சென்னையில் வரலாறு காணாத மழை. சாலையெல்லாம் வெள்ளம். மூன்று நாட்கள் விடாமல் பெய்து கொண்டேயிருந்தது. அலுவலகங்கள்,கல்லூரிகள்,பள்ளிகள் விடுமுறை விடப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் தண்ணீர் இடுப்புக்கு மேல் ஓடியது. பஸ்கள் ஓடவில்லை. ரயில்கள் கூட ரத்து செய்யப்பட்டன. அடுத்த மூன்று நாட்கள் நரகமாக இருக்கப்போவது தெரியாமல் நாங்கள் உறங்கிக்கொண்டிருந்தோம்.
என்னோடு சேர்த்து மொத்தமாய் மூன்றுபேர். கோவையிலிருந்து சென்னைக்கு மார்க்கெட்டிங் வேலை பார்த்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். சிட்டிக்கு வெளியே ஒதுக்குபுறமாக வாடகை குறைவாக குடிசைபகுதிகளுக்கு நடுவில் இருந்த ஒற்றை மாடி வீட்டில் முதல்மாடியை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். (கீழ்வீட்டில் ஆளில்லை).
சென்னையில் எங்களுக்கு அதுதான் முதல் ஆண்டு.. முதல் மழை. கோவையில் என்னதான் மழை வானத்தை கிழித்துக்கொண்டு ஊற்றினாலும் வெள்ளம் மாதிரியான விஷயங்கள் அதிகமாயிருக்காது. எங்களுக்கு இதுவெல்லாம் பழக்கமேயில்லை.
பால்கனிக்கு வந்து பார்த்தபோது ஊரே நனைந்துபோயிருந்தது.அருகிலிருந்த குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்து நாசம் செய்திருந்தது. கையில் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு கைக்குழந்தையோடு சில பெண்களும், சைக்கிளை உருட்டிக்கொண்டு கேரியரில் மூட்டையோடு லுங்கிகட்டின குடும்பதலைவர்களும் எங்கோ நகர்ந்துகொண்டிருந்தனர். மழை கொட்டொகொட்டென்று கொட்டிக்கொண்டேயிருந்தது. இவர்கள் எங்கே செல்வார்கள் எப்படி வாழ்வார்கள் என்பதையெல்லாம் சிந்திக்கவேயில்லை.
என்னமோ பண்ணிக்கட்டும்.. நமக்கென்ன..! முதல்ல இதான் சாக்குனு ஆபீஸ்க்கு லீவு சொல்லிட்டு ஜாலியா இருக்கலாம்.. காலைகடன்களை முடிக்கணும்.. கரண்ட் இருக்கு.. போன் சார்ஜ் போடணும்.. காதலிக்கு மெசேஜ் அனுப்பணும் பசி வயிற்றை கிள்ளியது. ஒரு டீயும் தம்மும் அடித்தால் தேவலை என்று தோன்றியது.
லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு குடைகூட இல்லாமல் ( அறையிலும் குடை இல்லைதான்) தூங்கி எழுந்துவிட்ட இன்னொரு நண்பனோடு சாலையில் இறங்கினேன். மூன்றே விநாடிகளில் தொப்பலாக நனைந்து போயிருந்தோம். தண்ணீர் வேறு இடுப்புவரை.. படகு சவாரிக்கு தோதாக இருந்தது நீரோட்டம். படகுதான் இல்லை. கையை துடுப்பாக்கி உடலை படகாக்கி.. ஏலேலோ ஐலசா என நகர்ந்தோம்.
டீக்கடை வரை எப்படியோ நனைந்து நனைந்து வந்து சேர்ந்தால்... கடைக்குள் நீர் புகுந்திருந்தது. சேட்டன் தலைமறைவாகியிருந்தார். அருகிலேயிருக்கிற அசைவ ஹோட்டலும் பூட்டப்பட்டிருந்தது. பசி வயிற்றுக்குள் கராபுராவென கதறலோடிருந்த்து. எங்களுடைய அறையிலிருந்து பேருந்து நிறுத்தம் நான்கு கிலோமீட்டர். அங்கே ஏதாவது கடைகளிருக்க கூடும் என நினைத்து நீந்தி நீந்தி நடந்தோம். ம்ஹூம். ஒரு கடையுமில்லை. ஒரே ஒரு பொட்டிக்கடை மட்டும் இருந்தது.
மிட்டாயும், சிகரெட்டும், வெற்றிலை பாக்கும் கேன்டிமேன் மிட்டாயும்தான் கடையில் எஞ்சி இருந்தது. கையிலிருந்த காசுக்கு நிறைய கடலை மிட்டாய் வாங்கி வைத்துக்கொண்டேன். ‘’எதுக்குடா’’ என்றான் நண்பன். ‘’இன்னைக்கு ஆபீஸ் லீவு.. ரூம்ல போர் அடிக்கும்ல’’ என்றேன். அவன் சில கேன்டிமேன் சாக்லேட்டுகள் வாங்கி வைத்துக்கொண்டான். அவனுக்கும் போர் அடிக்கும்ல!
சாப்பாட்டு கடைதேடி அலைந்து திரிந்து கடுப்பாகி.. அறைக்கு திரும்பினோம். இன்னொரு நண்பன் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். அலுவலகத்திலிருந்து மெசேஜ் விடுமுறை என. ஐய்யா ஜாலி என நினைத்துக்கொண்டேன். அறையில் சமைப்பதில்லை. சமைப்பதற்கான எந்த பாத்திரமும் கிடையாது. இருப்பதெல்லாம் நாலு பாய், தலைகாணி, பெட்சீட்டும்தான். மீண்டும் பசித்தது!
கடலை மிட்டாய்தான் இருந்தது. இரண்டை மட்டும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். நண்பர்களுக்கும் கொடுத்தேன். மதியம் நிச்சயம் மழை நின்றுவிடும் எங்காவது சாப்பிடபோய்விடலாம் என நம்பினோம். மழை நிற்கவேயில்லை. பசியை மறக்க நான்குபேரும் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடித்தோம்.
அறைக்குள்ளேயே பேப்பரை சுருட்டி நோட்டுபுத்தகத்தில் கிரிக்கெட் ஆடினோம். சீட்டுக்கட்டை குலுக்கிப்போட்டு விளையாடினோம். சோர்வாகி படுத்தோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீண்டும் ஆளுக்கொரு கடலை மிட்டாயை வாயில் போட்டுக்கொண்டோம். மதியமாக ஆக ஆக பசி அதிகமானது.
மீண்டும் சாப்பாடு வேட்டை. எங்கள் பசியைப்போலவே இப்போது தண்ணீர் இன்னும் இன்னும் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது. சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மழை முன்பைவிட அதிகமாக பெய்ந்துகொண்டிருந்தது. வேறு வழியில்லை. பசிக்கிறது. எங்காவது கடையை தேடி கண்டுபிடித்து சாப்பிட்டே ஆகவேண்டும்.
நண்பன்தான் முதலில் தண்ணீரில் இறங்கினான். மெதுவாக அடியெடுத்து நடக்க.. அவன் காலுக்கு கீழேயிருந்து ஒரு பாம்பு தண்ணீருக்குள்.. அலைகளை எழுப்பியபடி வளைந்து வளைந்து சென்றது.. சென்னைல கூட பாம்பு இருக்குமா? அவ்வளவுதான்.. எங்க படை குலை நடுங்கி அறைக்கே திரும்பியது. ‘’மச்சான் தண்ணீல பாம்பு கடிச்சா கூட தெரியாதுடா.. பக்கத்துல காப்பாத்த ஹாஸ்பிடல் கூட கிடையாது பார்த்துக்க’’..
மாலைக்குள் மழை நின்றுவிடும் என நம்பினோம்.. அதுவரைக்கும் இந்த கடலை மிட்டாயும் கேன்டிமேனும் வைத்து சமாளிக்க நினைத்தோம். ஆளுக்கு சரிபங்காக பிரித்து சாப்பிட்டோம். நான் என்னுடைய பங்கில் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டேன்.
ஒருவேளை இரவுக்கும் உணவு கிடைக்காவிட்டால்? நிஜமாகவே கிடைக்கவில்லை. மழை நிற்கவேயில்லை. பாத்திரங்கள் இருந்தாலாவது சமைக்கலாம்.. அதுவும் இல்லை.. பாத்திரங்கள் இருந்தாலும் அரிசி பருப்பு வாங்க இயலாது.. கடைகள் இல்லை.. யாராவது சென்னை நண்பர்கள் நம்மை அழைத்துவிடமாட்டார்களா.. சாப்பாடு கொண்டுவந்து தரமாட்டார்களா.. அட்லீஸ்ட் விசாரிப்பாவது.. ம்ஹூம்.
தொலைகாட்சி செய்தி பார்த்து பயந்துபோய் வீட்டிலிருந்து அழைத்துவிசாரித்தனர்.. ‘’என்னய்யா சாப்ட்டீயா.. கடையெல்லாம் திறந்திருக்கா.. அவிங்க தின்னாய்ங்களா’’ அம்மா கேட்டாள்.
