Pages
▼
06 January 2014
மோமோ புராணம்
மோமோதான் இக்கதையின் நாயகன் என்பதால் முதலில் மோமோ என்கிற டம்ப்ளிங்ஸ் என்கிற சைனீஸ் கொழுக்கட்டை குறித்து தெரியாதவர்களுக்கு ஒரு சின்னூண்டு இன்ட்ரோ…
மோமோ என்பது நேபாள, திபெத்திய மக்களின் விருப்ப உணவு. ஆல்மோஸ்ட் நம்மூர் விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல் மோதகம்தான். குண்டான வெள்ளை எலி போலிருக்கும் இதன் நடுவில் அல்லது உள்ளே இனிப்பு பூர்ணத்திற்கு பதிலாக கொஞ்சம் காரம் போட்ட சிக்கன் பூர்ணமோ, மட்டன் பூர்ணமோ, அல்லது முட்டையோ கேரட் முட்டைகோஸ் கூட்டு பூர்ணமோ ஏதோ ஒன்றை வைத்து கொழுகட்டை பிடித்து ஆவியில் வேகவைத்து காராமாக பறிமாறினால் அதுதான் மோமோ!
அதற்கு மேல் கொஞ்சம் காரம் போட்ட தக்காளி சட்னி மாதிரியான ஒரு சைட் டிஷ்ஷும் வழங்கப்படுகிறது, (அரைத்த தக்காளி ஜூஸில் மிளகாய் கலந்து) சென்னையில் ஒரு கடையில் பன்றி இறைச்சியில் கூட மோமோ தருகிறார்கள்.
முன்பெல்லாம் சென்னை சுற்றுவட்டாரத்தில் கிடைப்பதற்கரிய கில்மாவாக இருந்த இந்த திண்பண்டம் இப்போதெல்லாம் பரவலாக எங்கும் மூலைக்கு மூலை கிடைக்கிறது! குட்டி குட்டி பெட்டிகடைகளில் நிறைய சப்பை மூக்கு இளைஞர்கள் மோமோ விற்கிறார்கள்.
ஆனால் உண்மையான மோமோ இப்படித்தான் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி நினைத்து நான் சாப்பிட்டுக்கொள்வேன். இந்திக்காரர்கள் சாம்பாரை குடித்துக்கொண்டே மசால்தோசை சாப்பிடுவதைப்போல!
தோழி கவின்மலருக்கு ஒருமுறை கோடம்பாக்கம் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் பொட்டிகடை வாசலில் மோமோவை அறிமுகப்படுத்தினேன். அவருக்கும் அந்த மோமோவை உடனே பிடித்துப்போய்விட்டது. அவரும் ஃபேஸ்புக்கில் என்னைப்போலவே ‘’ஆகா என்ன ருசி’’ என்று புகழ்ந்து நான்குவரி எழுதியிருந்தார். அந்த ஸ்டேடஸில் ஒரு நண்பர் சூளைமேடு பக்கத்தில் ஒரு திபெத்திய உணவகம் இருக்கிறது, அங்கே ஒரிஜினல் மோமோ கிடைக்கிறது என்று குறிப்பிட்டார். நானும் கவின்மலரும் அந்த வாரமே அந்த கடைக்கு போய் நல்ல மோமோ சாப்பிட தீர்மானித்தோம். எங்களோடு நண்பன் நெல்சனும் சேர்ந்துகொள்கிறேன் என்றார்.
ஒரு ஆடு வான்டடாக வந்து ‘’சார்.. சார்.. என்னை தயவு செஞ்சு என்னை வெட்டுங்க சார்’’ என்று கசாப்பு கடை வாசலில் போய் நின்றால் யார்தான் ‘’அய்யோ பாவம் நீ வூட்டுக்குபோ ஆடு’’ என்று விரட்டுவான்! எனவே நெல்சனையும் எங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டு மூவரானோம்.
‘’பாஸ் திபெத் கடைல செம காரமாருக்கும்.. இன்னைக்கு சாப்ட்டா நாளைக்கு பின்னால சால்னாதான்.. பழக்கமில்லாதவங்களுக்கு செட்டாகாது. அதனால நாம WANGS கிச்சனுக்கு போகலாம்.. அங்க காரம் மைல்டாவும் ருசியாவும் இருக்கும்’’ என்றார் நெல்சன்.
