Pages
▼
19 August 2014
கருவாட்டு நாற்றம்
கோயம்பேடு காய்கனி சந்தையில் விதவிதமான கருவாடுகள் மிக அதிக அளவில் விற்கப்படுவதாகவும் இதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் அஷௌகர்யம் உண்டாவதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தின பத்திரிகை குமட்டிக்கொண்டே செய்தி வெளியிட்டது.
1996ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஷட்டப்படி காய்கறி சந்தையில் காய்கறி மட்டும்தான் விற்கப்படவேண்டும் என்கிற சட்டத்தை மீறி இப்படி ஷைவ உணவு ஷாப்பிடுபவர்களுக்கு ஷங்கடம் வரும்படி கருவாடு விற்பது முறையா என்று அந்த செய்தி நீண்டிருந்தது. இதையடுத்து நேற்று மாநகராட்சியினர் கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்து பல லட்சரூபாய்.. மன்னிக்கவும் ரூபாய் இருபதாயிரம் மதிப்புள்ள பல ஆயிரம் டன் கருவாடுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து ஷைவ உணவு ஷாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து வருங்காலத்தில் இங்கே கருவாடு விற்றால் கடை உரிமத்தையே ரத்து செய்துவிடுவோம் என்கிற மிரட்டலும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக கருவாடு விற்ற 18 கடைகளில் முதலாளிகளுக்கும் விடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த இருப்பத்தெட்டு ஆண்டுகளாக நானும் என்னுடைய குடும்பத்தினரும் கருவாட்டினை விரும்பி உண்டு வருகிறோம். எனக்கெல்லாம் கருவாடு என்பது என்னோடே வளர்ந்து ஒரு தம்பி மாதிரி. தினமும் என்னோடு இருந்திருக்கிறான். ஒரு சட்டி பழைய சோற்றை கூட ஒரு துண்டு கருவாடிருந்தால் உற்சாகமாக சாப்பிட்டுவிட முடியும். காலை ப்ரேக்ஃபாஸ்ட் அப்படித்தான் நமக்கெல்லாம் இருந்திருக்கிறது. கறிசோறுதராத ருசியை கருவாட்டுக்குழம்பு தந்துவிடும்.
கோவையில் உக்கடம் பகுதியில் கருவாடுக்கென்றே பிரத்யேகமான சந்தை உண்டு. அங்கு போனால் உலகின் எவ்வகை கருவாடும் சல்லிசு ரேட்டில் கிடைக்கும். அம்மாவுக்கு நங்கு கருவாடு, எனக்கு நெத்திலி, தங்கைக்கு துண்டுகருவாடு , வவ்வா, கொடுவா அவா இவா என கருவாடுகளில் நிறைய வெரைட்டி உண்டு.
சென்னைக்கு புலம்பெயர்ந்துவிட்ட பின் இந்த கருவாடு சந்தையை ரொம்பவே இழந்திருந்தோம். அண்ணாச்சி கடையில் கூட பாக்கெட் கருவாடு கிடைக்கும். தக்னியூண்டு துண்டு வெரி சுமால் கருவாடு இரண்டு பீஸ் ஐந்து ரூபாய் என்று அநியாய விலைக்கு விற்றார்கள். அதைவாங்கி குழம்பு வைக்கவும் முடியாது. சுட்டுதிங்கவும் முடியாது. நல்ல ஃப்ரஷ்ஷான நெத்திலி கருவாடு கிடைக்காது. நங்கு கருவாடு கிடைக்காது. அம்மாவுக்கு தினமும் சாப்பாட்டோடு ஒரு சின்ன துண்டு கருவாடு இல்லையென்றால் ஒருவாய் கூட உருப்படியாக இறங்காது. அம்மாவின் வருத்தம் அதிகமான ஒருநாளில் பக்கத்துவிட்டு ஆன்ட்டி ஒருவரது தகவலின்பேரில் கி.பி.2007 தொடங்கி கோயம்பேடு சந்தையில் கருவாடு வாங்கத்தொடங்கினோம். (வடசென்னையில் நிறைய கருவாட்டு சந்தைகள் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் முகப்பேரிலிருந்து அம்மாவை அழைத்துப்போய் போய்வருவதற்குள் தாவூ தாராந்துடும். வானகரம் மீன் சந்தையில் விற்கிற கருவாடுகளில் சுவை குறைவு விலை அதிகம். பேரம் பேசி மாளாது.)
கோயம்பேடு காய்கனி சந்தையில் இருக்கிற நூற்றுக்கணக்கான கடைகளில் வெறும் பத்து பதினைஞ்சு கடைகளில்தான் கருவாடு விற்கப்படும். மிக குறைந்த அளவிலேயே விற்கப்படும். அதுவும் மளிகை கடைகாரர்களுக்கு விற்க பாக்கெட்டில் அடைத்துவைத்த கருவாடுகளே கிடைக்கும். ஊரில் விற்பதுபோல நன்றாக குவித்து வைத்து பரப்பியெல்லாம் மணக்க மணக்க விற்கமாட்டார்கள். கருவாடுக்கென்று இருக்கிற கொஞ்ச நஞ்சமரியாதையையும் உறிஞ்சிவிட்டுத்தான் இங்கே விற்கிறார்கள். கருவாட்டின் மணம் பார்க்காமல் எப்படி வாங்கவது. இருந்தாலும் கோயம்பேடுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அங்குதான் மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வது நம்முடைய வழக்கம்.
இந்த கருவாட்டு கடைகளில் வாசனை சுத்தமாக இருக்காது. இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையுமே இருந்து நான் கண்டதில்லை. அதே பகுதியில் அழுகின காய்கனிகளின் நாற்றம்தான் குடலை கிழித்துக்கொண்டு குமட்டும்! அந்த உச்சபட்ச துர்நாற்றத்தை பொருத்துக்கொள்கிற ஒருவரால் உலகின் எந்த நாற்றத்தையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் என்னமோ இந்த நாலுபாக்கெட் கருவாட்டினால்தான் நாட்டுக்கு தீங்கு விளைந்துவிட்டது போல… அதைதான் இப்போது துப்பறிந்து கண்டறிந்து செய்தி வெளியிட்டு ஷூத்தப்படுத்தியிருக்கிறார்கள். கருவாட்டை விற்று விதிமுறைகளை மீறிவிட்டார்களாம்?
என்னிடம் இப்போது தொக்கி நிற்கிற முதற்கேள்வி ‘இனி நானும் என் தாயும் கருவாட்டுக்கு என்ன செய்வோம்? எங்க போவோம்...?’ என்பதுதான். நாளை முதல் மீண்டும் அந்த அண்ணாச்சி கருவாடு விற்றால் (அவரும் கோயம்பேட்டில் கொள்முதல் பண்றவர்தான்) வாங்கி ஒரு துண்டோ இரண்டுதுண்டோ வாங்கி நக்கிக்கொள்ள வேண்டியதுதான்.
ஒருவேளை இனி ஷூத்த பத்தமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி சாப்பிடப்போகிற ஷைவ பட்சிணிகள் ஒன்று சேர்ந்து முகப்பேர் பக்கம் என்னை போன்ற ஏழை கருவாட்டு ப்ரியர்களுக்காக ப்ரத்யேக சந்தை கட்டிக்கொடுப்பார்களா என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது.