அனந்தன்நாயர் திருவனந்தபுரம் தெருக்களில் நடந்து சலித்து புத்தகத்திலிருந்து குதித்து மனது முழுக்க இன்னமும் சுற்றிக்கொண்டேயிருக்கிறார். திருவனந்தபுரம் தெருக்களும் பத்மநாபஸ்வாமி கோயிலும் சாலை பஜாரும் பழவங்காடி பிள்ளையார் கோயிலும் மனதை விட்டு அகலமறுக்கின்றன. உடனே டிரைனை பிடித்து திருவனந்தபுரத்தை ஒரு ரவுண்டு சுற்றிவிட்டு வரலாம் என்று தோன்றுகிறது.
நீல.பத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம் நாவல் முழுக்க முழுக்க திருவனந்தபுரத்தின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. அவ்வூரின் அனந்தன்நாயரின் இரண்டுநாட்களே முழுநாவலும்! (ஆனால் நாவலில் எங்குமே திருவனந்தபுரம் என்கிற சொல் பயன்படுத்தப்படவில்லை!)
தன்னுடைய ஐம்பவதாவது பிறந்தநாளில் விடியற்காலையில் கோயிலுக்கு செல்வதில் தொடங்கும் நாவல் அடுத்தநாள் இரவு முடிகிறது. இதன் நடுவே அனந்தன் நாயர் கடக்கிற மனிதர்களும் இடங்களுமாக அவருடைய வாழ்க்கை சொல்லப்பட்டுள்ளது. முழுபுத்தகமும் அனந்தன் நாயரின் மனவோட்டங்களால் நிறைந்திருக்கிறது. அவருடைய பார்வையிலேயே திருவனந்தபுரமும் அதன் மனிதர்களும் அனந்தன்நாயரின் ஐம்பதாண்டுகால வாழ்க்கையும் வெவ்வேறு சம்பங்களின் ஊடாக முன்பின்னாக சொல்லப்படுகிறது.
உடைத்து உடைத்து சம்பவங்களை சொல்வதால் இதனால் உண்டாகும் கால இடைவெளியை படிக்கிற நாமே நிரப்பத்தொடங்கி விடுகிறோம். இது மிகவும் பழையபாணி என முன்னுரையில் எழுதியிருக்கிறார் சுகுமாரன்.
அனந்தன் நாயர் திருவனந்தபுர சமஸ்தானத்தில் சாதாரண குமாஸ்தாவாக இருக்கிறார், அவருடைய அழகிய மனைவி கார்த்தியாயினியின் மேல் மோகம் கொள்கிறான் உயர்பதவியிலிருக்கிற விக்கிரமன்தம்பி. அவன் கார்த்தியாயினியை முன்னிட்டு வீட்டுக்கு வருவதும் அடிக்கடி குடும்பத்தினரோடு ஈஷிக்கொண்டு திரிவதுமாக இருப்பது அனந்தன் நாயருக்கு எரிச்சலை கொடுக்கிறது. ஒருகட்டத்தில் கார்த்தியாயினி விக்கிரமன் தம்பியை மணம்முடித்துக்கொண்டு தனியாய் சென்றுவிட, பதினைந்தாண்டுகள் ஒருமகனையும் மகளையும் தனியாக வளர்த்து ஆளாக்குகிறார் அனந்தன்நாயர். இந்த நாட்களில் ஒரு சன்னியாசியைப்போலொரு வாழ்க்கையை மேற்கொள்கிறார்.
கார்த்தியாயினியின் செயலை பாவமாகவும், தன்னுடைய இந்த வாழ்க்கையை ஒரு தியாகமாகவும் நினைத்துக்கொண்டு அதை மிகப்பெருமையாக கருதுபவராகவும் இருக்கிறார். அதை நியாயப்படுத்துகிற விதத்திலேயே எல்லா பிரச்சனைகளையும் அணுகுகிறார்.
