Pages
▼
09 August 2014
சிவாஜிகணேசனின் முத்தங்கள்
நீங்கள் கவிதையை ரசிப்பவராக இருக்கலாம்? அல்லது உங்களுக்கு கவிதை என்கிற சொல்லை படித்ததும் வாமிட்டிங் சென்சேசனோடு தலைசுற்றலும் வரலாம்? கவிஞர்களை கொல்லும் வெறியோடு திரியலாம்?
நீங்க எப்படிப்பட்டவராக இருந்தாலும் உங்களால் கவிஞர் ‘’இசை’’யின் கவிதைகளை ரசிக்காமல் இருக்கவே முடியாது. அவரை பற்றி அவருடைய இந்த கவிதையே சொல்லிவிடும்.
***
நைஸ்
எதேச்சையாகப் பட்டுவிட்டது
உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன
இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா
முனிகள் பிறழ்ந்தனரா
இதற்காகத்தான் இப்படி
தேம்பித் தேம்பி அழுகிறார்களா
இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா
இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை
எதிர்க்கிறார்களா
செங்குருதியில் மடலிடுகிறார்களா
இதுமட்டும் போதுமென்றுதான்
கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான்
ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டைப்
போட்டு மூடுகிறார்களா
இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்துப் பிறன்மனைக்குள்
குதிக்கிறார்களா
இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா
கைவளை நெகிழ்கிறதா
இந்த நைஸிற்காகத்தான் “வைகறை வாளாகிறதா”
இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை
அன்பு செய்கிறார்களா
முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை
எழுதி வைக்கிறார்களா
இதற்காகத்தான் தூங்கும்போது தலையில் கல்லைத்
தூக்கிப் போடுகிறார்களா
இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா
அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக
தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு
பாவம், அதே நைஸ்தான் வேண்டுமோ.
****
உண்மைதானே? ஈஸியாக இருக்கிறதல்லா? படிக்க சுவாரஸ்யமாகவும் ஆழமாகவும் அதே சமயம் திருப்தியாகவும் இருக்கிறதுதானே? சமீபத்தில்தான் அவருடைய ‘’சிவாஜி கணேசனின் முத்தங்கள்’’ என்கிற தொகுப்பை வாசித்தேன். "சிவாஜிகணேசனின் முத்தங்கள்'' என்கிற தலைப்புதான் அதை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. முதலில் தேடி வாசித்ததும் அதைதான். உண்மையில் அது ஒரு அற்புதமான கவிதை. சிறுகதையாக கூட எழுதியிருக்கலாம். (நடிகர் சிவாஜிகணேசனுக்கும் அக்கவிதைக்கும் என்ன தொடர்பு என்பதை அச்சடித்தகாகிதத்தில் காண்க). ஆல்மோஸ்ட் ஐம்பது கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எல்லா கவிதைகளுமே தனித்துவமானவை. அவருடைய மற்ற தொகுப்புகளையும் தேடி வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுபவை.
இசையின் கவிதைகள் எந்த அலங்காரமும் இல்லாமல் நிர்வாணமாக நிற்கிற அம்மணகுண்டி குட்டிப்பாப்பாவின் க்யூட்தனத்தோடு இருக்கின்றன. எழுதபடிக்க தெரிந்த எவருக்கும் பிடிக்கும் படியான கவிதைகளை எழுதுகிறார். மிகமுக்கியமாக அதை படித்ததும் புரிந்துவிடுகிறது. மறுபடியும் படிக்கும்போது வேறு மாதிரி புரிகிறது. ஒவ்வொரு முறையும் சேட்டன் கடை ‘அதே’ டீ விதவிதமான ருசியைத்தருவது போல.
எளிமையும் சுயஎள்ளலும் பகடியும் வாழ்க்கையை எப்போதும் ஒரு எகத்தாளத்தோடு அணுகுகிற எளிய கவிதைகள் இசையுனுடையவை. ஒருவேளை எம்ஆர் ராதா கவிதை எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பாரோ என்னவோ? இந்த கவிதை அவருடைய அந்த குணத்திற்கு நல்ல எவிடென்சாக இருக்கும்.
ஒரு ப்ரவுன் கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா?
“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில்
அவரது தொந்தி நிலத்தில் தேய்ந்து மோசமாக
மூச்சு முட்டியது
ஏழாவது முறையாக
குளியலறைக்குச் சென்று சல்லடை போட்டார்
தன் சக எழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில்
“பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு
அவரது பையையும் பரிசோதித்துவிட்டார்
ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு
காற்று இந்த மூன்றாவது மாடியிலிருந்து
அதைக் கீழே தள்ளி விட்டிருக்கலாம்
கண்களைப் பிடுங்கிக் கீழே
வீசிப் பொறுமையாகத் துழாவினார்
பிறகு கண்களை நம்பாமல்
அவரே இறங்கிப் போனார்
அவர் ஒன்றும் தரித்திரக் கலைஞர் அல்ல
அவரிடம் இப்போதுகூட சுளையாக
500 ரூபாய் இருக்கிறது
ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும்
இடதுபுற எலாஸ்டிக் பட்டையில்
அது போலவே நூல்பிரித்து விட உறுதியாக
அவருக்குத் தெரியாது
நாம் அசட்டை செய்வது போலவோ
கிண்டலடிப்பது போலவோ
அது ஒன்றும் சாதாரண ஜட்டி இல்லை
அவரது இல்லத்து அரசி
அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு
பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி
அனுப்பியிருக்கிறார்.
