Pages

05 May 2014

கஹானியும் கமூலாவும்



மாஞ்சு மாஞ்சு கொண்டாடிய ஒரு படத்தை ரீமேக் என்கிற பெயரில் கொத்துக்கறி போட்டு கொதறி வைத்திருந்தால் கோபம் மட்டுமா வரும், அடேய் பாவிப்பயலே இது நியாயமா என்று படத்தை எடுத்தவனை கொலையாய்க் கொல்லவேண்டும் என்கிற கொந்தளிப்பும் கூடவே வரும்தானே. ‘’நீ எங்கே’’ படம் பார்க்கும் போதும் அதுதான் நிறையவே வந்தது. படத்திற்கு பெயர் நீஎங்கே என் அன்பேவா.. இல்லை வெறும் நீ எங்கேவா? டைட்டிலிலேயே குழப்பம்தான்.

வித்யாபாலனின் நடிப்பில் 2012ல் வெளியான இந்தி திரைப்படம் கஹானி. வெளிநாட்டிலிருந்து கொல்கத்தாவிற்கு தன் தொலைந்துபோன கணவனைத்தேடி வருகிற ஒரு பெண்ணின் கதையை பதைபதைக்க வைக்கிற வகையில் படமாக்கியிருப்பார் இயக்குனர் கோஷ். மொழி தெரியாத ஊரில் வயிற்றில் குழந்தையோடு அவள் தேடி அலைவதும், அவளுடைய தேடலை ஒட்டி அடுத்தடுத்து நடக்கிற கொலையுமாக சில்லிட வைக்கிற பரபர த்ரில்லர்.

பெரிய ஸ்டார்கள் இல்லாமலேயே நூறுகோடிக்கும் மேல் வசூலித்த இந்தப்படத்தை தமிழில் ரீமேக் பண்ண நினைத்த அந்த எண்ணம் பாரட்டப்படவேண்டியது. ஆனால் அதை அப்படியே அட்டை டூ அட்டை எடுத்திருக்கலாம்.. தன்னுடைய சொந்த சரக்கை நுழைக்கிறேன் என்று இப்படி கொயகொயவென்றாக்கியிருக்கத் தேவையில்லை!

தெலுங்கில் ‘’ஹேப்பி டேஸ்’’ ‘’லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல்’’ மாதிரி அருமையான ஃபீல்குட் படங்கள் எடுத்து பேர் பெற்ற இயக்குனர் சேகர் கம்மூலா ஏன் கஹானி மாதிரி ஒரு முரட்டுத்தனமான படத்தை ரீமேக் செய்ய ஒப்புக்கொண்டார்? வித்யாபாலனுக்கு பதிலாக ஏன் நயன்தாரா.. WHY WHY?? இந்தக் கேள்விகள் ‘’நீ எங்கே என் அன்பே’’ அல்லது ‘’அனாமிகா’’ படத்திற்கு பூஜை போட்ட அன்றிலிருந்தே மனதை குடாய்ந்துகொண்டிருந்தது.

எந்த பாத்திரத்தையும் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் செய்கிற வித்யாபாலனுக்கு மாற்றாக வேறொரு நடிகையை நினைத்தும் கூட பார்க்க முடியவில்லை. ஒருவேளை சிம்ரனை நடிக்க வைத்திருந்தால் மனம் ஒப்பியிருக்குமோ என்னமோ?

நயன்தாரா நல்ல நடிகைதான், ஆனால் இப்படத்தின் கதைப்படி நயன்தாராவை பார்க்கும்போது நமக்கு இயல்பாக எழவேண்டிய பரிதாப உணர்ச்சிக்கு பதிலாக வேறு சில உணர்ச்சிகள்தான் மேலோங்குகிறது. அதற்கொப்ப படம் முழுக்க நயன்தாராவும் நன்றாக டிசைன் டிசைனாக கலர் கலர் காஸ்ட்யூம்களில் வலம் வருகிறார். இயக்குனர்கதையை விட நயன்தாராவின் கவர்ச்சியின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தாரோ என்னவோ?