ஆனால் அவருடைய வாழ்க்கை வேறுமாதிரி இருக்கிறது. கார்த்தியாயினியின் அழகும் அதனால் உண்டான இயல்பான பயமும் விக்கிரமன் தம்பியை எதிர்க்கமுடியாத இயலாமையும் அவரை ஒரு மிருகமாக மாற்றுகிறது. அதன் விளைவால் தொடர்ந்து கார்த்தியாயினியை ஒடுக்குவதிலும் அவள்மேல் வன்முறையை பிரயோகிப்பதுமாக இருக்கிறார் அனந்தன்நாயர். ஆனால் இறுதிவரை தன்னுடைய செயலை நியாயப்படுத்த கார்த்தியாயினியை மோசமானவளாக சித்திரிக்கவே அனந்தன் நாயரின் மனம் முயல்கிறது. (மகனுடனான வாக்குவாதத்தில் கார்த்தியாயினி விக்கிரமன் தம்பியோடு சென்றபிறகும் வேறுவழியின்று வேற்று ஆணோடு உறவிலிருக்க நேர்ந்த்தையெல்லாம் கூட குறிப்பிட்டு தன்னை தியாகியாக்க முயல்வது குறிப்பிடத்தக்கது)
இரண்டு வெவ்வேறு காலங்கட்டங்களில் வாழ்கிறவராக அனந்தன் நாயரும் திருவனந்தபுரமும் இந்நாவலில் வருகின்றன. மன்னராட்சி காலத்தில் கோலகலமாக தினமும் ஆயிரம் பேருக்கு பத்மநாபசுவாமி கோயிலில் சோறுபோட்டு வளர்ந்த ஊர், மன்னராட்சி வீழ்ந்து மக்களாட்சி காலத்தில் தன்னுடைய பெருமைகளை இழந்து ஒரு புதிய மாற்றத்துக்கு தயாராகிறது.
மன்னரின் சமஸ்தானத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த அனந்தன்நாயரும் மாற்றத்தினால் வேலைபோய் ஒரு செட்டியார் கடையில் கணக்கராக வேலைபார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதோடு பழைய பஞ்சாங்கமான சாதிப்பெருமைகளும், அரசியலும், குடும்பு உறவு சிக்கல்களும் என சகமும் கண்முன்னே மாறிக்கொண்டிருக்க அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார் அனந்தன்நாயர். அவரைப்போலவே அந்நகரமும் தவியாய் தவிப்பதை உணர்கிறார். மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் மாங்கு மாங்கென்று நடையாய் நடந்து உம் உம் உம்.. என பெருமூச்சுவிடுகிறார் அனந்தன் நாயர்... அவரோடு அந்நகரமும் புதியமாற்றத்தின் சுமையால் மூச்சுதிணறுகிறது.
நமக்குள் இருக்கிற ஒரு மிக சாதாரண எளிய மனிதனின் மிகையில்லா சித்திரிப்பாக அனந்தன் நாயரை கருதலாம். ஒரு காமன்மேன் எப்படியெல்லாம் சிந்திப்பானோ அப்படித்தான் அனந்தன்நாயரும் சிந்திக்கிறார். தான் இதுவரை தியாகம்,பொறுப்பு,பெருமை என்று கருதியதெல்லாம் தன் மகனுடைய செயலால் உடைந்து சுக்குநூறாகும்போது அவரும் உடைந்து நொறுங்கிப்போகிறார். அதே சமயம் மகள் அனந்தன் நாயரின் செயல்களை பெருமையாக சொல்லும்போது பூரிக்கிறார். கார்த்தியாயினியின் விஷயத்தில் மட்டுமல்லாது ஊரெங்கும் உள்ள அவர் சந்திக்கிற மற்ற மனிதர்கள் விஷயத்தில் அனந்தன் நாயர் அப்படித்தான் நடந்துகொள்கிறார். எது நடந்தாலும் தன்னுடைய வாழ்க்கையோடு முடிச்சிப்போட்டு ஃபீல் பண்ணத்தொடங்கிவிடுகிறார்.
அனந்தன் நாயர் ஒருவகையில் நம்மையே பிரதிபலிக்கிறார். நம்முடைய குரூரமான மனதுக்கும் அதை நியாயப்படுத்துகிற எண்ணங்களுக்குமான போராட்டம்தான் இந்நாவலின் அடிச்சரடாக இருக்கிறது. அனந்தன்நாயரின் கதையோடு ஒட்டிவருகிற திருவனந்தபுரத்தின் கதையும், மற்ற சின்ன சின்ன கிளைக்கதைகளும் நாவலுக்கு சுவாரஸ்யம் தருவன. மலையாளம் கலந்து எழுதியிருப்பது படிக்க நன்றாகவே இருந்தாலும் சில இடங்களில் கதையை புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்கவே செய்கின்றன.
#பள்ளிகொண்டபுரம்
நீல.பத்மனாபன்
காலச்சுவடு பதிப்பகம்