Pages
▼
18 February 2014
சச்சினுக்கு ஒரு திரைப்பட சமர்ப்பணம்!
*பத்தாம்வகுப்பு தேர்வில் மார்க்கு குறைவாக வாங்கி.. அதற்கு காரணம் உன்னுடைய கிரிக்கெட் வெறிதான் என வீட்டில் திட்டு வாங்கியவர்கள்.
*எந்நேரமும் பேட்டும் கையுமாக சாலையில் வீட்டு சந்தில் வீட்டுக்குள் பள்ளியில் க்ளாஸ் ரூமில் புத்தகத்தில் என கிடைத்த இடத்திலெல்லாம் கிரிக்கெட் ஆடியவர்கள்.
*பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறை என்பதே கிரிக்கெட் ஆடுவதற்குத்தான் என்று சூரியன் உதித்து அடங்கும்வரை ஆடி ஆடி கருத்துப்போனவர்கள்.
*காதலியை பார்ப்பதைவிடவும் கிரிக்கெட் முக்கியம் என நினைத்து அதை ஸ்கிப் செய்து விட்டு கிரவுண்டுக்கு சென்றவர்கள்.
*வெஸ்ட் இன்டீஸில் கனடாவில்,ஆஸ்திரேலியாவில் இந்தியா ஆடிய கிரிக்கெட் போட்டிகளை ஈஸ்பிஎன்ன்னில் ஸ்டார்ஸ்போர்ட்ஸில் நடுராத்தியிரியில் கொட்ட கொட்ட விழித்திருந்து பார்த்தவர்கள்.
*ஷார்ஜாவில் சச்சின் ஆஸ்திரேலியாவை பந்தாடியதை பார்த்து பார்த்து சிலிர்த்தவர்கள்.
*நண்பர்களோடு கூட்டாக சேர்ந்து கிரிக்கெட் டீம் ஆரம்பித்து அதற்கு கிக்கிலி பிக்கில என வித்தியாசமாக பெயர் வைத்து, ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு பேட்டும் ஸ்டம்பும் வாங்கியவர்கள்
*எப்போதும் அந்த பதினோறு பேர் கொண்ட அணி ஒன்றாகவே சுற்றித்திரிந்து ஒவ்வொருவர் வீட்டிலும் ஒன்றாகவே திட்டுவாங்கி ஒன்றாகவே மேட்ச் பார்த்து ஒன்றாகவே சுக துக்கங்களை பகிர்ந்துகொண்டு நல்லது கெட்டதுகளை கற்றுக்கொண்டு ஒரு வாழ்க்கையை கடந்துவந்தவர்கள்.
*2011ல் இந்தியா வென்றபோது கிட்டத்தட்ட இத்தனை ஆண்டு காத்திருப்பு ஒருவழியாக முடிந்த ஒரு திருப்தியை அனுபவித்தவர்கள். நெகிழ்ந்துபோய் ஒரு துளி கண்ணீரையாவது சிந்தியவர்கள்.
*முப்பது நாற்பதுவயதை கடந்த பின்னும் இன்னமும் பேட்டும் பாலும் கிடைத்தால் ஒரு காட்டு காட்ட வேண்டும் என்கிற வெறி மிச்சமிருக்கிறவர்கள்.
*முக்கியமாக சச்சின் வெறியர்கள்
70-80களில் பிறந்த பையன்கள் எல்லோருமே மேலே குறிப்பிட்ட கேட்டகிரியின் ஏதாவது ஒன்றிலோ அல்லது அனைத்திலுமோ அடங்கிவிடுவார்கள். அந்த காலகட்டத்தில் பிறந்த எல்லோருக்குமே என்றாவது ஒருநாள் எப்படியாவது சச்சின்போல கபில்தேவ்போல ஆகிவிடுவோம் என்கிற எண்ணம் நிலையாக மனதில் இருந்தது. எல்லா பையன்களும் ராப்பகலாக கிரிக்கெட் ஆடினோம். பூஸ்ட்டு குடித்தால் பெப்ஸி குடித்தால் கோக் குடித்தால் சச்சின் ஆகிவிட முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தோம்.
