Pages
▼
25 July 2014
ஜெயகாந்தன் 80
கூட்டத்தின் சராசரி வயது நிச்சயம் 50லிருந்து 60ற்குள்தான். கணிசமான பாட்டிகள். எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு ரொமான்ஸ். பாட்டிகளின் வெட்கத்திற்கு ஈடு இணையே கிடையாது. அரிதாக பூக்கிற பூக்களுக்குதானே மதிப்பு அதிகம்(சுமாராக இருந்தாலும்).
ஒரு வயதான அம்மா தன் இளம் மகனோடு வந்திருந்தார். நிகழ்ச்சி தொடங்க திரை விலகியது. ஜெயகாந்தன் மேடையின் நடுவில் அமர்ந்திருந்தார். அந்த அம்மா அவரை கண்டதும் அப்படியே குபூக் என கண்கள் கலங்கி அழுதுவிட்டார். தன் மகனிடம்.. ‘’இவ்ளோ வயசாகியும் இன்னும் அப்படியே கம்பீரமா இருக்கார்ல’’ என்று கிசுகிசுத்துக்கொண்டே சேலை தலைப்பால் கண்களை துடைத்துக்கொள்ள அந்த பையனுக்கு என்ன புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. மர்மமாக புன்னகைத்தான். தாயின் காதலை முதன்முதலாக அறிகிற ஒரு மகனின் புன்னகையாக நான் அதைப்புரிந்துகொண்டேன். அம்மாவின் காதல்கள் எல்லாமே மகன்களுக்கு மிகவும் பிடித்தமானவைதான்.
ம்யூசிக் அகாடமியின் கொள்ளளவு எவ்வளவு? அரங்கு நிறைந்து பலரும் நின்றுகொண்டு கிழே அமர்ந்துகொண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். ஒரு எழுத்தாளனுக்காக இவ்வளவு பெரிய கூட்டம் கூடுமா என்பது ஆச்சர்யம்தான். அதுவும் எழுதுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்ட எழுத்தாளனுக்காக! தள்ளாத வயதிலும் வந்து கூடியிருந்த அந்த பெரியவர்களை பார்க்கும்போதுதான் புரிந்தது ஜெயகாந்தன் எழுத்துகளின் ஈர்ப்பினை. எதோ இருந்திருக்கிறது.
நிகழ்ச்சியில் தரப்பட்ட ஒரு நோட்டீஸின் வழி இன்னமும் விழுப்புரம் வேலூரில் ஜேகே வாசகர் வட்டம் ஒன்று சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. வாசலில் ‘’எங்களுக்கு உலகத்தை உன்னிப்பாக கவனிக்க காட்டிய ‘பூதக்கண்ணாடியே’ என்பது மாதிரி ஒரு மிகப்பெரிய பேனர் கூட வைத்திருந்தனர்.
விகடனில் அந்தக்காலத்தில் ஜெயகாந்தனின் ஒருகதைக்கு ‘500ரூபாய்’ சன்மானம் கொடுப்பார்களாம். அந்த காலகட்டத்தில் அப்பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த மூத்த பணியாளருக்கே மாத சம்பளம் 800ரூபாய்தானாம்!
இன்று அதே பணியாளர் வாங்குகிற சம்பளம் குறைந்தது 50ஆயிரம் தொடங்கி 80ஆயிரம் இருக்கலாம். ஆனால் கதை எழுதுபவர்களுக்கு கொடுக்கப்படும் சன்மானம் வெறும் இரண்டாயிரம்தான்! ஜெயகாந்தனின் 500ரூபாய் என்பது வெறும் பணம் மட்டுமே அல்ல.. அன்றைக்கு அவருக்கிருந்த பாப்புலாரிட்டிக்கு கிடைத்த மரியாதை.
ஜெயகாந்தனின் எழுத்துகளை கரைத்துகுடித்தவன் என்றெல்லாம் என்னை சொல்லிக்கொள்ள முடியாது. ஆனால் அவருடைய சில முக்கியமான சிறுகதைகள் படித்திருக்கிறேன், படித்தே ஆகவேண்டும் என நண்பர்கள் பரிந்துரைத்த ஒருசில நல்ல நாவல்கள் வாசித்திருக்கிறேன். அவர் எழுதியதில் எனக்கு ரொம்ப பிடித்தது சினிமாவுக்கு போன சித்தாளுதான்! நமக்கும் ஜெயகாந்தனுக்குமான ஒட்டுமொத்த பழக்கவழக்கமும் அவ்வளவுதான்.
அவருடைய கதைகளை விடவும் அவரைப்பற்றிய கதைகள் பலவும் சுவாரஸ்யமானவை. அரசியல்வாதிகளோடு, சினிமா நட்சத்திரங்களோடு, அவருடைய க்ளோஸ் என்கவுன்டர்கள் எல்லாமே சுவையானவை. பலவும் எழுத முடியாதவை.
