முதல்பாகம் படிக்க இங்கே க்ளிக்கவும் - http://www.athishaonline.com/2014/01/2014.html
#ஜூராசிக் பார்க் படத்தில் டினோசர் தூரத்தில் வரும்போதே வீட்டுக்குள் உக்காந்திருக்கும் வெள்ளைகார தாத்தாவின் டேபிளில் தண்ணீர் டம்ளர் டர்ர்ர்ர்ர்ர்ரென்று அதிருமே… நினைவிருக்கிறதா.. அதுபோல கேன்டீனில் உட்கார்ந்து நானும் நண்பர் சோமீதரனும் எழுத்தாளர் சயந்தனும் டீ குடித்துக்கொண்டிருந்தோம். தீடிரென அதுபோல் ஒரு அதிர்வை டீ டம்ளர் வழியே உணர்ந்தோம். சோமீதரனுக்கு பயமாகிவிட்டது.. ‘’அய்யோ பூகம்பம்’’ என்று பதறிவிட்டார். எனக்குமே பதட்டமாகத்தான் இருந்தது.. டீயை வீணாக்க விரும்பாமல் அந்த ரணகளத்திலும் அதை கொதிக்க கொதிக்க உள்ளே தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்து கிரவுண்டுக்கு பக்கத்தில் நின்றால்..
மைய அரங்கின் மேடையில் ‘’சீமான்’’ முழங்கிக்கொண்டிருந்தார்..
‘’முள்ளிவாய்க்கால் முற்றத்தில் என்ன நடந்தது தெரியுமா...’’ என்றாரே பார்க்கணும்… அவருடைய வாயிலிருந்து வந்த தீப்பொறி பறக்கும் பேச்சால் ஏதாச்சும் தீவிபத்து மாதிரி அசம்பாவிதங்கள் நேர்ந்துவிடுமோ என்று அச்சமே வந்துவிட்டது.. அதனால் அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டோம்... அவர்பேசிக்கொண்டேயிருந்தார்... பொறி பறந்துகொண்டேயிருந்தது.
***
#சிற்றிதழுக்கென்றே ஒரு ஸ்டால் போடப்பட்டிருந்தது. ‘’சிற்றிதழ் அரங்கு’’ என்கிற அந்தக்கடையில் காக்கைசிறகினிலே,புதுகைத்தென்றல், தங்கம், நுகர்வோர் முரசு, விளையாட்டுசாம்பியன் முதலாக முப்பதுக்கும் அதிகமான பலவித சப்ஜெக்ட்களில் சிற்றிதழ்கள் இடம்பிடித்திருந்தன. பொதுவாக சிறுபத்திரிகை என்றாலே அதில் இலக்கியம், பின்னவீனத்துவம், கோட்பாடு மாதிரிதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த நண்பருக்கு இந்த பத்திரிகைகள் பயங்கர ஆச்சர்யம் கொடுத்தன. சிலம்பாட்டத்துக்காகவே ஒரு சிற்றிதழ் மாதந்தோறும் வந்துகொண்டிருக்கிறது என்பதை அவரால் நம்பவே முடியவில்லை!
இந்த சிற்றிதழ்களில் என்னை மிகவும் கவர்ந்தது ‘’சிரிப்பு ரோஜா’’ என்கிற கையடக்க பத்திரிகை. நகைச்சுவை ரசிகர்களுக்காகவே வருகிற இந்த பத்திரிகை மொத்தமே அட்டையும் சேர்த்து எட்டு பக்கங்கள். அதில் மூன்று பக்கங்களுக்கு சந்தாதாரர்களின் பெயர்களும் முகவரியும் இடம்பெற்றுள்ளன. (ஒவ்வொரு மாதமும் இது இடம்பெறுகிறது!)
மீதி இரண்டு பக்கங்களுக்கு பாத்திரக்கடை, சித்தமருத்துவம், ஆண்மைகுறைவு விளம்பரங்கள். மீதி மூன்று பக்கத்தில் ஒருபக்கத்துக்கு அந்த சிற்றிதழின் ஆசிரியரே ஒருபக்கத்துக்கு ‘’சீரியஸாக’’ தலையங்கம் எழுதியிருக்கிறார்.. நல்லவேளையாக மீதி இருக்கிற இரண்டு பக்கத்தை பாவம் பார்த்து விட்டுவைத்திருக்கிறார்கள். இங்கே முப்பது குட்டிகுட்டி நகைச்சுவை துணுக்குகள் இடம்பிடித்துள்ளன. இந்த நகைச்சுவை துணுக்குகளை எழுதியவர் யார் என்று பார்த்தால்.. மூன்று பக்கங்களுக்கு சந்தா கட்டிய சந்தாதாரர்கள்!
