Pages
▼
12 November 2013
ஊமைஜனங்களும் பாலாவின் பரதேசியும்
1984ல் வெளியான திரைப்படம் ஊமை ஜனங்கள். அண்மையில் ஜெயாமூவீஸ் சேனல் இப்படத்தை ஒளிபரப்பியது. ''முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பாக்யராஜ்'' என்கிற சிறப்பு செய்தியோடுதான் படம் துவங்குகிறது. அதுவே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்ட போதுமானதாக இருந்தது.
பாக்யராஜ் நடித்த எல்லா படங்களிலுமே அவர் மாறுபட்ட கதாபாத்திரங்களைத்தான் எப்போதுமே செய்திருக்கிறார். மாமூல் ஹீரோவாக அவர் எப்போதும் நடித்ததில்லை (ஓரிரு படங்கள் இருக்கலாம்). பிராமண வேஷமிட்டு அக்ரகாரத்தில் வாழும் தலித்தாக, கிராமத்துக்கு கைக்குழந்தையோடு புதிதாக வருகிற வாத்யாராக, குண்டுபெண்ணை மணந்து மன உளைச்சலுக்காளாகும் காமுகனாக, நண்பர்களோடு சைட் அடிக்கிற வேலைவெட்டியில்லாத ஹீரோவாக (அனேகமாக தமிழின் முதல் வெட்டி ஹீரோ!) , வெட்டி பந்தா கிராமத்து மைனராக என எல்லாமே வித்தியாசம்தான்.
ஆனால் எந்தப்படத்திலும் இப்படியெல்லாம் போட்டுக்கொண்டதில்லை. அதனாலேயே அப்படி என்னதான் இருக்கு பார்ப்போமே என்று பார்க்க ஆரம்பித்தேன். படத்தில் நடித்தவர்களுடைய பெயர்களில் எழுத்தாளர் அறந்தை நாராயணனின் பெயரும் இருந்தது. படத்திற்கு வசனம் பிரபஞ்சன்!
வசனம் மட்டுமல்ல படத்தின் இணை இயக்குனரும் அவர்தான். படத்தில் எக்கச்சக்கமாக இலக்கியவாதிகளின் பங்களிப்பு இருந்திருக்கும் போல.. படத்தை இயக்கியவர் ஜெயபாரதி (குடிசை,நண்பா நண்பா மாதிரி அவார்ட் படங்கள் எடுத்தவர்).
டி.செல்வராஜ் எழுதிய தேனீர் என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதே இது நிச்சயம் அட்டர் ப்ளாப்பான படமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
கம்யூனிச கருத்துகள் அடங்கிய படம் என்பதை படம் தொடங்கிய சில நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடிந்தது. மிகவும் சுமாராகவே எடுக்கப்பட்ட இப்படத்தில் தேயிலை தோட்டத்தொழிலாளியாக தொழிற்சங்கம் தொடங்கி அதன் போராட்டத்தை முன்னெடுக்கிற தோழராக நடித்திருக்கிறார் பாக்யராஜ். வித்தியாசமான விக் வைத்திருக்கிறார் அதற்குமேல் வித்தியாசமில்லை. அவருடைய குரல்தான் அன்னியமாக இருந்தது.
ஆனால் விஷயம் அதுவல்ல.. சில மாதங்களுக்கு முன்பு வெளியான பரதேசிதான் இப்படத்தை பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. எரியும் பனிக்காடு நாவலை அடிப்படையாக கொண்டு உருவானது என்று சொல்லிக்கொண்டாலும் அப்படத்தில் பல மிகமுக்கியமான அடிப்படை பிரச்சனைகள் சரியாக பேசப்படவில்லை என்கிற குறை பலருக்கும் உண்டு. குறிப்பாக இந்தப்படத்தில் பரதேசியில் சொல்லப்படாத பலவும் இருப்பதை கவனிக்கமுடிந்தது. குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் சார்ந்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம்.