‘’திறந்திருக்குமா.. சாப்டேன்ம்மா.. நம்ம சுரேந்தர்தான் போயி சாப்பாடு வாங்கிட்டுவந்தான்.. நீ கவலைப்படாதம்மா.. ஆபீஸ் லீவு’’
‘’இல்லப்பா ரோடெல்லாம் தண்ணி வெள்ளமா ஓடுது.. கடையெல்லாம் மூடிட்டாங்க.. பஸ்லாம் கூட ஓடலைனு நியூஸ்ல சொல்றாங்கப்பா..’’
‘’அம்மா.. நாங்க இருக்கற ஏரியா உயரமான இடம்.. அதனால இங்க நார்மலாதான் இருக்கு. நீ கவலைபடாத மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடு உடம்பை பார்த்துக்கோ’’
‘’இல்லப்பா.. எதுனா பிரச்சனைனா சொல்லுப்பா.. முடிஞ்சா ஊருக்கு கிளம்பி வாப்பா.. மனசே கேக்கல.. சாப்பாடு கிடைக்குதாப்பா.. பிரச்சனையில்லயே’’
‘’ஒன்னுமில்லம்மா..’’
என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தபின்தான் தொடங்கியது. ஓவென கதறி கதறி அழவேண்டும் போல இருந்தது. அம்மாவின் கையால் ஒரு பிடி சாப்பிடவேண்டும் போல இருந்தது.
நான்குபேரும் வீட்டில் ஓரே பொய்யை சொன்னோம். பசியைவிட அம்மாவின் குரல் அதிகம் வலித்தது. நிறைய தண்ணீர் குடித்தோம். பசியோ காய்ச்சலோ தனிமையோ சோகமோ துக்கமோ பேச்சிலர்களுக்கு அம்மாவின் குரல்தான் அருமருந்து. அதுமட்டும் இல்லையென்றால் தினம் ஒரு பேச்சிலர் தற்கொலை செய்துகொள்ள நேரிடும்.
விடியட்டும் எல்லாமே மாறிவிடும். மழை ஓய்ந்துவிடும். கடைகள் திறந்துவிடும்.. வயிறுநிறைய சாப்பிடலாம். வசனம் சொல்லி வயிற்றை தேற்றிக்கொண்டோம். இரவெல்லாம் தூக்கமேயில்லை.. மின்சாரமும் இல்லை. பசி மயக்கத்தில் காதடைத்தபோதும் மழையின் கோரமான ஒலி கேட்டுக்கொண்டேயிருந்த்து. எப்போது விடியும் என காத்திருந்தோம். மழை ஓய்வதைப்போலவும் கடைக்குப்போய் சாப்பிடுவதைப்போலவும் கனவு கண்டேன். சோற்றை அள்ளி அள்ளித் தின்றேன். பசியடங்கவேயில்லை. விடிந்தது. மழை ஓயவேயில்லை.
கடலைமிட்டாயும் கேன்டிமேனும்கூட காலியாகிவிட்டிருந்தது. முந்தைய நாளைவிடவும் இப்போது இன்னும் இன்னும் அதிக மழை... அதைவிட அதிகமாய் பசி.. கண் கலங்கி தண்ணீராய் ஊற்றெடுக்கிறது. சாலையில் அதிக வெள்ளம். வீட்டருகிலிருந்து குடிசைகள் மிதந்துகொண்டிருந்தன. இங்கே வசித்தவர்கள் எல்லாம் எங்கே போயிருப்பார்கள்? அதை பற்றி யோசிக்க நேரமில்லை.
மழையாவது வெள்ளமாவது பாம்பாவது.. பச்சோந்தியாவது.. பசிவந்தால் வீரமும் கூடவே வந்துவிடுகிறது. கிளம்பினோம். தண்ணீருக்குள் முங்கி முங்கி.. தெருத்தெருவாக அலைந்தோம். ஒரு கடைகூட இல்லை. டீக்கடைகளும் இல்லை. சாலைகளில் நாங்கள் மட்டும் அநாதைகளைப்போல உணர்ந்தோம். வாடிய முகத்தோடு அறைக்கே திரும்பினோம். மின்சாரமில்லாமல் இருட்டாகிவிட்டிருந்த அறைக்குள் திசைக்கொருவராய் அமர்ந்துகொண்டு.. அமைதியானோம். விளையாட பொழுதுபோக்க தெம்பில்லை. இன்னும் இரண்டு நாள் இப்படியே போனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஊருக்கும் போக முடியாது.. உதவிக்கு யாரை அழைப்பது? அழவேண்டும் போல இருந்தது.
அப்படியே உறங்கிப்போனேன். கனவேயில்லை. மதியம் மீண்டும் விழித்தேன். மீண்டும் தேடுதல்.. இரவாகியும் மழை நின்றபாடில்லை. உதவிக்கு யாருமில்லை. அநாதைகளைப்போல உணர்ந்தோம். அடுத்த நாள் அதே மழையோடு விடிந்தது. மூன்றாவது நாள். அன்றைக்கும் மழை நிற்காவிட்டால் நடந்தே தாம்பரமோ செங்கல்பட்டோ எங்காவது... எங்காவது போய் கிடைப்பதை சாப்பிட முடிவெடுத்திருந்தோம்.
