Pages

11 March 2014

ரஜினி பீட்சா



விளம்பரங்களில் செய்திப்படங்களில் டிவி நிகழ்ச்சிகளில் திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை பயன்படுத்துவதாக இருந்தாலோ, அல்லது அவரை பிரதிபலிக்கும் உருவத்தையோ அல்லது குரலையோ உபயோகித்தாலோ ரஜினியை காட்டினாலோ கூட நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும் என்று எத்தனை பேருக்கு தெரியும்.

இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் ‘’ரஜினிகாந்த்’’ ஒரு காஸ்ட்லியான ப்ரான்ட். சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் ரஜினி ப்ராண்டுக்கான சகல காப்பிரைட் அனுமதிகளையும் வைத்திருக்கிறார்கள். விளம்பரப்படங்கள் எடுப்பவர்கள் மத்தியில் இவ்விஷயம் ரொம்பவும் பிரபலம். பலரையும் கோர்ட்டுக்கு இழுத்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கெல்லாம் போட்டிருக்கிறார்களாம்!

பெருங்குடியில் இருக்கிற ‘’சூப்பர்ஸ்டார் பீட்சா’’ என்கிற பீட்சா கடையில் உட்கார்ந்து கொண்டு நானும் தோழர் குஜிலியும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். சூப்பர்ஸ்டார் பீட்சா கடை ரஜினி ரசிகர்களுக்காக ரஜினி ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்ட சின்ன பீட்சா கடை. இங்கே ரஜினி படங்கள் வைத்திருப்பதை தவிர்த்து நேரடியாக ரஜினியை வைத்து பிராண்டிங் எதுவும் செய்திருக்கவில்லை.

இக்கடை குறித்து ஃபேஸ்புக் ரஜினி ரசிகர் ஒருவர் சிலாகித்து எழுதியிருந்தார். அதை படித்துவிட்டு நானும் தோழரும் ஒரு நார்மல் நாளில் மதிய உணவுக்காக பெருங்குடிக்கு கிளம்பினோம். கடை முகவரியை வைத்து தேட முடியாமல் நான் திணறிக்கொண்டிருந்தேன். தோழர் குஜிலி என்னை நோக்கி கையை நீட்டி விரல்களை விரித்து ஸ்டாப் என்பது போல காட்டினார். பாக்கெட்டில் இருந்த ஸ்டைலாக தன்னுடைய ஆன்ட்ராய்ட் போனை எடுத்து டொக்கு டொக்கு என தட்டினார்,, நேவிகேஷனில் மேப்பு பார்த்தார்.

‘’கண்ணா! இங்கருந்து சரியா 150வது மீட்டர்லதான் அந்த கடை இருக்கு… லெப்ட்ல போய் ரைட் கட் பண்ணினா போதும்..’’ என்று தேவையேயில்லாமல் வாயை கோணலாக வைத்தபடி சொன்னார். பார்க்க பாவமாக இருந்தது. அச்சுச்சோ என்னாச்சு ப்ரோ திடீர்னு என்று விசாரித்தேன். ரஜினி மாதிரி மிமிக்ரி பண்ணினாராம்!

வேகாத வெயிலில் வந்துபோய் அக்கடையை தேடி கண்டுபிடித்தோம். ஏதோ ஆந்திரா மெஸ் போன்ற ஹோட்டலுக்கு மேலே முதல் மாடியில் இக்கடை இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையும்போதே.. ‘’வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான் நாம் செல்லும் பா….தை… சரி என்ன தவறென்ன எவருக்கு எதுவேண்டும் செய்… வோம்…’’ என்று எஸ்பிபி முழங்கிக்கொண்டிருந்தார். கடையில் யாருமே இல்லை. வெயிட்டர்கள் மட்டும் இரண்டு பேர் இருந்தனர். ‘’ப்ரோ நாம வரதை பார்த்து ரஜினி பாட்டு வச்சிருப்பாய்ங்களோ’’ என்று காதை கடித்தார் குஜிலி. ‘’ச்சேச்சே அப்படிலாம் இருக்காதுங்க… இது சூப்பர்ஸ்டார் கடை இங்க எப்பயும் ரஜினிபாட்டேதான் கேப்பாங்க’’ என்றேன்.

ஒரு சுவர் முழுக்க ரஜினியில் வெவ்வேறு காலகட்டத்தில் பிடிக்கப்பட்ட படங்கள் அழகாக மாட்டி வைக்கப்பட்டிருந்தன. கடையிலேயே ரஜினி குறித்த புத்தகங்களும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். MY DAYS WITH BAASHA என்கிற இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் நூலை எடுத்து நான் புரட்டினேன். RAJINIS PUNCHTHANTHRA என்று நினைக்கிறேன். அதை எடுத்து குஜிலியும் படிக்க ஆரம்பித்தார். இங்கிலீஸ் புக்கு என்றால் விரும்பி படிப்பார் குஜிலி.

விட்டால் இவனுங்க ரெண்டுபேரும் வெயில்காலத்துக்கு இதமா ஏசிலயே எதுவும் திங்காம இரண்டு நாள் கூட உக்காந்திருப்பானுங்க என்று எப்படியோ டெலிபதியில் உணர்ந்த கடைகார். மெனுவை நீட்டினார். தோழர்தான் வாங்கி படித்தார். ‘’யோவ் ப்ரோ இதை ஒருக்கா படிச்சிப்பாருங்க செம டக்கராருக்கு’’ என்று மெனுவை நீட்டினார்.

