Pages

30 September 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்!




‘’பலவழிகளில் ஒரு விமர்சகனின் வேலை மிகவும் சுலபமானது. இதற்காக நாங்கள் எடுக்கிற ரிஸ்க் மிகமிகக் குறைவானதே!

எங்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுகிற படைப்பையும் படைத்தவர்களையும் மதிப்பிட்டு தீர்ப்பு வழங்குகிற இடத்தில் இருப்பதும், அது தரும் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்களாகவே நாங்கள் எப்போதும் இருக்கிறோம்.

எதிர்மறை விமர்சனங்களால் நாங்கள் செழித்து வளர்கிறோம். அவைதான் எழுதவும் வாசிக்கவும் உற்சாகமளிப்பதாகவும் உல்லாசமாகவும் இருக்கிறது.

ஆனால் விமர்சகர்களாகிய நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய மோசமான உண்மை ஒன்று இருக்கிறது, அது எங்களுடைய விமர்சனங்களை காட்டிலும் மோசமாக படைக்கப்பட்ட ஒரு குப்பை கூட அதிக அர்த்தப்பூர்வமானது.

புத்தம் புதிதான ஒன்றை கண்டறியும்போதும் அதற்காக அதன் சார்பில் வாதிட நேரிடும்போதும் ஒரு விமர்சகன் நிஜமாவே தன்னுடைய அனைத்தையும் பணயம் வைக்க வேண்டிய சூழல் ஒன்று உருவாகிறது. இந்த உலகம் எப்போதுமே புதிய முயற்சிகளுக்கும் புதிய படைப்புகளுக்கும் அனுசரணையாக இருந்ததேயில்லை. இந்த புதிய படைப்புகளுக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்.

நேற்று இரவு எனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. ஓர் அற்புதமான உணவை எதிர்பாராத ஒரு பின்னணியிலிருந்து சாப்பிட்டேன். அந்த உணவை சமைத்தவரும் அந்த உணவும் அற்புதமான சமையல் என்பதற்கான என் சகல முன் அனுமானங்களுக்கும் சவால் விடுவதாக இருந்தது. என்னுடைய ஆழங்களையும் அவை அதிரவைத்தன’’

- ‘’ Ratatouille’’ என்கிற அனிமேஷன் படத்தின் இறுதிக்காட்சிக்கு சற்றுமுன்னர் படத்தில் வருகிற உணவு விமர்சகர் ANTON EGO எழுதும் அல்லது வாசிக்கும் வாசகங்கள் இவை.

****

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்துவிட்டு வந்து 24நான்கு மணிநேரங்களை கடந்துவிட்டேன். இன்னமும் மீளமுடியாத ஒரு துயரம் உள்ளுக்குள் நிறைந்திருக்கிறது. அது எனக்குள் எங்கோ இன்னமும் ஆறாமல் மிஞ்சியிருக்கிற ஒரு காயத்தை தூண்டி வலிக்கச்செய்கிறது.

அவ்வப்போது நினைவிலிருந்து ஒலிக்கும் இளையராஜாவின் பின்னணி இசை கண்களில் நீர்க்கோர்க்க வைக்கிறது. இப்படம் தமிழ்சினிமாவில் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்று. சினிமாவை நேசிக்கிற ஒவ்வொருவரும் பார்க்கவும் வரவேற்கவும் ரசிக்கவும் வேண்டிய ஒரு திரைப்படமாகவும் இது இருக்கிறது.

நான் செய்ய நினைத்ததை கொஞ்சமும் சமரசமின்றி செய்திருக்கிறேன் பார் என்பதன் கர்வத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் உணர முடிகிறது. படம் நெடுக அவ்வளவு மெனக்கெடல். மிகமிக நுணுக்கமாக எழுதப்பட்ட திரைக்கதையின் நேர்த்தி. மிகச்சிறிய பாவனைகளிலும் அதிரவைக்கிற நடிகர்களின் PRECISION. படம்நெடுக இரவையும் பாத்திரமாக்கி மஞ்சள் உடைக்கு மாற்றி உலவ விட்டிருப்பதன் செய்நேர்த்தி. இப்படி படம் குறித்து இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

