Pages
▼
13 December 2013
இட்லிதோசை,அலுமினியதிருவோடு மற்றும் சில சிரித்த முகங்கொண்ட நல்லவர்கள்!
வடபழனி விஜயா பாரம் மாலில் ஏனோ இன்னும் ஐமேக்ஸ் தியேட்டரை திறக்காமல் இருக்கிறார்கள். அதனாலேயே கூட அதிக கூட்டமில்லை. ஒரு மழைநீர் பூத்தூவும் மாலைநேரம் நானும் நண்பர் குஜிலிகும்பானும் அங்கே வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்தோம். இந்த மால்களில் சுற்றுவது ஒரு தனிக்கலை. மிகுந்த மனக்கட்டுப்பாடு அவசியம். எங்கு பார்த்தாலும் கச்சிதமான உடை அணிந்த அழகான இளம் பெண்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் நமக்காகவே காத்திருப்பது போலவும் நமக்கு தோன்றும். அருகில் வந்து ‘’ஐ லவ் யூ சொல்லுங்க என் அன்பே…,’’ ‘’இறுக்கி அணச்சி ஓர் உம்மா தர்ர்ர்ரு’’ என்றெல்லாம் அழைப்பதைப்போலவும் இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் செய்துவிடக்கூடாது. இந்த மகளிரை நோக்கி ஒற்றை பார்வை பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாலும் கூட புரட்டி புரட்டி போட்டு கும்மிவிடுவார்கள் செக்யூரிட்டிகள்.
எனவே கடைகண்ணிகளை பார்த்தபடி சுற்றலாம். அப்படியே கடைகடையாக சுற்றினாலும் எதையும் வாங்கிவிடக்கூடாது என்கிற வைராக்கியம் கட்டாயம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அப்படி என்னதான் வைராக்கியமாக இருந்தாலும் எல்லா மனிதனுக்கும் இருக்கிற ப்ரேக்கிங் பாய்ன்ட் போல எங்காவது ஓரிடத்தில் சறுக்கி ஒட்டுமொத்தமாக ஒரே ஒருபொருளை பிரமாண்ட தொகைக்கு வாங்கி பர்சை காலியாக்கிவிட்டுதான் வீடு திரும்புவோம். யாருமே இந்த மால்களில் தப்பமுடியாது.
எனவே மிகுந்த மனக்கட்டுப்பாட்டுடன் மாடிமாடியாக திரிந்தோம். ஓசான் என்று ஒரு பிரமாண்டமான சூப்பர் மார்க்கெட் கடை ஒன்று வைத்திருக்கிறார்கள். அன்னிய நாட்டு அண்ணாச்சிகடை. அங்கே எல்லா பொருளும் சல்லிசு விலையில் கிடைக்கிறது. மீன்,கறியெல்லாம் கூட உண்டு. மாட்டிறைச்சி கூட விற்கிறார்கள். பன்றியிறைச்சி மட்டும் ஏனோ இல்லை. சாசேஜ் தொடங்கி கைமா வரை உண்டு. வகைவகையான மீன்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த மத்தி (OIL SARDINE) இல்லை. அங்கே எதாவது வாங்கலாம் என்று யோசித்து யோசித்து.. அப்படியே வெளியே வந்துவிட்டோம்.
சாம்சங்,சோனி,யுனிவர்சல்,லூயிபிலிப்பி,லெவிஸ் என கடையெல்லாம் போய் சுற்றிப்பார்த்துவிட்டு, மொபைல் கடை ஒன்றில் வைத்திருந்த உயர் ரக ஐபேட் போனில் கொஞ்சநேரம் கேம் விளையாடினோம். ஐபேடில் LIE DETECTOR என்றொரு APP இருக்கிறது. அதில் நம்முடைய கையை வைத்து எதாவது சொன்னால் அது உண்மையா பொய்யா என்று சொல்கிறது. நான் கைவைத்துப்பார்த்தேன் ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை இருந்தும் பொய் என்றது! டூபாக்கூர் ஆப் போல. ஐபேடின் முன்பக்க கேமராவில் நானும் குஜிலியும் சேர்ந்து ஈஷிக்கொண்டு நிற்பதைப்போல ஒரு படம் பிடித்தோம். செக்யூரிட்டி முறைக்க ஆரம்பிக்கிற நொடியில் அங்கிருந்து கிளம்பினோம்.
