இந்த வண்டி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஓடும் என்று தெரியவில்லை. அல்லது இனி எப்போதும் இந்த வண்டிதானா என்பதும் புரியவில்லை. ஆனால் இப்போதைக்கு இதுதான் நல்ல மகசூலை அள்ளி வழங்கும் அட்சயபாத்திரமாக தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது.
குறைந்த செலவு நிறைந்த வருமானம் என ஒரு நகைச்சுவைப் புரட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். மான்சான்டோ விதைகளைப்போல உடனடி பலன் தரும் இக்காமெடி விதைகள் தமிழ்சினிமாவெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புதிதாக படமெடுக்க வருகிற இளைஞர்கள் கதை திரைக்கதை இருக்கிறதோ நிறைய காமெடியை மட்டும் மூட்டை நிறைய அள்ளிப்போட்டுக்கொண்டு கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதை சரியாக கண்டுணர்ந்து சிவாமனசுலசக்தியின் மூலமாக பிள்ளையார் சுழி போட்ட இயக்குனர் ராஜேஷை நிச்சயம் இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூறவேண்டும். அதற்கு பிறகுதான் வரிசையாக ஹீரோவும் அவனுடைய நண்பனும் சென்ற இடமெல்லாம் பல்பு வாங்கி நிறைய காதலித்து தோல்வியுற்று டாஸ்மாக்கில் குடித்து சோக பாட்டு பாடி காமெடி பண்ணுகிற ஒரு டிரென்ட் உருவானது.
வாராவாரம் இரண்டு காமெடி படங்களாவது இதுபோல ரிலீஸாகிறது. சென்றவாரம்கூட தலைவா தேசிங்குராஜா சும்மா நச்சுனு இருக்கு போன்ற காமெடியர்கள் நிறைந்த காமெடிபடங்கள் ரிலீஸ் ஆனது நினைவிருக்கும். இன்னும் இந்த மாதமே இதுமாதிரி பத்து படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன! அவ்வரிசையில் இப்போது இன்னொன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்துக்கு வசனம் இயக்குனர் ராஜேஷ்... அடடே!
கதை திரைக்கதை மேக்கிங் கலை காவியம் படைப்பு புடைப்பு என்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் குபீர் சிரிப்பை வரவழைக்கிற நாலு ஒன்லைனர்கள் மூன்று காட்சிகள் பிடித்தாலே போதும் வசூலை அள்ளிவிடலாம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இப்படம்.
பல இடங்களில் சிரித்து மகிழவும் மகிழ்ந்து சிரிக்கவும் வாய்ப்புகளை வழங்குகிறது வ.வா.சங்கம். படம் முழுக்க பெரிய ட்விஸ்ட்டுகள் இல்லை விதந்தோத தோதான புதுமைகள் இல்லை, லாஜிக் இல்லை, சமூக அக்கறையெல்லாம் துளிகூட இல்லை... இருந்தாலும் நிறைய காமெடி இருக்கிறது. அதுவே நம்மை மகிழ்விக்க போதுமானதாக இருக்கிறது. குறிப்பாக ஏகப்பட்ட ஒன்லைனர்கள். COUNTER காமெடிகெள். க்யூட்டான ஒரு ஹீரோயின். கிளைமாக்ஸில் யாருமே எதிர்பார்க்காத ஒரு பயங்கர காமெடியான ட்விஸ்ட். ஒரு வெற்றிப்படமெடுக்க வேறென்ன சார் வேண்டும்? அதானே!
படத்தில் பாராட்ட வேண்டிய அம்சம் ஒவ்வொரு பாத்திரத்தினையும் பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பும் சில்லூண்டித்தனமும் இருக்கிறது. அதோடு அவை மிகவும் நெருக்கமாக இருப்பது பாராட்டத்தக்கது. கிராமத்து மனிதர்களின் இயல்பான நகைச்சுவைகளும் படத்தில் உள்ளன.
படத்தில் இரண்டு இடங்கள் நெருடலாக இருந்தது. ஹீரோவின் ஓப்பனிங் காட்சியில் பர்சனல் காரியங்களுக்காக மணல் அள்ளுபவர்கள் மாட்டிவிடுவதற்காக சுற்றுசூழல் பற்றியெல்லாம் பேசுவதாக இருக்கிற காட்சி. பிறகு பெண்குழந்தைகள் படிக்க வேண்டும் அவர்களுக்கு இளம்வயதில் திருமணம் செய்துவைக்க கூடாது என்பதை வலியுறுத்தி நாயகியின் திருமணத்தை நிறுத்துகிற அதே நாயகன் அடுத்த சில காட்சிகளில் அதே பெண்ணை சேலையில் பார்த்ததும் காதலில் விழுந்து அப்பெண்ணை இழுத்து கொண்டு ஊரைவிட்டு ஓடுவது (படிப்பு?) காமெடியாக இருந்தது. படத்தின் ஹீரோவுக்கு எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலையற்று இருக்கிறார்.
இப்போதெல்லாம் சினிமாவில் ஹீரோவோ மற்ற பாத்திரங்களோ கருத்து சொல்ல ஆரம்பித்தால் ''நீ பொத்து'' அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ எதுக்கு வந்தியோ அத மட்டும் பாரப்பா.. என்கிற எதிர் குரல் ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. அதன் வெளிப்பாடாக கூட இது இருக்கலாமோ என்னமோ? ஆனால் எத்தனையோ முரண்கள் இருந்தாலும் படத்தின் வீசுகிற காமடிப்புயலில் சகலமும் மீறல்களும் கரைந்து போகின்றன.
படமெங்கும் சிவகார்த்திகேயனும் பரோட்டா சூரியும் நிறைந்திருக்கிறார்கள். பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சத்யராஜூம் அவருடைய நண்பர்களும் பேசிகொண்டேயிருக்கிறார்கள். திடீரென படத்தின் சில இடங்களில் பசங்க படத்தையே பெரியவர்களை வைத்து எடுத்துட்டாரோ டைரக்டர் என்கிற எண்ணமும் உண்டானது.
குடும்பத்தோடு பார்த்து ரசிக்க ஜாலியான படம்தான் இது. என்றாலும் இதுபோன்ற படங்கள் மட்டுமே தொடர்ச்சியாக வெற்றிபெறுவது கொஞ்சம் அச்சமூட்டவே செய்கிறது. மலையாளத்திலும் தெலுங்கிலும் எத்தனை விதமான வித்தியாசமான படங்கள் வந்துகொண்டிருக்கிறன்றன. மேக்கிங்கிலும் கதையமைப்பிலும் உலக தரத்தை எட்டிக்கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் அதே பழைய காமெடி ரெகார்டையேதான் தேய்த்துக்கொண்டிருக்கிறோம்.
இருந்தாலும் வேறு வழியில்லை... இது மகிழ்ச்சி மாண்சான்டோவாகவே இருந்தாலும் நம் கோலிவுட்டின் அகோரபசிக்கு இதுவாவது கிடைக்கிறதே என்று மகிழ்ந்துக்க வேண்டியதுதான்.
(படம் குறித்து ஒரே ஒரு வருத்தம்தான்.. வடிவேலுவுக்கோ சுந்தர்சிக்கோ ஒரு நன்றி போட்டிருக்கலாம் ஆயிரம்தானிருந்தாலும் இது அவங்க வளர்த்த சங்கமில்லையா பாஸ்?)