****
இப்போது புரிந்திருக்குமே இசையின் கவிதைகளில் இருக்கிற சேட்டைத்தனம். வாழ்க்கையின் அத்தனை புனிதமான விஷயங்களை நையாண்டியோடும் நக்கலோடும் அணுகுகிறது இவருடைய கவிதைகள். மிகச்சாதாரண விஷயங்களை எடுத்துக்கொண்டு அதை மிகப்பெரிய விஷயங்களோடு எள்ளலோடு முடிச்சுப்போடுகிற வித்தை இசைக்கு எளிதாக வாய்த்திருக்கிறது. ஆனால் வெறும் நக்கலும் நையாண்டியும் மட்டுமேயில்லை ஆழமான சினேகமும் நினைவுகளின் தீராத வலியும் ரசனையும் கூட நிறைந்திருக்கிறது இசையின் கவிதைகளில். ஒரு சில கவிதைகள் ஒரு முழுநாவலையும் சிறுகதைகளையும் கேப்சூயுலாக்கி வைத்திருப்பவை.
அவருடைய சிவாஜிகணேசனின் முத்தங்கள் தொகுப்பில் எனக்கு ‘’விகடகவி மட்டையை உயர்த்துகிறார்’’ , ‘’குத்துப்பாட்டின் அனுபூதி நிலை’’ "அறவுவுணர்ச்சி எனும் ஞாயிற்றுக்கிழமை ஆடு'' ஆகிய மூன்றும் மிகவும் பிடித்த கவிதைகளாக இருந்தன. ''விகடகவி மட்டை… கவிதை அவற்றில் டாப் அன் அல்டிமேட். அதுபோலொரு கவிதையை இதற்குமுன் நீங்கள் எங்குமே படித்திருக்க முடியாது. இந்த ப்ளாக் ஹ்யூமர் எனப்படுகிற அவலநகைச்சுவையில் அடங்குகிற கவிதையாக இதை பார்க்கிறேன். இக்கவிதைகள் டைப் செய்ய அதிக நேரமடுக்கும் என்பதால் அதை நீங்களே நூலை காசு கொடுத்து வாங்கி (70ரூப்பீஸ்தான்) படித்து… இன்புற்று.. (காலச்சுவடு பதிப்பகம்).
இருந்தாலும் இசையின் இந்தக்கவிதையை பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.
மகா ரப்பர்
பிழையாக எழுதப்பட்ட
ஒரு வரியை
அழித்துக்கொண்டிருக்கிறான் சிறுவன்.
அதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்தவன்
தம்பி, இதுபோல
14.3.2001ஐ அழிக்கமுடியுமா
என்று கேட்டான்.
இது இங்க் ரப்பர்னா
எல்லாத்தையும் அழிக்கும்
என்றான் சிறுவன்
***
கவிஞர் இசை குறித்த விக்கிபீடியா பக்கம் இப்படி சொல்கிறது….
இசை (பி. 1977): தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஆ. சத்தியமூர்த்தி. கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் வசித்து வருகிறார். அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றுகின்றார். 2000க்குப் பிறகு கவிதைகள் எழுதித் தொடங்கியவர். சமீபகாலத்தில் மிகவும் கவனம் பெற்ற கவிதைகளை எழுதியுள்ளார். தீம்தரிகிட, கருக்கல், உயிர்மை, காலச்சுவடு, தீராநதி உள்ளிட்ட இலக்கிய இதழ்கள் பலவற்றில் இவர் கவிதைகள் வெளியாகி உள்ளன. இவரது நூல்கள்:
கவிதைத் தொகுதிகள்
1. காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி 2002
2. உறுமீன்களற்ற நதி 2008
3. சிவாஜி கணேசனின் முத்தங்கள் 2012
***
எனக்கு கவிஞர் இசையை முன்னபின்ன பரிச்சயமில்லை. ஃபேஸ்புக்கில் நிறைய லைக் போட்டதாலேயே அவரை நண்பர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. ஒருவேளை அவர் சென்னைவாசியாக இருந்திருந்தால் ஒன்றிரண்டு நூல்வெளியீட்டுக்கூட்டங்களிலாவது சந்தித்திருக்கலாம் ‘’உங்க கவிதைனா உயிர்ஜி’’ என உதார்விட்டிருக்கலாம்.
ஆனால் அவருடைய கவிதை தொகுப்பை வாசித்து முடித்த பின் அவரோடு பலநாட்கள் பழகிய ஒரு உள்ளுணர்வு. ஒரு நல்ல மழைபேய்ந்து ஓய்ந்த மாலையில் நாலு டீயும் இரண்டு மிளகாய் பஜ்ஜியும் தின்றுகொண்டே மனதிற்கினிய நண்பனோடு சிரிக்க சிரிக்க உரையாடி முடித்த திருப்தி. எப்போதாவது இசையை நேரில் சந்திக்க வேண்டும்.