தன் பால்யத்தில் எதையுமே விரும்பாத மகேஸ்வரி அக்கா, இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் பார்ப்பதையெல்லாம் லைக்கிக்கொண்டிருக்கிறாள். நேற்று தலப்பாக்கட்டு பிரியாணி கடையை கடக்கும்போது கண்ணில் தெரிந்த லெக்பீசில் மகேஸ்வரி அக்காவின் முகம் அனிச்சையாக வந்துபோனது.
ராஜேந்திரன் சித்தப்பாவின் ஒன்றுவிட்டசகோதரனின் மனைவியின் அக்கா கணவரின் அண்ணன் மகன் சதிஷை மகேஸ்வரி அக்கா மிகவும் காதலித்தாள். வாழ்க்கை விசித்திரமானது அது ஷாருக்கானை காதலித்தாலும் சதிஷில் த்ருப்தி அடையும். ஹன்சிகாவை ரசித்தாலும் அம்சாவுக்கே லெட்டர் கொடுக்கும்.
கொய்யாப்பழங்களை எப்படி உரித்து சாப்பிடமுடியாதோ அதுபோலவே மகேஸ்வரி அக்காவின் வாழ்க்கையும் சிக்கலாக இருந்தது. இன்னமும் நினைவிருக்கிறது மகேஸ்வரி அக்காவுக்கு லவ்லெட்டர் கொடுத்து உதைவாங்கிய மகேஷின் முகம்.
மகேஸ்வரி அக்கா சந்தோஷமாக இருந்த நாட்களில் தெருவோரம் ஒருவன் குச்சி ஐஸ் விற்க வேண்டியிருந்தது. இன்னொரு தெருவோரம் ஒருவன் சிக்கன் பக்கோடாவுக்கு மாவு பிசைய வேண்டியிருந்தது. இன்னொருதெருவோரம் ஒருவன் பிஞ்சுமாங்காயில் உப்பும் மிளகாயும் போட வேண்டியிருந்தது. இன்னொரு தெருவோரம் ஒருவன்...
மழைபெய்தால் மகேஸ்வரி அக்கா நினைவுக்கு வந்துவிடுவாள். ஏனென்றால் மானாவுக்கு மானா போட்டு எழுதும்போது தானாக ஒரு கிக் வந்துவிடுகிறதே. மகேஸ்வரி அக்காவோடு பெருமாள் கோவிலிருந்து வாங்கித்தின்ற பொங்கலும் புளியோதரையும் நாவோரம் இனிக்கிறது.
இந்த புளியோதரைக்கான புளி எந்த மரத்தில் காய்த்திருக்கும். அந்த மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிய குழந்தைகளுக்கு தெரியுமா இம்மரத்து புளியில் செய்த புளியோதரையை மகேஸ்வரி அக்கா சாப்பிடுவாள் என்று. இந்த பொங்கலில் தித்திக்கும் வெல்லம் எந்த குண்டாவில் கிண்டப்பட்டிருக்கும்.
கிண்டும்போது சிந்திய வியர்வையின் உப்பு எங்கோ அடிமனதில் கரிக்கிறதே. கறுக் சுறுக் என்று கடிக்கும்போது பல்லிடுக்கில் சிக்கிக்கொள்ளும் மிளகைப்போல அவ்வப்போது மகேஸ்வரி அக்காவைப்பற்றிய நினைவுகளும் வந்துபோகும். குச்சி ஐஸை சப்பிசப்பி தின்றபின் வெறுங்குச்சியை யாரும் வீட்டுக்கு கொண்டுபோவதில்லை. அதுபோலவேதான் மகேஸவரி அக்காவின் நினைவுகளும்.
அண்ணாச்சிகடை தராசில் எடைப்போடப்படும் பெருங்காயத்தைப்போல மகேஸ்வரி அக்காவும் தன் கவலைகளை எப்போதும் எடைபோட்டபடி இருப்பாள். முட்டைபிரியாணியில் பீஸ் இருந்தால் வேண்டாம் என்றா சொல்வோம் அதுபோல மகேஸ்வரி அக்காவின் வாழ்க்கையிலும் எண்ணற்ற திருப்பங்களை கடக்க வேண்டியிருந்தது. ரங்கநாதன் தெருவின் பரபரப்பாய் அமைந்துவிட்ட தன் வாழ்க்கையில் மகேஸ்வரி அக்கா போட்டதெல்லாம் பழைய இரும்பு வாங்கியதெல்லாம் நிறைய பேரீச்சம்பழம்.