230



அந்நிய நிலத்தின் பெண் – அனேகமாக நான் ஒரே மூச்சில் வாசித்த கவிதை நூல் இதுதான். மனுஷ்யபுத்திரன் மீது அரசியல் நிலைப்பாடுகளுக்காக, பதிப்பாளராக நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கவிஞராக இன்றைய தேதியில் அவர்தான் சூப்பர் ஸ்டார். அவருடைய லேட்டஸ்ட் தொகுப்பான இந்த நூலில் மலைக்கும் அளவுக்கு மொத்தம் 270 கவிதைகள் இருக்கிறது. எல்லாமே மிகச்சிறந்த கவிதைகள். இதில் பல கவிதைகளையும் நான் அவர் எழுதிய நாட்களிலேயே கேட்டிருக்கிறேன். இதில் உள்ள அனேக கவிதைகள் காமத்தை பற்றியும் அது சார்ந்த மனவலி மற்றும் வேதனைகளின் உணர்வுகளை பேசுகிறது. கவிதைக்குள் புதிதாக நுழைகிறவர்கள் நிச்சயம் வாசிக்கலாம். – உயிர்மை பதிப்பக வெளியீடு – விலை 480.



இரண்டு நாவல்கள் – சென்ற ஆண்டு நான் அதிகமாக நாவல்களை படிக்கவில்லையென்றாலும் நண்பர்கள் பலருடைய பரிந்துரையின் பேரில் வாங்கிய நாவல் மிளிர்கல். இரா.முருகவேள் எழுதியது. இந்த ஆண்டு விகடன் விருதுகூட வாங்கியிருக்கிறது. மிகவும் அருமையான சுவாராஸ்யமான நாவல். நிச்சயம் வாங்கிப்படிக்கவேண்டிய ஒன்று. இன்னொரு நாவல் கானகன். லட்சுமி சரவணக்குமார் எழுதியது. காடும் காடுசார்ந்த வாழ்வுமாக அச்சு அசல் மனிதர்களின் வழி அருமையாக எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இது. வாசகர்களை துன்புறுத்தாத எழுத்து லட்சுமியுடையது. சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லாதது. நான் இந்த ஆண்டு விகடன் விருது பெரும் என்று எதிர்பார்த்த நாவலும் இதுதான்! நூலிழையில் மிளிர்கல் தட்டிசென்றிருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு நாவல்களுமே படிக்கிற வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை தரக்கூடியவை. மிளிர்கல் , பொன்னுலகம் வெளியீடு, விலை – ரூ.200. - கானகன் , மலைச்சொல் பதிப்பக வெளியீடு – விலை 200.



காகிதப்படகில் சாகசப்பயணம் – தன்னுடைய வாழ்க்கை பயணத்தின் வழி சுவையான சம்பவங்களின் மூலம் தமிழ் பத்திரிகை துறைகுறித்து ஒரு பரந்துபட்ட பார்வையை வழங்குகிறது இந்த நூல். இந்நூலை எழுதியிருக்கிற கருணாகரன் 25ஆண்டுகளாக தமிழின் பல்வேறு முன்னணி இதழ்களில் தான் பணியாற்றி அனுபவங்களையும் அங்கே தனக்கு கிடைத்த பாடங்களையும், அங்கே சந்தித்த பிரபலமான மனிதர்களையும் அவர்களுடைய குணங்களையும் பற்றி பேசுகிறார். (கடைசி பக்கங்களில் என்னைப்பற்றியும் எழுதியிருக்கிறார் என்பதில் எனக்கு பெருமைதான்!). பத்திரிகை துறை சார்ந்த இளைஞர்கள், அல்லது அதுகுறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் மட்டுமல்லாது எல்லாதரப்பினருக்கும் படிக்க சுவையான நூல் இது. கருணாகரன் இயல்பிலேயே ஒரு சிறுகதை ஆசிரியர் என்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையைப்போல எழுதப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு. குன்றம் பதிப்பகம் வெளியீடு, விலை - 150.


சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - எஸ்ராமகிருஷ்ணனின் சிறுவர் நூல் இது. புத்தகம் படிக்க விரும்பாத நந்து என்கிற சிறுவன் ஒரு நூலகத்தில் மாட்டிக்கொள்கிறான். அது ஒரு மாய நூலகம். அங்கே இருக்கிற பெனி எனும் சிறுவன் அந்த நூலகத்திற்கு கீழே இருக்கிற ரகசிய நூலகம் ஒன்றிற்கு அழைத்துச்செல்கிறான். அங்கே ஆடு மாடு முயல் என பல விலங்குகளும் எண்ணற்ற நூல்களை வாசிக்கின்றன. நந்து அங்கே பல நூல்களை பற்றியும் அறிந்துகொள்கிறான். மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்ட அருமையான சிறுவர்நாவல் இது. நம் வீட்டு குட்டீஸ்களுக்கு பரிசளிக்க ஏற்றது. அவர்களிடையே வாசிப்பை உருவாக்க உதவக்கூடிய நாவலும் கூட. உயிர்மை வெளியீடு - விலை -50ரூபாய் மட்டுமே.