தோழர் குஜிலிக்கு அலைந்து திரிந்ததில் தொண்டை வரண்டு தாகம் எடுக்க, ஒருவாய் காப்பி தண்ணி குடிக்கலாம் என கடை தேடினோம். இரண்டாவது மாடியோ மூன்றாவது மாடியோ அதில் இருந்த ‘’ஐடி’’ என்கிற தென்னிந்திய உணவுகள் விற்கிற சிறிய உணவம் இருந்தது. இந்தக்கடையை முன்பே சத்யம் திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.
நல்ல சுத்தமான சிறிய உணவகம். பெரிய எல்சிடி ஸ்கீரின் டிஸ்ப்ளே வைத்து அதில் பெரிய சைஸில் இட்லி வடை போண்டாவையெல்லாம் மிக தத்ரூபமாக படம் பிடித்து காட்சிகளாக ஓட்டிக்கொண்டிருந்தார்கள். முன்னபின்ன இட்லி வடையே பார்க்காதது போல கண்ணாடியின் ஊடாக அதை போவோர் வருவோரெல்லாம் பொறுமையாக பார்த்துச்செல்கிறார்கள்.
இந்த வீடியோவில் சாம்பார் மேல் மிதக்கும் கொத்தமல்லியை இவ்வளவு அழகாக பார்த்ததேயில்லை. வடையின் மேலும் அதே கொத்தமல்லி. இட்லி மேலும் அதே கொத்தமல்லி… பின்னணியில் ரம்மியமான ஏதோ சாமியார் இசை. உன்னிப்பாக கவனித்ததில் அது ஈஷா தியான யோக மைய பாடல்களை போலவே இருந்தது.
குஜிலிதான் அந்த இரண்டு பக்க மெனுகார்டை ரொம்ப நேரமாக புரட்டி புரட்டி வாசித்துக்கொண்டிருந்தார். (அவர் ஒரு நல்ல தேர்ந்த எழுத்தாளர் மட்டுமல்ல வாசகரும் கூட!). ஒரு கால்மணிநேரம் வாசித்தவர் மெனுவை என்னிடம் நீட்டி, ‘’ப்ரோ இதுல எதுவேணுமோ ஆர்டர் பண்ணிக்கோங்க’’ என்றார். அப்போதே புரிந்தது அந்த மெனு முழுக்க ஆபத்து இருக்கிறது என்பதை… அதற்கேற்ப ஒரு தோசை விலை 110 ரூபாயாம்! ஒரு மசாலா தோசை 150ரூபாய். காஃபி 50 ரூபாய். வடை 60ரூபாய். இடியாப்பம் மட்டும் 30 ரூபாய் என்று போட்டிருந்தது.
ஒரு வடையும் இடியாப்பமும் இரண்டு காபியும் மட்டும் ஆர்டர் செய்தோம். ஒலித்துக்கொண்டிருந்த அந்த சாமியார் பாடல் நினைவுக்கு வர, வெயிட்டரை அழைத்து இந்த கடை ‘’ஈஷா தியான யோக மையத்தோடதா.. IDனா அதான் அர்த்தமா’’ என்றார் குஜிலி. ‘’இல்லங்க ஐடினா இட்லி தோசை’’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார் வெயிட்டர். எங்களுக்கு முன்னால் ஒரு அலுமினிய தட்டு வைக்கப்பட்டிருந்தது.
ஊரில் வீட்டு வாசலில் இப்படி ஒரு அகலமான தட்டு வைத்திருப்போம். மிஞ்சிப்போன உணவினை அதில் கொட்டிவைத்துவிட்டால் நாய்கள் வந்து தின்றுவிட்டுப்போகும். அங்கும் இங்கும் சிதறாமல் இருக்க அதன் முனைகளை விரித்துவிட்டிருப்போம். அது போன்ற தட்டினை சத்துணவுதிட்டத்தில் மதிய சோறு சாப்பிடும்போது கூட பார்க்க முடியும். பல ஆண்டுகளுக்கு பிறகு அப்படி ஒரு அலுமினிய தட்டினை மீண்டும் பார்த்தேன். ஆனால் இது கொஞ்சம் கெட்டியானது. இதற்குமேல் சூடான தட்டை வைத்து சாப்பிட்டால் சூடு குறையாது போலருக்கே நல்ல ஏற்பாடு என்றார் குஜிலி.
