18 April 2014
குனிந்து நில்
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? நல்ல காமெடி படங்கள் ஏன் ஓடுவதில்லை என்று இரண்டு நாளாக ஒரே விசனம். விக்கித்து கக்கித்து தொண்டையை அடைத்துவிட்டது துக்கம். அக்மார்க் அன்ட்ரட் பர்சென்ட் காமெடிபடமான நிமிர்ந்து நில்லே ஒடவில்லை என்றால் வேறு என்னபடம்தான் சார் இந்த ஊரில் ஓடும். உங்களுக்கெல்லாம் எப்படிப்பட்ட படத்தைத்தான் சார் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
ஒரு விநாடி கூட படம் பார்ப்பவர் சோர்ந்து விடக்கூடாதென்று நொடிக்குநொடி நொடிக்கு நொடி கஷ்டப்பட்டு வியர்வையை சிந்தி உழைத்து சிரிப்பு வெடியை கிள்ளிப்போட்டுக்கொண்டேயிருந்த அற்புதமான கலைஞர்களை இப்படித்தானே தோற்டித்து அவமதிக்கிறோம்.
( விறுவிறுப்பான விமர்சனத்துக்கு நடுவில் ஒரு சின்ன விளம்பர இடைவேளை – உலகெங்கும் நல்ல காமெடி படங்கள் நாடகங்கள் மற்றும் போட்டோக்கள் வந்து மக்கள் எப்போதும் சிரித்தமூஞ்சியுடன் இன்பமாக சந்தோஷமாக வாழ ஆதரிப்பீர் போடிசார்கார் ‘’ஆப் கீ பார் போடி சர்க்கார்’’)
இது எந்தளவுக்கு சிறப்பான காமெடி படம் என்பதை விளக்க படத்தின் சில விஷயங்களை மட்டும் சாம்பிளுக்கு பார்ப்போம். முதலில் படத்தின் தலைப்பிலிருந்து தொடங்குவோம். தலைப்பே மிகச்சிறந்த பொலிடிகல் சட்டையர்! இன்று தமிழக அமைச்சர்களை பீடித்திருக்கிற கொடிய நோயான குனிஞ்சமேனியாவை சாடுகிற வகையில் நிமிர்ந்து நில் என்று தலைப்பு வைத்ததிலேயே சமுத்திரக்கனியின் நகைச்சுவை உணர்ச்சி பளிச்சிடவில்லையா!.
அம்மாவுக்கோ அதிமுக அம்மாஞ்சிகளுக்கோ இந்த விஷயம் புரியவில்லை போலிருக்கிறது. புரிந்திருந்தால் தடை விதித்திருப்பார்கள். அதிமுக தொண்டர்களுக்கு இதெல்லாம் புரிகிற அளவுக்கு மூளை இருந்தால் இந்நேரம் கட்சியை விட்டு போய் ஏதாவது மானம் மரியாதை கிடைக்கிற கட்சிக்கு மாறியிருப்பார்களே.
பல அதிரடி ஆக்சன் காமெடி காட்சிகள் நிறைந்த படம்தான் நிமிர்ந்து நில் என்றாலும் எமோஷனல் காட்சிகளுக்கு குறைவேயில்லை. இந்தப்படத்தில் அம்மாவின் தொண்டர்களில் முக்கியமானவர்களில் முக்கியமானவரான சரத்குமார் கூட இருக்கிறார். அவர்தான் சிபிஐ ஆபீசர். படத்தில் வருகிற முதலமைச்சர் போர் அடிக்கும்போதெல்லாம் சரத்குமாரை கூட்டிவந்து நிற்கவைத்து நாக்கை புடுங்கிக்கொள்வதுபோல திட்டுகிறார். சரத்குமாரும் நெளிந்து நெளிந்து வாங்கிக்கொள்கிறார். உண்மைக்கு நெருக்கமாக படமெடுக்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா..? ஒருமுறை முதலமைச்சரிடம் திட்டுவாங்கிவிட்டு சோகமாக தன்னந்தனியாக அழாத குறையாக புலம்பிக்கொண்டே வருகிற காட்சியில்தான் எவ்வளவு இயல்பாக உண்மையாக அய்யுய்யயோ பார்க்கிற யாருக்குமே கண்கள் கலங்கி குளமாகிவிடும். அப்படி ஒரு காட்சி.
