Pages

30 July 2013

அன்னயும் ரசூலும்





அன்னயும் ரசூலும் படத்தின் போஸ்டர்களோ, டிரைலரோ படம் பார்க்கிற ஆர்வத்தை கொஞ்சம்கூட ஏற்படுத்தவேயில்லை. இப்படத்தில் வருகிற ஒருபாடல்தான் இப்படத்தை பார்க்கத்தூண்டியது. ‘’கண்ணு ரெண்டு கண்ணு, கதவின் மறைவில் நின்னு’’ என்று போகிற அந்த பாடல் ரொம்பவே ஈர்த்தது. நம்மூர் கானாபாடல்களை ஒத்த பாடல் இது! இப்பாடலை எப்படி படமாக்கியிருப்பார்கள் என்பதை பார்ப்பதற்காகவே இப்படத்தை தேடி பார்த்தேன்.

மலையாள மண்ணின் புது நட்சத்திரம் பஹாத் ஃபாசிலும் , நம்மூர் ஆன்ட்ரியாவும் சேர்ந்து நடித்திருக்கிற இப்படம் மிகமிக எளிமையான கதையினை கொண்டிருக்கிறது. கொச்சினில் கார்டிரைவராக வேலைபார்க்கிற இஸ்லாமிய இளைஞன் பஹாத்துக்கும் , துணிக்கடையில் வேலைபார்க்கிற கிறிஸ்தவ பெண்ணான ஆன்ட்ரியாவுக்குமான காதல்தான் படத்தின் முக்கிய கதை. இவை தவிர சுவாரஸ்யமான தனியாகவே முழு திரைப்படமாக எடுக்கிற அளவுக்கு வலிமையான கிளைக்கதைகளும் படம் நெடுகிலும் அநேகமுண்டு!

சாதிமத வேறுபாடுகள் எல்லா காதலுக்கும் வில்லனாவதைப்போலவே அன்னா,ரசூல் ஜோடிக்கும் வில்லனாகிறது. இறுதியில் காதல் தோற்கிறது. காதலி இறந்துபோகிறாள். காதலன் அநாதையாக காதலின் நினைவுகளை சுமந்துகொண்டு திரிகிறான். அவ்வளவுதான் படத்தின் கதை. எல்லாவிதங்களிலும் கோடி முறை சொல்லப்பட்ட அதே பழைய காதல்தோல்வி கதைதான் என்றாலும் அது சொல்லப்பட்ட விதத்தில்தான் இப்படம் ஈர்க்கிறது.

இப்படம் மட்டுமல்ல இதே கதையை இதே காதல் தோல்விகளை இன்னும் எத்தனை முறை அழகாக சொன்னாலும் ஈர்க்கும்தான் போலிருக்கிறது! குறிப்பிட்ட சில விஷயங்கள் கூடிவந்தால் போதுமென்று தோன்றுகிறது. அதற்கு நல்ல உதாரணம் அன்னயும் ரசூலும்.
படத்தில் மிக குறைந்த பாத்திரங்கள்தான். முக்கிய பாத்திரங்களான அன்னாவும் ரசூலும் நம்முடைய அடுத்த வீட்டு ஆட்களை நினைவூட்டுகிறார்கள். அவர்கள் வாழும் இடமும், சூழலும், அவர்களுடைய நடவடிக்கைகளும் அவர்கள் பேசுகிற வசனங்களும் மிகமிக யதார்த்தம். அதுவே படத்தின் கதைக்கு மிகுந்த நம்பகத்தன்மையை கொடுக்கிறது.

அதோடு காதல் படங்களின் மிக அத்தியாவசியமான கெமிஸ்ட்ரியும் இருவருக்குமிடையே சிறப்பாக வொர்க் அவுட் ஆகியிருப்பது சிறப்பு. (ஃபகாத் பாஸில் ஆன்ட்ரியாவை விட உயரம் கம்மிதான் என்றபோதும்!). கொஞ்சம் வழுக்கையாக இருந்தாலும் ஃபகாத் நாளுக்குநாள் அழகாகிக்கொண்டே போகிறார். படம் முழுக்க பயமும் தயக்கமுமாக திரிகிறார்.

