Pages

08 May 2013

சின்ன புன்னகை என்ன செய்யும்?





கமலா தியேட்டரை ஒட்டி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஹோட்டல் ஒன்று இருக்கிறது. சென்றவாரத்தில் ஒருநாள் நண்பரோடு சென்றிருந்தேன். என்ன சாப்பிடலாம் என்று அப்படியே ஷோக்கேஸ்களில் அடுக்கி வைத்திருந்த லட்டு ஜிலேபி மைசூர்பாக்களை நோட்டம் விட்டபடி வந்துகொண்டேயிருந்தேன்...

திடீரென்று யாரோ என் தோளைத்தொட்டு.. ‘’ஹாய் சூப்பர்மேன்’’ என்று தட்டியதும் அதிர்ந்துபோய் திரும்பி பார்த்தால்.. ஒரு முதியவர். நெற்றியில் பட்டை. முகமெல்லாம் புன்னகை. ‘யார்ரா இது நம்ம ஃபேஸ்புக் பிரண்டா இருப்பாரோ?’ என நினைத்தபடி திரும்பி புன்னகைத்து வணக்கம் வைத்தேன்.

‘’வணக்கம் சார்’’ என்றார். மாறாத புன்னகை.

‘’சார் நீங்க?’’

‘’நான் இங்கே வேலை பார்க்கிறேன். உங்க டீசர்ட்டில் இருந்த சூப்பர் மேன் ரொம்ப ஜோரா இருந்தார். அதான் அவருக்கு ஒரு ஹாய் சொன்னேன், அப்படியே உங்களுக்கும், என் பேத்திக்கு சூப்பர்மேன்னா ரொம்ப இஷ்டம்’’ என்று மெல்லியதாக சிரித்தார். லூசா இருப்பாரோ என்கிற எண்ணம்தான் எனக்கு முதலில் தோன்றியது. அதனால் அவரை தவிர்த்துவிட்டு நானும் நண்பரும் மீண்டும் லட்டு ஜாங்கிரியில் கண்களை செலுத்தினோம்.

ஆனால் அவரோ.. ‘’வாங்க சார்.. வந்து உட்காருங்க’’ என்று எனக்கும் நண்பருக்கும் ஹோட்டலுக்குள் நல்ல ஒரு இடத்தை காண்பித்தார்.

‘’என்ன சாப்பிடறீங்க’’ அதே புன்னகை.

‘’ஆக்சுவலி நாங்க ஒரு காபிதான் குடிக்க வந்தோம்.. சும்மா என்னென்ன ஸ்வீட்ஸ் இருக்குனு வேடிக்கைதான் பார்த்துகிட்டிருந்தோம்...’’

‘’நீங்க எதுவுமே சாப்பிடாட்டியும் பரவால்ல.. ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்துட்டு கூட போகலாம். தண்ணீர் வேணுமா’’ என்றார்.

‘’இல்ல இல்ல ஒரு காபி... ஒன் பை டூ குடுங்க’’ என்றேன்.
அதை அவரே எடுத்துவந்து கொடுத்தார். அதே புன்சிரிப்பு. காபியை குடித்து முடித்ததும் பில் வந்தது. நண்பர் பில் தொகையை பார்த்துவிட்டு அதனோடு கூடவே ஒரு பத்துரூபாயை சேர்த்துக்கொடுத்தார்.

அந்த பெரியவர் பில்லுக்கான தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த பத்துரூபாயை நண்பரிடமே நீட்டினார். ‘’இல்லைங்க வச்சிக்கோங்க.. நாங்க எப்பவும் கொடுக்கறதுதான்’’ என்று பத்துரூபாயை முதியவரிடமே கொடுத்தார் நண்பர்.

‘’மத்தவங்களுக்கு கொடுக்கறதை நான் தப்புனு சொல்லலை. ப்ரியப்பட்டு நீங்க கொடுக்கறதை நிச்சயமா நான் பாராட்டுவேன். ஆனா எனக்கு வேண்டாங்க.. இந்த கடைக்கு வர வாடிக்கையாளர்கள் எல்லோருமே எனக்கு நண்பர்கள் மாதிரி. உங்க நண்பர் உங்க கிட்ட அன்பு காட்டினா இப்படிதான் டிப்ஸ் கொடுப்பீங்களா.. அதெல்லாம் வேண்டாங்க. இங்க எங்க கடைல அஞ்சு நிமிஷம் மகிழ்ச்சியா இருந்தீங்கன்னா அதுவே போதும்’’ என்றார். அதே தெய்வீக சிரிப்பு.

நிஜமாவே புல்லரிச்சிடிச்சு! இப்படி கூடவா மனுஷங்க இருப்பாங்க என்று நினைத்துக்கொண்டோம். இனி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்றாலே மைசூர்பாவுக்கு பதிலாக இந்த முதியவர்தான் நினைவுக்கு வருவாரோ என்னவோ. கமலா தியேட்டர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பக்கமாக போனால் இந்த முதியவருக்காகவேணும் ஒருமுறை விசிட் அடித்துவிடுங்கள். அவருடைய புன்னகையை வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது.