Pages
▼
07 March 2014
பாம்புதாராவும் பறவை பார்த்தலும்
க்ரியா பதிப்பகத்தின் நூல்கள் எல்லாமே வாசிக்க இன்பமாக இருக்கிறதோ இல்லையோ, அதன் வடிவ நேர்த்திக்காகவே ஓன்று வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ள தூண்டுகிறவை, அப்படி வாங்கி வைத்த நூல்கள் வீட்டில் ஒன்றிரண்டு தேரும். ஜனவரி புத்தகக் காட்சியில் அப்படி அதன் புத்தக வடிவமைப்பின் அழகுல மயங்கி வாங்கிய நூல் ‘’பறவைகள் – அறிமுக கையேடு’’ என்கிற நூல். சாம்சங் கேலக்ஸி க்ராண்ட் சைஸில் குட்டியா கைக்கடக்கமாக இருக்கிற இந்நூல் முழுக்க கலரில் ப்ரிண்ட் செய்யப்பட்டது. சூழலிலியல் தொடர்பான ஆங்கில புத்தகங்கள் போல நூல் முழுக்க டெக்ஸ்ட் குறைவாகவும் படங்கள் அதிகமாகவும் இருந்ததால் விலை கொஞ்சம் கூடதான் என்றாலும் உடனே ஒன்று வாங்கிவிட்டேன்!
ORNITHOLOGY என்கிற பறவையியல் குறித்த நூல் இது. இதில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நம்மோடு வாழும் எண்ணற்ற பறவைகள் பற்றிய எளிய குறிப்புகள் அடங்கியுள்ளன. நமக்கு குட்டியாய் இருப்பதெல்லாம் குருவி, கருப்பாக இருப்பதெல்லாம் குயில், வெள்ளையாய் இருந்தால் கொக்கு, வேகமாக பறந்தால் புறா, பெரிதாக இருந்தால் கழுகு என பறவைகள் குறித்த பார்வை எப்போதுமே மங்கல்தான்! ஆனால் நம்மை சுற்றி எவ்வளவு குட்டி குட்டி பறவைகள் விதவிதமான உடலமைப்புகளோடு வித்தியாசமான குணாதிசியங்களோடு வாழ்கின்றன என்பதையெல்லாம் இந்நூலின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
புறாவிலேயே மணிப்புறா,மாடப்புறா,பஞ்சவர்ணபுறா என எவ்வளவு வெரைட்டி! பருந்துகளில் குருவிகளில் எவ்வளவு வகைகள். கொக்குக்கும் நாரைக்கும் எத்தனை வேறுபாடு. பறவைகளுக்கு எவ்வளவு வித்தியாசமான பெயர்கள். மஞ்சள் திருடி என்கிற கழுகு, கரண்டிவாயன் என்கிற நாரை தைலாங்குருவி,தையல்சிட்டு என்பதுமாதிரி இன்னும் நிறைய நிறைய பறவை பெயர்கள். இந்த பறவைகளுக்கே உரிய பிரத்யேகமான குணாதிசயங்களும் அவை வாழுமிடங்கள் உண்ணும் உணவுகள் முதலான தகவல்களும் உண்டு. 88 பறவைகள் பற்றிய விளக்கங்களும் 166 வண்ணப்படங்களும் கொண்ட இந்நூல் பறவைகள் குறித்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு பொக்கிஷம். மிக எளிய மொழியில் அறிவியல் சார்ந்த விஷயங்களை எழுதியுள்ளனர் ஆசையும் ப.ஜெகந்நாதனும்.
பறவைபார்த்தல் (BIRD WATCHING) எப்படி செய்யவேண்டும், குரலை வைத்து, இறகை வைத்து, கூடுகளை வைத்து பறவைகளின் வகைமையை அறிதலும் , பறவை பார்க்க செல்லும்போது செய்ய வேண்டியவை என புதிதாக பறவைபார்த்தலுக்கு தயாராகிறவர்களுக்கான தகவல்களும் நூலில் உண்டு. பறவையியல் குறித்து ப.ஜெகந்நாதன் எழுதிய அருமையான கட்டுரை ஒன்றும் நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.
நூலை முழுமையாக வாசிக்க இரண்டு மணிநேரம் போதும். ஆனால் வாசித்து முடித்ததும் மண்டைக்குள் ஒரு தகவல்கூட மிச்சமில்லை. அப்போதுதான் ஒரு ஐடியா தோன்றியது. சரி நாமும் பறவை பார்க்க களமிறங்குவோம் என்று வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற ஏரி ஒன்றை தேர்ந்தெடுத்து அங்கே கண்ணில் படுக்கிற பறவைகளை குறித்து வைத்துக்கொண்டேன். முடிந்தவரை அவற்றை என்னுடைய குட்டி கேமராவில் படமெடுத்து வைத்துக்கொண்டேன். பிறகு இந்நூலை ஒரு கைடாக பயன்படுத்தி அது என்ன பறவை என்று தேட ஆரம்பித்தேன்…
நான் பார்த்த ஒரு பறவையின் பெயர் மடையான் ( INDIAN POND HERON) என்று போட்டிருந்தது. அதுதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதன் உடலமைப்பு இறகு, அலகு என சரிபார்த்துக்கொண்டேன் (அப்படிதான் சரிபார்க்க வேண்டும் என்று இந்த நூலிலேயே போட்டிருக்கிறது). அதற்குபிறகு சாம்பல் நிறத்தில் நீண்ட கழுத்துள்ள ஒரு பறவையை கண்டேன். அது பெரிய நீர்காகம் என்று நானாக நினைத்துக்கொண்டேன். ஆனால் பெரிய நீர்காகத்தின் அலகு அமைப்பு அதற்கு இல்லை. நீர்காகத்தின் அலகு வாத்தின் அலகினைப்போல தட்டையாக இருக்கும். ஆனால் இதற்கு கூரான அலகுகள்.
அது பாம்புதாரா என்கிற (ORIENTAL DARTER) என்கிற பறவை என்று நூலில் போட்டிருந்தது. படமும் அதே மாதிரிதான் இருந்தது. நானும் அதுதான் என்று இணையத்தில் வேறு சில படங்கள் மற்றும் தகவல்களை தேடி உறுதி செய்துகொண்டேன். அதற்கு பிறகு இத்தனை நாளும் கொக்கு என்று நினைத்துக்கொண்டிருந்த பறவைக்கு ‘’உண்ணி கொக்கு’’ என்பதே சரியான பெயர் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இன்னும் பறவைகளை நேரம் கிடைக்கும்போது தேடலாம் என்கிற எண்ணமும் உண்டு.
இயற்கை குறித்து பறவைகள் பற்றி சூழலிலியல் தொடர்பாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி வைக்க நினைக்கிறவர்கள் இந்த நூலை வாங்கி பரிசளிக்கலாம். பறவை பார்த்தலில் ஆர்வமுள்ளவர்களும் கட்டாயம் வாங்கி வாசிக்கலாம். வாசிப்பதோடு நிற்காமல் கையில் ஒரு கேமரா அல்லது பைனாகுலரோடு களமிறங்கி பறவைகளை தேட ஆரம்பித்தால் நாம் கூட இயற்கையின் ஓர் அங்கம்தான் என்பதை உணரலாம்.
பறவைகள் - அறிமுக கையேடு
க்ரியா பதிப்பகம்
விலை - 250