Pages

08 May 2014

லேன்ட்மார்க்





சென்னை நுங்கம்பாக்கம் லேன்ட்மார்க் புத்தக கடை மூடப்படவுள்ளது. அனேகமாக இந்த மாத கடைசியில் மொத்தமாக மூடிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.ஏன் எதற்கு என்று விசாரிக்கவில்லை. விசாரிக்கவும் பிடிக்கவில்லை.

விற்காத புத்தகங்களையும், பதிப்பாளருக்கு திருப்பி அனுப்ப முடியாத பழைய ஸ்டாக்குகளையும் 70சதவீத கழிவில் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி நேற்று அந்தப்பக்கமாக தலைகாட்டினேன். நாம் கொண்டாடிய ஒரு இடத்தை மூடுகிறார்களே என்று வருந்துவதா நிறைய நல்ல நூல்களெல்லாம் 70சதவீத டிஸ்கவுன்டில் கிடைக்கிறதே என்று மகிழ்வதா என்று குழப்பமான மனநிலையில்தான் கடைக்குள் நுழைந்தேன்.

அவ்வளவு பெரிய கடையை அப்படியே உள்ளங்கையில் சுருட்டி உருட்டி பில்லுபோடுகிற அந்த நீண்ட ஸ்டேன்டுகள் கொண்ட அறைக்குள் அடக்கி வைத்திருந்தனர். இரண்டு வாரங்களாகவே இந்த கழிவு விற்பனை நடப்பதால் சொல்லிக்கொள்ளும்படி நல்லபொருட்கள் எதுவும் தட்டுப்படவில்லை. நூல்களும் ஒன்றுகூட தேறல. நிறைய டிவிடி கலெக்சன்ஸ் இருந்தது. அதிலும் நல்லதையெல்லாம் முன்பே பலரும் அள்ளி சென்றுவிட்டதை உணரவைக்கிற வகையிலேதான் இருந்தது. உபயோகித்து தேய்ந்த பழைய மாடல் மொபைல் போன் மாதிரி அழுக்கேறி தேய்ந்து போய் கிடக்கிறது கடை.

ஒருநாளும் லேன்ட் மார்க் கடைக்குள் நுழைந்து இப்படி உணர்ந்ததேயில்லை. பல ஆண்டுகள் பார்க்காத ஒரு பால்யகால சினேகிதன், தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து உருக்குலைந்து போய் இருக்கிற போது அவனை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வு. எத்தனை நாட்கள் அக்கடையின் குட்டி பெஞ்சுகளில் நாட்கள் கடந்திருக்கிறது. எத்தனை நாட்கள் டிவிடிகளை தேடி தேடி விரல்கள் தேய்ந்திருக்கிறது. அழகழகான எத்தனையோ பெண்களை சைட் அடித்த நினைவுகளெல்லாம் வந்து போயின. அக்கடையின் ஒவ்வொரு அலமாரியும் எனக்கு பரிச்சயமானது.

மார்க்கெட்டிங் வேலையில் பகலில் அலுவலகத்திற்கு போக முடியாது, போனால் திட்டுவிழும். வாடிக்கையாளர்களையே எப்போதும் பார்த்துக்கொண்டேயும் இருக்க முடியாது. அந்த நேரங்களையெல்லாம் லேன்ட்மார்க்கின் அலமாரிகளிடையேயான சந்துகளில் பல நாட்கள் தலைமறைவு வாழ்க்கையில் கழித்திருக்கிறேன். நாள்முழுக்க ஒரே ஒரு முழு நூலையும் குட்டிபெஞ்சில் உட்கார்ந்து படித்துக்கொண்டேயிருக்கலாம் யாருமே ஒருவார்த்தை கூட யார் என்ன என்று கேட்க மாட்டார்கள். தண்ணீர் இலவசமாக கிடைக்கும், டீ கொடுக்கமாட்டார்கள். நாமேதான் வெளியே போய் பெட்ரோல் பங்க் முக்கில் இருக்கிற கடையில் ஒரு டீயும் தம்மும் அடித்துவிட்டு வந்து மீண்டுமே கூட படிக்க ஆரம்பிக்கலாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் சைட் அடிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக லேன்ட்மார்க்தான் இருந்தது. புத்தகங்களை புரட்டுகிற மாதிரி நோட்டம் விட்டால் சுற்றிலும் ''ஏ சென்டர் இளைஞிகளை'' கண்டும் ரூட்டு கொடுக்கவும் ஏற்ற இடமும் அதுதான். இதுமாதிரியான நவீனரக பிள்ளைகளை சைட் அடிக்க லேன்ட்மார்க்கை விட்டால் ஸ்பென்சர்தான். ஸ்பென்சரிலும் ஒரு லேன்ட்மார்க் இருந்தது. இப்போதும் இருக்கிறதா? ஸ்பென்சரே இப்போது பண்டையகாலத்து அருங்காட்சியகம் மாதிரிதான் கிடக்கிறது.