மெனுவில் வகைவகையான பீட்சாகளுக்கு ரஜினி படங்கள் பெயர்களாக சூட்டியிருந்தார்கள். நினைத்தாலே இனிக்கும், பாட்ஷா, பொல்லாதவன், தில்லுமுல்லு, முள்ளும் மலரும் மாதிரி ஒவ்வொரு பீட்சாவுக்கும் ஒவ்வொரு பெயர். இந்த மெனுவில் எனக்கு பிடித்தது ‘’தளபதி தந்தூரி!’’, தோழருக்கு இஷ்டப்பட்டது ‘’நான் சிகப்பு மனிதன்’’ (ரெட் பெப்பர் போடுவாங்களாம்!)

சூப்பர்ல! என்றார் தோழர். எதை ஆர்டர் செய்வது என்று தெரியாமல் முதலில் தடுமாறினேன். ஆனால் என்னதான் பீட்சாவுக்கு ரஜினி பெயர் வைத்தாலும் பீட்சா என்பது பீட்சாதானே.. அதை வாயால்தான் தின்னமுடியும் கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணமுடியாது என்பதால் சுதாரித்துக்கொண்டு இருப்பதிலேயே விலைகுறைவான ‘’நினைத்தாலே இனிக்கும்’’ ஒன்னு குடுங்க , அப்புறம் இரண்டு பெப்ஸி என்று ஆர்டர் கொடுத்தேன். என்னுடைய கணக்குப்படி நூத்தம்பது ரூபாதான் டார்கெட். அதற்குமேல் போனால் பீட்சாவுக்கு மாவு பிசையற வேலைதான் செய்ய வேண்டி இருக்கும்.

பேக் டூ தி மெனு. அருணாச்சலம் ஆஃபர் என்று கூட ஒன்று வைத்திருக்கிறார்கள். மெனுவில் உள்ள எதையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாமாம்! ஒரு ஆளுக்கு 399 ரூபாய் கொடுத்தால் போதுமாம்! என்னதான் தின்னாலும் ஒரு மனிதனால் இந்த பீட்சாவை இரண்டு வட்டலுக்கு மேல் தின்ன முடியாது என்பதால் இப்படி ஒரு திட்டமாக இருக்குமோ என்று சந்தேகமாக கேட்டார் தோழர்.



(படத்தை க்ளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கலாம்)

‘’அருணாச்சலம் படத்துல அருணாச்சலத்தோட அப்பா சோனாச்சலம் பையன் சுருட்டு புடிக்கறானு ஒரு ரூம் நிறைய சிகரட் வச்சி நைட்டெல்லாம் புடிக்க சொல்லி , அவனை திருத்துவாரே அதுமாதிரி போல ப்ரோ.. 399 ரூபாய குடுத்துட்டு இஷ்டத்துக்கு பீட்சாவா தின்னோம்னா எப்படியும் அடுத்த நாள் புடுங்கிடும் அதுக்கு பிறகு பீட்சா தின்ற ஆசையே நமக்கு வராதுல்ல.. அதுதான் இதோட கான்செப்டா இருக்கும்னு தோணுது’’ என்றேன். கர்ர்ர் என்று துப்புவதற்கு ஆயத்தமாக தொண்டையை செருமினார்.

இதற்கு நடுவில், கடையில் ஓடிக்கொண்டிருந்த அந்த ரஜினி பாடல் மாற்றப்பட்டு வேறு ஏதோ ஏஆர் ரஹ்மான் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்ததை கவனித்தேன். தோழர் என்னை பார்த்து ஈஈஈ என்றார். ஜெயிச்சிட்டாராம்! பீட்சா வந்தது.

பீட்சாவில் பைனாப்பிளையும் அந்த பச்சைகலர் புளிப்பு பழத்தையும் (ஜெலபீனோ) வைத்து கொடுத்தார்கள். இனிப்பும் புளிப்புமாக நன்றாகவே இருந்தது. டொமாடா கெட்சப்பை நிறைய ஊற்றி அதற்கு மேலே டாப்பிங்ஸை விட்டு சாப்பிட்டோம். மற்ற பீட்சாக்கள் எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணமாக இருந்தது. ஒரு சுமால் பீட்சாவை ஒன்பைடூ சாப்பிடுகிற ஆட்களாக இருந்தாலும் கடை வெயிட்டர்கள் ரொம்பவும் மரியாதையாக நடத்தினார்கள். சுவைக்கும் தரத்திற்கும் ஒரு குறைச்சலுமில்லை. மற்ற பீட்சா கடைகளை ஒப்பிடும்போது விலைகூட குறைச்ச தான். பெருங்குடியிலேயே இரண்டு கடை இருக்கிறது போல!

பீட்சாவை நல்லவேளையாக நான்காக வெட்டிக்கொடுத்துவிட்டதால் அடித்துக்கொள்ளாமல் ஆளுக்கு இரண்டு என பிரித்து தின்றுவிட்டு பெப்சியை குடித்துவிட்டு கடையிலிருந்து கிளம்பினோம்.

வெளியே வந்ததும் தோழர் கேட்டார் ‘’ஏன் ப்ரோ இந்த கடைக்கு ரஜினி சைட்லருந்து ஏதும் பிராப்ளம் வராதா?’’ என்றார். ‘’சின்ன கடையாவே இந்த ஆந்திரா மெஸ் மேல இருக்குறவரைக்கும் பிரச்சனைகள் வர வாய்ப்பில்ல ப்ரோ.. ஆனா அப்படியே பத்து பதினைஞ்சு பிராஞ்சஸ் போட்டு பிரபல ஃபுட் செயினா டெவலப் ஆனா நிச்சயம் ஆபத்து இருக்கும்’’ என்றேன்.

தூரத்தில் கடைக்குள்ளிலிருந்து இப்போது ரஜினிபாட்டு ஒலிப்பதை கேட்க முடிந்தது… அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டுவருமே…