கையில் ஒரு கரண்டி, கரண்டியில் ஒரு வடை. அப்படியே சட்டியிலிருந்து எண்ணெய் ஒழுக தூக்கிக்கொண்டு கிச்சனிலிருந்து ஓடிவந்தார் வெயிட்டர். எக்ஸ்க்யூஸ்மீ சார் என்று சொல்லிவிட்டு அப்படியே தூக்கி அந்த அலுமினிய தகரத்தில் போட்டுவிட்டு மீண்டும் கிச்சனுக்குள் புகுந்துவிட்டார். குஜிலிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஓடிப்போன்வர் ஓரிருவிநாடியில் நான்கு சின்ன கிண்ணிகளுடன் வந்தார். சின்ன வடைக்கு சைட் டிஷ்ஷாம்!
‘’ஏன்ங்க தட்டுலாம் கிடையாதா’’ என்றவரிடம். ‘’சாரி சார்.. தி ஈஸ் தி ப்ளேட்’’ என்றான் அந்த சப்பைமூக்கு நார்த்ஈஸ்ட் பையன். அதில் வைத்து சாப்பிடுவது பேப்பர் வாழை இலையில் சாப்பிடுவதை விடவும் மோசமான உணர்வை தருவதாக அவருக்கு இருந்திருக்கும் என்பதை அவருடைய விதவிதமான ஜியாமண்ட்ரிகளில் போகிற முகமே சொன்னது. கொஞ்சநேரத்தில் ஒரே ஒரு சின்ன இடியாப்பத்தை.. எடுத்துக்கொண்டு ஓடிவந்தார் வெயிட்டர். ‘’எக்ஸ்க்யூஸ்மீ..’’ தூக்கிப்போட்டுவிட்டு ஓடினார்.
அவரை அழைத்து ‘’சைட் டிஷ்..’’ என்றேன். ‘’அதை நீங்கதான் வாங்கணும்’’ என்றார். இந்த அரைகிராம் இடியாப்பத்துக்கு சைட் டிஷ் வேற காசுகுடுத்து வாங்கணுமா.. சரி என்ன இருக்கு..’’தேங்காப்பால், வடகறி, வெஜிடபிள் ஸ்டா’’ என அடுக்க.. வடகறி கொடுக்கச்சொன்னேன். ஒரு சின்னக்கப்பில் வடகறி வந்தது.
‘’இது என்னங்க வடை மாதிரியே இல்ல.. இதுக்கு நாலு சட்னி வேற கேடு..’’ என்று திட்டிக்கொண்டே சாப்பிட்டார் குஜிலி. ஆனால் அது பார்க்க வடைபோலவேதான் இருந்தது.
நான் இடியாப்பத்தை ஒரே வாயில் கொஞ்சம் வடகறி முக்கித் தின்றேன். ஒருவாய்க்குள் அடங்கி முடிந்தது. காப்பி வந்தது. காப்பி சுத்தமாக சூடே இல்லை. என்னங்க சூடே இல்லை எனக் கேட்டதும் முகங்கோணாமல் வேறு காபி சூடாக கொடுத்தார்கள். அதுவும் வாயில் வைக்க விளங்கிவில்லை. சாப்பிட்டு முடித்தது மூக்கு சொறிந்தது போல இருந்தது. பில்லு மட்டும் 200ரூபாயும் சில்லரையும் வந்தது. வேண்டாவெறுப்பாக அனிச்சையாக பத்துரூபாய் டிப்ஸும் வைத்துவிட்டு கிளம்பினோம். கிளம்பும்போது குஜிலி சொன்னார் ‘’ப்ரோ அந்த அலுமினிய த(க)ட்டை இந்த ஆங்கிள்லப்பாருங்க .. திருவோடு மாதிரியே இல்ல’’ என்றார். அப்படிதான் இருந்தது.
‘’உப்பு போட்ட டூத்பேஸ்ட்ல பல்லுவெலக்குறவன் எவனும் இந்த கடைக்கு ஒருக்கா வந்தா மறுக்கா நிச்சயமா வரமாட்டான் ப்ரோ’’ என்றார் குஜிலி. அவருடைய அந்த குரல் அந்த மால் முழுக்க எதிரொலித்து அப்படி காற்றில் கரைந்தது. நாங்கள் கடையிலிருந்து வெளியேற எங்களைப்போலவே சிரித்த முகத்தோடு இரண்டுபேர் உள்ளே நுழைந்தார்கள்.