கங்காணிகளாலும் வெள்ளை துரைமார்களாலும் தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்த பெண்கள் எவ்விதத்தில் பாதிக்கப்பட்டார்கள் என்பதை எந்த பாசாங்கும் இன்றி நேரடியாக பேசியிருக்கிறது. தேயிலை தோட்டங்களில் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்ட கம்யூனிச தொழிற்சங்க நடவடிக்கைகளை குறித்தும் இத்திரைப்படம் பேசுகிறது. அனேகமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனையை முதன்முதலில் பேசிய தமிழ்ப்படமாக இது இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மலையிலிருந்து தப்பியோடிவிடுகிற அடிமையை பிடித்துவந்து கட்டிப்போட்டு மயங்கி விழும்வரை சவுக்கால் அடித்து, அவனை தேடிப்பிடித்த செலவையும் அவன் கணக்கில் ஏற்றி மீண்டும் வேலை பார்க்க வைக்கிறார்கள்.
திருமணம் கூட அவனை அல்லது அவளை கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா உழைப்பான் நம்ம கடனும் தீரும் என்பதுமாதிரிதான் அணுகுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் அரும்புகிற ஒருகாதலும் கூட படத்தில் உண்டு (ஹீரோ ஹீரோயினுடைய காதல் அல்ல). கங்காணிகளும் அந்த அடிமை வரிசையிலேயே இடம்பெறுகிறார்கள். அவர்களும் எல்லா அடக்குமுறைகளுக்கும் ஆளாகிறார்கள். அதிகாரம் அவரவர் அளவில் இயங்குகிறது. அது துல்லியமாக இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பரதேசி திரைப்படத்தை விடவும் இப்படத்தில் வருகிற தேயிலைதோட்டத்தொழிலாளர்கள் சார்ந்த காட்சிகள் மிகவும் துல்லியமாக பதிவாகியுள்ளதாக தோன்றியது. தேயிலை தோட்டங்களில் மட்டுமல்ல அவற்றை ப்ராசஸ் பண்ணுகிற தொழிற்சாலைகளும் அவற்றில் பணியாற்றுகிறவர்களின் துன்பங்களும் கூட காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முப்பதாண்டுகளுக்கு முன்பே காட்சி ரீதியாக பல விஷயங்களையும் முயற்சி செய்திருக்கிறார் படத்தின் இயக்குனரான ஜெயபாரதி. அவை இன்று பார்க்கும்போது சப்பைமேட்டராக தெரிந்தாலும் அந்த காலகட்டத்திற்கு மிகவும் புதிதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பட்ஜெட் ப்ரச்சனை, காஸ்டிங் குழப்பங்கள் என பலவிஷயங்களில் சிக்கிசீரழிந்துதான் படம் வெளியாகியிருக்கிறதென்பதை பார்க்கும்போதே யூகிக்க முடிகிறது. பாக்யராஜூம் தன் பங்குக்கு ஏதோ குளறுபடிகளை செய்திருக்கிறார் போல தமுஎச தோழர் ஒருவர் இணையதளமொன்றில் புலம்பியிருந்தார்.
இப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் 'தேநீர்'. டி.செல்வராஜின் நாவலை படமாக்க முடிவாகி தமுஎச தோழர்கள் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய இப்படம் துவக்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பட்ஜெட் கைமீறிப்போக முழுவதுமாக பாக்யராஜே படத்தை தன் கையில் எடுத்துக்கொண்டதாகவும் அதற்கு பிறகு பெயர் மாற்றம், சில எக்ஸ்ட்ரா காட்சிகள் என பலதும் சேர்க்கப்பட்டு கடைசியில் படம் எதுமாதிரியும் இல்லாமல் கொடுமையாக வெளியானதாக ஃபேஸ்புக்கில் தோழர் ஒருவர் வந்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இப்படத்தில் நடித்த நாயகியான ப்ரீதாவையே படத்தின் இயக்குனர் ஜெயபாரதி திருமணம் செய்துகொண்டதுதான் படத்தினால் நடந்த ஒரே பலன் என்று குறிப்பிடுகிறார் ஞாநி.
இணையத்தில் படம் குறித்து ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என்று தேடினேன் படத்தின் போஸ்டரும் கூட கிடைக்கவில்லை. யமுனா ராஜேந்திரன் மட்டும்தான் இதைப்பற்றி சில கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டு எழுதி வருகிறார்.
மோசமாக எடுக்கப்பட்டிருந்தாலும் தமிழில் வெளியான அரசியல் படங்களில் இது மிகமுக்கியமான படமாக தோன்றியது. இப்படத்தை பார்க்க மிகுந்த பொறுமையும் தன்னம்பிக்கையும் வேண்டும். அதோடு எதாவது சேனலில் எப்போதாவது திரையிடப்பட்டால் பார்க்கலாம்.