தமிழகம் முழுக்கவே சாதிவெறி வெவ்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடுகிற காலத்தில் , சாதிக்காக சாதி சனத்துக்காக கௌரவக் கொலை செய்கிறவர்களை கடவுளாக்குவோம் குலசாமியாக்குவோம் என்று களமிறங்கியிருக்கிறது சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள குட்டிப்புலி.
சிலமாதங்களுக்கு முன்பு வெளியான படம் ராம்கோபால்வர்மாவின் ''தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11'' . படத்தில் ஒரு காட்சிவரும். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்ஐ பிடித்து உயர் அதிகாரி நானாபடேகர் விசாரிப்பார். அவரிடம் அஜ்மல் கசாப் கோபத்தோடு பேசுவான். அவனுடைய பேச்சு இப்படிப்போகும்...
''நாங்க பண்ற இந்த புனிதமான சேவைக்கு எங்களுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா? எங்க குரு சொல்லிருக்கார்.. நாங்க இந்த புனிதப்போர்ல செத்துப்போனா நேரா சொர்க்கத்துக்கு போவோம்.. அங்கே எங்களுக்கு எந்த விசாரணையும் கிடையாது.. இங்கே எங்க செத்துப்போன உடல்லருந்து நறுமணம் வீசும்.. எங்களோட உடலை மக்கள் வணங்குவாங்க... நாங்க புனிதர்களாக கருதப்படுவோம். நாங்க பண்ற ஒவ்வொரு கொலைக்கும் எங்களுக்கு அல்லாவிடம் மன்னிப்பு கிடைக்கும்.. அல்லாவுக்காகத்தான் இதையெல்லாம் நாங்க செய்றோம்.. நிச்சயமா எங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்னு எங்க குரு சொல்லிருக்கார்... '' என்பான்.
அவனுடைய பேச்சின் சாரம்தான் இது. அவனுடைய பேச்சைக்கேட்டு அவனுக்காக அந்த அதிகாரி கவலைப்படுவார். அவனுக்காக பரிதாபப்படுவார். ஒரு சின்ன பையனின் மனதில் இப்படி விஷத்தை விதைத்திருக்கிறார்களே என்று வருந்துவார். குர்ஆனின் மேன்மைகளை அவனிடம் பொறுமையாக விளக்குவார். செத்துப்போன அவனுடைய சகாக்களின் பிணங்களை காட்டி.. ‘’பாரு உன் நண்பர்களோட உடல் மணக்குதானு பாரு’’ என்று கதறுவார். அந்த சிறுவனின் முடிவை அறிந்து அவனுக்காக வேதனைப்படுவார் அதிகாரி. தூக்கில் தொங்கப்போகிற அஜ்மல்கசாப் மீது படம் பார்க்கிற நம்மிடம் அளவிலா கருணையையும் அன்பையும் கடத்துகிற காட்சி அது. (ராம்கோபால்வர்மாவால் மட்டுமே செய்யமுடிகிற மாயாஜாலாம் அது!)
அதைவிடுங்கள். விஷயத்துக்கு வருவோம். அல்காய்தா தன்னுடைய குழந்தைகளுக்கு இஸ்லாத்தின் பெயரால் புகட்டிய அதே நஞ்சைத்தான் குட்டிப்புலியும் நமக்கு சாதியின் பெயரால் புகட்டுகிறது. கொலை செய்தால் உடல்மணக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கும் சங்கறுத்தால் குலதெய்வமாகிவிடலாம் என்பதற்கும் ஆறுவித்தியாசங்கள் கூட கிடையாது. இதே மாதிரியான வேதங்களை சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடைபெற்ற ஒரு சாதிக்கட்சி கூட்டத்தில் கேட்டிருக்கலாம். அதைத்தொடர்ந்து நடந்த கலவரங்களையும் நாடறியும்.
குட்டிப்புலி படத்தின் கதை துவங்குவதே ஒரு சாதி சார்ந்த கௌரவக் கொலையில்தான். முதல் காட்சியிலேயே சங்கை அறுக்கிறார்கள். தன் சாதி பெண்ணை கிண்டல் செய்தவனின் கழுத்தை அறுத்து கொல்கிறார் நாயகனின் அப்பா. கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடும்போது வில்லன்களிடம் மாட்டிக்கொள்ளுகிற சந்தர்ப்பம் உருவாகிறது. அவர்களிடம் சிக்கி மானம்போய் சாவதைவிட இப்போதே சாகிறேன் என தன் உயிரையும் விடத்துணிகிறார். அவருடைய வீரத்தை(?) பாராட்டி சாதிக்காரர்கள் அவரை குலதெய்வமாக்கிவிடுகிறார்கள்.
