05 May 2014
கவிதையின் கால்தடங்கள்
காட்டுத்தனமாக நிறைய வாசிப்பதைவிட நாம் வாசித்த ஒரு நூல் குறித்து நாலுபேரோடு உற்சாகமாக பகிர்ந்துகொள்ளும்போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க.... ஒரு நல்ல வாசகனுக்கு வாசிப்பின் முழு சந்தோஷமும் அந்த கணத்தில்தான் கிடைக்க ஆரம்பிக்கிறது. அப்படி பகிர்ந்துகொள்கிற ஆட்கள் நம்மூரில் ரொம்பவும் குறைவுதான்.
பகிர்ந்துகொள்பவையும் பெரும்பாலான நேரங்களில் ''ஓ இவுரு ஏதோ பெரிய உயர் இலக்கியம் படிச்சிருப்பாரு போல நமக்கெதுக்கு வம்பு'' என்று பயந்து ஓடும்படிதான் இருக்கும். இப்படிப்பட்ட கொடூரமான சமகால இலக்கிய சூழலில் ஒரு வாசகனின் பார்வையில் விரிகிற செல்வராஜ் ஜெகதீசனின் கவிதையின் கால்த்தடங்கள் என்கிற நூல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் வாங்கியே தீரவேண்டும் என்று நான் விரும்பிய சில நூல்களில் ஒன்று ‘’கவிதையின் கால்த்தடங்கள்’’. கண்காட்சியில் முதலில் வாங்கிய நூலும் இதுதான். கொஞ்சம் தாட்டியான கவிதைத்தொகுப்பு. கவிதைகள் என்றாலே கரண்டுகம்பத்தில் கைவைத்தது போல உணர்கிற (கரண்ட் இருக்கும்போது) என்னைப்போன்றவர்களுக்கு இந்நூல் அத்தியாவசியமானது. தமிழின் 50 கவிஞர்களின் சிறந்த கவிதைகளில் 400ஐ தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார்.
கொஞ்சம் படிங்க பாஸ் என ஏகப்பட்ட நூல்கள் க்யூவில் காத்திருக்க, , இந்த நூலை இதுவரை முழுவதுமாக மூன்று முறை திரும்ப திரும்ப வாசித்துவிட்டேன். நான்காவது முறையாகவும் வாசித்துக்கொண்டேயிருக்கிறேன். நேரங்கிடைக்கும்போதெல்லாம் ஒரு புரட்டு புரட்டிவிடுவேன். இந்நூலில் இருக்கிற இரண்டு அல்லது மூன்று கவிதைகளை படித்துவிட்டு அதைப்பற்றி மனதிற்குள் அப்படியே அசைபோட ஆரம்பித்துவிடுவேன்! சில நேரங்களில் ஒரே ஒரு கவிதை கூட தடுத்து நிறுத்திவிடும். அதற்குமேல் தாண்டமுடியாது. அவ்வளவு சிறந்த கவிதைகளாக அமுக்கி பார்த்து தேடித்தேடி பொறுக்கி போட்டு கொடுத்திருக்கிறார்.
கவிஞர் முகுந்த் நாகராஜனைப்பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சில கவிதைகள் கூட அங்கிமிங்குமாக வாசித்திருக்கிறேன். ஆனால் இந்தத்தொகுப்பில் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிற கவிதைகளை வாசித்த பிறகு இவ்வளவு நாளாக இவரை முழுமையாக தேடி வாசிக்காமல் விட்டுட்டோமோ என்று வருத்தப்பட்டு உடனே அவருடைய தொகுப்பை ஓடிப்போய் வாங்கி உடனே அவசரமாக படித்தேன். படித்ததும் அவ்வளவு பிடித்துவிட்டது. ஒன்றிரண்டை வாசிக்கும்போதே அவ்வளவு பரவசமாக உணர்ந்தேன். சாம்பிளுக்கு முகுந்தின் கவிதை ஒன்று…
தலைப்பு – ஜன்னல் சீட்
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்கச்சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்
இதெல்லாம் ஒரு காரணமா?
இப்படி ஒரு கவிதையை படித்துவிட்டு அந்த கவிஞனின் கவிதைகளை தேடிப்போய் வாசிக்காவிட்டால் அந்தபாவத்தை கழுவ வாரணாசியில் போய் தேர்தலில் போட்டியிடவேண்டியிருக்கும்! ஒரு கவிஞனின் ஆகச்சிறந்த கவிதைகளை தொகுப்பதென்பது எத்திராஜ் கல்லூரி வாசலில் இருக்கிற டீக்கடையில் நின்று ஒரே ஒரு அழகியை மட்டும் தேர்ந்தெடுத்து சைட் அடிப்பதற்கொப்பானது! அதை ரொம்பவே பொறுப்போடு செய்திருக்கிறார் செல்வராஜ் ஜெகதீசன்.
