Pages
▼
31 May 2014
ஈ-சிகரட் பலனளிக்குமா?
இன்று அதிகாலை ஒன்பதுமணிக்கே ஒரு நண்பர் போன் செய்தார். நல்ல நாளிலேயே நாம் போன்செய்தாலும் எடுக்காதவர் அதிசயமாக நமக்கு திடீரென போன் பண்ணும்போது மைல்ட் ஹார்ட் அட்டாக்குகள் வருவதுண்டு. இன்றும் அப்படித்தான் இருந்தது.
''பாஸ் நானும் உங்களை மாதிரியே சிகரட் பழக்கத்தை விட்டுடப்போறேன், இன்னைக்கு புகையிலை எதிர்ப்பு தினம் அதனால இன்னைக்குலருந்து விட்டுடப்போறேன்! அதான் உங்கள்ட்ட சொல்லணும்னு தோணுச்சு'' என்றார்.
அந்த நண்பரை எனக்கு பல வருட பழக்கம். ஒருநாளைக்கு நாற்பது சிகரட்டுகளை தாண்டும் புகசாய சூரர்! திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உண்டு. பொறுப்பான ஆசாமிதான் என்றாலும் அவரால் இப்பழக்கத்திலிருந்து மீள முடியாமல் பல ஆண்டுகளாக தவித்துவந்தார். அவர் இப்பழக்கத்தை விடப்போகிறேன் என்று சொன்னதும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அடடா சூப்பர்ஜி சூப்பர்ஜி சூப்பர்ஜி என்று வாழ்த்தினேன். நம்மை பார்த்து நாலுபேர் திருந்தி நல்வழிக்கு சென்றால் மனதுக்கு மிகவும் பெருமையாகவும் கர்வமாகவும் இருக்கும்தானே.
''உங்களுக்கு என்ன உதவி வேணுமோ என்கிட்ட சொல்லுங்கஜி கட்டாயம் பண்ணிடுவோம், முதல் பதினைஞ்சு நாள்தான் மரண வேதனையா இருக்கும் அப்புறம் ஈஸியா தப்பிச்சிடலாம், சமீபத்துல விட்ட நிறைய நண்பர்கள் இருக்காங்க அவங்களோட கோர்த்துவிடறேன் குழுவா பண்ணும்போது ரொம்ப ஈஸி'' என்று உற்சாகமூட்டும் வகையில் கூறினேன்.
''பாஸ் உங்க உதவிலாம் கட்டாயம் வேணும், போன ஏப்ரல்லயே விட்டுடலாம்னு முடிவு பண்ணிருந்தேன், இப்போதான் நாள் வந்திருக்கு பாருங்க, இதுக்காக ஈசிகரெட் ஆர்டர் பண்ணிருந்தேன் இரண்டுமூணு நாளா அப்பப்பப அதைதான் நாலு இழு இழுத்துப்பேன். முப்பதுலாம் போய்கிட்டிருந்த எண்ணிக்கை இப்போ வெறும் பத்துக்கிட்ட கொண்டுவந்துட்டேன்.. பாதிநேரம் ஈசிகரட்தான். இன்னைக்கிலருந்து ஃபுல்லாவே சிகரட்டை விட்டுட்டு ஈசிகரட்டுக்கு மாறிடப்போறேன்'' என்று தன்னுடைய திட்டங்களை சொல்ல ஆரம்பித்தார். எனக்கு பகீரென்று இருந்தது. காரணம் சிகரட் பழக்கத்தை விட நினைப்பவர்களுக்கு ஈ சிகரட் சரியான மாற்றுவழி கிடையவே கிடையாது.
''அய்யோ தயவு செஞ்சு அந்த கண்றாவியை தூக்கி தூரப்போடுங்க, சிகரட்டை விட்டுட்டா அப்படியே விட்டுடணும் , வேற எந்த வகைல நிக்கோடினை எடுத்துகிட்டாலும் விடாது கறுப்பு மாதிரி அது உங்களை விரட்டிகிட்டே இருக்கும், அதுவும் இந்த ஈசிகரெட் இருக்கே சரியான ஃபோர்ஜரி! பத்துநாள் கூட உங்களால தாக்குபிடிக்க முடியாம பண்ணிடும்.. அதனால சிகரட்டை விட்டுட்டு அதுக்கு பதிலா இதுமாதிரி மோசமான மாற்று வழிகள் தேடாம, தியானம் பண்ணுங்க, க்ரீன் டீ குடிங்க, நண்பர்களோட நேரம் செலவழிங்க நிறைய வாசிங்க... அதையெல்லாம் பண்ணுங்க ப்ரோ'' என்று அறிவுரை சொன்னேன். சரிங்க என்று சொன்னவர் உடனே ஃபோனை கட் செய்துவிட்டார். அனேகமாக நேராக கடைக்கு போய் ஒரு தம் போட்டுவிட்டு என்னை திட்டிக்கொண்டிருக்கலாம்!