தன்னுடைய கணவனைப்போல மகன் இருக்க கூடாது என்று பொத்தி பொத்தி வளர்க்கிறார் நாயகனின் அம்மா. ஆனாலும் நாயகன் வெட்டியாகத்தான் திரிகிறான். தன் சாதிக்கார பிள்ளையை சைட் அடித்தால் அது போலீஸாகவே இருந்தாலும் போட்டு பொரட்டி எடுக்கிறார்! (மரு.ராமதாஸ் கவனிக்க!). நிஜமாகவே போலீஸை போட்டு அடிக்கிறார்.
ஆனால் அதே தெரு பையன்கள் சைட் அடிப்பதையே தொழிலாக வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய காதலுக்கு தூதுபோகிறார். அவரும் காதலிக்கிறார். (சுயசாதிப் பெண்கள்தான் காதலித்துவிடக்கூடாதுபோல நல்ல கொள்கை)
டாஸ்மாக்கில் உட்கார்ந்து சரக்கடித்து விட்டு இடத்தகராறில் ஒருவருடைய மண்டையை பீர்பாட்டிலால் அடித்து உடைக்கிற நாயகன், அடுத்த சில காட்சிகளில் தன்னுடைய சொந்தக்காரர் ஒருவருக்கு ''குடிச்சி குடிச்சி குடும்பத்த அழிக்காதடா.. குடிப்பழக்கம் நாட்டுக்குவீட்டுக்கு உயிருக்கு'' என உபதேசம் பண்ணுகிறார்..
எல்லா படத்திலும் வருவதைப்போலவே இந்தப்படத்திலும் வேலை வெட்டி பார்க்காமல் ஊதாரியாய் சுத்தும் படிப்பறிவோ பட்டறிவோ இன்னபிற நாகரீக அறிவுகளே அற்ற ஹீரோவைதான் விழுந்துபுரண்டு காதலிக்கிறார் நாயகி. பெண்களுக்கு படித்த இளைஞர்களைவிட இதுபோன்ற கொலைகாரர்களைதான் பிடிக்கும் என்பது மாதிரியெல்லாம் படத்தில் வசனங்கள் வேறு வருகிறது!
இப்படிப்பட்ட ஒரு நல்லவனான நாயகனுக்கு வில்லன்களால் சிக்கல்வர.. இறுதிகாட்சியில் நாயகனின் தாயே வில்லனின் சங்கை அறுத்து கொலைசெய்து கதையை சுபமாக முடித்துவைக்கிறார். அம்மாவும் அவருடைய தோழியும்கூட குலதெய்வமாகிறார்கள்.
''இதுதான் நம்ம குலசாமிகளான ஆச்சி சேச்சி பேச்சி முதலானவர்களின் கதை'' என்று பின்னணியில் இயக்குனர் ஏதேதோ பேச படம் முடிகிறது. சங்கறுப்பதில் தொடங்கும் கதை சங்கறுப்பதில் முடிவதுதான் எவ்வளவு சிறப்பு. படத்தில் கழுத்தை அறுப்பதையும் கொலை செய்வதையும் ஒவ்வொரு பாத்திரமும் ரசித்து ருசித்து செய்கிறது. படம் முழுக்க சங்கறுப்பதை ஆளாளுக்கு ஏதோ டிப்ளமோ படிப்பில் கோல்ட்மெடல் வாங்கியதைப்போல பெருமையோடு பறைசாற்றிக்கொள்வது மகுடத்தில் மாணிக்கம். நமக்குதான் பகீர் பகீர் என்று வருகிறது.
ஒருகாட்சியில் நாயகனின் நண்பன் ''எங்காளு சங்கறுக்கறதுக்குதான் ஃபேமஸ் தெரியும்ல.. அவர்கிட்டயேவா'' என்று காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறார். உடனே நாயகன் சசிகுமாரும் ஆஸ்கர் விருது வாங்கினதைப்போல அதை ஆமோதித்து வெற்றிபுன்னகை பூக்கிறார். சுப்ரமணியபுரம் படத்தில் சங்கறுத்தாராம். பெருமைதான்.