இத்தொகுப்பு முழுக்க எல்லாவிதமான கவிதைகளும் உண்டு. காதல் கவிதைகளில் தொடங்கி, பெண்ணியம், நகைச்சுவை, சோகம், கோபம், ஆத்திரம், கம்யூனிசம், தலித்தியம், நகைச்சுவை என எல்லா துறைகளிலுமான கவிதைகள் காணக்கிடைக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் எத்தனைவிதமான கருப்பொருள்கள். உலகம் சுற்றும் வாலிபனில் புரட்சிதலைவர் கண்டுபிடித்த ‘’கேப்சூயுலில் அடக்கி வைக்கப்பட்ட மின்னல் சக்தி’’யைப்போன்றவை இத்தொகுப்பிலிருக்கிற கவிதைகள். எல்லாமே படித்து முடிக்கும்போது டமால் டமால் என உள்ளுக்குள் வெடிக்கின்றன.
மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதையை படித்துவிட்டு ஒருநாள்முழுக்க அதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு அற்புதமான கணத்தை நாலுவரியில் அடக்கி கொடுத்திருக்கிறார்.
அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்கள் முன்னால்
அழக்கூடாது
சில கவிதைகள் நாலைந்து வரிதான். ஆனால் படித்துவிட்டு அதை கடக்கமுடியாமல் திணறிப்போக நேர்ந்தது. அதனாலேயே அடுத்த முறை படிக்கும்போது அவற்றை அப்படியே கண்டும்காணாமல் கடந்து ஓடிவிடுவேன். குறிப்பாக இந்தக்கவிதை.
கிறுக்கு பிடித்த பெண்ணை
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி
அதற்கு முன் இவளை
புஷ்பவதியாக்க
இறை மணம் துணிந்ததே எப்படி?
கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் கவிதை இது.
ஞானகூத்தனின் தமிழ்தான் மூச்சு, பிரமிளின் சிறகிலிருந்து பிரிந்து இறகு, வண்ணதாசனின் மனசு குப்பையாச்சு மாதிரி புகழ்பெற்ற கவிதைகளும் தொகுப்பில் உள்ளன. சமகால நவீன கவிதைகளுக்குள் நுழைய விரும்புகிற யாரும் இந்நூலை ஆளுக்கு ஒன்று வாங்கி பத்திரப்படுத்தலாம். நேரங்கிடைக்கும்போது பொறுமையாகவே வாசிக்கலாம். நம்மை ரொம்பவும் கவர்ந்த கவிஞரின் கவிதை உலகத்திற்கு நுழைவதற்கான டிக்கட் இத்தொகுப்பில் நமக்கு கிடைக்காலாம். ஒவ்வொரு கவிஞரும் எழுதிய தொகுப்புகளின் விபரங்களும் இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் கொடுத்திருப்பதால் தேடவேண்டிய அவசியமிருக்காது.
இந்நூல் கவிதைகளை எப்படி வாசிக்கவேண்டும், எப்படி அணுக வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக்கொடுப்பதில்லை. அப்படி கற்றுக்கொடுக்கவும் யாராலும் முடியாது. இந்நூல் சிறந்த கவிதைகளில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து இந்த டேஸ்ட் பண்ணிப்பாரு என்று நீட்டுகிறது. அது பிடித்திருந்தால் அடுத்தடுத்து நகரலாம். நூல் முழுக்க ஒவ்வொரு கவிஞரைப்பற்றியும் அவருடைய கவிதைகள் குறித்த அறிமுகமும், கவிதை கவித்துவம் மாதிரி விஷயங்களைப்பற்றி பல்வேறு கவிஞர்களின் விளக்கங்களும் கூட இந்நூல் முழுக்க இடம்பிடித்துள்ளது.
நூலில் தமிழில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிற சில முக்கியமான கவிஞர்கள் விடுபட்டிருப்பதாக தோன்றியது. உதாரணத்திற்கு கதிர்பாரதி (நிறைய விருதுகள் வென்ற இளம் கவிஞர்) இளைஞர்களுக்கும் இட ஓதுக்கீடு கொடுத்திருக்கலாம். நூல் முழுக்க எல்லாமே எபவ் 40 கவிஞர்களாக இருந்தது போலொரு… அதைவிடுங்கள் அட்டையில் 50 கவிஞர்களின் 400 கவிதைகள் என்று போட்டிருந்தாலும் நூலில் 44கவிஞர்களின் கவிதைகள்தான் இருந்தன. 400 கவிதைகள் இருந்ததா என்றெல்லாம் எண்ணிப்பார்க்கவில்லை.
இருந்தும் இதை செய்வதற்கே மிகப்பெரிய உழைப்பும் மேம்பட்ட ரசனையும் தேவை அந்தவகையில் செல்வராஜ் ஜெகதீசனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அவருடைய வாசகமனம் வாழ்க!