எங்கிருந்தோ ஒரு சாப்பாட்டு வாசனை.. மழை லேசாக ஓய்ந்திருந்தது.
பசியோடிருப்பவனுக்கு சாப்பாட்டு வாசனைதான் மாபெரும் எதிரி. நான்குபேருக்கும் அந்த வாசனை என்னவோ செய்தது. எங்காவது பக்கத்துவீட்டில் சமைத்தால் போய் பிச்சை எடுத்தாவது சாப்பிடலாமா என்கிற எண்ணம் வேறு. கேட்டுவிடுவோமா என்றேன். கேட்கலாம்தான்.. மற்ற மூவருக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. ஆனால் தயக்கம்.
பசி வந்தால் எது பறந்தாலும் மானம் ரோஷத்துக்கு மட்டும் குறைச்சலேயிருக்காது. பேசாமல் அமர்ந்திருந்தோம். நண்பனோ பேசாம பக்கத்துவீடுகள் எங்கயாச்சும் போயி திருடி சாப்பிடுவோமா என்றான். புன்னகைத்தான்.
இன்னும் ஒரு செஷன் பசியோடு கடத்தினோம். மாலையாகிவிட்டது. ஒரு குவளை சோறு கிடைத்தாலும் உயிரையே கொடுக்க தயாராயிந்தோம். மழையின் ஈரமும்.. அலைந்து திரிந்த சோர்வும் பசியை பன்மடங்கு அதிகமாக்கியிருந்தது.
மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. ஆனால் ஏரியாவே இருளில் மூழ்கி கிடந்தது. அந்த சாப்பாட்டு வாசனை இன்னமும் வந்துகொண்டேயிருந்தது. பசிக்குதான் எவ்வளவு மோப்பசக்தி. வாசனை வன்கொடுமை புரிந்தது. என்னால் ஒரு அடிகூட நகர முடியவில்லை. அப்படியே முடங்கி கிடந்தேன். எங்களில் ஒருவன் ‘’எதாவது வாங்கிட்டு வரேன்டா.. மெடிக்கல்ஷாப்பாச்சும் இருக்கும்.. குளுக்கோஸ் பாக்கெட்டாச்சும் வாங்கிட்டுவரேன்.. ஹார்லிக்ஸ் பாட்டிலாச்சும் கிடைக்கும்.. இவனைபாரு செத்துப்போயிடுவான் போல.. இப்படி கெடக்கறான்..’’ என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.
எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.. இரண்டு நாள் சாப்பிடாட்டி யாராச்சும் சாவாங்களா? ஒருவேளை செத்துட்டா.. போஸ்ட் மார்ட்டம் பண்ணுவாங்களா? பிரண்ட்ஸ்மேல கேஸ் போடுவாங்களா? அம்மா அழுவாங்களே.. அது இது என என்னென்னவோ சிந்தனைகள். தனியாக பேசிக்கொண்டிருந்தேன். என்ன பேசுகிறேன் என்று புரியவில்லை. அந்த வாசனை மட்டும் மூக்கிலேயே இருந்தது. அது இப்போது நெருங்கி நெருங்கி வருவதாக உணர்ந்தேன். நண்பன் என்னை உலுக்கினான். ‘’வாடா சாப்பிடலாம்’’ என்றான். கண் முன்னே சாம்பார் சாதம்.. நாலைந்து பொட்டலங்கள் பிளாஸ்டிக் கவரில் இருந்தன.
‘’மச்சி.. பக்கத்துல ஒரு கல்யாணமண்டபத்துல சேரி ஆளுங்கள தங்க வச்சிருக்காங்க போல.. அவங்களுக்கொசரம் தல ரசிகர் மன்றமோ இயக்கமோ.. மொத்தமா சமைச்சி போடுறாங்க.. அதான் வாசனை. நானும் போயி நம்ம நெலமைய சொன்னேன்.. பார்சல் பண்ணி குடுத்தாங்க.. நாளைக்கும் மழை பெஞ்சா வாங்க தரோம்னாங்க’’ என்றான்.
மழை நின்றுவிட்டிருந்தது. நிறைய சாப்பிட்டோம். நிம்மதியாக உறங்கினோம். அதற்குபிறகு அப்படியொரு மழை சென்னையில் பெய்யவேயில்லை.
(புதியதலைமுறை வார இதழுக்காக எழுதியது. நன்றி - புதியதலைமுறை)