எந்த ஒரு எழுத்தாளனும் வாழ விரும்புகிற அசாத்தியமான தில்லான த்ரில்லான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் ஜேகே என்பது மட்டும் உறுதி. எழுத்தாளனாக வாழ்ந்தால் அப்படி வாழணும் என்றுதான் தோன்றியது. அதை உணர்த்துவதாக இருந்தது மியூசிக் அகாதமியில் கூடியிருந்த கூட்டம். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு நேற்றுதான் கிடைத்தது. இடம் ம்யூசிக் அகாதமி. நிகழ்வு அவருடைய 80வது பிறந்தநாள் விழா. இன்னமும் அதே மிடுக்குடன் கம்பீரமாகத்தான் இருக்கிறார். கொஞ்சம் பழைய மாடலில்!
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அவரைப்பற்றிய ஒரு டாகுமென்ட்ரி ஒளிபரப்பப்பட்டது. இதை டாகுமென்ட்ரி என்று சொன்னால் ஒரு டாகும் நம்பாது. ஜெகேவின் பேட்டி என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். படம் முழுக்க அவரேதான் பேசிக்கொண்டிருக்கிறார். விடாமல் பேசுகிறார். நடுவில் ஒரு குரல் ஜேகேவின் விக்கிபீடியா பக்கத்தில் இருக்கிற சங்கதிகளை வாசிக்க அவ்வளவுதான் முடிந்தது. வைக்கம் முகம்மது பஷீர் பற்றிய டாகுமென்ட்ரி நினைவுக்கு வந்தது. ம்ம் இதுமாதிரி விஷயங்களில் என்ன இருந்தாலும் மல்லுபாய்ஸ்தான் பெஸ்ட். (இந்த ஜேகே பற்றிய படத்தை இயக்கியவர் சா.கந்தசாமி என்று நினைக்கிறேன்.)
விழா தொடங்கியதிலிருந்தே ஒரே மாதிரி சிரித்த முகமாக அமர்ந்திருந்தார் ஜேகே. அவரைப்பற்றி சொல்ல ஒன்றுமே இல்லை. நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து என்று அறிவித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர். அனைவரும் எழுந்து நின்றனர். ‘’வாழ்த்துதுமே.. வாழ்த்துதுமே.. ‘’ என்றுதான் ஆடியோ குரல் தொடங்கியது. யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலும் எல்லோருமாக கோராஸாக.. வாழ்த்துதுமே வாழ்த்துதுமே என்று சம்ப்ரதாயத்திற்கு முணுமுணுத்துவிட்டு அமர்ந்தனர். அனைவரும் அமர்ந்ததும் மீண்டும் ‘’நீராடு கடலுடுத்த.. ‘’ என்று தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்க எல்லோரும் பதறிப்போய் எழுந்து நின்று மீண்டும் தொடங்கினர். தன் வயது காரணமாக அமர்ந்தேயிருந்த ஜேகே சன்னமாக நக்கல் புன்னகை ஒன்றை விட்டார்.
நிகழ்வின் இறுதியில் பேசிய ஜேகே.. மிகச்சரியாக ஒருநிமிடம்தான் பேசினார் ‘’இங்கே என்னை அழைத்த போது எல்லோரும் நன்றி வணக்கம்தான் சொல்லுவார்கள் என்று அழைத்தனர்.. ஆனால் இங்கே எல்லோரும் நிறைய பேசினார்கள்.. அதனால் நான் நன்றி வணக்கம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்’’ என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டார்.
நடிகை லட்சுமி பேசும்போது சிலநேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் தன்னுடைய பங்களிப்பை பற்றி சுவையாக பேசினார். படத்தின் இயக்குனர் பீம்சிங்கிற்கு வேறொரு நடிகையை படத்தில் நடிக்க வைக்கவே ஆசை. ஆனால் ஜேகேவோ ‘’லட்சுமிதான் வேண்டும் என அடம்பிடிக்கிறார். ‘’அவதான்யா பாக்க ஒல்லியா வெகுளியா பஸ்ஸ்டான்ட்ல நிக்கும்போது கடத்திகிட்டு போயி கற்பழிக்க ஏத்த பொண்ணு மாதிரி இருப்பா.. அவளையே போடுங்க’’ என்று அழுத்தி சொல்லியிருக்கிறார். ஆனால் பீம்சிங் அந்த குறிப்பிட நடிகையை வலியுறுத்த.. ‘’அவ பஸ் ஸ்டான்ட்ல நின்னா கடத்திட்டு போய்தான் கற்பழிக்கணும்னுலாம் தோணாதுப்பா..’’ என்றாராம்! நடிகையின் பெயர் குறிப்பிடவில்லை.
***
இந்நிகழ்ச்சியில் ஜெயகாந்தன் கதைகள் என்கிற ஒரு நூலும் வெளியிடப்பட்டது. விகடனில் வெளியான இருபது கதைகள் அதுவெளிவந்த காலகட்டத்தின் அதே ஓவியங்களோடும் கதைக்கு நடுவே வந்த துணுக்குகளோடும் வெளியிடப்பட்டிருக்கிறது. நானும் ஒன்றுவாங்கிக்கொண்டேன்.
எந்த கதையிலும் எந்த பக்கத்திலும் வருடம் போடவில்லை என்கிற குறைதவிர்த்து நல்ல அருமையான தொகுப்பு. அதிலும் கோபுலுவின் கார்ட்டூன்களும் மாயாவின் ஓவியங்களுமாக பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம். விலைதான் அதிகம் 350. ஜேகேவாச்சே சும்மாவா!