படத்தின் முதல் காட்சியிலேயே அப்பா இல்லாத பையனான ஜெயம் ரவியை நாமக்கல் கோழிப்பண்ணை ஸ்கூல் ஒன்றில் கொண்டுபோய் சேர்த்து வன்கொடுமை செய்கிறார் அவருடைய அம்மா! எப்பயும் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் அந்த பள்ளி மாணவர்கள்தான் வாங்குவாங்களாம், பெருமையாக சொல்லுவார் ஸ்கூல் ஓனர் நாசர். அந்த நாமக்கல் கோழிப்பண்ணையில் 12 ஆண்டுகள் படிக்கும் ஜெயம்ரவிக்கு ஒரு கல்லூரியில் சீட்டு கிடைக்கிறது அங்கே ஐந்தாண்டுகள் படிக்கிறார்.
இதெல்லாம் முதல் ஐந்து நிமிடத்தில் காட்டப்படுகிறது. வாழ்க்கையின் 12ஆண்டுகளை கோழிப்பண்ணையிலும் பிறகு 5 ஆண்டுகள் ஆட்டுமந்தையிலும் கழித்துவிட்டவரை, திடீரென படிப்பு முடிந்துவிட்டது உனக்கு வயசாகிடுச்சு என சொல்லி வெளியே விரட்டிவிடுகிறார்கள். 17ஆண்டுகள் என்னதான் படித்தாரோ ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத மரமண்டையாக ஊருக்குள் வருகிறார்.
சின்னத்தம்பி பிரபுவுக்காச்சும் தாலியைத்தவிர குஷ்புவோடு டூயட் பாடுகிற கிஸ்ஸடிக்கிற சாந்திமுகூர்த்தம் பண்ணுகிற அளவுக்கு உலகம் தெரியும். ஆனால் ஸ்டேட் பஸ்ட் எடுத்த பெரியதம்பி ஜெயம்ரவிக்கோ அதுகூட தெரியாத அப்பாவியாக இருக்கிறார். அமலாபால்தான் படம் முழுக்க ஜெயம்ரவியைப்போட்டு கஷ்டப்படுத்துகிறார். டூயட் காட்சிகளில்கூட ஜெயம்ரவிக்கு என்ன செய்வதென்று தெரியாமல்தீடிர் தீடிர் என அமலாபாலின் இடுப்பை பிடித்துக்கொண்டு ஃபீல்பண்ணுகிறார் பாவம்!
அப்பாவி அம்பியான ஜெ.ரவி 17வருடமாக ரோட்டுக்கு கூட வந்ததில்லை போல! சாலையில் நடக்கும்போது ஒரமாக நடக்க வேண்டும் என்பதுகூட தெரியாமல்.. முதல் காட்சியிலேயே ஒன்வேயில் நடுரோட்டில் நடக்கிறார்.. அந்த வழியாக போகிற ஆட்டோக்காரர் கேவலமாக திட்டிவிட்டு போகிறார். அவரை சுற்றி எல்லோரும் செல்போனில் பேசுகிறார்கள் கம்ப்யூட்டரில் காதலிக்கிறார்கள் மிரண்டு போய் பார்க்கிறார்! ஒரே பெண் நாலைந்து பேரை காதலிக்கிறார் என்று கோபப்படுகிறார். சூரிதான் வந்து உலகத்தை அவருக்கு புரியவைக்கிறார்!
