Pages

08 January 2015

புள்ளிகள்,கோடுகள்,கோலங்கள்



அடியேன் உயிருக்கு உயிராக காதலிக்கிற மிகச்சில ஆண்களில் முதன்மையானவர் நடிகரும் எழுத்தாளருமான பாரதிமணி. 77வயதான என்னுடைய அன்புத்தம்பி. ரஜினியை முதல்வராக்க ஒட்டுமொத்த பிரபஞ்சமும் முயன்று கொண்டிருக்கிற காலத்தில் தன்னுடைய பாபா படத்தின் மூலமாக ரஜினியே பர்சனலாக முதல்வராக்கி அழகு பார்த்த வெள்ளைத்தலை நேர்மை தாத்தா!

பாரதிமணியோடு பேசிக்கொண்டிருந்தால் நாட்கணக்கில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கலாம். ஐம்பதாண்டுகால இந்திய தமிழ்நாட்டு வரலாறு அவரிடம் இருக்கிறது. நாம் பாடபுஸ்தகத்தில் படித்த பல தலைவர்களோடு கைகுலுக்கியவர். செம்மீன் திரைப்படம் தேசிய விருதுபெறக்காரணமானவர். பாய்ஸ் கம்பெனியில் இருந்தவர்! காவியத்தலைவன் படம் பார்க்கும்போது பாரதிமணி இப்படம் குறித்து என்ன சொல்வார், அவரை அழைத்துவந்து அருகில் உட்காரவைத்து இப்படத்தை பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். கநாசுவின் மருமகன்! குடிக்கலாச்சாரம் பற்றி பேச ஆரம்பித்தால் நாமும் கூட அவரோடு ஒரு பெக்காவது அடிக்கவேண்டும் என்கிற ஆசைவரும். அந்தக்கால கிசுகிசு சமாச்சாரங்களை அள்ளி வீசுவார். இலக்கியம், சினிமா, நாடகம் என எல்லா துறைகளிலும் கில்லாடி! கைகால் முளைத்த வரலாற்று நூல் என் ப்ரியப்பட்ட பாரதிமணி!

அவரிடம் அடிக்கடி நீங்க இப்படி பேசுற விஷயத்தெல்லாம் தொகுத்து புக்கா போடுங்க என்று மன்றாடுவேன். என்னைப்போலவே நிறையபேர் மன்றாடியிருக்கிறார்கள். எஸ்கேபி கருணாவெல்லாம் சட்டையை பிடித்து கழுத்தை நெறிக்காத குறை. ஆனால் ஆள் எதற்கும் அசராதவர். அவரையே எப்படியோ சமாளித்து புக்கு போட்டிருக்கிற பவாவுக்கு தனியாக பாராட்டுவிழா எடுக்க வேண்டும்.
ஒரு வழியாக வெளியாகியிருக்கிற அவருடைய ‘’புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’’ என்கிற நூல்வெளியீடு நேற்றுதான் புக்பாயிண்டில் நடைபெற்றது.

எப்போதும் போலவே லேட்டாகத்தான் சென்றேன். வாசலிலேயே பவா செல்லதுரை எல்லோரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார். நான் வணக்கம் சொன்னேன். அவரும் வணக்கம் என்றார். என்னிடம் சரியாகவே அவர் பேசவில்லை. எனக்கு மிகுந்த மனவருத்தமாகிவிட்டது. ச்சே நம்ம மேல இவருக்கு என்ன கோவம், ஒருவேள பிஸியாருந்திருப்பாரோ, பதட்டமாருக்காரு ஒரு புரோகிராம் ஆர்கனைஸ் பண்ணனும்னா கஷ்டம் இருக்கும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். எழுத்தாளர் ஸைலஜாதான் (எந்த ஸை…? ஷை? சை?) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவருடைய குரலும் மாறாத புன்னகையும் பேச்சும் அவ்வளவு சிறப்பாக இருந்தது. நேர்த்தியாக நிகழ்ச்சியை தொகுத்துப்பேசினார்.

இந்த (புக்ஃபேர்) சீசனின் மிகச்சிறந்த பேச்சினை எஸ்ரா இவ்விழாவில் பேசினார். அவர் தலைக்கு முன் நீண்டிருந்த மைக் ஒரு மகுடியாக மாறி ஒலிக்க…. அவர் பேச பேச அமர்ந்திருந்த ஒட்டுமொத்த கூட்டமும் தலையை ஆட்டி ஆட்டி… கேட்டுக்கொண்டிருந்ததை பார்க்க ஒரு மேஜிக் ஷோ பார்ப்பதுபோல் பிரமிப்பாக இருந்தது. கொஞ்சம் கூட தொய்வில்லாமல் 45நிமிடங்களுக்குமேல் நீண்ட பேச்சில் பாரதி மணி குறித்தும் அவருடைய இந்த நூல்குறித்தும் ஏகப்பட்ட விஷயங்களை தொட்டுச்சென்றார். குறிப்பாக கநாசு- அமிதாப் பச்சனை சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப்பற்றி பேசியது மிகவும் பிடித்திருந்தது. அது என்ன நிகழ்ச்சி அங்கே என்ன நடந்தது என்பதை பற்றியெல்லாம் புக்கில் இருக்கிறது. வாங்கி படித்து…

இதே நிகழ்வில் எடிட்டர் லெனின் அருமையான ஒரு பாடலை பாடினார். இந்த மனுஷன் எவ்வளவு நல்லா பாடுகிறார் என்று அங்கே வந்திருந்த பலருக்கும் நிச்சயம் வியப்பிருந்திருக்கும். அவருடைய குரலில் சந்திரபாபு சொர்க்கத்திலிருந்து அப்படியே இறங்கிவந்து அமர்ந்துகொண்டதைப்போல அப்படி ஒரு பரவசம். அவருடைய பேச்சைவிட ஒருநிமிடம் பாடிய அந்தப் பாடல் இன்னமும் காதில் கேட்பது போலிருக்கிறது. அடுத்த முறை அவரை எங்காவது தனியாக பிடித்து வைத்து நாள்முழுக்க பாடச்சொல்லி கேட்க நினைத்திருக்கிறேன்.

தன்னுடைய இரண்டாவது நூலை வெளியிட்டிருக்கும் இளம் எழுத்தாளர் பாரதிமணிக்கு வாழ்த்துகள். இந்நூலை வம்சிபதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை மதிப்பற்ற இந்த வரலாற்று பொக்கிஷத்துக்கு 550ரூபாய் விலை வைத்திருக்கிறார்கள். குறைவுதான். சுவாரஸ்யமாக படிக்க ஏதாவது பரிந்துரைங்க என்று சாட்டில் கேட்கிற நண்பர்களுக்கு இந்த நூலைதான் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறேன்.

வெளியீட்டு விழா முடிந்த பின் ஒரு நண்பர் என்னை அதிஷா என்று தூரத்திலிருந்து அழைத்தார். நான் திரும்பிப்பார்க்க எனக்கு கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்த பவாவும் அந்த குரலை கேட்டு தேட… பவா திடீரென்று என்னை திரும்பிப்பார்த்து ‘’அதிஷா நீங்களா.. என்னங்க அடையாளமே தெரியல'' என்றார். நான் ஒன்றும் புரியாமல் திருதிருவென விழிக்க... அவரே பிறகு ''மொட்டை அடிச்சிருந்தீங்களா அதான்!’’ என்றார். நான் ஷாக்காகிவிட்டேன்.