***
#அந்தக்கடையின் பெயர் ரத்தின நாயக்கர் சன்ஸ் என்று நினைக்கிறேன். இந்த ஸ்டாலில் வித்தியாசமான ஜோதிட நூல்கள் காணக்கிடைத்தது. கனவுகாணும் பலன்கள், பல்லிவிழும்பலன்கள், பட்சி பார்த்தால் பலன்கள், எண்தொடு பலன்கள் என என்னெற்ற பலன்கள் அடங்கிய நூல் தொகுப்புகளில் தும்மலுக்கான பலன்கள் என்று ஒரு நூல்தான் மிகவும் கவர்ந்தது. எந்த திசைநோக்கி எந்த நேரத்தில் தும்முகிறோமோ அதற்கேற்ற பலன்கள் உண்டாம். சில குறிப்பிட்ட திசைபார்த்து உச்சிவேளையில் தும்மினால் மரணம் கூட சம்பவிக்கும் என்றெல்லாம் போட்டு பேஜார் பண்ணியிருந்தார்கள். பயந்துபோய் வைத்துவிட்டு வந்துவிட்டேன்!
***
#வம்சி பதிப்பகத்தின் கடையில் இயக்குனர் பாலாவை பார்க்க முடிந்தது. நண்பர் எஸ்கேபி கருணாவோடு சுற்றிக்கொண்டிருந்தபோது வம்சிபக்கமாக இயக்குனர் பாலா வர அவரும் இவரும் பழைய நண்பர்கள் என்பதால் அங்கேயே ஒருசேர் போட்டு அமர்ந்து உரையாட தொடங்கிவிட்டனர். அதற்குள் அங்கே சுற்றியிருந்தவர்கள் வாடிக்கையாளர்கள் என அவர்களை சுற்றி ஒரு நூற்றுக்கு அதிகமானவர்கள் நின்றுகொண்டு ஆட்டோகிராப் போடவும் போட்டோ எடுக்கவும் என அவரை போட்டு நச்சரிக்க.. எனக்கு பரதேசி பட முதல் ட்ரைலர் நினைவுக்கு வந்துவிட்டது. தன்னுடைய கட்டுக்கடங்காத கோபத்திற்கு புகழ்பெற்ற இந்த மனுஷர் எங்கே கடுப்பாகி ரசிகர்களை வெளுத்துவிடுவாரோ என நினைத்தேன். ஆனால் அவரோ புன்னகையோடு கையெழுத்து போட்டுக்கொடுத்து போட்டோவும் எடுத்துக்கொண்டார்.. அடுத்து என்ன படம் என்று கேட்க நினைத்தேன்.. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாக அதிகமாக நான் கிளம்பிவிட்டேன்.
***
#எழுத்தாளர்,ஒளிப்பதிவாளர் செழியனுக்கு இன்னொரு முகமிருப்பது இந்த புத்தகசந்தையில்தான் தெரியவந்தது. மியூசிக் ஸ்கூல் என்கிற பதிப்பகத்தில் இசை குறித்த பத்து வால்யூம்கள் கொண்ட மிகப்பெரிய புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார்! செழியன் மேற்கத்திய இசையை முழுமையாக பயின்றவர் , இசை ஆர்வலர் என்று நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்தது. பத்து வால்யூம்கள் கொண்ட இந்த நூலில் மேற்கத்திய இசையின் பல்வேறு நுணுக்கங்களும் கற்றுத்தரப்பட்டுள்ளதாம். எட்டாயிரம் மதிப்புள்ள நூல்கள் மூவாயிரத்துக்கு இக்கடையில் கிடைத்தது. நிறையவே இசை ஆர்வலர்கள் இக்கடையில் இந்நூலை மொத்தமாக வாங்கிச்சென்றனர். குறிப்பாக இந்த பத்துநூல் தொகுப்பை ஒரு நிஜமான கட்டை பையில் கொடுத்தனுப்பியதை பார்க்க முடிந்தது. (மரத்தினால் செய்யப்பட்ட பெட்டிக்குள் புத்தகங்களை வைத்து அதனோடு இணைக்கப்பட்ட கயிற்றால் பையை தூக்கலாம்!)
***
#ஏதோ பதிப்பகத்தில் பிரபலமானவர்களின் விலாசங்கள் என்கிற புத்தகம் ஒன்றை பார்த்தேன். அதன் கடைசிப்பக்கத்தில் சமகால ‘’இளம் எழுத்தாளர்களுக்கே’’ சவால்விடும் வகையில் ஒரு விளம்பரம் இருந்தது. உடனே மொபைலில் ஒரு க்ளிக்..