ஒவ்வொருநாளும் ஒவ்வொரு முறை பேட்டை தொடும்போதும் பந்துவீச இரண்டுவிரல்களால் பந்தை அழுத்திப்பிடிக்கும்போதும் மிகப்பெரிய கிரிக்கெட் கனவு உடல் முழுக்க நிறைந்து இருக்கும்.. ஓங்கி அடித்த ஒவ்வொரு பந்தும் நம்மையும் சச்சினாக உணரவைத்திருக்கிறது.
கிரிக்கெட்டை உயிராக நேசிக்கிற அதுமாதிரியான ஒருவனுடைய நாற்பது வருட வாழ்க்கையை காட்சிப்படுத்துகிறது ‘1983’ என்கிற மலையாள திரைப்படம்.
கிரிக்கெட் ரசிகர்கள் தவறவிடக்கூடாத திரைப்படம் இது. படத்தின் ஏதாவது ஒரு காட்சியில் ஏதாவது ஒரு தருணத்தில் திரையில் உங்களையே நீங்கள் கண்டடைவீர்கள். மேலே கேட்ட எல்லா கேள்விகளுக்குமான உங்கள் பதில் ஆம் எனில் படம் உங்களை சில நாட்களுக்காவது இப்படம் தூங்கவிடாது. அதுதான் இப்படத்தின் வெற்றி!
கிரிக்கெட்டை இந்த அளவுக்கு கொண்டாடிய திரைப்படம் இந்திய மொழிகளில் இதுபோல் இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. இந்தியில் வெளியான ‘இக்பால்’ தமிழில் வெளியான சென்னை 600028 இரண்டு படங்களை இதோடு ஒப்பிடலாம். கிட்டத்தட்ட இது இந்த இரண்டு படங்களின் கூட்டுக்கலவையாகவே இருக்கிறது. ஆனால் இதில் முற்றிலும் புதிய கதை. புதிய களம்.
முற்றிலுமாக வாழ்க்கையின் சகல டிபார்ட்மென்ட்களிலும் தோல்வியடைந்த ஒருவனின் சோகமாக கதையை கொஞ்சம் கூட போர் அடிக்காமல் தொய்வில்லாமல் கொண்டாட்டமாக சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ABRID SHINE. படம் முடியும்போது தன்னுடைய பெயரை ‘’A HARDCORE SACHIN FAN”. இதுதான் இவர் இயக்கும் முதல் படமாம்!
படம் ஆரம்பிப்பதே சச்சின் ஓய்வுபெற்ற போது மும்பை மைதானத்தில் பேசுவதிலிருந்துதான்… படத்தில் ஹீரோவின் பெயர் ரமேஷ்! (சச்சினின் அப்பாவின் பெயர்!). படத்தின் இறுதிக்காட்சியில் சச்சினின் புகழ்பெற்ற வசனமான ‘’உன் கனவுகளை துரத்து… அதற்கான குறுக்குவழிகளை தேடாதே’’ என்கிற வாசகங்களோடுதான் படம் முடிகிறது.
1983ம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை முதன்முதலாக ஜெயிக்கும்போது படத்தின் நாயகன் ரமேஷனுக்கு வயது பத்து. அப்போது ஊரெங்கும் கிளம்புகிற கிரிக்கெட் ஆர்வத்தில் நாயகனும் கிரிக்கெட் ஆடத்தொடங்குகிறான். சச்சின்போல பெரிய கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்கிற கனவோடு வாழ்கிறான். ஆனால் அவனுடைய சூழல் போதிய வழிகாட்டுதல்கள் இன்றி அந்த கனவு வெறும் டென்னிஸ்பால்கிரிக்கெட் வீரனாகவே அவனை சுறுக்கிவிடுகிறது. கிரிக்கெட் அவன் தன் காதலை படிப்பை கேரியரை என பலதையும் இழந்தாலும் கிரிக்கெட் மீதான காதலை ஒருநாளும் இழக்காமல் இருக்கிறான். அவனுக்கு திருமணமாகி குழந்தை பிறக்கிறது.