12 வயது சிறுவனின் தொண்டையில் ''தறியில் உபயோகிக்கிற சிறிய கூரான கட்டை''யை முன்பக்கமாக சொருகி அதை பின்பக்கமாக எடுப்பதும், அதை செய்கையில் திரையில் ரத்தம் தெறிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதையும் பார்க்கும்போது அதிர்ச்சியாகவும் அதே சமயம் எவ்வளவு ஆராய்ச்சி செய்து இதுமாதிரி டெக்னிக்குகளை கண்டுபிடிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாகவும் இருந்தது.
12வயசு குழந்தையை கொன்றுவிட்டு கண்ணில் லென்ஸ் வைத்த மீசை வில்லன் படம் முழுக்க ''12வயசு பையனையே கொன்னவன்ர பயம் இருக்கணும்'' என்று பெருமையாக பேசிக்கொண்டே திரிவதெல்லாம்...
நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் சசிகுமார் தன் முந்தைய படமான சுந்தரபாண்டியனிலேயே அப்பட்டமாக ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிபிடித்து அவர்களுடைய வன்முறைகளுக்கு சப்பைக்கட்டு கட்டியிருந்தார். ஆனால் இந்தப்படத்தில் ஒருபடிமேலே போய் சாதிசார்ந்த கொலைகளுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு வம்படியாக நிற்கிறார். அதேசமயம் ஒரு திரைப்படத்தின் தவறை ஒட்டுமொத்தமாக சசிகுமார் என்கிற ஒரே ஒரு ஆசாமியின் தலையில் சுமத்துவது தவறு. படத்தின் இயக்குனருக்கும் இதில் முழு பொறுப்பு இருக்கவேசெய்கிறது.
சரி இந்த சாதி அரசியல் மைசூர்களையெல்லாம் பீச்சாங்கையால் ஒதுக்கிவிட்டு.. நம்முடைய நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு படத்தை படமாக பார்த்தாலும் கூட சகிக்கவே முடியாத குப்பையாகத்தான் இப்படம் வந்திருக்கிறது.
சரண்யா இன்னும் எத்தனை படத்தில்தான் என் புள்ள ரொம்ப நல்லவன் என்று பிக்காலி பயலுகளுக்கு வம்படியாக வக்காலத்து வாங்கிக்கொண்டு தெருத்தெருவாக பிதற்றிக்கொண்டு திரிவாரோ தெரியவில்லை. இதில் ஆகச்சிறந்த கொடுமை என்னவென்றால் சரண்யாவை பார்க்க சசிகுமாரின் தங்கையைப்போல இருக்கிறார். சீரியஸ்லி. படத்தை டிவியில் போடும்போது கவனித்துப்பாருங்கள். அவருக்கு இவர் தாயாம்!
இன்னொரு பக்கம் படத்தின் கதை எதை நோக்கி பயணிக்கிறதென்பதை கிளைமாக்ஸ் முடிந்தபின்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. திரைக்கதையாவது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம்.. அதுவும் முழுக்க முழுக்க நமக்கு தெரிந்த எல்லாவித ட்விஸ்டுகளுடன் மகாமட்டமாகத்தான் இருக்கிறது.
உதாரணமாக ஒன்றை சொல்லலாம். ஒரு வீடு திடீரென பற்றி எரிகிறது. ஊரே சேர்ந்து தீயை அணைக்கப்போராடுகிறது. இதை பார்த்து நாயகி ஓடி வருகிறாள். வீட்டின் உள்ளே... ஒரு வயதான பெரியம்மா மாட்டிக்கொண்டிருக்கிறார். ஊரே கூடிநின்று சசிகுமார் வரட்டும் என காத்திருப்பதை போல நிற்கிறது. அப்போது அந்தப்பக்கமாக வருகிறார் ஹீரோ.. அப்புறம் என்ன நடக்கும்.. அதேதான். தீக்குள் குதித்து காப்பாற்றி.. நாயகி அப்படியே நெகிழ்ந்துபோய்.. காந்தி செத்துட்டாருதானே?
சரி இப்படி நமக்கு தெரிந்த காட்சிகளால் ரொப்பிவைத்திருக்கிறாரே என்று கடுப்பாகி.. காண்டாவது ஒருபக்கமென்றால்.. இன்னொரு பக்கம். தமிழ்சினிமாவில் எதையெல்லாம் கிண்டல் பண்ண ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டதோ அதையெல்லாம் பிடித்து தொங்குகிறார் இயக்குனர்.
