Pages
▼
16 April 2014
நான் சிகப்பு மனிதன்
சசிக்குமார் நடித்திருக்க வேண்டிய காவியம். மயிரிழையில் மிஸ்ஸாகி விஷால் நடித்துவிட்டார் போலிருக்கிறது. சசிகுமார் மாதிரி கலைஞருக்கு ‘நண்பர்களின் துரோகம்’ நிறைந்த சப்ஜெக்ட் என்றால் அப்படியே கொலாப்புட்டு தின்பதுமாதிரி.. க்ளைமாக்ஸில் ‘’டே நண்பய்ங்கடா.. நல்லவன்ய்ங்கடா.. வீட்ல் ஆயா ஷொல்ச்சுடா’’ மாதிரி ஜாலிபஞ்ச் வசனம் பேசுவதற்கு தோதான கதை அமைப்பு கொண்ட படம் இது.
இதுவரை தமிழ்சினிமா உலகம் கண்டிராத புத்தம் புதிய நோயான நார்கோலெப்ஸி என்கிற பயங்கரமான வியாதியை கஷ்டப்பட்டு தேடிகண்டுபுடிக்க எடுத்துக்கொண்ட முயற்சியில் ஒரு அரை சதவீதம் அதை சுற்றி சுவாரஸ்யமான கதை பண்ணவும் முயற்சிசெய்திருக்கலாம். முதல் பாதியில் ஜாலிகோலியாக போகிற வண்டி, இன்டர்வெல்லுக்கு பிறகு எங்கெங்கோ திருச்சி, திண்டுக்கல், வியாசர்பாடி, காஷ்மீரெல்லாம் சுற்றி மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்குள் படம் பார்க்கிறவருக்கு நார்கோலெப்ஸி வந்து கொரட்டை விட்டு தூங்கிவிடுகிறார்!
இன்டர்வெல்லுக்கு பிறகு ரொம்ப நேரமாக தூங்கிக்கொண்டிருந்த பார்வையாளர் திடீரென க்ளைமாக்ஸில் முழித்துக்கொள்ளுகிறார். கண்ணைக்கசக்கிக்கொண்டு க்ளைமாக்ஸை பார்த்தவர் ‘’இந்த எழவுக்கு இன்னும் பத்து நிமிஷம் ஏசி காத்துல சேத்து தூங்கிருக்கலாம் பாஸு.. முடியலடா டேய்’’ என்று கதறுகிறார்! இந்த சண்டை காட்சியை படமாக்க பாரின்லருந்துலாம் ஆள கூட்னு வந்தாங்களாம்.
படத்தின் பட்ஜெட்டில் லட்சுமிமேனனின் லிப்ஸ்டிக் செலவு மட்டுமே 50 சதவீதம் ஒதுக்கப்பட்டிருக்கும்போல! இயல்பிலேயே கொஞ்சம் பெரிய உதடுகள் கொண்ட லட்சுமிமேனனுக்கு ஏதோ பாண்டிபஜார் பத்து ரூபா லிப்ஸ்டிக்கையோ அல்லது ஒரு பக்கெட் ஏசியன் பெயின்ட்ஸையோ அப்பியுட்டு உள்ளங்கை அகலத்துக்கு பெரிதாக்கியிருக்கிறார்கள்.
சில பாடல்காட்சிகளில் கவர்ச்சி காட்டவும் முயல்கிறார் லச்சு. சிம்ரன் காலத்து சோம்பல் முறிக்கிற டான்ஸெல்லாம் ஆட ட்ரைபண்ணியிருக்கிறார்! ஏம்மா பொண்ணு அதுக்கு இடுப்புனு ஒன்னு ரொம்ப முக்கியம், கேகேநகர் டபுள்டாங்க் மாதிரி ஒரு இடுப்பை வச்சுகினு.. நீயெல்லாம்…
என்னுடைய தானே தலைவி சிம்ரன் இந்த கொடூரத்தையெல்லாம் பார்க்கமலிருக்க எல்லாம் வல்ல...
படத்தில் ஒரு பாலியல் வன்முறை காட்சி வருகிறது... பழைய மைடியர் லிசா காலத்து பாணியில் எடுக்கப்பட்ட இக்காட்சியும் அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வன்முறையும் மகா கொடூரம். குழந்தை குட்டிகளை அழைத்துச்சென்றால் நெளிவது உறுதி. இந்தபடத்திற்கு எப்படி யூஏ சர்டிபிகேட் கொடுத்தார்களோ! போக கற்பழிப்பு தொடர்ந்து பழிவாங்குதல் எல்லாம 70களிலேயே கலாவதியான பழைய சரக்கில்லையா?
பாண்டியநாடு ஹிட்டாச்சின்னா அது போன பொங்கலுக்கே முடிஞ்சிபோச்சு.. இது அடுத்த படம் என்பதை விஷாலுக்கு யாராவது நினைவூட்டியிருக்கலாம். திமிரு படத்தில் போட்ட சோடாபுட்டி கண்ணாடியும், பாண்டியநாடு முகத்தையும் வைத்துக்கொண்டு படம்நெடுக தூங்கி தூங்கி விழுகிறார்.
ஜிவி ப்ரகாஷ் தன் வீட்டு குப்பைத்தொட்டியிலிருந்து பத்து பதினைந்து ட்யூன்களை பொறுக்கி நாலை பாட்டுக்கும் மீதி நாலை ஆர்ஆர்க்கும் பயன்படுத்தியிருப்பார் போல! சீரியஸ் காட்சிகளில் காதுல குருவி கொய்யிங்குது. பேட்மேன் பட இசையெல்லாம் காதில் கேட்கிறது. சம்பந்தமே இல்லாமல் அவ்வப்போது ஒலிக்கிற பாடல்கள் ஏற்கனே தூங்கி வழிகிற படத்திற்கு தாலாட்டிசைக்கின்றன!
இயக்குனர் தினமும் ‘’சொல்வதெல்லாம் உண்மை’’ பார்ப்பார் போலிருக்கிறது. படத்தில் வரக்கூடிய முக்கியமான கேவலமான ஒரு ஃப்ளாஷ்பேக் பார்க்கும்போது தோணித்து! சுமாரான படம்தான். ரிஸ்க் எடுத்து பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்.
விஷால் ரசிகைகளை காதலிக்கிறவர்கள், அல்லது மணந்தவர்கள் வேறு வழியின்றி இப்படம் பார்க்க நேர்ந்தால் இன்டர்வெல்லில் காதலிக்கு ஒரு பெரிய டின்னுல பாப்கார்னும் ஒரு லிட்டர் பெப்ஸியும் வாங்கிக்கொடுத்துவிட்டு அப்படியே அவருடையே தோளில் சாய்ந்து உறங்கிவிடுவது உயிருக்கு நல்லது.