இதை தனிப்படமாக பார்த்தாலாவது பிடித்து தொலைக்கிறதா என முயற்சி செய்தும் பார்த்தேன். கஹானியோடு ஒப்பிடாமல் பார்த்தாலுமே கூட ம்ஹூம் நிச்சயமாக சத்தியமாக முடியலைதான். அதிலும் டெம்ப்ளேட் வசனங்கள், டெம்ப்ளேட் நடிப்புகள்...

கஹானி படத்தின் உயிர்நாடியே வித்யாபாலன் நிறைமாத கர்ப்பிணியாகவும், அந்த அவஸ்தையோடு தொலைந்து போன தன் கணவனை தேடுவதும்தான். அது அப்படி இருந்தால்தான் க்ளைமாக்ஸில் படம் முழுக்க நாம் பார்த்ததெல்லாவற்றையும் புரட்டிப்போடுகிற அந்த ட்விஸ்ட்டு நறுக்கென நம் மண்டையில் உரைக்கும். ஆனால் இப்படத்தில் நயன்தாரா மறுத்திருப்பாரோ என்னவோ நாயகி கர்ப்பமாவதை இயக்குனர் விரும்பவில்லை. முதல் பாலிலேயே விக்கெட் விழுந்துவிட்டதா..

இரண்டாவது கஹானியில் வருகிற அந்த இன்சூரன் ஏஜன்ட் வேலை பார்க்கிற அம்மாஞ்சி கொலைகாரன். அவன் தொடர்பான காட்சிகள் எல்லாமே அவ்வளவு பயமுறுத்தக்கூடியதாக இருக்கும். அதற்கு காரணம் அவன் தொடர்பான ஆரம்ப காட்சிகள். இயக்குனர் அதையும் தூக்கிவிட்டார்.

மூன்றாவது படத்தினுடைய CASTING. நவாசூதீன் சித்திக் மாதிரி தேர்ந்த நடிகர் நடித்த பாத்திரத்தில் பசுபதியை போட்டது சரிதான். பசுபதி தமிழின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர்,. ஆனால் ஏனோ இந்தப்படத்தில் என்னதான் கண்ணை உருட்டி உருட்டி மிரட்டினாலும் அவரை பார்க்கும் போது பயமே வரவில்லை. சில இடங்களில் சிரிப்புதான் வந்தது. சில பார்வைகளில் அசைவுகளில் பார்வையாளர்களை போட்டு அப்படி பயமுறுத்தியிருப்பார் நவாசுதீன்! அதற்கு நாயகி கர்ப்பிணியாக இல்லாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கஹானியில் வருகிற கொல்கத்தா நகரம் அவ்வளவு உயிர்ப்போடிருக்கும். அவ்வூரின் அசலான நிறமும் மக்களும் அதன் மணமும் கூட ஒவ்வொரு சட்டகத்திலும் நிறைந்திருக்கும். ஏனோ சேகர் கம்மூலா சொல்லும் கஹானியில் ஹைதரபாத் நகரம் என்பது நாலுதெருவுக்குள் சுருங்கிப்போய்விடுகிறது. அதைப்பற்றிய பரந்துபட்ட பார்வையை வழங்கமறுக்கிறது.

படம் முழுக்க காரணமே இல்லாமல் தொடர்ந்து மீண்டும் மீண்டும் காட்டப்படும் காளியும், நல்லவர்களோடு எங்கும் நிறைந்திருக்கும் காவியும், குண்டுவைத்தவரைத்தேடி இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் மட்டுமே தேடுவதுமாக சேகர் கமூலா தன்னுடைய சார்ரசியலையும் கொஞ்சம் தூவி விட்டிருக்கிறார்.

கஹானியின் வெற்றிக்கு காரணமான எல்லா அம்சங்களையும் அதன் ஆன்மாவையும்உருவிப்போட்டுவிட்டு , லேடீஸ் சென்டிமென்ட்டை தூக்கலாக்கி வெறும் சக்கையில் இனிப்புத் தண்ணீரை தெளித்து கொடுத்தது போலிருந்தது நீ அன்பே. இதைத் தவிர்க்கலாம். சப்டைட்டிலோடு ஒரிஜினல் டிவிடியில் கஹானி கிடைக்கிறது. தவறவிட்டவர்கள் கட்டாயம் பார்க்கலாம்.