‘’ப்ரோ அங்க செம காஸ்ட்லியாருக்குமே.. அங்கபோயி..’’ என்று நான் பம்மினேன். கவின்மலருக்கும் கூட தயக்கம்தான். ஆனால் நெல்சன் விடவில்லை ‘’அதெல்லாம் நான் பாத்துக்கறேன் பாஸ்.. இரண்டு மோமோ சாப்ட்டா ஒன்னும் சொத்தெல்லாம் அழிச்சிடாது.. நீங்க ரெண்டுபேரும் நாளைக்கு சரியா நைட் எட்டுமணிக்கு நுங்கபாக்கம் வாங்ஸ் கிச்சனுக்கு ஆஜராகிடுங்க’’ என்று கட்டளையிட்டார். மான்களை வேட்டையாட காத்திருக்கும் ஒநாய்களைப்போல கவின்மலரும் நானும் அப்போதிருந்தே மோமோவேட்டைக்கு காலிவயிறோடு காத்திருந்தோம்.
வாங்ஸ் கிச்சன் கடையை அடிக்கடி கடக்க நேரிட்டாலும் அங்கே எப்போதும் சென்றதில்லை. ஒருநாள் நாமும் அதற்கு உள்ளே போவோம் நமக்கும் யாராவது சோறு வாங்கிதருவார்கள் என்றும் நினைத்ததில்லை. நெல்சன் சேவியர் தன்னுடைய ஆக்டிவாவில் வந்திறங்கினார். எப்போதும் போல அரைமணிநேரம் தாமதமாக கவின்மலரும் வந்துசேர வாங்ஸ் கிச்சனில் நுழைந்தோம்.
வாங்ஸ் கிச்சன் கடையை பற்றி சொல்லிவிடுவோம். இங்கே சீன உணவுகள் கிடைக்கும். எங்கு பார்த்தாலும் ‘’ரிட்டர்ன் ஆப் தி ஷாவலின் டெம்பிள்’’ படத்தில் வருகிற MONKS போல் நிறையபேர் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அதோடு சிகப்பு நிற பொருட்கள் வைத்து அலங்கரித்திருந்தார்கள். ஹோட்டலில் இதைவிட ஒரு கடையில் சீன உணவு கிடைக்கும் என்பதை உணர்த்த வேறென்ன வேண்டும்.
அன்றைய தினம் மோமோவிலேயே தொடங்கி மோமோவிலேயே முடிந்திருந்தால் ஒரு மிகப் பெரிய சேதாரம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் நெல்சன்தான் ஏன் நாம சூப்லருந்து தொடங்கபிடாது என்றார். எனவே சிக்கன் சூப்பிலிருந்து ஆரம்பித்தோம். சிக்கன் சூப் நன்றாக இருந்தது.
பிறகு மோமோ ஆர்டர் பண்ணினோம். சிக்கன் மோமோ, வெஜ் மோமோ என இரண்டு வெரைட்டிகளும் சொல்ல… மெனுவில் ஓரத்தில் தென்பட்ட மாட்டிறைச்சி உணவு உடனடியாக உணர்ச்சிவயப்பட வைத்தது. கவின்மலரும் நானும் மாட்டிறைச்சியின் பரம ரசிகர்கள். அதனால் நெல்சனிடம் ‘’ரோஸ்டட் சில்லி பீஃப்’’ ஆர்டர் பண்ணிக்கலாமா என்றேன். அவரும் சரி என்றார். அதோடு கூடவே சிக்கன் ஃப்ரைட் ரைஸும் செஸ்வான் ஃப்ரைட் ரைஸும் ஆர்டர் பண்ண.. எல்லாமே வந்தது.
வாங்ஸ் கிச்சனில் தரப்பட்ட ரோஸ்டட் சில்லி பீஃப் சுவையாக இருந்தது. மாட்டிறைச்சி துண்டுகளை மெல்லிசாக வெட்டி அதில் மசாலாதடவி நன்றாக வறுத்து கொடுக்கிறார்கள். அதில் நிறையவே மாட்டிறைச்சியும் உண்ண கிடைக்கிறது. ஸ்லைசாக வெட்டப்பட்டிருப்பதால் இறைச்சியும் நன்றாக வெந்து ஜூசியாக இருந்தது. சுவைக்கு கொஞ்சமும் குறைச்சலில்லை. ரசித்து உண்ண முடிந்தது. கவின்மலர் அந்த ஃப்ரையை சமைத்தவருக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவிக்குமாறு வெயிட்டரிடம் கூறினார். நெல்சன் உணர்ச்சிப்பெருக்கில் இன்னொரு பீஃப் ஆர்டர் பண்ண.. அதுவும் வந்து காலியானது.