படத்தின் டைட்டில்கார்டில் ஒரே ஒரு பெயர்தான் காண்பிக்கப்படுகிறது. அது இளையராஜா!. ஒரு நல்ல கலைஞனை இதைவிட யாரும் கௌரவித்துவிட முடியாது. படத்தின் ஆறு இடங்களில் சிலிர்க்கவைத்திருக்கிறார் இளையராஜா. முதல் காட்யில் சாலையோரம் கிடக்கும் மிஷ்கினின் உடலை வண்டியில் வைத்துக்கொண்டு ஸ்ரீ பயணிக்கிற காட்சி, ஸ்ரீயோடு மிஷ்கின் டிரெயினில் தப்பித்துச்செல்லும் காட்சி, பார்வை குறைபாடுகொண்ட பெண்ணோடு ஸ்ரீ மற்றும் காவல்துறை அதிகாரியோடு மறைவான இடம்திரும்பும் இடைவேளைக்கு முந்தைய காட்சி என இன்னும் படம் நெடுக இளையராஜா தொடர்ச்சியாக அதிரவைக்கிறார். (மீதிமூன்றையும் சொன்னால் ஒரு நல்ல த்ரில்லரை கொன்ற பாவியாகிவிடுவேன்)

படத்தின் பின்னணி இசை முன்பே வெளியாகிவிட்டது. அவற்றையெல்லாம் தனித்தனியாக தரவிறக்கி கடந்த பத்துநாட்களாக அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தாலும் திரையில் அக்காட்சியோடு பார்க்கும்போது... அது உண்டாக்குகிற தாக்கமும் துக்கமும் அளவிடமுடியாதது. வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

இரண்டு மெழுகுவர்த்திகளுக்கு முன்னால் அமர்ந்தபடி தன்னுடைய முன்கதையை கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தபடி சொல்லும்காட்சியில் மிஷ்கின் என்கிற அற்புதமான நடிகன் வெளிப்படுகிறார்.

கிளைமாக்ஸுக்கு முன்பு வரைக்கும் நாயகனின் ஃபிளாஷ்பேக் இடம்பெறவேயில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் அந்த சுடுகாட்டில் ஒரு பார்வையில்லாத சிறுமி ‘’எட்வர்ட் அண்ணா ஒரு கதை சொல்லு’’ என்று மிஷ்கினிடம் கேட்கிறாள். இதுவரை நாம் பார்த்த படங்களில் நாயகன் இதுமாதிரி சூழலில் பாட்டுப்பாடத்தொடங்கிவிடுவான்.. ‘’என்னை கதை சொல்லச்சொன்னா என்ன கதை சொல்லுறது…’’ என்று எத்தனை பாட்டுகள் கேட்டிருக்கிறோம். ஆனால் மிஷ்கின் குழந்தைக்கு கதைதான் சொல்லத்தொடங்குகிறார்.

அக்கதையையும் அதன் பாத்திரங்களையும் பார்வையாளனின் கற்பனைக்கு திறந்துவிடுகிறார். ஈசாப் பாணி கதையாக அது அமைந்திருக்கிறது. ( மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களை கொண்டு புனைந்து எழுதப்பட்டவைதானே ஈசாப் கதைகள்!). படத்தின் கதைகூட ஒநாய் நனைகிறதே என ஒரு ஆடு அழுகிற கதைதான்!

அறிவுஜீவிகள் மத்தியில் நம் திரைப்படங்கள் மீது வைக்கப்படுகிற விமர்சனம் என்னவாக இருக்கிறது. ‘’திரைப்படங்கள் இருட்டு அறையில் பார்வையாளனை எதையும் கற்பனை செய்ய விடாமல் எல்லாவற்றையும் காட்சிப்படுத்துகிறது’’ என்பதே. ஆனால் அதற்கு நேர்மாறாக மிஷ்கினின் கதை கேட்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கற்பனைகளுக்குள் புகுந்துகொள்கின்றனர். அது அவர்களுக்கு வெவ்வேறுவிதமான பாதிப்புகளை உண்டுபண்ணுகிறது. திரையரங்கில் சிலர் சிரிப்பதையும் சிலர் உறைந்துபோய் அமர்ந்திருந்ததையும் சிலர் கண்களை துடைத்துக்கொண்டதையும் கவனிக்க முடிந்தது. படம் முழுக்கவே இதேமாதிரியான பாணியிலேயே திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அது ஸ்ரீயின் போதைப்பழக்கத்தில் தொடங்கி,எட்வர்ட் யார்,திருநங்கை எப்படி இவர்களோடு இணைந்தாள்,மிஷ்கினுக்கு உதவும் அந்த இந்திக்கார போன்நண்பன் யார் என்பதாக விரிகிறது. எல்லாமே நாமாக யூகிக்கும் வாய்ப்பை தருகிற விஷயங்கள்.

