Pages
▼
17 April 2014
அலுவலகத்து அசைவம்
ஒரு தனியார் பத்திரிகை அலுவலகத்தில் அசைவ உணவுகள் சாப்பிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அறிவிக்கிற சுற்றறிக்கை ஒன்று ‘எப்படியோ’ சமூகவலைதளங்களுக்கு நடந்து வந்து எப்போதும் போல கன்னாபின்னாவென்று உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்த அலுவலக கேன்டீனில் சைவ உணவுகள் சாப்பிடுகிற பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் இனி யாரும் அசைவ உணவுகள் கொண்டுவந்து சாப்பிட வேண்டாம் என்பது மாதிரி அந்த சுற்றறிக்கை எழுதப்பட்டிருக்கிறது.
அசைவம் சாப்பிடுவதென்பது அவ்வளவு பெரிய குற்றமா? அதெப்படி அசைவத்திற்கு தடைவிதிக்கலாம்? அநியாயம் அக்கிரமம் சைவர்கள் ஒழிக சைவம் ஒழிக என்று ஆளாளுக்கு அலறிதுடித்தனர். அடிப்படையில் அடியேன் அசைவன் என்பதால் அந்த சுற்றறிக்கையை கண்ட அடுத்த நொடி அப்படியே நரசிம்மா விஜயகாந்த் போல இரண்டு புஜங்களும் வெடிக்க இரண்டு கன்னங்களும் துடிக்க கண்கள் சிவக்க...
ஆனால் பாருங்கள் அந்த சுற்றறிக்கை அந்த தனியார் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்குமான தனிப்பட்ட விவகாரம், இதைப்பற்றி ஆதரிப்பதும் கண்டிப்பதும் அல்லது விவாதிப்பதும் கூட அங்கே பணியாற்றுகிற ஊழியர்களின் நிர்வாகத்தினரின் விருப்பம் தொடர்பானது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே அந்த அலுவலக நிர்வாகத்தையும் அதன் முடிவையும் இதிலிருந்து தள்ளி வைத்துவிட்டு இதில் இருக்கிற சிக்கலை மட்டும் பார்க்கலாம்.
எல்லா அலுவலகங்களிலும் இருக்கிற சகஜமான பிரச்சனைதான் இது. நான் இதுவரை பணியாற்றிய எட்டு அலுவலகங்களிலும் இதை பார்த்திருக்கிறேன். நேற்று வைத்த கிழங்கா மீன் குழம்பை டிபனில் எடுத்துக்கொண்டு போய் கேன்டீனில் தின்று அதற்காக மெமோவெல்லாம் வாங்கியிருக்கிறேன். சைவர்களுக்கும் அசைவர்களுக்குமான சண்டை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே இருக்கக்கூடியதுதான்.
காய்கறியில் தொடங்கி மீன்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, பாம்புக்கறி, தவளைக்கறி என எதை வெட்டி குடல்நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக ஆக்கி வறுத்து பொறித்து ஃப்ரை பண்ணி கொடுத்தாலும் ருசித்து ரசித்து சாப்பிடக்கூடியவன் நான். எனக்கு எப்போதுமே மாமிசம் உண்பதென்பது ஒரு கொண்டாட்டமான அனுபவமாகத்தான் இருந்திருக்கிறது. அதனாலேயே வாரத்தின் ஏழு நாட்களிலும் எப்பாடுபட்டாவது ஒரு வேளையாவது அசைவத்தை உணவுக்குள் நுழைத்துவிடுவேன்.
ஒரு முட்டை கூட இல்லாமல் ஒருகவளம் சாப்பாடு கூட வாய்க்குள் இறங்காது. ஒரு துண்டு கருவாட்டை வைத்துக்கொண்டு ஒரு சட்டி பழைய சோற்றைக்கூட தின்றுவிடுவேன். அப்படிப்பட்ட பறக்கமுடியாத அசைவ பட்சி நான். அப்படிப்பட்ட என்னாலேயே சில நேரங்களில் சில குறிப்பிட்ட அசைவ உணவுகளை கண்டால் குமட்டிக்கொண்டு வரும்! காரணம் ஒவ்வாமை. இந்த ஒவ்வாமைக்கு காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கம்.
தமிழ்நாட்டில் சைவம்,அசைவம்,முட்டைவம் என மூன்றுவகைதான் உண்டு என்று நம்மில் பலரும் நம்பினாலும் நம்முடைய உணவு பழக்கவழக்கங்களின் அடிப்படையில் வெரைட்டியான அசைவ சைவ உட்பிரிவுகள் உண்டு. அவை பின்வருமாறு…
*காய்கறியைத்தவிர வேறெதையும் சாப்பிடாதவர்கள்.
