Pages
▼
17 June 2014
சினிமாவுக்கான லக்கி டிக்கட்
சென்றவாரம் முண்டாசுப்பட்டி படம் பார்க்க சென்றிருந்தேன். அதே திரையரங்கில் ‘’திருடு போகாத மனசு’’ என்கிற படமும் ஒரு ஷோ ஓடிக்கொண்டிருந்தது. படத்தின் தயாரிப்பாளரான செல்ல.தங்கையாவே நடித்து, இயக்கி, பாட்டெழுதி, இசையமைத்து, எடிட்டிங் பண்ணி…. மிகுந்த பொருட் செலவில் சொந்தகாசில் படமெடுத்து ஒருஷோ ரிலீஸ் பண்ணி.. படத்தில் முழுக்க நாட்டுபுற கலைஞர்களே நடித்திருக்கிறார்கள் என விளம்பரமும் செய்திருந்தனர்.
படத்தின் அறிமுக ஹீரோவான செந்தில்கணேஷ் படத்தின் எல்லா பாடல்களையும் தன் சொந்தக்குரலில் பாடி அசத்தியுள்ளாராம்! ஆனால் போஸ்டரில் ஹீரோயின் படம் மிஸ்ஸிங். நான் போன நேரத்திற்கு ஷோவும் இல்லை. அதனால் படம் பார்க்கும் வாய்ப்பை இழந்தேன்.
‘’திருடுபோகாத மனசு’’ படத்தில் ஒரு புதுமையை புகுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர். தியேட்டரில் அந்தபடத்தை பார்க்கவரும் ரசிகர்களுக்கு டிக்கட்டோடு ஸ்பெஷல் டோக்கன் ஒன்றும் வழங்கப்படுகிறது. உங்களுக்கு நடிப்பார்வம் இருந்தால் இயக்குனர் செல்ல.தங்கையாவின் அடுத்த படமான ‘’கடலை சேராத நதி’’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்! அதற்கான லக்கி டிக்கட்தான் இந்த டோக்கன். அதை கொண்டுபோய் அவர்களுடைய அலுவலகத்தில் காட்டி ஆடிசனில் கலந்துகொண்டால்…
நான் இந்த போஸ்டரை பராக்கு பார்த்துக்கொண்டிருந்த க்ஷணத்தில் எனக்கு பின்னால் நான்கு பையன்கள் அதே போஸ்டரை பார்த்துக்கொண்டிருந்தனர், அதில் ஒருவன் இன்னொருவனிடம்.. ‘’ நீ ரொம்பநாளா நடிக்கோணும்னு சொல்லிகிட்டிருந்தியல்ல.. இந்த படத்துல ட்ரை பண்ணலாம்லோ’’ என்று பேசிக்கொண்டிந்தனர்.
பையன்கள் பேச்சில் கோவை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ஊரிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதும் தெரிந்தது. ஹோட்டலில் வேலைபார்க்கிற பையன்கள் போல இருந்தனர். எனக்கோ அந்த நடிப்பார்வமிக்க பையனின் பதிலுக்காக காதுகொடுத்து காத்திருந்தேன். அவனோ ரொம்ப நேரம் யோசித்துவிட்டு ‘’இல்ல மச்சான் இதுமாதிரி படத்துல நடிச்சா துண்டு கேரக்டர் குடுத்ருவானுங்க.. நாம டைரக்டா தேடுவோம், ஹீரோவா ட்ரைபண்ணுவோம்டா.. இவனுங்க கிட்னி திருடற கும்பல்மாதிரி இருக்கானுங்க’’ என்று சொல்லிவிட்டு மஞ்சப்பை பார்க்க கிளம்பிவிட்டனர்! நான் முண்டாசுபட்டிக்குள் புகுந்தேன்.
அடுத்த நாட்களில் ''திருடுபோகாத மனசு'' வைப் பார்க்க நினைத்திருந்தேன் அதற்குள் தூக்கிவிட்டார்கள்.
இதுமாதிரி படங்கள் உதயம், கிருஷ்ணவேணி, அண்ணா, சின்ன சாந்தி தியேட்டர்களில் ஒரு ஷோதான் திரையிடப்பட்டு தூக்கப்படும். அதனால் இதையெல்லாம் தவறவிடாமல் பார்ப்பதை பல ஆண்டுகளாக ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். இவை பிட்டுப்படங்கள் அல்ல. அது தனிடிபார்ட்மென்ட். இவை மிகக்குறைந்த பட்ஜெட்டில் தன்னுடைய குடும்பத்தினர் பார்ப்பதற்காக நண்பர்களுக்காக எடுக்கப்படும் ஒருவார ஒருஷோ உள்ளூர் மேக்கிங் பிகிரேடு படங்கள்! இவற்றின் போஸ்டர்களை தினமும் தினத்தந்தியில் யாரும் பார்க்கலாம். சிரிப்புக்கு அளவிலா கேரண்டி கொடுக்கிற படங்கள் இவை.
