மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் லால்ஜோஸ். அவருடைய இயக்கத்தில் ப்ருதிவிராஜ் பிரதாப் போத்தன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாட படம் அயாளும் ஞானும் தம்மில். தன்னை சுற்றியிருக்கிறவர்களை நேசிக்கிற, அவர்களுக்காக உருகி உழைக்கிற, எதையும் இழக்க தயாராயிருக்கிற எளிமையான மனிதர்களின் கதையை அழகாக கோர்த்து படமாக்கியிருப்பார் லால்ஜோஸ்.
நாம் செய்கிற தொழில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது யாருக்காக செய்யப்படுகிறது. அதன் நோக்கம் என்ன? என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே நம்மால் அதை உளத்தூய்மையோடு செய்ய முடியும். மனிதர்களுக்கு செய்கிற சேவையை காட்டிலும் மகத்தான ஒன்றை இறைவனுக்கும்கூட நம்மால் செய்துவிட முடியாது என்பதை ஆணித்தரமாக நம் நெஞ்சில் பதிய வைக்கிற அற்புதம் இப்படத்தை காணுகிற ஒவ்வொருவருக்கும் நிகழும்.
பொறுப்பில்லாமல் வாழ்க்கை குறித்த பெரிய நோக்கமோ அக்கறையோ இல்லாத இளம் மருத்துவர் பிருத்விராஜ். மூனார் அருகில் இருக்கிற ஒரு சிறிய கிராமத்து மருத்துவமனையில் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. அங்கே அவர் முதிர்ந்த மருத்துவரான பிரதாப் போத்தனை சந்திக்கிறார். பிரதாப் போத்தன் அந்த இளைஞனின் வாழ்க்கையையே மடைமாற்றுகிறார். அவனுடைய நோக்கங்கள் மாறுகின்றன. நாம் செய்கிற தொழிலை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை உணருகிறான். காதல் தோல்வியை சந்திக்கிறான்.. தோல்வியின் வலியை தன்னுடைய தொழிலில் பிரதிபலிக்கிறான். அது அவனுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டுபண்ணுகிறது. பிரதாப் போத்தன் சொல்கிற ஒரு பொய்யினால் தப்பிக்கிறான். பிரதாப்போத்தன் மருத்துவத்தின் மகத்துவத்தை அவனுக்கு உணர்த்துகிறார்.
ஒரு மருத்துவன் கடவுளுக்கு நிகரானவன் என்பதை உணர்கிறான். ஒரு நோயாளியை காப்பாற்ற எதையும் செய்யத்தயங்காத ஒரு மருத்துவனாக மாறுகிறான். அதுவே அவனுக்கு பின்னாளில் மிகப்பெரிய பிரச்சனையை உண்டுபண்ணுகிறது. அதிலிருந்து பிருத்விராஜ் எப்படி மீண்டு வருகிறார் என்பதை மிக எளிமையாக ஆர்பாட்டமின்றி சொல்லியிருக்கிறார் லால்ஜோஸ்.
விக்ரமன் படங்களை ‘’லாலா’’ ரீரிகார்டிங்குகளுக்கும்.. ஸ்டீரியோடைப் மனிதர்களுக்கும் கிண்டல் செய்தாலும், அவருடைய படங்களில் தொடர்ந்து பாஸிட்டிவ் மனிதர்களை காட்டிக்கொண்டேயிருப்பார். சூழ்நிலைகளால் தவறு செய்கிறவர்களாகவே அவருடைய பாத்திரங்களை படைத்திருப்பார். அன்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்ட மனிதர்களே அவருடைய படத்தின் நாயகர்களாக இருப்பதை பார்த்திருக்கலாம். படம் பார்த்து முடிக்கும்போது நமக்குள்ளும் அந்த பாசிட்டிவ் சரக்கை ஒரு மில்லியாவது ஏற்றியிருப்பார்.