2011ம் ஆண்டு இந்தியா மீண்டும் உலக கோப்பையை வெல்கிறது. இப்போது ரமேஷனின் மகனுக்கு வயது 10! அவனுக்கும் கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது. அவனும் சச்சின் ஆகும் கனவோடு பேட்டுங்கையுமாக அலைய.. ஏழைத் தந்தை ரமேஷன் அவன் கனவை நனவாக்க முடிவெடுக்கிறார். அதற்காக போராடுகிறான். தன் போராட்டத்தில் தன் மகனை கிரிக்கெட் வீரனாக்கும் முயற்சியில் முதல் படியை எடுத்துவைக்க படம் முடிகிறது…
பொதுவாக கிரிக்கெட் தொடர்பான எல்லா படங்களிலும் கிளைமாக்ஸில் ஒரு மேட்ச் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஜெயிக்க படம் முடியும் என்பது மாதிரிதான் க்ளிஷேவாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் அதுமாதிரி படம் முழுக்கவே ஒரு காட்சி கூட இல்லை. ஆனால் கிரிக்கெட் நிறைந்திருக்கிறது. அதிலும் கல்லி கிரிக்கெட்டின் அத்தனை சுவாரஸ்யங்களும் நிறைந்திருக்கிறது. மிக நுணுக்கமாக அக்காட்சிகள் கையாளப்பட்டுள்ளன. அதனாலேயே இப்படம் தனித்துவமாக தெரிகிறதோ என்னமோ!
நாயகன் ரமேஷனுக்கும் அவனுடைய மனைவிக்குமான உரையாடல்கள் , ரமேஷனுக்கும் அவனுடைய தந்தைக்குமான உரையாடல்கள் என எல்லாமே மிகுந்த ரசனையோடு உருவாக்கப்பட்டுள்ளன. படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் கூட சிறப்பாக உருவாக்கபட்டிருந்தன. அதிலும் பத்து நிமிடங்களே வருகிற அந்த மும்பை சச்சின் என்கிற டூபாக்கூர் பேர்வழியின் அசால்ட்டான நடிப்பு! நாயகன் ரமேஷனாக வருகிற நிவின்பாலி நன்றாக நடித்திருக்கிறார். (இவர் தமிழில் நேரம் என்கிற படத்தில் நாயகனாக நடித்தவர்)
கோபிசுந்தரின் இசையில் ‘ஓலஞ்சாலிக்குருவி’’ அச்சு அசல் ராஜாசார் பாணியில் உருவாக்கப்பட்டிருந்தது. இப்பாடலை ஆல்மோஸ்ட் இருபதாண்டுகளுக்கு பிறகு வாணிஜெயராம்-ஜெயச்சந்திரன் ஜோடி பாடியிருக்கிறது. முதல் பாதி முழுக்க பச்சை வண்ணங்களும் எப்போதும் மழை ஈரமுமாக இளமையினை ரசனையாக படமாக்கியிருக்கிறார் பிரதீஷ் வர்மா. படத்தின் இந்தப்பாடலும் அதை படமாக்கியிருக்கும் விதமுமே ஒரு சோறுபதமாக இருக்கும்.
சச்சினை தன் வாழ்க்கை முழுக்க வெவ்வேறு காலகட்டங்களில் அணுஅணுவாக ரசித்த ஒரு ரசிகனால் மட்டும்தான் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும். படம் முழுக்க சச்சினின் வாழ்க்கை தொடர்பான காட்சிகளை மிக அழகாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். படம் பார்த்து முடிக்கும்போது தன்னை ஹார்ட்கோர் சச்சின் ஃபேன் என்று பெருமையாக போட்டுக்கொள்ளும் அத்தனை தகுதியையும் கொண்ட இயக்குனர்தான்பா இந்தாளு என்று எண்ணம் வருகிறது. படத்தில் அங்குமிங்குமாக சின்னதும் பெரியதுமாக குறைகளும் குற்றங்களும் இருந்தாலும் அதை எல்லாவற்றையும் மறக்கச்செய்கிறது படம் முழுக்க நிறைந்திருக்கிற கிரிக்கெட்.
இத்திரைப்படம் சச்சினுக்கான மிகச்சிறந்த திரைப்பட TRIBUTE!
தவறவிடக்கூடாத திரைப்படம். குறிப்பாக சச்சின் அல்லது கிரிக்கெட் ரசிகர்கள்.