டாகேஷி கிட்டானோவின் படங்களின் பாதிப்பில்லாமல் மிஷ்கின் படமா!. இப்படத்திலும் அப்பாதிப்பை நிறையவே உணர முடிந்தது. குறிப்பாக உல்ஃப் என்கிற அந்த நாயகனின் பாத்திரம் ஜப்பானின் யகூஜா வகை கிரிமினலாக படைத்திருப்பதையும், அந்த வில்லன் பாத்திரம் அவ்வகை யகூஜா கூட்டங்களின் தலைவனைப்போலவும் உருவாக்கியிருந்ததை உதாரணமாகச்சொல்லலாம். இருப்பினும் மிஷ்கின் தனக்கென்று ஒரு திரைமொழியை கொண்டிருக்கிறார். அது மிகவும் தனித்துவமானதாக இருக்கிறது.

டாரன்டினோ தன் ஒவ்வொரு படங்களிலும் ஒரு உலகத்தை உருவாக்கி அதில் தனக்கு வேண்டியவர்களையும் வேண்டாதவர்களையும் இஷ்டப்படி ஆட்டுவிப்பாரே அதுபோலவே மிஷ்கினும் தனக்கென்று ஒரு உலகை சிருஷ்டித்துக்கொள்கிறார். அதில் கொடூரமான வில்லன் பைபிளை நேசிப்பவனாக இருக்கிறான். அவ்வளவு பிரச்சனையிலும் கதைகேட்க துடிக்கிற குழந்தைகள் இருக்கின்றன. சாவு வீட்டில் இருந்தபடி ஆபரேசனுக்கு உதவும் மருத்துவர் இருக்கிறார். மிஷ்கினின் உலகத்தில் சென்னை முழுக்க இரவில் சாலைகளில் அவருடைய பாத்திரங்கள் மட்டும்தான் உலவுகின்றனர்.

ஒவ்வொரு ஆளாக ஓடிப்போய் அடிவாங்குவது, ஆட்கள் நகர்ந்தபின்னும் கேமரா வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டு காத்திருப்பது, எது பேசுவதாக இருந்தாலும் கொஞ்சம் PAUSE விட்டு காத்திருந்த பேசுவது என மிஷ்கின் டைப் விஷயங்கள் இல்லாமல் இல்லை. சொல்லப்போனால் மிஷ்கினின் முந்தைய படங்களில் இருந்த எல்லா விஷயங்களும் இப்படத்திலும் இருக்கிறது. குறிப்பாக பாத்திரங்கள். ரவுடிகளால் பாதிக்கப்படும் மர்மமான மிடில்கிளாஸ் குடும்பம், சீனியரிடம் திட்டுவாங்கி எரிச்சலோடும் ஆதங்கத்தோடும் திரியும் காவல் அதிகாரி,முட்டாள்களோடு வெறிபிடித்தலையும் வில்லன்கள்,எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவும் பைத்தியக்காரன் என இன்னும் நிறையபேரை சொல்லலாம். இவர்களை மிஷ்கினின் உலகில் எப்போதும் பார்க்க முடியும்.

தமிழ்சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு மிகக்குறைவான தூரத்தில் ஓடி ஓடி நடித்தது மிஷ்கின் படத்தில் நடித்தவர்களாகத்தான் இருக்கும். படம் முழுக்க ஆளாளுக்கு குபீர் குபீர் என ஒன்றரை மீட்டர் தூரமாக இருந்தாலும் ஓடுகின்றனர்.