*முட்டை மட்டும்
*ஆடுகோழி சாப்பிடாமல் மீன் மற்றும் முட்டை மட்டும்
*ஆடு கோழி மீன் முட்டை மட்டும் சாப்பிடுபவர்கள் (இந்தபட்டியலில் பெரும்பான்மை பலம் இவர்களுக்கே)
*ஆடுகோழி மீன் முட்டையோடு மாட்டுக்கறியும்
*மாட்டுக்கறியோடு பன்றிக்கறியும்
*மாட்டுக்கறி பன்றிக்கறி மட்டுமல்லாது காக்காக்கறி, நாய்க்கறி, எலிக்கறி
இந்த பட்டியலில் இன்னும் நிறைய சேர்க்கலாம். அது படிப்பவரோடு எழுதுபவரையும் கூட குமட்டச்செய்யும்.. என்பதால் இங்கே தவிர்க்கப்பட்டிருக்கிறது.
வாத்து, முயல், காடை, முதலானவை ஆடு கோழி சாப்பிடுபவர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. (சைவத்திலும் கூட வெங்காயம் சாப்பிடாதவர்கள், பூமிக்கு கீழே விளைந்ததை உண்ணாதவர்கள் என உட்பிரிவுகள் உண்டு! ஃபேஷனுக்காக அல்லது பெருமைக்காக சைவமாக மாறியவர்கள், வீட்டில் அசைவமாக இருந்தாலும் கொள்கைக்காக சைவம், அல்லது சுவை பிடிக்காமல் சைவம் எனவும் பிரிவுகள் உண்டு!
மேலே குறிப்பிட்ட இந்த பட்டியல் பெரும்பாலும் வீட்டில்தான் கம்பல்சரியாக கடைபிடிக்கப்படும். இதிலிருந்து மாறுபட்டு வேறு வகை மாமிசத்தை முயற்சிப்பவர்கள் வீட்டுக்கு வெளியேதான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
எனக்குத்தெரிந்த சுத்த சைவ குடும்பத்தில் பிறந்த பையன்கள் பலரும் பாரில் குடிக்கும்போது மட்டும் சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். இவர்களில் பலரும் ஆடு சாப்பிடமாட்டார்கள். மாடு என்றால் கையெடுத்து கும்பிடுவார்கள். எங்கள் வீட்டில் ஆடுகோழி முட்டை மீன் மட்டும்தான் அனுமதி என்பதால் எனக்கு இஷ்டமான மாட்டுக்கறியை கடைகளில் மட்டும்தான் ருசிக்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். மாட்டுக்கே இந்த நிலைமைதான் என்றால் வீடுகளில் பன்றிக்கறி பற்றி சொல்லவும் தேவையில்லை.
ஆட்டுக்கறி மட்டுமே சாப்பிடுகிறவரின் வீட்டில் தப்பித்தவறி மாட்டுக்கறி நுழைந்துவிட்டாலே அபச்சாராம் ஆகிவிடும். தீட்டுபட்டுவிடும். அவ்வளவுதான் ஆச்சா போச்சா என்று தையதக்கா ஆட்டம் ஆடத்தொடங்கிவிடுவார்கள். முதலில் அந்த கருமத்தை கொண்டுபோய் வெளிய கொட்டுங்க.. என்று பதறித்தான் போய்விடுவார்கள். ஆடுகோழி வாத்து முயல் எல்லாம் சாப்பிட ஏற்றது ஆனால் இவர்களுக்கு மாடு மட்டும் தெய்வம்! அதைக் கொல்வது பாவம்!
மாட்டுக்கறி சாப்பிட்டாலும் வீட்டில் பன்றிக்கறியை திறந்துவிட்டால் போச்சு… உங்களை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார்கள். மாடு எப்படி புனிதமோ அதுபோல பன்றியென்றாலே அது அசிங்கம். இப்படி ஒவ்வொரு லெவலிலும் இன்னொன்று அசிங்கம் அபச்சாரம்… அந்த அளவுக்கு நமக்கெல்லாம் ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் எஸ்ட்ரா எஸ்ட்ராக்களும் முக்கியம். இதில் சாதி மத வேறுபாடுகளே கிடையாது. எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் இது உண்டு. இதில் அடுக்குமுறை கூட உண்டு. இப்படி அசைவம் சாப்பிடுபவர்களுக்குள்ளேயே பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் தயக்கங்கள் இருக்கும்போது சைவம் சாப்பிடுவர்கள் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம்.