லேண்ட்மார்க்கில் ஏதாவது ஏடாகூட நூல்களுக்கென்றே தனியாக ஒரு அலமாரி ஒதுக்கியிருப்பார்கள். அனேகமாக அது ஈசானிய மூலையாக இருக்கலாம். ஆனால் அங்கிருந்த நூல்களை வைத்து நானாகவே அதற்கு கன்னிமூலை என பெயரிட்டிருந்தேன். அங்கேதான் எல்லாவிதமான கஜகஜா நூல்களும் கிடைக்கும். அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு அப்படியே எங்காவது மூலையில் ஒன்றரையடி ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு படங்கள் மட்டும் பார்த்து சிலிர்த்த நாட்களை மறக்கவே முடியாது. பெரிய பெரிய சைஸில் கில்மா நூல்களை மறைவான மூலையில் அடிக்கி வைத்திருப்பார்கள்.

காதலிகளின் பிறந்தநாளுக்கு வேலன்டைன்ஸ்டேவில் மற்றும் பல சிறப்பு தருணங்களிலும் லேன்ட்மார்க் கிப்டுகள்தான் முத்தங்களை வாங்கித்தந்திருக்கிறது. கிப்ட் பொருட்கள் விலைகூடதான் என்றாலும் லேண்ட்மார்க்கில் வாங்கியது என்று பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு அதில் பெருமையோ இல்லையோ எனக்கு பெருமையாக இருந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஸ்கைவாக் மாலில் இருக்கிற லேன்ட்மார்க்கிற்கு சென்றிருந்தேன். நூல்களுக்காக ஒரே ஒரு அலமாரியைத்தான் ஒதுக்கியிருந்தார்கள். வீடியோகேம், பொம்மைகள், பரிசுபொருட்கள் விற்கும் கடையாகத்தான் அதை மாற்றிவைத்திருக்கிறார்கள். சிட்டிசென்டர் லேண்ட்மார்க் தேவலாம். ஒரளவு நூல்களை மிச்சம் வைத்திருக்கிறார்கள். 2 For 3 ஆஃபரில்தான் எல்லா நூல்களையும் விற்கிறார்கள். (சுந்தரராமசாமியும் சாருநிவேதிதாவையும் ஒன்றாக வாங்கினால் ஜெயமோகன் ஃப்ரீ! )

மின்னூல்கள் கோலோச்ச தொடங்கிவிட்ட காலத்தில் புத்தக கடைகள் உயிர்த்திருப்பதும் மூச்சுவிடுவதுமே ரொம்பவும் சிரமம்தான். அமேசான் கிண்டிலும் ஃப்ளிப்கார்ட்டும் வாசிப்பை விரல்நுனிக்கு கொண்டுவந்துவிட்டன. என்னதான் ஒரு டேப்லெட் முழுக்க ஆயிரம் நூல்கள் இருந்தாலும், ஒரு புத்தக கடைக்கு சென்று ஆயிரம் நூல்களில் ஒன்றை தேர்ந்துஎடுத்து படிப்பதை எங்குமே அனுபவிக்க முடியாது. புத்தகக்கடையில் நிறைந்திருக்கிற அந்த வாசனையும் அங்கே கழிக்கிற அந்த சொற்பமான நேரமும் நம்மை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க வல்லவை. வெறும் நூல்களின் அட்டைகளை மட்டுமே படிப்பதும் அவற்றை ஒரு புரட்டு புரட்டுவதும் அளவில்லா மகிழ்ச்சியை தரக்கூடியவை. வருங்காலத்தில் இதற்க்கெல்லாம் சாத்தியமே இல்லாமல் போய்விடும் என்பது கண்முன்னே தெரிகிறது. அதை தடுக்கவும் முடியாது. எல்லா லேன்ட்மார்க்குகளும் காலவோட்டத்தில் கரையக்கூடியவைதானே!