Pages

21 August 2013

இலிப்பூச்சி ஃப்ரை!





நேற்று பெசன்ட்நகர் கடற்கரையோரம் ஒரு அற்புதமான கடல் உணவு வாங்கிக்கொடுத்தார் தோழர் கவின்மலர். இலிபூச்சி ஃப்ரை என்கிற அது குட்டி குட்டி நண்டுகளை கொண்டு செய்யப்படுவது என்றார். அவருடைய தோழி ஒருத்தி அறிமுகம் செய்துவைத்ததிலிருந்து இந்தப்பக்கம் வந்தாலே இந்த இலிபூச்சி ஃப்ரையை ஒரு கை பார்க்காமல் போவதில்லை என்றார். இந்த இலிபூச்சியை பார்க்க கொஞ்சம் பெரிய சைஸ் கரப்பான்பூச்சிப்போலத்தான் இருந்தது. பார்த்ததும் பிடிக்கவில்லை.

இலிப்பூச்சியா? இழிபூச்சியா? எல்லிப்பூச்சியா? எலிப்பூச்சியா? அந்த பிராணியின் பெயர் எதுவென்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஃப்ளக்ஸ் போர்டில் MINI CRAB என்று எழுதப்பட்டிருந்தது. நண்டுபோலவும் இல்லாமல் கடம்பா மீன் போலவும் இல்லாமல்.. புதுமாதிரியாக இருந்தது இந்த இலிபூச்சி. பெயர் எதுவாக இருந்தால் என்ன? நமக்கு ருசிதானே முக்கியம்.

முதலில் அந்த இலிபூச்சி ஃப்ரையை கண்டு தயங்கினாலும் தோழரின் வற்புறுத்தலின் பேரில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பீஸை எடுத்து வாயில் போட்டேன். ஆஹா அமிழ்தினும் இனிய சுவை. அப்படி ஒரு அற்புத ருசி இலிபூச்சி என்கிற இந்த மினிநண்டுக்கு இருக்கிறது. கொஞ்சம் லேசான மொறுமொறுப்போடு கூடிய சுவையான ஓடுகள் மத்தியில் லேசான சதை... உப்பும் காரமும் தூக்கலான மசாலா...

ஆரம்பத்தில் இதை சாப்பிடலாமா வேண்டாம என்கிற தயக்கத்தில் ஒரு பிளேட்தான் ஆர்டர் செய்திருந்தோம். ''ஷேர் பண்ணிக்கலாம் தோழர்'' என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால் கடைசியில் முக்கால்வாசிக்கும் மேல் நானே காலி பண்ணிவிட்டேன். இக்கடையில் ஏதோ ஸ்பெஷல் மசாலா உபயோகிக்கிறார்கள் போல. காரசாரமாக இருந்தது. குடிவெறியர்களுக்கு அருமையான துணையுணவாக இருக்குமென்று தோன்றியது. குறிப்பாக சுண்டகஞ்சி மாதிரியான கடல்சார் மதுவகைகளுக்கு மிகச்சிறந்த துணையுணவாக இருக்கும்.

பெசன்ட்நகர் கடற்கரையோரம் இருக்கிற இந்தக்கடை மிகவும் பிரபலம் என்று தெரிந்தது. குறிப்பாக இலிபூச்சி ஃப்ரைக்காகவே மிகவும் ஃபேமஸ் என்றார் கடைக்காரர். அதோடு பல நடிகர்கள் குறிப்பாக அப்பாஸ் பிரபுதேவா முதலானோர் இரவு பதினோறு மணிக்குமேல் வந்து பார்சல் வாங்கிக்கொண்டு போவார்களாம். சிலர் தங்களுடைய வீட்டு விருந்துகளுக்கு குறிப்பாக குடிவிருந்துகளின் போது நபருக்கு ஆயிரம் ரூபாய் என்கிற கணக்கில் கடலுணவு ஆர்டர் பண்ணுவார்களாம்!

இக்கடையில் இலிபூச்சி தவிர்த்து மற்ற பல வகை மீன ஃப்ரைகளும் கிடைக்கிறது. கடலுணவுகளில் எனக்கு மிகவும் பிடித்த கடம்பா ஃப்ரையும், இறால் பொறியலும் ஒரு கை பார்த்தோம். அதற்கே வயிறு நிறைந்துவிட்டது. நல்ல சுவையான வஞ்சிரம் மீனும் கிடைக்கிறது. ஒரு பீஸ் நூறுரூவாயாம்! கிழங்கா,வவ்வால்,அயிலை முதலான மற்ற வகை மீன்களும் கிடைக்கின்றன. அவை ஒருபிளேட் ஐம்பதுரூபாய்தான்.

பீச்சாங்கரையோரம் இருக்கிற அனேக மீன் வறுவல் கடைகளுக்கு மத்தியில் இருக்கிறது இம்மீன் உணவுக்கடை. மனதில் பதிகிற மாதிரி ஒரு அடையாளம் சொல்ல வேண்டுமென்றால்... ''கனிமொழி மீன் வறுவல்'' கடைக்கும், ''பூஜா மீன்வறுவல் கடை''க்கும் நடுவில் இருக்கிறது அந்த மீன்வறுவல் கடை. கடையின் பெயர் ஆண்பெயர் என்பதால் எப்போதும் போல நினைவில் இல்லை. புவனோ பவனோ யுவனோ..ஏதோ ஆண்பெயர்.

பெசன்ட்நகர் பீச்சாங்கரை பக்கம் போனால் இந்த இலிபூச்சி ஃப்ரையை மிஸ்பண்ணிவிடாதீர்கள்.