ஆடு,கோழி சாப்பிடுகிற ஒரு அசைவருக்கு மத்தியில் மாட்டுக்கறியையோ பன்றிக்கறியையோ பிரித்து சாப்பிட்டுப்பாருங்களேன். கட்டாயம் பெரும்பாலானர்களால் அந்த மணத்தை தாங்கிக்கொள்ளவே முடியாது. சிலர் வாந்தி எடுப்பதையும் கூட பார்த்திருக்கிறேன். அவர்களால் தொடர்ந்து கண்முன்னே அமிழ்தத்தை வைத்தாலும் ஒரு வாய்கூட சாப்பிட முடியாது.
அதை நானே கூட அனுபவித்திருக்கிறேன். ஒரு முறை நண்பர்கள் சேர்ந்து எலிக்கறி முயற்சித்தபோது ஒரு மிடறு பிய்த்து வாயில் போட்டதுதான் தாமதம்… அதன் மணத்தினை கூட தாங்குமுடியாமல் விடிய விடிய வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன். காக்காக்கறி முயற்சிக்க அழைத்தபோது முடியவேமுடியாதென மறுத்துவிட்டிருக்கிறேன். காரணத்தை சொல்லவும் தேவையில்லை.
இந்த ஒவ்வாமை அசைவம் சாப்பிடுபவர்களை விட சைவத்திற்கு பழகியவர்களுக்கு இயல்பிலேயே ரொம்பவும் அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். நண்பர்கள் அசைவம் சாப்பிடும்போது நட்புக்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கொள்வதை பார்த்திருக்கிறேன்.
நட்புக்காக எப்போதாவது அட்ஜெஸ்ட் பண்ணிக்கொள்ளலாம். ஆனால் தினமும் அலுவலக கேன்டீனில் என்னும்போது எரிச்சல் வரத்தானே செய்யும். சைவத்திற்கு பழகிய உங்களுக்கு பக்கத்தில் ஒருவர் மணக்க மணக்க மத்திமீன் குழம்பும் நங்குகறுவாடும் சாப்பிட்டால் நிச்சயமாக உங்களால் உங்கள் உணவை சாப்பிடவே முடியாது. அதுவும் இன்று எல்லா அலுவலகங்களிலும் ஏசி வசதி செய்யப்பட்டுவிட்ட காலத்தில் சிறிய மணம் கூட எங்கும் நிறைந்து உங்களுடைய சகிப்புத்தன்மைக்கு வேட்டுவைத்துவிடும்.
இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தால், ஒட்டுமொத்தமாக அவர்கள் அசைவம் சாப்பிடுவதையும் அலுவலகத்திற்கு அசைவ உணவை எடுத்துவருவதையும் தடை செய்வது தனிநபரின் உரிமையில் தலையிடுகிற செயலாகும். அதனால் அலுவலகத்தில் சைவர்கள் அதிகமிருக்கும் பட்சத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கென்று தனியாக இடம் ஒதுக்கி கொடுத்துவிடலாம். அல்லது சைவ அசைவ ஹோட்டல்கள் இருப்பதுபோல இருபிரிவினருக்குமான தனித்தனி கேன்டீன்கள் வைக்கலாம். இது சிறந்த மாற்றுவழியாக இருக்கும். அவர்களுடைய உரிமைகளையும் காப்பாற்றலாம். அல்லது ஒருவரைவேலைக்கு சேர்க்கும்போதே நீங்கள் அசைவம் சாப்பிடுபவர் என்றால் அலுவலக வளாகத்தில் ‘’ஸ்ட்ரிக்ட்லி நோ நான்வெஜ்’’ என முன்னமே சொல்லிவிடலாம். அதை ஒப்புக்கொண்டு வேலைக்கு வருபவரை யார் தடுக்கப்போகிறார்கள்.
நான் உணவருந்தும்போது எனக்குப்பக்கத்தில் ஒருவர் அமர்ந்துகொண்டு எலிக்கறியையோ பெருச்சாளியையோ ருசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் சத்தியமாக என்னால் என்னுடைய உணவை சாப்பிட முடியாது. நிச்சயமாக நான் வேறு இடம் தேடித்தான் ஆகவேண்டும். இங்கே சகிப்புத்தன்மை என்பது ஓரு நாள் இரண்டுநாள் வேலைக்கு ஆகுமே தவிர்த்து தினமும் என்றால் நிச்சயமாக முடியாது. அதுதான் நிதர்சனம்.