மோமோவைப்பற்றி சொல்லவேண்டும். வெளியே விதவிதமான மோமோக்களை சாப்பிட்டிருந்தாலும் வாங்ஸ் கிச்சன் மோமோ நிச்சயம் வித்தியாசமாகவே இருந்தது. அது உள்ளே அதிக காரமும் இல்லாமல் கொஞ்சம் இனிப்பாகவும் அதற்கு வழங்கப்பட்ட சாஸ்களும் தக்காளிசட்னியும் கூட வேறு சுவையிலும் இருந்தது. இதுவும் கூட ஒரிஜினலின் சுவைதானா தெரியவில்லை. ஆனால் ஆல்மோஸ்ட் இதுதான் ஒரிஜினல் சுவையாக இருக்கலாம்.
ஒருவழியாக நிறையவே நல்ல உணவுகளை சாப்பிட்ட திருப்தியோடு அமர்ந்திருந்தோம். அருகில் இருந்த மெனுவில் ‘’FRIED ICECREAM’’ என்று ஏதோ போட்டிருந்தது. இதென்னய்யா புதுசா இருக்கு.. என்று நெல்சனிடம் கேட்க.. அவர் கொஞ்சமும் யோசிக்காமல் மூனுப்ளேட் குடுங்க என்று ஆர்டர் செய்துவிட்டார். எவ்வளவு உயர்ந்த உள்ளம் நல்ல மனசு!
அந்த ஃப்ரைட் ஐஸ்க்ரீமும் வந்தது. இந்த பட்சணத்தை இப்போதுதான் நான் முதன்முதலாக பார்க்கிறேன். போண்டாவுக்குள் ஐஸ்க்ரீமை வைத்து எப்படியோ பொறித்து கொடுக்கிறார்கள். எப்படி செய்திருப்பார்கள் என்பதையெல்லாம் வீட்டுக்கு போய் சிந்தித்துக்கொள்ளுவோம் என்று நினைத்துக்கொண்டே அந்த ஐஸ் போண்டாகளை லபக்கினோம். சும்மா சொல்லக்கூடாது அப்படி ஒரு ருசி! எப்படி இந்த போண்டாவை பொறித்தார்கள் என்பது கடைசிவரை மர்மமாகவே இருந்தது.
வீட்டுக்கு கூட ஒரு செட் பார்சல் வாங்கிச்செல்லலாமா என்று யோசனையாக இருந்தது. WANGS கிச்சன் கடைக்கு சாப்பிடச்செல்பவர்கள் மிஸ்பண்ணிவிடக்கூடாத இரண்டு உணவுகளில் இதுவும் ஒன்று. இன்னொன்று ரோஸ்டட் சில்லி பீஃப்!
ஒருவழியாக சாப்பிட்டு முடிக்க பில் வந்தது. ஆனால் அதை என்னையும் நெல்சனையும் விட்டுவிட்டு கவின்மலரிடம் கொண்டு போய் வைத்தார் ஹோட்டல்கார். கவின்மலர் உடனே கோபமாக எழுந்து கைகழுவ சென்றுவிட்டார். நாங்கள் பொதுவாக அப்படித்தான் செய்வது. நெல்சன் பில்லை வாங்கிப்பார்த்தார். முகத்தில் எந்த சலனமுமில்லை. நான் அதை பிடுங்கிப்பார்த்தேன்.. ஆல்மோஸ்ட் இரண்டாயிரம் ரூபாய்க்கு தின்று தீர்த்திருக்கிறோம்! அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் நெல்சன் மிகவும் நல்லவர். சிரித்த முகத்தோடு இதெல்லாம் நத்திங் பாஸ் என்றார்.