சிகரட் பழக்கத்தை கைவிட ஈசிகரட் என்பது சரியான மாற்றுவழியே கிடையாது. அதை பயன்படுத்தி இப்பழக்கத்திலிருந்து மீள முயற்சி செய்து தோற்றுப்போன எத்தனையோ நண்பர்களை நான் அறிவேன். நூறில் இரண்டு பேர்தான் ஈசிகரட்டை பயன்படுத்தி புகைப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இதனை முயற்சித்தால் அதிகபட்சம் ஒருமாதம் வரை உங்களால் கட்டுப்பாடாக இருக்கமுடியும். ஆனால் அதற்கு பிறகு மீண்டும் உங்கள் கைகளில் பழையபடி சிகரட் புகைய ஆரம்பித்துவிடும்.
காரணம் உங்கள் உடலில் மூளையில் நிகோடின் படிமங்கள் இருக்கும் வரை உங்களால் ஒருநாளும் அதிலிருந்து ஒரு இன்ச் கூட மீளவே முடியாது. இந்த ஈசிகரட்கள் பொதுவாக புகைவழி உடலுக்கு கிடைத்துக்கொண்டிருந்த நிகோடினை லிக்விடாக்கி புகையின்றி கொடுக்கிறது. அவ்வளவுதான். ஆனால் உடலிலிருக்கிற நிகோடின் அளவு அதே அளவில் தொடர்ந்து நீடித்திருக்கும். சொல்லப்போனால் ஈசிகரட்டை அலுவலகத்திலே, தியேட்டரில், சாப்பிடும் இடத்தில் என எங்கும் பயன்படுத்தமுடியும் என்பதால் முன்பைவிட கிடைக்கிற சந்தர்ப்பத்தில் எல்லாம் நாலு இழுப்பு இழுத்துக்கொள்ளத்தான் ஆவல் வரும். அது ஏற்கனவே இருக்கிற நிகோடின் தேவையை இன்னும் அதிகமாக்கிவிடும்.
அதனாலேயே புகைபிடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் மிக அதிகமாகும். அதிகமாக அதிகமாக ஈசிகரட் கேட்ரிஜ்களை அதிகமாக வாங்குவீர்கள். அது இல்லாமல் ஈசிகரட்டில் காற்றுதான் வரும். நிறைய கேட்ரிஜ் வாங்கினால் கம்பெனிகாரனுக்கு கொள்ளை லாபம்தானே. கடைசியில் இதற்கு ஆகிற செலவு கட்டுபடியாகாமல் அல்லது உடலின் நிகோடின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பழையபடி பத்துரூபாய்க்கு எப்போதும் அடிக்கிற சிகரட்டுக்கே திரும்புவீர்கள்.
புகைப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அப்படியே முற்றிலுமாக விட்டுவிடுவதுதான் சிறந்தது. இதை கோல்ட் டர்க்கி (COLD TURKEY) பாணி என்கிறார்கள். பழக்கத்தை கைவிட்ட பிறகு ஒரு சிகரட் கூட ஆபத்துதான். ஒரு பஃப் கூட...
இதுதான் இருப்பதிலேயே கடினமான முறை என்றாலும் முழுமையான பலனை அளிக்க கூடியது. சிகரட்டுக்கு பதிலாக எந்த மாற்று போதை வஸ்துகளையும் அணுகாமல் அதற்கு பதிலாக ஆரோக்கியமான பழக்கங்களுக்கு நம்மை மாற்றிக்கொள்ளலாம். அது மிகச்சிறந்த பலனை அளிக்கும். புகைப்பழக்கத்தை கைவிட்ட எத்தனையோ நண்பர்கள் அப்படித்தான் இப்பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார்கள்.
சிகரட் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தேவை ஈசிகரட் அல்ல, மன வலிமையும் தன்னம்பிக்கையும்தான்! இதிலிருந்து மீள மருத்துவ உதவிகளை கூட நாடலாம் ஆனால் ஈசிகரட் மாதிரியான ஷார்ட்கட்ஸ் நிகோடினிடம்வேலைக்கே ஆகாது!