முக்கியமாக தாலிசென்டிமென்ட்! தமிழ்திரையுலக வரலாற்றில் முதன்முறையாக காதலிக்கு தாலியை பரிசாக கொடுக்கிறார் ஹீரோ.. உடனே ஹீரோயின் நெகிழ்ந்து போய்.. ‘’காதலிக்கிற எல்லா பொண்ணும் காதலன்கிட்ட எதிர்பார்க்குறது இந்த தாலியதான்’’ என்று சொல்லி.. இந்த லட்சணத்தில் போகிற போக்கில் விக்ரமன் பட லாலாலாவை கலாய்க்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பாதிபடத்தில் விலகி வேறு படத்தில் பிசியாகிவிட்டார் போல... இரண்டாம்பாதி முழுக்க இளையராஜாவின் பழைய ரெக்கார்டுகளாக போட்டு தேய்க்கிறார்கள். ரீரிகார்டிங்கும் ராஜா புண்ணியம்தான்..பாடல்களும் பழைய ராஜா பாடல்களே... அந்த அளவுக்கா நம் இசையமைப்பாளர்களுக்கு இசைத்துவப்பஞ்சம்! இளையராஜா பாடல்களை கொடூரமான காட்சிகளோடு இணைத்துப்போட்டு அவருக்கும் அடிவாங்கிக்கொடுத்திருக்கவேண்டாம்.
படத்தின் சீரியான காட்சிகள் அனைத்திலுமே சிரிப்பொலிகளை மட்டுமே கேட்க முடிகிறது. அதிலும் இடைவேளையில் சசிகுமார் வெட்டுவாங்கும்போதும்... க்ளைமாக்ஸில் சரண்யா தலைவெட்டுகிற காட்சியிலும்.. நமக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படுவதில்லை. மாறாக சிரிப்பை வரவழைக்கிற வகையிலேயே அக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படம் முழுக்க ஒருலாரி ரத்த மிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று யூகிக்கலாம்.
சசிகுமாருக்கு படத்தில் கண்ணடிக்கிற வியாதியோ என்னவோ.. யாரைபார்த்தாலும் ப்ளிங் ப்ளிங் என கண்ணடித்துக்கொண்டேயிருக்கிறார். விசாரித்ததில் அது அவரோட ஸ்டைலாம் , மேனரிசமாம்! ஆச்சர்யமாக இருந்தது. சமகாலத்தில் பவர்ஸ்டாரே இதையெல்லாம் செய்வதில்லை.
அதோடு படம் முழுக்க பொண்ணுனா பொண்ணா பொறக்கணும் ஆணுன்னா ஆணாபொறக்கணும் என்பது மாதிரி... மாதிரிதான் , பெண்களை கவரும் பஞ்ச் டயலாக்குகள் சொல்லிவிட்டு ஸ்லோமோசனில் நடக்க வேறு செய்கிறார். நாம கைத்தட்டணுமாம்! பேரரசுகூட இப்படியெல்லாம் படமெடுப்பதை கைவிட்டுவிட்டு இமயமலையில் செட்டில் ஆகிவிட்டார்.
கிராமத்துப்படங்களுக்கு பேர் பெற்ற ராஜ்கிரண் தொடர்ந்து மூன்றோநான்கோ வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர். அவருக்கு ஒருநாள் சூப்பர்ஸ்டார் ஆகவேண்டும் என்று ஆசைவர சில ‘நல்ல’’” படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசி நடித்து தன்னுடைய தலையில் தானே மண்ணைவாரிப்போட்டுக்கொண்டார். இப்போது அதே ஆசை சசிகுமாருக்கும் வந்திருப்பதை குட்டிப்புலியில் உணர முடிந்தது. சசிகுமாரும் தொடர்ந்து இதுபோன்ற படங்களில் நடித்துவந்தால்.. அதை ஏன் நம்ம வாயால சொல்லிக்கிட்டு!
இதுபோன்ற திரைப்படங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல நம்மிடையே சாதீய பெருமையை அபிமானத்தை வெறியை சத்தமில்லாமல் ஏற்றவல்லவை. ஆபத்தானவை. தவிர்க்கவேண்டியவை. தப்பித்தவறியும் இப்படம் ஓடுகிற தியேட்டர்பக்கம் கூட மழைக்கும் ஒதுங்கிவிடவேண்டாம். புலி ப்ராண்டிரும்!
(நன்றி - www.cinemobita.com )