அதுவே படத்தின் முக்கிய பாத்திரத்தில் வருகிற ஷாஜிக்கு மிகப்பெரிய சிரமத்தை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அவருக்கு நல்ல நீளமான கால்கள்! குறைவான தூரத்தை ஓடிக்கடப்பதில் மிகவும் சிரம்பபடுகிறார். ஆனால் மிகமிக அற்புதமான குரல் ஷாஜிக்கு! மேடைகளில் அவருடைய பேச்சை கேட்கும்போதே அக்குரலுக்கு மயங்கியிருக்கிறேன். படத்தின் ஆரம்ப காட்சிகளில் அவருடைய உடல்மொழியும் குரலும் பேச்சுவழக்கும் AWKWARD ஆக இருந்தாலும் போகப்போக பிடித்துப்போகிறது. குறிப்பாக கமிஷனர் அலுவலகத்தில் அவர் பேசுகிற மிகநீண்ட வசனம்… தியேட்டரில் விசில் பறக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு எழுத்தாளனுக்கு வாசகன் விசில் அடிப்பது இதுவே முதல்முறையாக இருக்குமென்று நினைக்கிறேன். (அது WRONG REASONகளுக்காக இருந்தாலும்!)

படத்தில் நடித்திருக்கும் திருநங்கை கிளாடி,பார்வையற்ற பெண்ணாக வருகிற அந்த பெயர் தெரியாத நடிகை,இன்ஸ்பெக்டர் பிச்சையாக வருகிற ரகு என பலரும் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளனர். இவர்களோடு மிகவும் ரசித்தது ஆட்டுக்குட்டி ஸ்ரீதான்! படம் முழுக்க மாறிமாறி வரும் எத்தனைவிதமான முகபாவனைகள்! வழக்கு எண் படத்தில் நடித்ததை விட பன்மடங்கு முன்னேற்றங்காட்டுகிறார். கல்லறையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு காவலர்களை மிரட்டும் காட்சியில் உச்சம் தொடுகிறார்.

படத்தில் குறைகள் என்றால் அனேக காட்சிகளில் கிடைக்கிற சின்ன சின்ன தர்க்கப்பிழைகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டியதாயிருக்கும். ஆனால் இது இயக்குனரின் படம். படம் முழுக்க அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரே சிருஷ்டித்த உலகில் படம் இயங்குகிறது. அப்பிழைகளை வேண்டுமென்றேதான் அவர் செய்திருக்கிறார். அது ஒரு சிறந்த கலைஞனின் கர்வத்திலிருந்து பிறந்ததாக இருக்கிறது. என்னுடைய படங்களில் இது இப்படித்தான் இருக்கும் என்கிற உறுதியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

படம் முழுக்க பைபிளும் பைபிள் சார்ந்த விஷயங்களும் (REDEMPTION, பாவமன்னிப்பு…ETC) குறியீடுகளாக எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் அது எவ்வகையிலும் பார்வையாளனை தொந்தரவு செய்யாத வண்ணம் திரைக்கதையோடு பின்னிபிணைந்திருக்கின்றன (SKYFALL படத்தில் இவ்விஷயம் சிறப்பாக கையாளப்பட்டிருக்கும். மிஷ்கினின் படத்திலும் SKYFALL படத்தின் பாடல் ஓரிடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது!).

இந்த எளிமைதான் படம் சாதாரண எளிய பார்வையாளனையும் கவர்ந்திருக்கிறது. அவனுக்கும் படம் புரிகிறது. அவனும் படத்தோடு இணைந்து ரசிக்கிறான். சிரிக்கிறான். அழுகிறான். படம் தொடங்கிய சில நிமிடங்களில் துவங்கும் பரபரப்பு படத்தின் இறுதிவரை நீடிக்கிறது. அதுதான் வெகுஜன ரசிகனையும் ஈர்ப்பதாக இருக்கிறது. இருந்தும் ஏனோ திரையரங்குகளில் மிகக்குறைவான காட்சிகள்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் மொழியும் அணுகுமுறையும் திரைக்கதை பாணியும் தமிழ்சினிமாவுக்கு மிகவும் புதியது. நம்மை அதிரவைப்பது. இந்த உலகம் எப்போதுமே புதிய முயற்சிகளுக்கும் புதிய படைப்புகளுக்கும் அனுசரணையாக இருந்ததேயில்லை. இந்த புதிய படைப்புகளுக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்.