அயாளும் ஞானும் தம்மில் படத்தின் இயக்குனர் லால்ஜோஸின் படங்களிலும் இந்த தன்மையை உணர்ந்திருக்கிறேன். அவருடைய முந்தைய படமான டைமன்ட் நெக்லஸ் முழுக்க இதுமாதிரியான பாத்திரங்களால் நிறைத்திருப்பார். (டைமன்ட் நெக்லஸில் வருகிற சீனிவாசனின் கதாபாத்திரத்தை படம்பார்த்த யாருமே மறக்க முடியாது)
அன்பும் பாசமும் நிறைந்த அற்புதமான மனிதர்கள், வீழும்போதெல்லாம் நம்மை சுமக்க காத்திருக்கும் நண்பர்கள், நமக்காக எதையும் இழக்க துடிக்கிற உறவுகள் என பலவிதமான பாசிட்டிவ் மனிதர்களை காட்சிப்படுத்துவதில் வல்லவர் லால்ஜோஸ். அ.ஞா.தம்மில் படத்திலும் கூட அதுபோல எண்ணற்ற கதாபாத்திரங்கள்.
கலாபவன் மணி மிகமுக்கியமான ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் வில்லன். ஆனால் அவருடைய மகளுக்கு மூச்சுத்திணறல் என மருத்துவமனைக்கு ஓடும் காட்சியிலும் ‘’நான் பாவம் பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சுடு என் மகளை காப்பாற்று’’ என்று கதறும்போது... அவர்மீதும் நமக்கு அன்பு துளிர்க்கவே செய்கிறது. அதுதான் லால்ஜோஸின் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நமக்குள்ளே செய்கிற எளிமையான மேஜிக்.
அயாளும் ஞானும் தம்மில் படத்தில் வருகிற பிரதாப் போத்தனுக்கு நோயாளிகள் அனைவரையும் உறவினர்களாகவும் நண்பர்களாகவும் பாவிக்கிறார். படம் முழுக்க அதை பறைசாற்றுவதைப்போலவே குடிநோயாளியான சலீம் குமாரின் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். நம்முடைய தொழில் எதுவாக இருந்தாலும் நாம் யாருக்காக அக்காரியத்தை செய்கிறோமோ அவர்கள் மீது துளி அக்கறையும் அன்பும் இருந்தாலே நம்முடைய வேலை தெய்வீகநிலையை அடைந்துவிடும் என்பதை படம்பார்க்கிற எல்லோருமே உணர்வார்கள்.
படத்தின் நாயகன் ப்ருத்விராஜ்தான் என்று சொல்லப்பட்டாலும், படம் முழுக்க வேறு பல நல்ல கதாபாத்திரங்கள் இடம்பிடித்திருந்தாலும், பிரதாப் போத்தன்தான், அவர் மட்டும்தான் மனது முழுக்க நிறைந்திருக்கிறார். மிக அழகான ஒரு பாத்திரம்.
இதுமாதிரி நமக்கு ஒரு குரு.. அல்லது தந்தை இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஏங்க வைக்கிற ஒரு பாத்திரம். தன்னுடைய அபாரமான நடிப்பினால் அதற்கு உயிரூட்டியிருப்பார் பிரதாப் போத்தன். (தமிழ்சினிமாவில் அவரை ஏனோ அரை லூசாகாவே பார்த்து காட்டி அழித்துவிட்டார்கள்)
மிகவும் நீண்ட ஒரு கதையை அல்லது வாழ்க்கையை முடிந்தவரை க்ரிஸ்ப்பாக கொடுத்திருப்பது சிறப்பு. படத்தின் கதை நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமாக மாறி மாறி பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது அருமை. ஒருவேளை நேர்கோட்டில் சொல்லப்பட்டிருந்தால் அழுதுவடிகிற டாகுமென்ட்ரியைப்போல இருந்திருக்க கூடும்.
இன்று முழுக்க முழுக்க வணிகமயாகிவிட்ட மருத்துசூழலில் நம் மருத்துவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. அதோடு இன்று எல்லாவகை பணிகளிலுமே குறைந்துவருகிற அர்ப்பணிப்பும் அன்பும் சிநேகமும் அதற்கான தேவையும் என்ன என்பதை வலியுறுத்துகிற இப்படத்தை அனைவருமே கட்டாயம் பார்க்க வேண்டும்.