கவின்மலருக்கும் எனக்கும் ரொம்பவே கில்ட்டி ஃபீலிங்காக இருந்தாலும்… வேறுவழியில்லை. மாசக்கடைசியில் அவ்வளவு பணத்துக்கு எங்கே போறது. ஆயிரம்தான் இருந்தாலும் நெல்சன் விசுவல் மீடியா ஆள்! நாங்கள் இருவரும் ப்ரிண்டுதானே! அதனால் ஒன்றும் பேசாமல் கம்முனுருந்தோம்.
நெல்சன் தன்னுடைய டெபிட் கார்டில் பில்லுக்கு பணம் கொடுத்தார். முகத்தில் எந்த வித சலனமோ தயக்கமோ கோபமோ வறுத்தமோ எதுவுமே இல்லை என்பது உண்மையில் ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. ச்சே எவ்ளோ நல்லவர். இரண்டாயிரம் ரூவாவுக்கு சாப்பாடும் வாங்கிக்கொடுத்து.. ச்சே சிம்ப்ளீ கிரேட்.. என்று நானும் கவின்மலரும் அவருடைய உயர்ந்த உள்ளம் கண்டு வியந்தோம்.
பாட்ஷா படத்தில் ஒரு காட்சி வருமே மாணிக்கத்தை கரண்டு கம்பத்தில் வைத்து கட்டிவைத்து அடித்து நொறுக்கின பிறகும் அவர் சிரித்துக்கொண்டே இருப்பாரே அதுதான் இந்த நேரத்தில் நெல்சனின் முகத்தை பார்க்கும்போது நினைவுக்குவந்தது. வாட் ஏ மேன் என்று மீண்டும் ஒருமுறை கவின்மலரை பார்த்து வியந்தேன்,. அவரும் அப்படிதான் நினைத்திருப்பார்.
காசெல்லாம் கொடுத்து கை கழுவி டிஸ்யூ பேப்பரில் கையும் துடைத்து வெளியே வந்தோம். நான் என்னுடைய பைக்கை எடுத்து கிளம்பினேன். கவின்மலரும் கிளம்பினார். ஆனால் நெல்சன் மட்டும் பார்க்கிங்கிலேயே நின்றுகொண்டிருந்தார். அச்சச்சோ இந்த நல்ல மனுஷனுக்கு என்னாச்சு என நானும் கவின்மலரும் பதறிப்போய் அருகில் போய் பார்த்தோம்.
‘’பாஸ் ரொம்ப நேரமா… வண்டியை ஸ்டார்ட் பண்றேன்.. வண்டி ஸ்டார்ட்டே ஆகலை..’’ என்றார்.
‘’வண்டில பெட்ரோல் இருக்கா பாஸ்’’ என்றார் கவின். இருக்கு என்பதாக தலையை ஆட்டினார். அப்புறம் ஸ்டார்ட் ஆகலை என்று கவின்மலரும் உதவ முற்பட்டப்போதுதான் கவனித்தேன்.
மனிதர் ஸ்டார்ட் செய்ய முயன்றுகொண்டிருந்தது வேறு ஒரு ஸ்கூட்டி பெப் வண்டியை. அது அவருடைய வண்டியே அல்ல.. அவருடையது ஆக்டிவா..!
‘’ஹலோ இது உங்க வண்டியில்ல பாஸ்’’ என்றேன். அப்போதுதான் நெல்சன் கவனித்தார்.
‘’அட ஆமாங்க…‘’ என்று பதறிப்போய் பின்வாங்கி அவருடைய ஆக்டிவாவை தேடி கண்டுபிடித்தார். அப்போதும் அவர் முகத்தில் சலனமேயில்லை. அதே புன்னகை. ஆனால் எங்களால் இப்போது புரிந்துகொள்ள முடிந்தது. (இவர் ரொம்ப நல்லவர் ... எவ்ளோ அடிச்சாலும் வலிச்சாலும் வெளிய காட்டிக்கமாட்டார் போல…)
நானும் கவின்மலரும்தான் ரொம்பவே சங்கடப்பட்டோம். அவருக்கு அடுத்த முறை பிரமாண்டமாக இரண்டுபேரும் காசுபோட்டு ஒரு நல்ல டீயாச்சும் வாங்கிக்கொடுத்துவிடுவோம் என்று முடிவெடுத்தோம்.