இக்கதை நடக்கிற தளமான கொச்சின் நகரின் குறிப்பிட்ட சில இடங்கள் ஒரு கதாபாத்திரத்தைப்போல படம் முழுக்க நம்மோடு பயணிக்கின்றன. ரசூல் வாழ்கிற இஸ்லாமியர் குடியிருப்பு. வைபினில் இருக்கிற கிறிஸ்தவர் காலனி, வைபினுக்கும் கொச்சின் கோட்டை பகுதிக்குமான படகுபோக்குவரத்து நடக்கிற படகு குழாம், காதலர் பயணிக்கிற அந்த படகு, அந்த படகில் பயணிக்கிற ஆட்கள், ஆன்ட்ரியா வேலைபார்க்கிற துணிக்கடைக்கு அருகேயிருக்கிற அந்த பாலம், கிறிஸ்தவர் காலனி சந்து, ஆன்ட்ரியாவின் எதிர்வீட்டில் வாழும் ஆஸ்லியின் வீட்டு ஜன்னல், ஆஸ்லியின் அறை... ஒரு சிறிய துணியால் அறைகள் பிரிக்கப்பட்டிருக்கிற ரசூலின் வீடு என ஏகப்பட்ட இடங்கள் படம் முடிந்த பின்னும் மனதிலேயே தங்கிவிடுகின்றன. அந்த இடங்களில் நாமும் வாழ்ந்ததை போல ஓர் உணர்வு அந்த அளவுக்கு அவை அதன் இயல்போடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு கொச்சினில் தங்கியிருந்த போது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு... வைபின் என்கிற பகுதியிலிருந்து கொச்சின் கோட்டைக்கு போகிற படகு போக்குவரத்துதான். நம்மூர் மினிபஸ் போல கொச்சினை ஒட்டியுள்ள தீவுப்பகுதிகளுக்குள் செல்கிற படகு போக்குவரத்து இது. மாலை நேரங்களில் நமக்கு பிடித்த அழகான பெண்களை ஏற்றிச்செல்லும் டைட்டானிக் கப்பலாக அது இருந்திருக்கிறது. கல்லூரி மாணவிகளை சைட் அடிக்க ஏற்ற இடம் இது. இங்கே வாழுகிற மக்களுக்கு இந்த போக்குவரத்து அத்தியாவசியமான ஒன்று. வெளியூர் பயணிகளுக்கு புதுமையான அனுபவம்.

இந்த படகுப்போக்குவரத்தும் அது கடக்கிற கழிமுகமும் இப்படத்தில் வருகிற காதலுக்கு சாட்சியாக படம் நெடுக வந்துகொண்டேயிருக்கிறது. அதோடு படகுக்குழாமுக்கு செல்லுகிற சிறிய புற்கள் முளைத்த பாசிபடர்ந்த சுவர்கள் கொண்ட அந்த சந்து வழியும், கோட்டை பகுதியில் இருக்கிற நெருக்கமான சுவர்கள் கொண்ட வீடுகளும், அவ்வீடுகளின் வழியெங்கும் எப்போதும் படர்ந்திருக்கிற ஈரத்தையும் அதன் குளிர்ச்சியையும் படம் பார்க்கும்போது நம்மால் உணர முடிகிறது. ஒளிப்பதிவாளரின் கேமிராவுக்கு நன்றி.

படத்தின் களம் ஒரு பாத்திரமாக இருக்கிறதென்றால், முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியிருக்கிற மற்ற சிறிய கதாபாத்திரங்களின் கதைகள் ஒவ்வொன்றுமே மிகவிரிவாக நமக்கு புரிகிற வகையில் தரப்பட்டுள்ளன. அது சில காட்சிகளே வருகிற அன்னாவின் தந்தையாக இருந்தாலும் , படம்நெடுக கதைசொல்லும் ஆஷ்லியின் கதையாக இருந்தாலும் எல்லாமே நுணுக்கமாக அக்கறையோடு சொல்லப்படுகிறது.

ரசூலின் அண்ணன் ஹைதர் எப்படியாவது இந்த நாட்டிலிருந்து வெளியேறி வளைகுடா நாடுகளுக்கு சென்றுவிட நினைப்பவன். ஆனால் அவனுடைய மதம் அவனுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதற்கான வழிகளுக்கு தடையாக நிற்கிறது. எப்போதோ ஹைதர் 13 வயதில் மட்டன்சேரி கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக இன்று அவனை தீவிரவாதியை நடத்துவதுபோல நடத்துகிறது காவல்துறை. ஹைதர் வெகுண்டெழுகிறான். ஆனால் அவனுடைய எதிர்வினை மிக சாதாரணமானது. அது அவனுக்கு என்றைக்கும் பாஸ்போர்ட் கிடைக்க முடியாதபடிக்கு ஆக்கிவிடுகிறது.

ஹைதர் குறித்த காவல்துறை காட்சிகள் மிகமிக நுணுக்கமாக கையாளப்பட்டிருக்கின்றன. எப்போதும் அவன் இந்நாட்டில் சாதாரண இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளைப்போல நடத்தப்படுவதை விமர்சித்தவண்ணமிருக்கிறான். அவனுடைய காட்சிகள் அனைத்துமே இருளிலேயோ அல்லது இருள்சூழும் காலத்திலேயோ படமாக்கப்பட்டுள்ளன. ஹைதராக நடித்திருப்பவர் பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபு. சென்ற ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 22 ஃபீமேல் கோட்டயம் படத்தின் இயக்குனர். விக்கிபீடியாவில் பார்த்தபோதுதான் தெரிந்தது.