இப்படித்தான் பவர்ஸ்டார் நடித்த லத்திகாவைகூட முதல்நாள் முதல்ஷோ பார்த்தது. அப்போது தமிழ்நாட்டில் யாருக்குமே பவர்ஸ்டாரை தெரியாது! இவ்வகை படங்களை பார்க்க மிக அதிக சகிப்புத்தன்மையும் பொறுமையும் உள்ளுக்குள் ஒரு விநோத சைக்கோத்தனமும் ரொம்பவே அவசியம். அது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாய்க்காது. அதனாலேயே இப்படங்களை பார்க்க துணைக்கு ஆட்கள் சிக்கமாட்டார்கள். அதிர்ஷ்டவசமாக நண்பர் ஒருவர் சென்றமாதம் சிக்கினார்.
அவரோடு சாந்திதியேட்டரில் ‘’என் நெஞ்சைத்தொட்டாயே‘’ என்கிற மொக்கைப்படத்தை பார்க்க முடிந்தது. படத்தின் இயக்குனர் கே.ஏ.அன்புசெல்வன் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஹீரோ கிடையாது, அவர் ஹீரோவுக்கு அப்பா. அதாவது ஹீரோயினுக்கு மாமனார். படம் முழுக்க ஹீரோ டம்மியாகத்தான் வருகிறார். அவருக்கு ஹீரோயினை கட்டிப்பிடிப்பதை தவிர்த்து வேறு வேலைகள் இல்லை.
ஹீரோவின் அப்பாதான் ஹீரோயினோடு பாடுகிறார் ஆடுகிறார், வில்லன்களை வீழ்த்தி சண்டைபோடுகிறார். எமோஷனாகி பர்பார்மென்ஸ் பண்ணுகிறார்! காசுபோட்டு படமெடுத்தவருக்கு அதுக்கு கூட உரிமை இல்லையா? வரதட்சணை வாங்குவதால் ஏற்பாடும் பாதிப்புகளை பற்றி இப்படம் பேசுகிறது.
இப்படியாக நாங்கள் படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். இன்டர்வெல்லில் நண்பர் கோன்ஐஸ் தின்றுகொண்டே விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். அதிலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நிறைந்திருந்த இயக்குனரின் நடிப்பாற்றலை சொல்லி சொல்லி சிரித்தார்.
‘’பாஸ் சத்தமா சிரிக்காதீங்க.. படத்தோட படைப்பாளிகள் பொதுவா இந்த தியேட்டருக்குதான் வருவாங்க, படம் இன்னைக்குதான் ரிலீஸ்’’ என்று கட்டுபடுத்தினேன். என்னதான் எடுத்திருப்பது மொக்கைப்படமாக இருந்தாலும் காக்கைக்கும் தன் சுஞ்சு…பொன்சுஞ்சுதானே.. அதனால் அவரை எவ்வளவோ முயற்சி செய்து கட்டுபடுத்த முயன்றேன். ஆனால் நண்பரோ ஹய்யோ ஹய்யோ என படத்தில் வந்த ஒரு கொடூர காட்சியை நினைத்து நினைத்து சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டேயிருந்தார்.
அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை… ‘’அய்யோ அந்த வெள்ளை சட்டை டைரக்டர்.. பண்ணாருபாருங்க ஆக்சன்..’’ என சிரித்துக்கொண்டே வந்து சீட்டில் அமர்ந்தார். அட கம்முனு இருங்க ப்ரோ அவருக்கு தெரிஞ்சவங்க இருந்தா அடிச்சிருவாங்க என்று அவரை அடக்கினேன். திடீரென்று எங்களுக்கும் முன்னால் அமர்ந்திருந்த ஒரு உருவம் எழுந்தது. எனக்கு பயமாகிவிட்டது.. அந்த உருவம் அவசரமாக வெளியே கிளம்பியது. வாசல் கதவை திறக்க அந்த ஒளியில்தான் தெரிந்தது. அமானுஷ்யம்தான். நம்ப முடியாததுதான். ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும். அது அந்த வெள்ளைசட்டை இயக்குனர்தான்.
எங்களுக்கு மனசே இல்லை. ச்சே என்னடா இது இப்படி ஆகிபோச்சே என நினைத்துக்கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் அவசரமாக திரும்பிவந்து தன் சீட்டில் சத்தமில்லாமல் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். தியேட்டரில் எங்களையும் அவரையும் சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம். நான்காவது ஆள் தூங்கிக்கொண்டிருந்தார்.
***
திருடு போகாத மனசு படத்தின் அந்த போஸ்டர்