***
#இளம் எழுத்தாளர்கள் பலரும் தமிழில் ஆபாசமான நாவல்களை எழுதுகிறார்கள் என்றெல்லாம் நாம் பினாத்திக்கொண்டும் எரிச்சலாக திட்டிக்கொண்டுரும் இருக்க..
அழகான இளம்பெண்கள் ’50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே'' என்கிற ஆங்கில நூலின் மூன்றுபாகங்களை மொத்த மொத்தமாக அள்ளிச்சென்றதை பார்க்க முடிந்தது. ஏகப்பட்ட பலரக பிட்டுகள் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிற இந்த எரோடிக் நாவலில் அப்படி என்னதான் இருக்கிறது என்று படிக்க நினைத்திருக்கிறேன். ஆன்லைனிலேயே ஓசியில் கிடைப்பதாக நண்பர் சொன்னதால் காசுகொடுத்து வாங்கவில்லை. தமிழில் இதுமாதிரி ஏன் யாருமே எழுதுவதில்லை... பெண்களுக்கு பிடித்த மாதிரி ஒரு போர்னோ நூல்!
***
#மணிமேகலை பிரசுரத்தில் இருக்கிற புத்தகங்களின் தலைப்புகளை மட்டுமே ஒருநாள் முழுக்க படித்துக்கொண்டிருக்கலாம். எல்லாமே ROFLMAX ரகளை ரகங்கள். ஒருரேக் முழுக்க லேனா தமிழ்வாணன் நிறைந்திருக்கிறார். ஆனால் அவரைவிடவும் சுவராஸ்யமான நூல்களை எழுதியவர் அவருடைய தந்தைதான். சில தலைப்புகளை படித்து சிரித்து சிரித்து நெஞ்சுவலியே வந்துவிடும். அடுத்தமுறை புத்தகசந்தையில் ஒருநாளை மணிமேகலை பிரசுரத்திற்கே ஒதுக்க நினைத்திருக்கிறேன். தமிழ்வாணனின் ‘’கன்னிப்பெண்கள் யாரை விரும்புகிறார்கள்’’ என்கிற புத்தகம் செம ரசனையானது. வெறும் பெண்கள் அல்ல.. கன்னிப்பெண்கள் என்பதுதான் அதில் இருக்கிற குறியீடே!
இதே நூலின் பின்னட்டையில் இருந்த அதே பாணி கில்மா மேட்டர் புத்தகங்கள் அதைவிட சிறப்பானவை. குறிப்பாக செக்ஸ் எக்ஸஸைஸ் நூலும் அதன் அட்டைப்படமும்..
போட்டோவை பெரிதாக்கி பார்க்கவும்..
***
#அடுத்த ஆண்டு புத்தகக்கண்காட்சி ஒய்எம்சிஏவில் இல்லை என்று சிலர் முணுமுணுத்தார்கள். சென்னை ட்ரேட் சென்டருக்கு போகிறதாம் பு க. ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொண்டுபோய்வைத்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் ஒய்எம்சிஏ போன்ற நம்முடைய விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக எஞ்சி இருக்கிற ஓரிரு விளையாட்டு மைதானங்கள் அதிக சேதமாவது தடுக்கப்படும் அந்த வகையில் மகிழ்ச்சிதான்.
***
#அந்த பதிப்பகத்தின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் உள்ளே நுழைந்து இரண்டு நூல்களை மட்டும் எடுத்து பில் போடுவதற்காக கொடுத்தேன். அந்த கடைக்காரர்.. அதிர்ச்சியடைந்தார்.
‘’அய்யயோ அதிஷா நீங்களா.. உங்க கிட்ட போய் காசுவாங்குவோமா.. அதெல்லாம் வேண்டாம்.. எங்க அன்பளிப்பா வச்சிக்கோங்க’ என்றார். எனக்கு பயங்கர அதிர்ச்சி. இல்லைங்க காசு வாங்கிக்கோங்க என்று பணத்தை கொடுத்தேன்.. ஆனால் அந்தக்கடைக்காரர் வாங்கமாட்டேன் என்று உறுதியாக மறுத்துவிட்டார். பின்னால் நின்றுகொண்டிருந்த என்னுடைய நண்பரிடம் ‘’என்னங்க இது.. காசு குடுத்தா வாங்கமாட்டேன்றாங்க..’’ என்று சோகமாக கேட்டேன். அவர் என் தோளைத்தொட்டு ‘’இனிமே அப்படிதான்’’ என்றார்.
புத்தக சந்தை இனிதே முடிந்தது. நெக்ஸ்ட் இயர் மீட் பண்ணுவோமா
****