ரசூலின் இன்னொரு இஸ்லாமிய நண்பன் கொலை கொள்ளை உள்ளிட்ட வெவ்வேறு வேலைகள் பார்க்கிறவன். அவனுக்கு துணையாக நட்புக்காக அவனுடைய காரியங்கள் தெரியாமல் அவ்வப்போது கார் ஓட்டிக்கொண்டு செல்கிறான் ரசூல். அந்த நண்பனுக்கு குழந்தை, அழகான துடுக்குத்தனம் நிறைந்த மனைவி என ஒரு குடும்பமும், எப்போதும் உள்ளே கனன்று கொண்டிருக்கிற கோபமுமாக திரிகிறான். அவனுக்கு நேர்கிற முடிவும் அதைத்தொடர்ந்து வருகிற காட்சிகளும் மிகமிக அழகுணர்ச்சியோடு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
படத்தின் கதை ரசூலின் பார்வையிலோ அன்னாவின் பார்வையிலோ சொல்லப்படாமல், அவர்களுடைய காதலுக்கு உதவுகிற ஆஷ்லி என்கிற நாயகனின் நண்பனின் வழியே சொல்லப்படுகிறது.

ஆஷ்லியின் கதையும் சிறப்பாக மிகச்சில துண்டு துண்டான காட்சிகளின் வழி காட்டப்படுகிறது. அதுவும்கூட அழகான ஒரு ஒருதலைக்காதல்கதை. காதலித்த பெண்ணிடம் காதலை சொல்ல தாமதிக்கிறான் ஆஷ்லி. ஆனால் காதலியோ வேறொருவரை அதற்குள்ளாக காதலிக்க துவங்கிவிடுகிறாள். அவளுடைய காதல் தோல்வியடைகிறது. காதலி கன்னியாஸ்திரி ஆகிவிடுகிறாள்.
படத்தின் இறுதியில் ரசூலையும் அன்னாவையும் சுற்றியிருக்கிற எல்லோருடைய வாழ்க்கையும் தோல்வியை தழுவ செத்துப்போய்விட்டதாக நினைத்த ஆஷ்லியின் காதல் உயிர்பெற படம் முடிவது சுவாரஸ்யம்.

படத்தில் அதிரடியான திருப்பங்களோ, அதிரவைக்கும் சண்டை காட்சிகளோ, துள்ளலான பாடல்களோ எதுவுமே இல்லை. சமயங்களில் நம் பொறுமையை சோதிக்கிற அளவுக்கு படம் மிகமிக மெதுவாகவே நகர்கிறது.

ஆனால் படம் பார்த்து முடிக்கையில் ஒரு க்ளாசிக் நாவலை படித்து முடித்த திருப்தி மனது முழுக்க நிறைகிறது. அதோடு கொச்சினின் சந்துகளில் ரசூலோடு,அன்னாவோடு,ஆஷ்லியோடு வாழ்ந்த உணர்வையும் விட்டுச்செல்கிறது. அதுதான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்குமோ என்னவோ. படத்தின் மிகப்பெரிய பலமாக கருதுவது அதன் ஒளிப்பதிவைதான்.

படத்தின் இயக்குனர் ராஜீவ்ரவியே ஒரு ஒளிப்பதிவாளர்தான்.. அதுவும் பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருக்கிற அனுராக் காஷ்யபின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்கிறது விக்கிபீடியா. ஒளிப்பதிவுக்காக ரொம்பவே புகழப்பட்ட தேவ்டி படத்துக்கும், சமீபத்தில் வெளியான கேங்ஸ் வாசிபூருக்கும் கூட இவர்தான் ஒளிப்பதிவாம்!

அவர் நினைத்திருந்தால் ஹிந்தியிலேயே தன்னுடைய முதல் படத்தை எடுத்திருக்க முடியும் ஆனாலும் தன் முதல் படம் தன் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து இப்படத்தை இயக்கினாராம். என்ன ஒரு மொழிப்பற்று! தன் முதல்படத்தில் இவர் ஒளிப்பதிவு பண்ணாமல் மது நீலகண்டன் என்கிற புதுமுகத்துக்கு வாய்ப்புக்கொடுத்திருக்கிறார்.

மதுநீலகண்டன் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கொச்சினின் இரவு காட்சிகளும் ஒளியை பயன்படுத்தியிருக்கிற விதமும் அற்புதம், படத்திற்கு இசையமைத்திருப்பவர் நம்ம மிஷ்கினின் படங்களுக்கு இசையமைத்திருக்கிற கே. மிகச்சில இசைக்கருவிகளின் வழியே சோகத்தையும் அன்பையும் காதலையும் புரியவைக்கிற எளிமையான பின்னணி இசையில் ஈர்க்கிறார். முன்னமே சொன்னதுபோல படம் முடிந்தபின்னும் அந்த கண்ணுரெண்டு கண்ணு பாடல் காதுக்குள் எங்கோ ஒலித்தபடி இருக்கிறது.