ஜெயம்ரவிக்கு அம்மாவின் பொற்கால ஆட்சியில் தீயசக்திகளின் சதியான் கட்டான மின்வெட்டு பிரச்சனை கூட தெரியவில்லை பாருங்கள். இயங்காத ட்ராபிக் சிக்னலில் நின்றுகொண்டு டிராபிக் ஜாம் பண்ணுகிறார். அவரால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. அதுபோதாதென்று போலீஸ்காரர் மூஞ்சியில் பீச்சாங்கையை வைத்து கடுப்பேத்துகிறார்! கேட்டால் அப்பாவியாம்… பஸ்ஸிலேயே வாழ்க்கையில் பயணிக்காத அந்த அப்பாவியின் பேண்டிலிருந்து ஒருவர் பர்ஸை திருடிவிடுகிறார்.. அய்யோ என் பர்ஸு என்று கதறுகிறார் ஹீரோ! அவரை விரட்டிக்கொண்டு ஓடினால் திருடனை விட்டுவிட்டு இவரை பிடித்துக்கொள்கிறார்கள்… உஃப்.. இப்படி பார்ப்பவரை பதறவைக்கும் காட்சிகள் நிறைந்த படம்தான் இது.
இப்படி பல பாதிப்புகளுக்கு உள்ளாகும் ஹீரோவை ஜெயிலில் போட்டுவிட அங்கே சப்பளாங்கட்டை போட்டு அமர்ந்திருக்கிற அவருக்கு ஞானம் வருகிறது! உடனே அம்மா அப்பா முயல் பூனை உலகம் கவர்மென்ட் ஆபீஸ் லஞ்சம் ஊழல் அக்கிரமம் ரமணா ஜென்டில்மேன் முதல்வன் அன்னா ஹசாரே அர்விந்த் கேஜரிவால் நீயா நான என எல்லாமே தெரிந்துவிடுகிறது. உடனே இயக்குனரும் மேற்சொன்ன படங்களிலிருந்து கொஞ்ச கொஞ்ச சீன்களை பொறுக்கிப்போட்டு புயலென புறப்பட்ட ஜெயம்ரவியின் உதவியோடு இந்தியாவை வல்லரசாக மாற்றுகிறார்.
படம் முழுக்க ஏகப்பட்ட மெசேஜ்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார் இயக்குனர். உலகில் இருக்கிற எல்லா துன்பங்களுக்கும் காரணம் ஆசை என்றார் புத்தர். ஆனால் இயக்குனர் எல்லா பிரச்சனைக்கும் காரணம் அரசு அலுவலகங்களில் வாங்குற லஞ்சம்தான் அதை ஒழிச்சிட்டா இந்தியாவை வல்லரசாக்கிடலாம் என்கிறார். அடடா!
விடாப்பிடியாக ஜெயம்ரவியையும் கோபிநாத்தையும் போட்டு பிதுக்கி லஞ்சம் ஊழலை ஒழித்துக்கொண்டிருக்கும்போதுதான் தான் எடுத்துக்கொண்டிருப்பது சினிமா என்று நினைவு வருகிறது இயக்குனருக்கு உடனே ஆந்திராவிலிருந்து நாலைந்து ஆன்ட்டிகளை அழைத்துவந்து ஜாலியாக கவர்ச்சி டான்ஸ் ஆடவிடுகிறார்! அவர்களும் வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் ஆட்டி ஆட்டி ஆடுகிறார்கள். நாலைந்து டாடா சுமோகளை பறக்கவிடுகிறார். ஜெயம்ரவி டபுள் ஆக்சனில் சண்டைபோடுகிறார் சமூகசீந்தனை பீய்ச்சி அடித்து படம் பார்ப்பவர் முகத்தில் தெறிக்கிறது!
எப்போதும் போல இறுதியில் தர்மம் வெல்கிறது. அவ்வளவு பிராடு வேலைகள் பண்ணின ஜெயம்ரவியை ‘’இந்த கோர்ட்’’ எப்போதும் போல விடுதலை செய்துவிடுகிறது! படம் முடிய லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து ஆடியன்ஸெல்லாம் பிட்ஸ்வந்ததுபோல விரைப்பாக நிமிர்ந்துநிற்கிறார்கள்.